Friday, March 21, 2008

நினைவுகளின் தடத்தில் - (10)

நான் அதிக நேரம் வீட்டின் கொல்லைப்புறத்தில் தான் செலவழித்தேன் என்று சொல்ல வேண்டும். எனக்கு அது பிடித்திருந்தது. கொல்லையில் ஒரு போரிங் பம்ப் இருந்தது. அதிலிருந்து தான் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அந்த வேலையும் தோட்ட வேலையில் அடங்கிவிட்டதால், பெரும்பாலும் தண்ணீர் பாய்ச்சுவது என் வேலையாகவே இருந்தது. நான் அதை ஒரு வேலை யாகவே எண்ணவில்லை. அதுவும் விளையாட்டாகப் போயிற்று.


அங்கு மூன்று கொய்யா மரங்கள் இருந்ததென்று சொன்னேன். ஒரு வருடம் அது அமோகமாகக் காய்த்தது. பழங்கள் சாப்பிட்டு மாளாது. பக்கத்து வீடுகளுக்கும் கொடுத்தோம். நானும் என் பாட்டுக்குத் தின்று கொண்டி ருந்தேன். கொய்யாப் பழம் பறித்து தின்பது என்பது ஏதோ மாலையில் செய்யும் காரியம் என்றில்லை. பழமாயிற்றே. தோட்டத்தில் இருக்கும் போதெல்லாம் கொய்யாப் பழம் தின்பேன். மூச்சு விடுவது மாதிரி. அதற்கு என ஒரு நேரம் காலம் உண்டா என்ன? யாரும் கண்டு கொள்ள வில்லை. "பையன் தோட்டத்தைப் பாத்துக்கறான் நன்னா" என்ற ஒரு எண்ணத்தை அவர்கள் மனத்தில் வைத்தாயிற்று. பின் யார் தடை சொல்வார்கள்?
காலையில் பழையது சாப்பிட்டுப் பள்ளிக்கூடம் போனால், மத்தியானம் சாப்பாட்டுக்கு வீடு வந்துவிடுவேன். பசங்களும் வாத்தியார்களும் சரி, அப்படித்தான். அனேகமாக எல்லோருக்கும் மத்தியானம் வீடு போய்த் தான் சாப்பாடு. அன்று எப்போ மத்தியான மணி அடிப்பார்கள், வீட்டுக்குப் போகப் போறோம் என்பதை ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் அன்று பாட்டி வெங்காய சாம்பார் பண்ணியிருப்பாள். எனக்கு ரொம்ப பிடிக்கும். பாட்டியிடம் கேட்டு நச்சரித்திருந்தேன். "சரிடா இன்னிக்கு பண்ணிவைக்கறேன் ஸ்கூலுக்குப் போ," என்று பாட்டி அலுத்துக் கொண்டே சொல்லியிருக்கிறாள்.


பாட்டிக்கு கிழங்குகள், வெங்காயம் எல்லாம் ஒதுக்கப் பட்டவை. சாப்பிடமாட்டாள். இங்கிலீஷ் காய் கறிகள் இல்லையா? வைதீக குடும்பத்தில் ஒரு விதவை இதையெல்லாம் சாப்பிடமாட்டாள். கிழங்குகளோ இல்லை வெங்காயமோ சமையலில் சேர்ந்தால், பாட்டி அதில் எதையும் தொடமாட்டாள். ரசமும் மோரும் மாத்திரம் சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவாள். ஒரு வேளை தான் சாப்பிடுவாள். காலையில் கா·பி. பின் மத்தியானம் சாப்பாடு. பின் ராத்திரிக்கு தோசையோ ஏதோ சாப்பிடுவாள். அவ்வளவு தான். இப்போது தான் நினைத்துக் கொள்வேன். ஏன் அப்படி யெல்லாம் பிடிவாதம் பிடித்தோம் என்று. இப்போது நினைத்து என்ன பயன்? அப்போது என் ருசியும் நாக்கும் தான் எனக்குப் பெரிதாக தெரிந்தது. எனக்கு மாத்திரம் இல்லை. மாமா ஒன்றும் கேட்க மாட்டார். ஆனால் மற்றவர்களுக்கெல்லாம் வெங்காய சாம்பாரோ மற்றதோ சமைத்தால் குஷி தான். சிறிசுகள் இவ்வளவு பேருக்கு பிடிக்கிறதே, குழந்தைகள் தான். நாங்கள் மூன்று பேர், எனக்கு ஐந்து அல்லது ஆறு வயது பெரிய சின்ன மாமாவையும் சேர்த்தால் ஐந்து பேர்கள் சிறிசுகள் ஆசைப்பட்டு சாப்பிடறதை, தான் சாப்பிடக் கூடாது என்பதற்காக சமைக்காமல் இருப்பதா என்று பாட்டிக்கு ஒரு ஆதங்கம் வருத்தும்.


எப்போடா மணி அடிக்கும் என்று காத்திருந்தேனே ஒழிய, எனக்கு வீட்டுகு வரும் பாதி வழியிலேயே சுரம் வந்து விட்டது. எப்படியோ வீட்டுக்கு வந்ததும் படுத்துக் கொண்டு விட்டேன். பாட்டி என்னை, எங்களைத் தொடமாட்டாள். தொட்டால் குளிக்க வேண்டும். என்னடா பண்றாது? என்று கேட்டு படுத்திருக்கும் என் முனகலையும், பார்த்து சுரம் என்று தெரிந்து கொண்டு விட்டாள். அடுத்த சில நிமிஷங்களில் வந்த மாமாவிடம், "சுரம் போலே இருக்குடா சுப்புணி, பாரு" என்றாள். மாமா தொட்டுப் பார்த்துவிட்டு 'சுரம் தான், உடம்பு கொதிக்கிறது" என்றார். அன்று பூராவும் பாட்டி அரற்றிக்கொண்டே இருந்தாள். "ஆசையா வெங்காயம் போட்டு சாம்பார் வையின்னு சொன்னான் பாரு, சாப்பிடக் கொடுத்து வக்கலை." என்று. "அவன் என்னமோ கொள்ளை போறாப்பல மரத்திலே இருக்கற கொய்யாப் பழத்தை, கொஞ்ச நஞ்சமாவது விட்டு வச்சாத்தானே, எப்போ பாரு வாயிலே கொய்யப்பழம். உடம்பு என்னத்துக்காகும்? சுரம் வராம என்ன செய்யும்?." என்று சத்தம் போட்டார். "சரி போறது போ. சுரத்திலே அவனை ஒண்ணும் சொல்லாதே" என்று பாட்டி சமாதானப் படுத்தினாள்.


தனக்கு மறுக்கப்பட்டது எதுவும் குழந்தைகளுக்கும் ஏதோ காரணத்தால் கிடைக்காமல் போவதை பாட்டியால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அந்த நாள், இப்படி பல சம்பவங்கள், எனக்கு திரும்பத் திரும்ப மனதில் அலையோடும். அத்தோடு உடனே இன்னும் பல காட்சிகள் நிழலாடும். மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். காலையில் சாப்பிட்டு விட்டுப் போனபிறகு மத்தியானம் சாப்பாட்டுக்கு வடக்கு வெளி வீதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வருவேன். "படிக்கிற பையன், சின்ன வயசு, மத்தியானம் வந்து கொஞ்சம் மோரைப் போட்டு சாப்பிட்டுப் போகட்டும். அதுக்கு நீங்க ஒண்ணும் கொடுக்க வேண்டாம்" என்று ஹோட்டல் மானேஜர் தானே, மாமா கேட்காமலே சொல்லியிருந்தார். அந்த ஹோட்டல் சிம்மக்கல் வருவதற்கு கொஞ்சம் முன்னாலே இருந்தது. ஆக, நடை கொஞ்ச நீள நடை தான். பாதி வழியில் ஒரு வீட்டின் முன்னே லாரி ஒன்று நின்றிருந்தது. அதைச் சுற்றிக் கூட்டம். வீட்டு வாசலில் ஒரு விதவைப் பாட்டி கதறிக் கொண்டிருந்தாள். " குழந்தை சாப்பிட வரணுமே இன்னம் காணலியேன்னு காத்திண்டிருந்தேன். இப்படி குழந்தைய பிணமாக் கொண்டு சேத்திருக்கேளே" என்ற அவள் கதறல் எனக்கு இன்னும் மறக்கவில்லை. இந்தக் காட்சிகள் எல்லாம் ஒன்றையொன்று சங்கிலி போல் தொடர்ந்து மனதில் நிழலாடிச் செல்லும்.


