நான் அதிக நேரம் வீட்டின் கொல்லைப்புறத்தில் தான் செலவழித்தேன் என்று சொல்ல வேண்டும். எனக்கு அது பிடித்திருந்தது. கொல்லையில் ஒரு போரிங் பம்ப் இருந்தது. அதிலிருந்து தான் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அந்த வேலையும் தோட்ட வேலையில் அடங்கிவிட்டதால், பெரும்பாலும் தண்ணீர் பாய்ச்சுவது என் வேலையாகவே இருந்தது. நான் அதை ஒரு வேலை யாகவே எண்ணவில்லை. அதுவும் விளையாட்டாகப் போயிற்று.
அங்கு மூன்று கொய்யா மரங்கள் இருந்ததென்று சொன்னேன். ஒரு வருடம் அது அமோகமாகக் காய்த்தது. பழங்கள் சாப்பிட்டு மாளாது. பக்கத்து வீடுகளுக்கும் கொடுத்தோம். நானும் என் பாட்டுக்குத் தின்று கொண்டி ருந்தேன். கொய்யாப் பழம் பறித்து தின்பது என்பது ஏதோ மாலையில் செய்யும் காரியம் என்றில்லை. பழமாயிற்றே. தோட்டத்தில் இருக்கும் போதெல்லாம் கொய்யாப் பழம் தின்பேன். மூச்சு விடுவது மாதிரி. அதற்கு என ஒரு நேரம் காலம் உண்டா என்ன? யாரும் கண்டு கொள்ள வில்லை. "பையன் தோட்டத்தைப் பாத்துக்கறான் நன்னா" என்ற ஒரு எண்ணத்தை அவர்கள் மனத்தில் வைத்தாயிற்று. பின் யார் தடை சொல்வார்கள்?
காலையில் பழையது சாப்பிட்டுப் பள்ளிக்கூடம் போனால், மத்தியானம் சாப்பாட்டுக்கு வீடு வந்துவிடுவேன். பசங்களும் வாத்தியார்களும் சரி, அப்படித்தான். அனேகமாக எல்லோருக்கும் மத்தியானம் வீடு போய்த் தான் சாப்பாடு. அன்று எப்போ மத்தியான மணி அடிப்பார்கள், வீட்டுக்குப் போகப் போறோம் என்பதை ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் அன்று பாட்டி வெங்காய சாம்பார் பண்ணியிருப்பாள். எனக்கு ரொம்ப பிடிக்கும். பாட்டியிடம் கேட்டு நச்சரித்திருந்தேன். "சரிடா இன்னிக்கு பண்ணிவைக்கறேன் ஸ்கூலுக்குப் போ," என்று பாட்டி அலுத்துக் கொண்டே சொல்லியிருக்கிறாள்.
பாட்டிக்கு கிழங்குகள், வெங்காயம் எல்லாம் ஒதுக்கப் பட்டவை. சாப்பிடமாட்டாள். இங்கிலீஷ் காய் கறிகள் இல்லையா? வைதீக குடும்பத்தில் ஒரு விதவை இதையெல்லாம் சாப்பிடமாட்டாள். கிழங்குகளோ இல்லை வெங்காயமோ சமையலில் சேர்ந்தால், பாட்டி அதில் எதையும் தொடமாட்டாள். ரசமும் மோரும் மாத்திரம் சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவாள். ஒரு வேளை தான் சாப்பிடுவாள். காலையில் கா·பி. பின் மத்தியானம் சாப்பாடு. பின் ராத்திரிக்கு தோசையோ ஏதோ சாப்பிடுவாள். அவ்வளவு தான். இப்போது தான் நினைத்துக் கொள்வேன். ஏன் அப்படி யெல்லாம் பிடிவாதம் பிடித்தோம் என்று. இப்போது நினைத்து என்ன பயன்? அப்போது என் ருசியும் நாக்கும் தான் எனக்குப் பெரிதாக தெரிந்தது. எனக்கு மாத்திரம் இல்லை. மாமா ஒன்றும் கேட்க மாட்டார். ஆனால் மற்றவர்களுக்கெல்லாம் வெங்காய சாம்பாரோ மற்றதோ சமைத்தால் குஷி தான். சிறிசுகள் இவ்வளவு பேருக்கு பிடிக்கிறதே, குழந்தைகள் தான். நாங்கள் மூன்று பேர், எனக்கு ஐந்து அல்லது ஆறு வயது பெரிய சின்ன மாமாவையும் சேர்த்தால் ஐந்து பேர்கள் சிறிசுகள் ஆசைப்பட்டு சாப்பிடறதை, தான் சாப்பிடக் கூடாது என்பதற்காக சமைக்காமல் இருப்பதா என்று பாட்டிக்கு ஒரு ஆதங்கம் வருத்தும்.