அவர்கள் துக்கம் சிறு வயதில் நமக்கென்ன தெரியும். பாட்டிக்கு என்னிடம் பிரியம் அதிகம். அது எனக்கு வயதான பிறகு தான் தெரிகிறது. அப்போது பாட்டியை சில சமயம் வருத்தியுமிருக்கிறேன். "ஏண்டா இப்படி படுத்தறே" என்று திட்டுவாள். சில சமயம் "நீ நாசமத்துத் தான் போவே" என்பாள். அப்போது அது வசவாகத்தான் என் காதில் விழும். இப்போது அந்த "நாசமத்து" என்ற வசவை அவர்கள் எப்படிக் கற்றார்கள்? எப்படி அசாத்திய கோபத்தில் கூட "நாசமத்து" என்று வார்த்தைகள் விழுகின்றன என்று யோசித்தால் ஆச்சரியமாக இருக்கும்.

பாட்டிக்கு கா·பி இல்லாமல் ஆகாது. காலையிலும் சாயந்திரமும் கா·பி சாப்பிடவில்லையென்றால் பாட்டிக்கு தலைவலி வந்துவிடும். கா·பிக்கு மாத்திரம் விதி விலக்கு எப்படி வந்தது? என்று இப்போது கேட்கத் தோன்றுகிறது. ஆனால் இப்போது ஒரு வயதான விதவையிடம் அந்த மாதிரி யெல்லாம் கேட்க மாட்டோம். அவர்கள் தமக்கு மறுத்துக்கொண்டுள்ளது எத்தனையோ. சின்ன வயதில் கேட்டிருப்பேன் அப்போது ஆனால் அந்த மாதிரி சிந்தனையெல்லாம் செல்லவில்லை. பாட்டி ஏன் வெங்காயம் சாப்பிடமாட்டாள்? என்றெல்லாம் அப்போது ஆராயத் தோன்றவில்லை. என்னமோ அவளுக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவே விஷயம்

.
இப்போது நினைத்துப் பார்க்கும் போது பாட்டிக்கு கா·பி பழக்கம் எப்போது எப்படி ஏற்பட்டது என்று நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. மாமா கும்பகோணம் காலேஜில் எ·ப் ஏ பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் போது, தாத்தா இறந்துவிட்டார் என்று சொல்லி ஒரு ஆள் போய் அவரை சுவாமி மலைக்கு அழைத்து வந்துவிட்டார்கள். மாமா எ·ப் ஏ பரீட்சை எழுதினார் என்றால் அது அவரது 18 வது வயதில் இருக்கும். மாமா 1910-ல் பிறந்தவர். ஆக பாட்டி விதவையான வருடம் 1928 என்று ஒரு உத்தேசக் கணக்கு போடலாம். ஆக 1928-க்கு முன்னாலேயே கா·பிக்கு தமிழ் நாட்டுக் குடும்பங்கள் அடிமையாகி விட்டன போலும். 1921- ல் மறைந்த பாரதி கா·பி பற்றிப் பேசவில்லை. உ.வே.சாவும் பேசவில்லை. அவர்கள் கா·பி சாப்பிட்டதாக பதிவுகள் ஏதும் இல்லை

.
1950-ல் நான் ஹிராகுட் போய் வேலைக்குச் சேர்ந்தேன். அது அனேகமாக ஒரு பழங்குடி இனத்தவர் கணிசமாக வாழும் பகுதி. பஞ்சாபிகள் தான் அணைக்கட்டு வேலைக்கு முதலில் வந்து சேர்ந்தனர் அதிக அளவில். அவர்களுக்கும் அப்போது டீயோ கா·பியோ என்னவென்று தெரியாது. அவர்கள் வீட்டுக்குப் போனால், பால் சூடாக கொடுப்பார்கள். ,அல்லது தயிரைக் கெட்டியாகக் கரைத்து, லஸ்ஸி என்று கொடுப்பபர்கள். டீயா, லஸ்ஸியா என்ன சாப்பிடுவீர்கள்?" என்று தான் அப்போதெல்லாம் அவர்கள் உபசரிப்பார்கள். அப்போதுதான் எங்கள் காலனியில் ஒரு வானில் டீ போர்டு ஆட்கள் வந்து ஆங்காங்கே வண்டியை நிறுத்தி எல்லோருக்கும் சூடாக டீ போட்டுக் கொடுப்பார்கள். இலவச மாகத் தான். அது ஒரு பத்து பதினைந்து நாட்கள் நடந்தது. இலவசமாகக் கொடுத்துப் பழக்கப் படுத்தி விட்டால், பின்னால் தானே வாங்க வருவார்கள் என்று அந்த ப்ரமோஷன் காம்ப்பெய்ன் நடந்தது. இப்போது யார் வீட்டிலும் டீ தான் சாப்பிடக் கொடுப்பார்கள். லஸ்ஸி, பால் உபசாரம் செய்யும் காலம் போய்விட்டது.


அப்படி ஏதும் பிரசாரம் கா·பிக்கு நடந்ததாகத் தெரியவில்லை. அதிலும் கா·பிக்கு தென்னிந்தியர்கள் எப்படி பழக்கமானார்கள், வட இந்தியர்கள் எப்படி டீ பிரியர்களானார்கள் என்பது சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும். வடக்கு தெற்கு வித்தியாசங்கள் இருக்குமோ என்னவோ 1967-க்கு முன்னால் திராவிட கழகத் தலைவர் களைக் கேட்டிருக்கவேண்டும். இப்போது அவர்கள் வடக்கு தெற்கு என்று பேசுவதில்லை.

Wednesday, March 12, 2008

அவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்


எங்கள் தெருவின் மூத்த குடிமகன் நேற்று இறந்து விட்டார். கொஞ்ச நாளாகவே அவரை வீட்டுக்கு வெளியே காணவில்லை. அவரை வீட்டுக்கு வெளியே காணவில்லை என்பதே எங்களுக்குக் கொஞ்ச நாள் பொறுத்துத் தான் தெரிய வந்தது. இப்போதெல்லாம் அவர் அனேகமாக வீட்டினுள்ளே தான் அடைபட்டுக் கிடப்பார். எப்போதாவது தான் அவர் வெளியே வருவார். திறந்த மார்புடன், இடுப்பு வேட்டியை தூக்கிக் கட்டிக்கொண்டி ருப்பார். சில சமயம் அவரை வெறும் துண்டுடன் காணநேரும். வீட்டின் முன் இருக்கும் செமெண்ட் பெஞ்ச் போன்ற இருக்கையில் உட்கார்ந்திருப்பார். அவருக்கென சில வயது முதிர்ந்த நண்பர்கள் உண்டு. அவர்கள் எப்போதாவது வருவார்கள். சைக்கிளில் ஒருவர் வருவார். போகும் வழியில் சைக்கிளை நிறுத்தி, இரும்பு கேட்டைத் திறந்து உள்ளே போய் அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வார். பேசிக்கொண்டிருப்பார்கள் இருவரும். இப்படி சிலர் அவ்வப்போது வந்து போவார்கள். அவர்கள் வருகையும் சில நாட்களாக காணப்பட வில்லை. அவருக்கு உடல் நலம் சரியில்லை என்று தான் அவர்கள் வராதிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. அவர் வீட்டு முன் இருக்கையில் உட்கார்ந்திருக்கக் காணாது அவர்கள் தம் வழி போயிருக்கக் கூடும். நான் என் வீட்டு முன் திண்ணையில் (sit out) உட்கார்ந்த படி பத்திரிகை படிக்கும் போது அல்லது வேறு எந்த வேலையிலும் இருக்கும்போது அவர் தன் வீட்டு முன் இருக்கையில் இருப்பதும் இல்லாததும் கண்களில் படும். நான் அவர் அவ்வாறு வெளியே உட்கார்ந்திருக்கும் வேளைகளில் அவரிடம் சென்று பேசுவோம் என்று நினைத்தது கிடையாது. என்னவோ, ஏதும் காரியம் இல்லாது இங்கு நான் எவர் வீட்டுக்குள்ளும் போனது கிடையாது.


இறந்த பெரியவரின் வீட்டுக்கு நான் சில முறை போயிருக்கிறேன். ஏதோ விசேஷங்களுக்காக என்று தான். அவருடைய பெண்ணுக்கு குழந்தைகள் பிறந்த இரண்டு முறை. அவருடைய மகனுக்கு குழந்தை பிறந்த இரண்டு முறை. பின் அவருடைய மகனின் முதல் குழந்தை பிரசவத்திலேயே இறந்த போது. அந்த குழந்தை இறந்தது அவர் வீட்டினருக்கு மாத்திரம் இல்லை. எங்களுக்கும் அது துக்கமாகத் தான் இருந்தது. காரணம் அவரது மகனுக்கும் மறுமகளுக்கும் மாத்திரமில்லை, அவருக்கும் தன் மகன் வழியில் சந்ததி இல்லாது போய்விடுமோ என்று வேதனைப் பட்டுக் கொண்டிருந்ததை, அவர்கள் சொல்லாமல் நாங்கள் உணரமுடிந்திருக்கிறது. மகன் சிறுவயதிலேயே போலியோவினால் கால் ஊனமுற்றவன். மறுமகள் தன் புருஷனிடம் ஒட்டுதலோடு தான் இருந்தாள். அவர்கள் வீட்டில் சண்டை நடந்தால் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் காதை அடைத்துக் கொள்ள முடியாது. வீட்டுக்கார அம்மாள் மிகக் கொடூரமாகத் தான் திட்டுவாள் தன் மருமகளை. அதுவும் உரத்த குரலில். வீட்டில் வேறு யார் குரலும் கேட்காது. இறந்த நண்பர், வாய் பேசமாட்டார். அமைதியாகத்தான் இருப்பார். அவர் கோபித்தோ, கடுமையாகப் பேசியோ நான் கேட்டதில்லை.


வீட்டில் வீட்டுக்கார அம்மாள் தான் எந்த விஷயத்திலும் கடைசி முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றவர் போலும். அதுவும் தவறு. கடைசி முடிவு என்று சொல்ல முடியாது. அவர் சொன்ன சொல்லுக்கு ஏதும் விவாதம் நடந்தால் தானே கடைசி முடிவு என்று சொல்லலாம். என்ன செய்ய வேண்டும் என்று அந்த அம்மாள் சொல்வார். அது மறு பேச்சின்றி நடத்தப்படும். இப்படித்தான் விஷயங்களை நாங்கள் வெளியிலிருந்து யூகித்துக் கொள்ளமுடிந்தது. ஏனெனில் எந்த விஷயத்திலும் அந்த அம்மாள் சொல்வார். அது பற்றி விவாதம் நடந்ததாக எங்களுக்குப் பட்டதில்லை. இறந்த பெரியவர் குரல் என்றும் கேட்டதில்லை. இந்த வீட்டு விவகாரங்களையெல்லாம் தன் மனைவியின் முடிவுக்கே விட்டு விடுவது அவருக்கு சுலபமாகவும், விவாதங்கள் எழுமாயின் விளையும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வழியாகவும் அவருக்குத் தோன்றியிருக்கக் கூடும். 72 வயதான அவருடைய நீண்ட தாம்பத்யத்தில் அனுபவமும் விவேகமும் நிறைந்த காரியமாகத் தான் அது இருந்தி ருக்கும். கடந்த இரண்டு மூன்று வருஷங்களாகவே அவர் அவ்வளவு ஆரோக்கியத்துடன் இருந்ததாகச் சொல்ல முடியாது. ஒரு நாள் நடு இரவில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவசர அவசரமாக கொஞச தூரத்தில் இருந்த இருதய நோய் மருத்துவரிடம் சென்றதும், இரவு பூராவும் அவர் மருத்துவ மனையின் கண்காணிப்பில் இருந்ததும் மறு நாள் காலையில் தான் எங்களுக்குத் தெரிய வந்தது. அதன் பின் வெளியில் இருக்கும் எங்களுக்கு வீட்டுப் பொறுப்பு அத்தனையும் அந்த அம்மையார் தான் கவனித்துக் கொண்டார் எனத் தோன்றிற்று.


அந்த அம்மையார் தான் வீட்டு வேலைகள் அத்தனையையும் செய்பவர். அவ்வப்போது வந்து போகும் மகள் அம்மாவின் செல்லத்திற்கு உரியவள். குழந்தைகளை பாட்டியிடம் விட்டு விட்டு வேலைக்குப் போவாள். சாயந்திரம் வேலையிலிருந்து திரும்பியதும் இங்கு வந்து ஒரு ஆட்டோவில் குழந்தையை அழைத்துக்கொண்டு இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் தன் வீடு செல்வாள். இப்போது இரண்டு குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அந்த வீட்டு அம்மாளின் மீது சுமந்திருந்தது. செல்லம் கொடுத்து பிடிவாதம் வளர்ந்துள்ள ஏழு வயதுப் பெண் ஒன்று. பின் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று. அந்த அம்மாள் முகம் சுணங்கி நாங்கள் பார்த்ததில்லை. அந்தக் குழந்தைகள் இரண்டும் பெண்ணின் குழந்தைகள்.