எப்போடா மணி அடிக்கும் என்று காத்திருந்தேனே ஒழிய, எனக்கு வீட்டுகு வரும் பாதி வழியிலேயே சுரம் வந்து விட்டது. எப்படியோ வீட்டுக்கு வந்ததும் படுத்துக் கொண்டு விட்டேன். பாட்டி என்னை, எங்களைத் தொடமாட்டாள். தொட்டால் குளிக்க வேண்டும். என்னடா பண்றாது? என்று கேட்டு படுத்திருக்கும் என் முனகலையும், பார்த்து சுரம் என்று தெரிந்து கொண்டு விட்டாள். அடுத்த சில நிமிஷங்களில் வந்த மாமாவிடம், "சுரம் போலே இருக்குடா சுப்புணி, பாரு" என்றாள். மாமா தொட்டுப் பார்த்துவிட்டு 'சுரம் தான், உடம்பு கொதிக்கிறது" என்றார். அன்று பூராவும் பாட்டி அரற்றிக்கொண்டே இருந்தாள். "ஆசையா வெங்காயம் போட்டு சாம்பார் வையின்னு சொன்னான் பாரு, சாப்பிடக் கொடுத்து வக்கலை." என்று. "அவன் என்னமோ கொள்ளை போறாப்பல மரத்திலே இருக்கற கொய்யாப் பழத்தை, கொஞ்ச நஞ்சமாவது விட்டு வச்சாத்தானே, எப்போ பாரு வாயிலே கொய்யப்பழம். உடம்பு என்னத்துக்காகும்? சுரம் வராம என்ன செய்யும்?." என்று சத்தம் போட்டார். "சரி போறது போ. சுரத்திலே அவனை ஒண்ணும் சொல்லாதே" என்று பாட்டி சமாதானப் படுத்தினாள்.
தனக்கு மறுக்கப்பட்டது எதுவும் குழந்தைகளுக்கும் ஏதோ காரணத்தால் கிடைக்காமல் போவதை பாட்டியால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அந்த நாள், இப்படி பல சம்பவங்கள், எனக்கு திரும்பத் திரும்ப மனதில் அலையோடும். அத்தோடு உடனே இன்னும் பல காட்சிகள் நிழலாடும். மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். காலையில் சாப்பிட்டு விட்டுப் போனபிறகு மத்தியானம் சாப்பாட்டுக்கு வடக்கு வெளி வீதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வருவேன். "படிக்கிற பையன், சின்ன வயசு, மத்தியானம் வந்து கொஞ்சம் மோரைப் போட்டு சாப்பிட்டுப் போகட்டும். அதுக்கு நீங்க ஒண்ணும் கொடுக்க வேண்டாம்" என்று ஹோட்டல் மானேஜர் தானே, மாமா கேட்காமலே சொல்லியிருந்தார். அந்த ஹோட்டல் சிம்மக்கல் வருவதற்கு கொஞ்சம் முன்னாலே இருந்தது. ஆக, நடை கொஞ்ச நீள நடை தான். பாதி வழியில் ஒரு வீட்டின் முன்னே லாரி ஒன்று நின்றிருந்தது. அதைச் சுற்றிக் கூட்டம். வீட்டு வாசலில் ஒரு விதவைப் பாட்டி கதறிக் கொண்டிருந்தாள். " குழந்தை சாப்பிட வரணுமே இன்னம் காணலியேன்னு காத்திண்டிருந்தேன். இப்படி குழந்தைய பிணமாக் கொண்டு சேத்திருக்கேளே" என்ற அவள் கதறல் எனக்கு இன்னும் மறக்கவில்லை. இந்தக் காட்சிகள் எல்லாம் ஒன்றையொன்று சங்கிலி போல் தொடர்ந்து மனதில் நிழலாடிச் செல்லும்.
அவர்கள் துக்கம் சிறு வயதில் நமக்கென்ன தெரியும். பாட்டிக்கு என்னிடம் பிரியம் அதிகம். அது எனக்கு வயதான பிறகு தான் தெரிகிறது. அப்போது பாட்டியை சில சமயம் வருத்தியுமிருக்கிறேன். "ஏண்டா இப்படி படுத்தறே" என்று திட்டுவாள். சில சமயம் "நீ நாசமத்துத் தான் போவே" என்பாள். அப்போது அது வசவாகத்தான் என் காதில் விழும். இப்போது அந்த "நாசமத்து" என்ற வசவை அவர்கள் எப்படிக் கற்றார்கள்? எப்படி அசாத்திய கோபத்தில் கூட "நாசமத்து" என்று வார்த்தைகள் விழுகின்றன என்று யோசித்தால் ஆச்சரியமாக இருக்கும்.