இப்போதெல்லாம் மகனும் மருமகளும் அவர்களுடன் இல்லை. இரண்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள ஒரு புறநகர் பகுதியில் தனியாக வசிக்கத் தொடங்கியுள்ளார்கள். மருமகளுக்கும் அடிக்கடி கேட்கும் வசைகளுக்கு ஒரு முடிவு கிடைத்த நிம்மதி. மகனுக்கு தான் சம்பாதித்து தன் குடும்பத்தை ரக்ஷ¢க்கும் பொறுப்பு. ஆனாலும் தனியாக வந்த நிம்மதியில் ஒரு சந்தோஷம். தனித்துச் சென்றபிறகு அவர்களுக்கு குழந்தை பிறந்தது எல்லோருக்கும் சந்தோஷம் தருவதாக இருந்தது. முதல் பிரசவத்தில் குழந்தை இறந்தது அக்குடும்பத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. "நீங்கள் வாய் திறந்து சொல்லாவிட்டாலும் மனதில் இந்தக் குறை உங்களை வருத்திக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும். இப்போது சந்தோஷம் தானே?" என்று என் மகிழ்ச்சியை அவரிடம் தெரிவித்தேன். அப்போது தான் முதன் முறையாக அவர் தன் வீடு சம்பந்தப்பட்ட சொந்த விவகாரங்களை மிக ஈடுபாட்டுடன் சொன்னார். அவர் எப்போதும் உணர்ச்சி வசப்படுபவர் இல்லை. ஆனாலும், அவர் பேச்சில் அடக்கி வைத்திருந்த வெகுநாள் ஆதங்கம் இப்போது வெளிப் படுவதை உணர முடிந்தது. மகன் சிறு பிராயத்திலேயே இப்படி அங்கஹீனனாகிப்போனதும், என்ன்வெல்லாம் வைத்தியங்கள் பார்த்தும் குணமாகாது போய்விட்ட வருத்தமும், அவனுக்கு கல்யாணம் செய்யப்பட்ட பாடும், பின் பிரசவத்தில் குழந்தை மரித்ததும், அவனுக்கு குழந்தை பாக்கியமே இல்லாது போய்விடுமோ என்று வேதனைப் பட்டதுமான ஒரு பெரிய கதையே அவரிடமிருந்து வெளிப்பட்டது. இம்மாதிரியான சமயங்களில் எந்த மனிதனுக்கும் ஒரு ஆற்றாமையில் எழும் 'கடவுளே, ஆண்டவனே" என்ற பெருமூச்சுடன் வெளிவரும் வார்த்தையை அவர் உச்சரிக்கவில்லை. வெகு நிதான மாகத் தான் பேசிக்கொண்டு போனார். ஆனாலும் அதற்கிடையில், இந்த வீட்டில் இருக்கும் வரையில் அவர்களுக்குக் குழந்தை பிறக்காது என்றும் அது வாஸ்து சம்பந்தப்பட்டது என்று சொன்னதன் பேரில் அவர்கள் பிரிந்து சென்ற பிறகு இப்போது அவர்களுக்குக் குழந்தை பிறந்திருப்பதையும் சொல்லி அவர் சந்தோஷப்பட்டார். அவர்களால் தனித்து வாழ முடிகிறதா, போதிய வருமானம் வருகிறதா என்று கேட்டேன். அவ்வப்போது நாங்கள் உதவுவோம் என்று சொன்னார் அவர். ஆனால் என் மனைவி சொன்ன விவரம் வேறு மாதிரியாக இருந்தது. ஒரு நாள் மாமியார் மருமகளைத் திட்டும் படலம் மகனின் பொறுமைக்கு மீறிவிடவே, 'இனி நாங்கள் இங்கிருக்கப் போவதில்ல், நாங்கள் தனியாகப் போய்விடுகிறோம்" என்று சொல்லிவிட்டு மகன் மனைவியை அழைத்துக் கொண்டு தனியாகப் போயிருக்கிறான், என்று என் மனைவி சொன்னாள். "என்னங்கம்மா, அவங்களாலே சமாளிக்க முடிகிறதா, மகன் சம்பாதிப்பது வீட்டு வாடகைக்கே சரியாப் போய்விடுமே, பின் சாப்பிடுவது எங்கே?" என்று வீட்டுக்கார அம்மாளைக் கேட்டேன். "அவங்க என்னமோ தனியாப் போகணும்னாங்க. அவங்க அப்படி ஆசைப்படும் போது நாம ஏன் தடுக்கணும், அவங்களாலே முடியும்னா இருந்துக்கட்டுமே. முடியலேன்னு திரும்பி வந்தா வராதேன்னா சொல்லிடப்போறோம்?" என்று அந்த அம்மையார் சொன்னார்கள். இது என் மனைவி சொன்னதையே ஒரு வகையில் சாட்சியப்படுத்துவதாகத் தோன்றியது. அந்த அம்மையார் வாஸ்துவைக் காரணம் காட்டியிருக்கலாம். வம்பற்ற பாடு. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.


நண்பர் தனக்கென ஒரு தனி உலகத்தைச் சிருஷ்டி த்துக் கொண்டு அதில் அமைதி காண்கிறார் என்றே தோன்றிற்று


நான் சென்னையின் மடிப்பாக்கம் புறநகர் பகுதிக்கு எட்டு வருஷங்களுக்கு முன் குடி பெயர்ந்த போது, மடிப்பாக்கத்தின் எங்கள் தெருவின் மூத்த குடிமகன் அவர்தான் என்று சொல்லப்பட்டவர் அவர். எங்கள் தெருவுக்கென்ன, மடிப்பாக்கத்திலேயே அந்த விளைநிலங்களில் முதல் காலடி எடுத்து வைத்து வீடு கட்டியவர் அவராகத்தான் இருக்கவேண்டும். இரண்டு கிரௌண்ட் கொண்ட விஸ்தாரமான மனையில், 'இவ்வளவு தான் என்னால் முடியும் என்று சொல்லி விட்டேன், இது போதும் எங்களுக்கு" என்று ஒரு க்ரௌண்டில் வீடு கட்டிக்கொண்ட மடிப்பாக்கத்தின் முதல் குடிமகன் அவர். நாங்கள் இந்த தெருவுக்கு வீடு கட்டிக்கொண்டு வந்த போது, தெருவுக்கே மூத்தவராக, அனுபவமும், மனிதர் களிடையே செல்வாக்கும் மிகுந்தவராக அவரிடம் எல்லோரும் மரியாதை செலுத்தினார்கள். அப்போது புதியவனாக வந்து சேர்ந்த என்னிடம் அவர், நான் அணுகிய போதெல்லாம் அவரால் முடிந்த அளவு உதவ முயன்றார். என்னிடம் அடாவடித்தனமாக நடந்து கொண்ட ஒருவரை அவர் ஏன்? என்று கேள்வி கேட்கவில்லை. அது பாட்டிலே அது, என்று எனக்கு வேறு விதத்தில் உதவ முயன்றார். ஆக இருவரிடமும் அவருக்கு விரோதமில்லாது நடந்து கொண்டாயிற்று. சுற்றியிருக்கும் நாலைந்து தெருக்களு க்கான சங்கம் அமைத்த போது அதை பொறுப்பேற்று வழி நடத்தியவர் அவர். அப்போதும் தான் ஏதும் பொறுப் பேற்றுக் கொள்ளாது, வேலை செய்யும் மற்றவர்கள் செய்யும் வேலையில் குறைகள் காண்பதே தொழிலாகக் கொண்டு, அடாவடித்தனமாக குற்றம் சாட்டியவரை அவர் கடிந்து கொள்ளவில்லை. எதற்கும் சமாதானமாகப் போகும் வழி தான் அவரதாக இருந்தது.


எங்கள் வீடு கட்டி முடிந்ததும் புது மனை புகு விழாவிற்கு, மடிப்பாக்கதில் முன்னர் நிர்வாகியாக இருந்து நல்ல பெயர் வாங்கியிருந்த ஒரு இளம் அதிகாரி அப்போது முதல் அமைச்சரின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக முதலமைச்சரின் செயலகத்தில் இருந்தார். அவர் என்னுடன் நெருங்கிய நட்புணர்வு கொண்டிருந்தார். அவரும் வந்திருந்தார். ஒன்றிரண்டு முறை அவர் நம் அண்டை வீட்டு நண்பரின் வீட்டு தொலை பேசியில் என்னை அழைத்துப் பேசும் சந்தர்ப்பங்களும் இருந்தன. அதனால் தானோ என்னவோ மூத்த குடிமகனான நண்பர் என்னிடம் தாமாக வந்து தாராளமாக தயக்கம் இன்றி பேசும் பழக்கத்தையும் கொண்டிருந்தார். அப்போது தான் எனக்கு அவர் கருணாநிதியின் அருமை பெருமைகளை, நிர்வாகத் திறமைகளை, அவரது ஆட்சியின் மகிமைகளைப் பற்றியெல்லாம் வியந்து பாராட்டிப் பேசத் தொடங்கினார். கருணாநிதி கெட்டிக்காரர் தான். சாமர்த்தியசாலியும் கூட. ஆனால் நான் அவரது வியப்பையெல்லாம் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லை என்பதை அவருக்குச் சொல்வேன். "லஞ்சமெல்லாம் இந்தப் பசங்க, கீழே இருக்கற பசங்க செய்யறது, அவர் பேரு கெடுது", என்பார். "அப்படியென்றால் அது என்ன நிர்வாகம்?" என்று கேட்பேன். "அவருக்கு இப்படி ஆயிரங்கோடிக் கணக்கில் சொத்துசேர்ந்தது எப்படி?", என்று கேட்பேன். வாக்காளர் பதிவு நடந்து கொண்டிருந்தது. இரண்டு மூன்று முறை நான் முயன்றும் என் பெயர் பதிவாகவில்லை. என் நண்பர், முதலமைச்சர் செயலகத்தில் இருந்தவர் தம் அதிகாரத்தைச் செயல்படுத்திய பின்னும் என் பெயர் பதிவாகவில்லை. "வாருங்கள், நானும் வருகிறேன். பஞ்சாயத்து அலுவலகம் செல்வோம்" என்று சொல்லி அவர் பஞ்சாயத்து தலைவரிடம் சொன்னார். அவரும் இவர் சொல்வதைக் கேட்டு தலையாட்டினார். கடைசியில் நடந்தது என்னவோ ஒரு கூத்து. மடிப்பாக்கத்தின் மூத்த குடிமகனான அவர் பெயரே வாக்காளர் பட்டியலில், முதலில் இருந்தது இப்போது காணாமல் போயிற்று. என் பெயரும் பதிவாகவில்லை. என் மனைவியின் பெயர் வேறொரு வீட்டினரோடு சேர்க்கப்பட்டது. "இது தான் நீங்கள் பெருமைப் பட்டுக்கொள்ளும் ஆட்சியின் அழகு. உங்கள் பெயரையே காணோம்" என்றேன். அவர் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. வரும் வழியெல்லாம் "இந்தக் கோயில் இருந்த இடம் நான் வரும்போது குப்பை மேடாக இருந்தது. நாய்கள் படுத்துக் கிடக்கும். இப்போது கோவில் கட்டியிருக்கிறார்கள் பெரிதாக. மனுஷனுக்கு வாழ இடம் இல்லை. கோயில் கட்டி விடுகிறார்கள்" என்றார். "ஏரிகளை அல்லவா வளைத்துப் போட்டு மனைகளாக்கியிருக்கிறார்கள். மடிப்பாக்கமே நெல் வயலாக இருந்த இடம் தானே" என்று கேட்டேன். ஆனால், அவர் கருணாநிதியின் புகழ் பாடுவது நிற்கவில்லை. அவ்வப்போது முதலமைச்சர் செயலகத்தில் தானே உடனிருந்து பார்த்தது போல, என்னென்ன கட்டளைகளை முதலமைச்சர் அவ்வப்போது போட்டிருக்கிறார், எப்படி அவரது முடிவுகள் அசகாய புத்திசாலித்தனமானவை, தீரச்செயல் போன்றவை, என்று சொல்வார். அப்படி புகழ் பாடும்போது, அவர் தன்னை ஒரு நாஸ்திகராகக் காட்டிக்கொள்வார். தெய்வ நம்பிக்கையெல்லாம் மூடத்தனம் என்பதாக அவர் பேச்சு இருக்கும். அவர் குறிப்பாகப் பெயர் சொல்லாது மறைமுகமாக இந்த மூடத்தனத்துக்கெல்லாம் காரணமான மேல் ஜாதியைச் சாடுவார். "இப்படியெல்லாம் கோபப் படும் நீங்கள் இங்கு சுத்தியிருக்கும் அடாவடித்தனத்தை ஒரு முறை கூட கண்டித்ததாகக் காணோமே, அவர்களோடு சமாதானமாகத் தானே போகிறீர்கள், ஒதுங்கி விடுகிறீர்கள்" என்று கேட்பேன். ஜெய லலிதா ஆட்சி வந்ததும் கலைஞர் செய்ததையெல்லாம் கெடுத்துவிட்டதாகவும் லஞ்சம் பெருகிவிட்டதாகவும் சொல்வார். "இப்போ நடப்பதைச் சொல்வது சரி. ஆனால் முன்னால் என்ன வாழ்ந்தது? இந்த ஊழலை ஆரம்பித்து வைத்ததே அந்தப் பெருமகன் தானே. அது ஏன் உங்கள் கண்ணில் படமாட்டேன் என்கிறது?" என்று கேடடால் அதற்கு பதில் சொல்ல மாட்டார்.

அவர் மத்திய அரசாங்கத்திலோ அல்லது தமிழ் நாடு அரசிலோ வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். எங்கு என்பது எனக்குப் புரிந்ததில்லை. மத்திய அரசு என்று எனக்குத் தோன்றும். ஆனால் தான் வேலல பார்த்த்த இடங்கள் , தான் சண்டை போட்ட அதிகாரிகள் போன்ற விவரங் களைச் சொல்லும் போது, தமிழ் நாடு அரசு வேலை என்று தோன்றும். அவர் தனக்கும், தன் மகனுக்கும் நியாயமாகக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள், வேலை உயர்வுகள் கிடைக்காமல் போனது, "இந்த நாசமாப் போன ரிசர்வேஷன் காரணமாகத் தான்" என்று பல முறை அவர் வேதனைப் பட்டுப் பேசியிருக்கிறார். அவர் அலுவலகத்தி லேயே ரிசர்வேஷனில் பயனடைந்த அதிகாரிகளோடு வெளிப்படையாகப் பேசிய சம்பவங்களையும் அவர் சொல்லியிருக்கிறார்.


இதையெலாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் என் மனைவி, அவர் போன பின்பு, "இவர் தான் இப்படிப் பேசுகிறாரே ஒழிய அவர் வீட்டில், "எல்லாரும் கொள்ளையடிக்கிறாங்க. வர்ரவங்க எல்லாம் கொள்ளை யடிக்கத்தான் வராங்க, இதிலே அந்தக் கட்சி என்ன், இந்தக் கட்சி என்ன?" என்று அவங்க வீட்டுக்கார அம்மா சொல்றாங்க" என்பாள். என்னிடம் தாராளமாக அவர் மனம் விட்டுப் பேசுவது எதையும் அவர் வீட்டில் பேசுவது இல்லை என்று தான் தோன்றியது. இதுவும் என் யூகம் தான். எந்த விஷயத்திலும் அவர் தன் மனைவிக்கு எதிராக எதுவும் பேசிக் கேட்டதில்லை.