பாட்டிக்கு கா·பி இல்லாமல் ஆகாது. காலையிலும் சாயந்திரமும் கா·பி சாப்பிடவில்லையென்றால் பாட்டிக்கு தலைவலி வந்துவிடும். கா·பிக்கு மாத்திரம் விதி விலக்கு எப்படி வந்தது? என்று இப்போது கேட்கத் தோன்றுகிறது. ஆனால் இப்போது ஒரு வயதான விதவையிடம் அந்த மாதிரி யெல்லாம் கேட்க மாட்டோம். அவர்கள் தமக்கு மறுத்துக்கொண்டுள்ளது எத்தனையோ. சின்ன வயதில் கேட்டிருப்பேன் அப்போது ஆனால் அந்த மாதிரி சிந்தனையெல்லாம் செல்லவில்லை. பாட்டி ஏன் வெங்காயம் சாப்பிடமாட்டாள்? என்றெல்லாம் அப்போது ஆராயத் தோன்றவில்லை. என்னமோ அவளுக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவே விஷயம்
.
இப்போது நினைத்துப் பார்க்கும் போது பாட்டிக்கு கா·பி பழக்கம் எப்போது எப்படி ஏற்பட்டது என்று நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. மாமா கும்பகோணம் காலேஜில் எ·ப் ஏ பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் போது, தாத்தா இறந்துவிட்டார் என்று சொல்லி ஒரு ஆள் போய் அவரை சுவாமி மலைக்கு அழைத்து வந்துவிட்டார்கள். மாமா எ·ப் ஏ பரீட்சை எழுதினார் என்றால் அது அவரது 18 வது வயதில் இருக்கும். மாமா 1910-ல் பிறந்தவர். ஆக பாட்டி விதவையான வருடம் 1928 என்று ஒரு உத்தேசக் கணக்கு போடலாம். ஆக 1928-க்கு முன்னாலேயே கா·பிக்கு தமிழ் நாட்டுக் குடும்பங்கள் அடிமையாகி விட்டன போலும். 1921- ல் மறைந்த பாரதி கா·பி பற்றிப் பேசவில்லை. உ.வே.சாவும் பேசவில்லை. அவர்கள் கா·பி சாப்பிட்டதாக பதிவுகள் ஏதும் இல்லை
.
1950-ல் நான் ஹிராகுட் போய் வேலைக்குச் சேர்ந்தேன். அது அனேகமாக ஒரு பழங்குடி இனத்தவர் கணிசமாக வாழும் பகுதி. பஞ்சாபிகள் தான் அணைக்கட்டு வேலைக்கு முதலில் வந்து சேர்ந்தனர் அதிக அளவில். அவர்களுக்கும் அப்போது டீயோ கா·பியோ என்னவென்று தெரியாது. அவர்கள் வீட்டுக்குப் போனால், பால் சூடாக கொடுப்பார்கள். ,அல்லது தயிரைக் கெட்டியாகக் கரைத்து, லஸ்ஸி என்று கொடுப்பபர்கள். டீயா, லஸ்ஸியா என்ன சாப்பிடுவீர்கள்?" என்று தான் அப்போதெல்லாம் அவர்கள் உபசரிப்பார்கள். அப்போதுதான் எங்கள் காலனியில் ஒரு வானில் டீ போர்டு ஆட்கள் வந்து ஆங்காங்கே வண்டியை நிறுத்தி எல்லோருக்கும் சூடாக டீ போட்டுக் கொடுப்பார்கள். இலவச மாகத் தான். அது ஒரு பத்து பதினைந்து நாட்கள் நடந்தது. இலவசமாகக் கொடுத்துப் பழக்கப் படுத்தி விட்டால், பின்னால் தானே வாங்க வருவார்கள் என்று அந்த ப்ரமோஷன் காம்ப்பெய்ன் நடந்தது. இப்போது யார் வீட்டிலும் டீ தான் சாப்பிடக் கொடுப்பார்கள். லஸ்ஸி, பால் உபசாரம் செய்யும் காலம் போய்விட்டது.
அப்படி ஏதும் பிரசாரம் கா·பிக்கு நடந்ததாகத் தெரியவில்லை. அதிலும் கா·பிக்கு தென்னிந்தியர்கள் எப்படி பழக்கமானார்கள், வட இந்தியர்கள் எப்படி டீ பிரியர்களானார்கள் என்பது சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும். வடக்கு தெற்கு வித்தியாசங்கள் இருக்குமோ என்னவோ 1967-க்கு முன்னால் திராவிட கழகத் தலைவர் களைக் கேட்டிருக்கவேண்டும். இப்போது அவர்கள் வடக்கு தெற்கு என்று பேசுவதில்லை.
No comments:
Post a Comment