அவர் வீட்டின் முன் கூரை ஒன்று போட்டிருந்தது நான் வந்ததிலிருந்து பார்த்திருக்கிறேன். "அதை ஏன் எடுத்து விட்டீர்கள். வெயிலுக்கு பாதுகாப்பாக இருந்ததே?" என்று நான் கேட்டேன். "வாஸ்து, வாஸ்து" என்று சிரித்துக்கொண்டே கிண்டலாகச் சொன்னார்.. "வாஸ்துவா?" என்று நான் புரியாமல் கேட்க, "ஆமாம் அப்படித்தான் யாரோ வீட்டிலே சொல்லிட்டாங்க. அதை எடுத்துத்துட்டுத் தான் மறுவேலைன்னு எடுத்துட்டாங்க" என்றார். எனக்கு வருத்தமாக இருந்தது. அதன் பக்கத்தில் ஒரு பன்னீர் கொடி கூரை மேல் படர்ந்து நிறைய கொத்துக் கொத்தாக பன்னீர் புஷ்பங்கள் பூத்துக் குலுங்கும். "புழு வந்துட்டதுன்னு எல்லாத்தையும் எடுக்கச் சொன்னேன் என்று அந்தம்மா சொன்னாங்க" என்று என் மனைவி சொன்னாள். அதுவும் உண்மையாக இருக்கக் கூடும். ஏனெனில் அந்த அம்மாவுக்கும் என்னைப் போல் பூக்களின் மேல் மிகுந்த ஆசை உண்டு. அது தெரிந்தது. விடிகாலையில் அவர் வீட்டுக்குள் நுழைந்து சர்வ சுதந்திரமாக பூக்களைப் பறித்துச் செல்வதை அந்த அம்மாள் அனுமதிப்ப்பார். அதே சம்யம் வாசலில் பூக்களை விலைக்கு வாங்குவார். அந்த அம்மா நெற்றியில் பெரிதாக குங்குமப் பொட்டு இட்டுக் கொண்டிருப்ப்பார்கள். தலை வகிட்டிலும் தீட்டிய குங்குமத்தோடு தான் காட்சி தருவார்கள் எப்போதும். நிறைந்த பக்தி கொண்டவர்கள். தினம் விடியும் முன் எழுந்து வீட்டின் முன் பெருக்கு தண்ணீர் தெளித்து, பெரிதாக கோலம் போட்டிருப்பார்கள். விசேஷ தினங்களில் அது மிகப் பெரிதாகிவிடும் தெருவில் போவோர் வருவோர் அந்தக் கோலத்தை மிதித்துக் கொண்டே போகும் அந்த உதாசீனம் எனக்கு மிகுந்த கோபத்தையும் வெறுப்பையும் கொடுக்கும். மார்கழி மாதங்களில் ஒவ்வொரு நாளும் தவறாது, அந்த அம்மையார் வெளியே நின்று கொண்டிரு ப்பார். பஜனை கோஷ்டி அவர் வீட்டுக்கு முன் வந்ததும் அவர் அவர்களை சுற்றி வலம் வந்து தெருவிலேயே அவர்களை நமஸ்கரிப்பார். "பெரியவர்களை நமஸ்காரம் பண்ணலாம் தான். ஆனால் தெருவிலே எப்படி பண்றது? தெரு சுத்தமாவா இருக்கு?" என்பாள் என் மனைவி.


ஐயப்பன் கோவிலுக்கு அரிசி கொடுக்க வேண்டிக் கொள்வார். தன் வீட்டின் முன் அரிசியைக் கொட்டி வைத்துக்கொண்டு தெருவில் இருக்கும் பெண்கள் எல்லோரையும் அழைத்து தான் கொட்டி வைத்திருக்கு அரிசியை எடுத்து தானம் செய்யச் சொல்வார். சுற்றி யிருக்கும் கோவில்களிலிருந்து விழாக்காலங்களில் சுவாமி ஊர்வலம் எப்போது எங்கள் தெருவுக்கு வரும் என்று அந்த அம்மாவுக்குத் தெரியும் ஒரு நாள் கூட அவர் தேங்காய் பழம் சூடம் கொண்ட தட்டோடு இக்கட்டுரையின் நாயகர், இத்தெருவின் மூத்த குடிமகன், தட்டோடு ஸ்வாமி ஊர்வலத்திற்காக காத்திருப்பதைப் பார்க்க நான் தவறியதில்லை. தட்டைக் கொடுத்து ஏற்றிய சூடத்தைக் கண்ணில் அவர் மிகுந்த பவ்யத்தோடு ஒத்திக்கொள்வதை நான் பார்க்காத நாள் இல்லை. மிகுந்த பய பக்தியோடு காணப்படுவார். நம் வீட்டுக்கு வந்து இவ்வளவு தெய்வ நிந்தனை செய்பவர் எப்படி தவறாது இக்காட்சி தருகிறார் என்று நானும் என் மனைவியும் வியப்போம். கருணாநிதி புகழ் பாடினால் நான் அவரோடு வாதிடுவேனே தவிர, இந்த விஷயத்தை அவரிடம் பேசி அவரை வாயிழக்கச் செய்யும் மனம் எனக்கு இருந்ததில்லை. எங்கள் வீட்டில் பேசும் அவர் வேறு. அவர் வீட்டின் முன் தட்டு ஏந்தி ஸவாமி ஊர்வலத்திற்காகக் காத்திருக்கும் அவர் வேறு. எங்கள் வீட்டில் பேசும் அவரை அவர் மனைவி அறிவாரா என்பதே எனக்குச் சந்தேகம் தான்.


வெகு அமைதியாக, எவ்வித சச்சரவும் இன்றி, தன் நம்பிக்கைகளை, தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு, இரு வேறு எதிர் எதிர் உலகங்களில் வாழ்ந்து காட்டியவரா அவர்? உண்மையான அவரது ஆளுமை, ஆத்மர்ர்த்தம் நம்பிக்கைகள் என்ன? அவர் உணர்வோட்டங்கள் என்ன? அமைதி நாடி, வாழும் நிர்ப்பந்தங்களுக்காக வேறு வேறு மனிதராக, வீட்டிலும் தெருவிலும், உலகிலும் நண்பர்களிடமும் வாழ்ந்தவரா அவர்? எங்களுக்கும் மற்றவர்களுக்கும் அவராகக் காட்டிக் கொண்ட அவரைத் தான் எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். தன் ஆசாபாசங்களை, தன் உள்ளுணர்வுகளை தன்னோடே அவர் எடுத்துச் சென்று விட்டார், அதை அவர் எங்களுக்குக் காட்டவில்லை என்று தான் தோன்றுகிறது. இனி அவர் தன் வீட்டின் முன் திறந்தமார்பும், இடுப்பில் கட்டிய வேட்டியுமாக நிற்கக் காணமுடியாது. தன்னோடு தன் உலகையும் அவர் எடுத்துச் சென்று விட்டார்.


வெங்கட் சாமிநாதன்/26.2.08

Wednesday, March 05, 2008

நினைவுகளின் தடத்தில் (9)


அடுத்த நாள் காலையில் பரிட்சை. அப்போது இரவு மணி ஏழோ ஏதோ இருக்கும். படித்துக் கொண்டிருந்தவன் புத்தகத்தை மூடிவைத்து விட்டு சத்திரத்திற்கு உடனே ஒடிப்போய் தண்டபாணி தேசிகர் ராஜமாணிக்கம் பிள்ளை யிடம் தனக்கு இருந்த பிரேமையைப் பற்றியும் அவரது வயலின் வாசிப்பில் தான் உருகியது பற்றியும் சொல்வதைக் கேட்க ராத்திரி பத்து பதினோரு மணி வரை அங்கேயே உட்கார்ந்திருப்பது எனக்கு மிக அவசியமாகி யிருந்திருக்கிறது. இது சரியில்லை என்று எனக்கு படவில்லை. "படிடா, நாளைக்கு பரிட்சை" என்று திட்ட அப்பாவோ, மாமாவோ, யாரும் இல்லை அங்கு எனக்கு. நான் எது சரி, எனக்கு எது பிடித்தது என்று நினைத்தேனோ அதைச் செய்ய எனக்கு சுதந்திரம் இருந்தது, அதை அனுபவிப்பதில் சந்தோஷம் இருந்தது. பரிட்சையில் தோற்றிருந்தால் என்ன ஆயிருக்கும், என்ன நினைத் திருப்பேன் என்று சொல்லத் தெரியவில்லை. அந்த மாதிரி தேர்வுகள் என் மனத்தில் ஓடியது என்றும் சொல்வதற் கில்லை.


நிலக்கோட்டையில் கிடைத்த நேரத்தில் எல்லாம் மாமா கல்யாணத்திற்கு அழைத்து வந்திருந்த சங்கீத வித்வான்கள் தங்கியிருந்த கூடத்திற்குச் சென்று அவர்கள் பேச்சையும் அரட்டையையும் கேட்டுக்கொண்டும், சாயந்திரம் கல்யாண பந்தலுக்குச் சென்று அவர்கள் பாடுவதையோ வாசிப்பதையோ இரவு வெகு நேரம் வரை கேட்டுக் கொண்டிருந்ததும் எனக்கு மிகுந்த உற்சாக த்தையும் சந்தோஷத்தையும் அளித்தன. அவர்கள் பேசியது புரிந்ததா, சங்கீதம் எனக்கு ஏதும் தெரியுமா ரசிக்க? என்பதெல்லாம் விஷயமே இல்லை. அப்படிப் பொழுது போக்குவது, விசித்திரமாகவும், புதிதாகவும் சந்தோஷம் தருவதாகவும் இவையெல்லாம் இருந்தன, அன்றாட வண்டிச் சகடை உருளலிருந்து வேறு பட்ட ஒன்று கிடைத்ததில் சந்தோஷம்.


அந்தக் காலத்தில் இரவு நேரங்களில் எப்போதாவது அபூர்வமாக ராப்பிச்சைக்காரன் யாராவது வருவதுண்டு. ஒரு நாள் வந்த ஒருவனின் நினைவு இப்போது நினைத்துப் பார்க்கவும் மனதுக்கு ரம்மியமாக இருக்கிறது. உண்மையில் அவன் பிச்சைக்காரனாக யார் வீட்டிலும் பிச்சை கேட்பதில்லை. பாடிக்கொண்டே வருவான். ஏதோ ஒரு வீட்டின் முன் நிற்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றும் போல. ஏதோ ஒரு உள்ளுணர்வில் தான் அவன் நிற்பதாகத் தோன்றும். உச்ச ஸ்தாயியில் அவன் பாடும்போது அந்த குரலின் கரகரப்பிற்கே ஒரு வசீகரம் இருப்பது போல் படும். அநாயாசமான கார்வைகள் வந்து விழும். விழும் என்று தான் சொல்ல வேண்டும். எப்படி இவ்வளவு நயமான குரல்! ஒரு இடத்தில் ஒரு பிசிறு விழுந்ததாகச் சொல்ல முடியாது. ஏதோ வீட்டிலிருப்பதைக் கொடுப்பார்கள். அவன் கத்திக் கூப்பிட்டுத்தான் பிச்சை கேட்க வேண்டுமென்பதில்லை. எப்படி இவனுக்கு மாத்திரம் இந்த சலுகை! அவன் கூடவே நாங்களும் செல்வோம். அம்பி வாத்தியாரும் ஏதோ கச்சேரியில் வித்வானுக்குச் சீட்டுக் கொடுப்பது போல, இந்தப் பாட்டு தெரியுமா, அந்தப்பாட்டு தெரியுமா? என்று ஒன்றொன்றாகச் சொல்லி வரும்போது அவன் ஒரு பாட்டைப் பாடுவான். அவரும் கூட கூட சற்று தூரம் வரை வருவார். அவன் அடிக்கடி ஏன் வருவதில்லை, மற்ற நாட்களில் என்ன செய்வானோ தெரியாது. ஆனால் அந்த நினைவுகள் மிக ரம்மியமானவை ஆண்டவன் யார் யாருக்கோ ஏதேதோ கொடைகளைத் தந்துவிட்டுப் போகிறான். அப்படியும் ஏன் அவன் பிச்சை எடுக்க வேண்டி வந்தது? இப்போதும் ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக என் மனத்தில் உறைந்திருந்த அந்த நினைவுகளை வெளிக்கொண்டு வந்து ரம்மியமான இரவுகளை எனக்குக் கொடுத்த அவனைக் குறிப்பிடும்போது பிச்சைக்காரன் என்று தானே சொல்கிறேன்?. ஏன்?, எப்படி இந்த அநியாயம் நேர்கிறது? இது தர்மமல்ல என்று கூட நாம் உணர்வ் தில்லை.


வீட்டில் மாமா குடும்ப வழியில் அங்கு யாருக்கும் அப்படி ஏதும் சங்கீதத்தில் ஈடுபாடு கிடையாது. மாமா பெண் ஜானகிக்கு மாமி பாட்டுச் சொல்லிக்கொடுத்தது ஞாபகம் வருகிறது. ஒரு ஹார்மோனியத்தை வைத்துக் கொண்டு தானும் பாடுவாள். ஜானகியையும் பாடச் சொல்வாள். நான் மாமாவின் பராமரிப்பில் இருந்த 12-13 வருடங்களில், மாமி ஹார்மோனியம் வாசித்ததும் ஜானகிக்கு பாட்டுச் சொல்லிக் கொடுத்ததும், ஏன் தினசரி நிகழ்வாக இருந்திருக்கவில்லை என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன். பதில் தெரியவில்லை. மாமியின் சின்ன தங்கை குஞ்சத்துக்கும் பெண் ஜானகிக்கும் ஒரே வயது தான். இருவரும் சேர்ந்து பாடிய காட்சி நினைவில் இருக்கிறது. மாமியும் அடிக்கடி தன் பிறந்த வீட்டுக்குப் போய்விடுவாள். முன்னால் கோவைக்கும் பின் வருடங்களில் மதுரைக்கும். எல்லா தமிழ்க் குடும்பங்களிலும் காண்பது போல, மாமியும் பாட்டியும் அவ்வளவாக ஒருவரை ஒருவர் விரும்பியவரில்லை. ஏன் ஒத்துப் போவதில்லை என்பதற்கெல்லாம் பதில் காணமுடியாது. சண்டை வந்துவிடும். மாமா பொறுத்துப் பார்ப்பார். பின் அவரும் சத்தம் போட ஆரம்பித்து விடுவார். மாமி 'நான் போகிறேன் அம்மாவிடம்" என்று மதுரைக்குப் போய்விடுவாள். ஆக மாமி அந்த குடும்பத்தில் வருடத்தில் பாதி நாள் தான் காட்சியளிக்கும் ஜீவன். எங்கள் எல்லோருக்கும் மாமியின் சமையல் ரொம்ப பிடிக்கும். பாட்டிக்கும் தான். மாமி இல்லாத சமயங்களில், தன் அண்டை அயல் சகாக்களிடம் "ஆனா லக்ஷ்மி ரொம்ப நன்னா சமைப்போ. அதையும் சொல்லணுமோல்யோ" என்பாள். "ஆனாலு'க்கு முன்னால் என்ன பேச்சு நடந்திருக்கும் என்பதை யாரும் யூகித்துக் கொள்ளலாம்.
ஆனால் (இது என்னுடைய 'ஆனால்') மாமி வீட்டில் நடத்திய பாட்டு க்ளாஸ் (தன் தங்கைக்கும் பெண்ணுக்கும்) மாலைகள் நன்கு நினைவிலிருக்கின்றன. அது ஒண்ணும் பாட்டு க்ளாஸ் என்று சொல்லக் கூடாது. ஹார்மோனி யத்தை வைத்துக் கொண்டு சொல்லிக்கொடுத்தாள் என்றாலே சரளி வரிசை, ஜண்டை வரிசை, என்று தான் உடனே நம் மனதில் பிம்பங்கள் எழும். அப்படி இல்லை. மாமி பாடுவாள். அவர்கள் திருப்பிப் பாடவேண்டும். அவ்வளவே. அந்தப் பாட்டுக்களில் சிலவும் என் நினைவில் இருக்கின்றன. 'ஜக ஜனனி, சுபவாணி கல்யாணி' என்று ஒரு பாட்டு. இப்போதெல்லாம் இந்தப் பாட்டுக்களை நான் அதிகம் கேட்பதில்லை. மாமியைத் தவிர வேறு யாரும் பாடியும் கேட்டதில்லை. கொஞசம் அபூர்வம் தான். அந்த ராகமும், ரதி பதி பிரியா', அதிகம் பாட நான் கேட்டதில்லை. அது இன்ன ராகம் என்பதெல்லாம் அப்போது தெரியாது. அப்படியெல்லாம் எண்ணங்கள் ஓடவில்லை. பின்னர்தான் வெகு நாட்களுக்குப் பிறகு தான், தற்செயலாகவே ராகங்களின் பெயர்களும் தெரியவந்தன. அதுபோலத்தான் இன்னொரு பாட்டும். 'அம்பா நீ இரங்காயெனில் புகலேது" என்ற பாட்டு. பாப நாசம் சிவனது. அடானா ராகத்தில். இதுவும் யாரும் அதிகம் பாடக் கேட்டதில்லை. யார் பாடல், என்ன ராகம் என்றெல்லாம் மாமியும் சொல்லவில்லை. அதற்கு அவசியமும் இல்லைதான். பின்னர் தான் தெரிந்து கொண்டேன். மாமியின் குடும்பத்தையும் நான் 1946-ல் ஒரு வருஷம் மதுரையில் இருந்த போது நெருங்கி அறியும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கும் மாயியைத் தவிர வேறு யாரும் சங்கீதம் தெரிந்தவர்களாக இல்லை. மாமிக்கு மாத்திரம் பாட்டு பாடவேண்டும் என்று தோன்றியது எப்படி, எங்கு கற்றுக் கொண்டாள் என்பதெல்லாம் அப்போதும் தெரிந்ததில்லை. இப்போதும் அதைத் தெரிந்து கொள்ளும் சாத்தியம் இல்லை. அஸ்தமித்ததும் முகத்தை அலம்பி குங்குமம் இட்டுக்கொண்டு சுவாமிக்கு விளக்கேற்றி நமஸ்கரித்து மாமி ஒன்றிரண்டு பாட்டு பாடுவாள். இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் அழகாக, சந்தோஷமாக இருக்கிறது.
ஆனால் மாமிதான் அடிக்கடி மதுரை போய்விடுவாளே. நிலக்கோட்டை ஆறு மாதம். கோயம்புத்தூரோ, இல்லை பின்னர் மதுரையோ ஆறு மாதம். 1945-லேயே எனது நிலக் கோட்டை வாசம் முடிகிறது. இடையில் ஒரு வருஷம் மதுரையில் சேதுபதி ஹை ஸ்கூலில் படித்த்தேன். பின்னர் மேலே படிக்க என் கிராமம் உடையாளுருக்கு வந்து விட்டேன். உடையாளுரில் இருந்து படித்துக் கொண்டிருந்த போது, மாமி உடம்பு சரியில்லாமல் இருக்கிறாள் என்று கடிதம் வந்தது. பின்னர் ஒரு சில மாதங்களில் மாமி இறந்தும் விட்டாள். மாமிக்கு அவ்வளவு மோசமாக என்ன நோய் தாக்கியது, உடனே உயிரைப் பறிக்க? அதிர்ச்சியாகத் தான் இருந்தது. யாரும் இப்படி ஒன்று சம்பவிக்கும் என்று எதிர்பாராது வந்த சோகம் அது. அப்போது மாமாவுக்கு வயது 37. மாமி 8-10 வயது சிறியவளாக இருந்திருப்பாள். மாமி இறந்த பிறகு மாமா கல்யாணம் செய்து கொள்ள வில்லை. பெண் கொடுக்க சிலர் வந்தார்கள். ஆனால் மாமா மறுத்து விட்டார். பட்டது போதும் என்று தோன்றி விட்டது போலும். தன் நான்கு குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டுமே என்பதே அவருக்கு பெரிய கவலையாக இருந்தது. அந்த கவலையில் மற்றதையெல்லாம் அவர் மறந்தவர் தான்
எனக்குத் தான் வருத்தமாக இருந்தது. மாமி என்னிடம் வாத்ஸல்யத்துடனேயே இருந்தாள். ஒரு போதும், மாமி இருந்த வரை, என்னை, அந்த வீட்டில் இயல்பாக சேராதவனாக, வந்து சேர்ந்த ஒரு தூரத்து உறவினர் பிள்ளையாக, நினைத்தது இல்லை. என்னை எதற்கும் ஒதுக்கியதும் இல்லை. மாமிக்கு பாட்டியுடனும் மாமாவுடனும் தான் ஒட்டுதல் இல்லையே தவிர எங்களிடம் அவள் பாசமாகத்தான் இருந்தாள். சின்ன வயசில் இறந்து விட்டாள். 30 வயதில் இறப்பது ஒரு சோகம். 37 வயதிலேயே தாம்பத்ய உறவுகள் அறுந்து போன மாமாவை, என்றுமே மனம் விட்டுச் சிரித்து பார்த்தறியாத மாமாவை நினைக்க இப்போதும் கூட, மாமா இறந்து 45 வருடங்கள் ஆகி விட்டன, மனத்தில் சோகம் கவிந்து விடுகிறது. பாட்டியின் சந்தோஷமான நாட்களையும் நான் பார்த்ததில்லை.


எனக்கு என்னமோ இவ்வளவு சோகங்களின் இடையிலும் என்னைச் சந்தோஷப்படுத்திக்கொள்ள பல விஷயங்கள் ஒன்றில்லாவிட்டால் ஒன்று கிடைத்துக் கொண்டு தான் இருந்தன. எனக்கு எது வேண்டும் என்று சுற்றியுள்ளவற்றில் நான் கண்டுகொள்வேன். தேடிக் கிடைப்பதல்ல. தானே நிகழ்வனவற்றில் நான் சந்தோஷப்பட்டுக்கொள்வேன். அப்படி என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம் வீட்டுக்குப் பின் இருந்த தோட்டம். பின்னால் கொல்லை இருக்கும் அடுத்த வீட்டுக்கு, அதில் இருந்த முத்துசாமி அய்யர் தன் மூன்று வீடு களையும் விற்றுச் சென்ற பின்னர், நாங்கள் குடிபுகுந்தோம். அடுத்து இருந்த அந்த வீட்டில், ஒரு மொட்டை மாடியும் இருந்தது. அதில் மூன்றில் ஒரு பகுதியில் கூரை வேய்ந்திருந்தது. அது எனக்குப் பிடித்த இடம். அதோடு கொல்லைப் புறமும். அங்கே மூன்று கொய்யா மரங்கள், ஒரு நார்த்தை மரம், பின் ஒரு பெரிய முருங்கை மரம். மிகுந்த இடத்தில் கீரை, போடுவோம். இரண்டு விதமான அவரை, புடல் என்று ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் விதை விதைத்து பயிரிட்டு வந்தோம். பந்தல் கட்டியிருக்கும் அவற்றின் கொடி படர. சில சமயங்களில் எங்களுக்கு முன்னர் தெரிந்திராத சில காய்களும் பயிரிட்டோம். ஒன்று மூக்குத்திக்காய். மற்றொன்று தட்டவரை என்று பெயர் சொன்னார்கள். மூக்குத்திக் காயை அதற்குப் பின் நான் பார்த்ததில்லை. ப்ப்ப்ஆனால் தட்டவரை அபூர்வமாக எப்போதாவது பார்ப்பதுண்டு. ஒரு அங்குல அகலமும் ஒன்பது பத்து அங்குல நீளமும் உள்ளது அது. நாலடி உயரம் வளரும் கீரைச் செடியும் ஒரு முறை பயிரிட்டிருந்தோம். இவ்வளவு உயரம் வளரும் கீரைச் செடியை எத்தனை பேர் பார்த்திருப்பார்களோ தெரியாது. அபூர்வம் தான். அதன் தண்டு மிக ருசியாக இருக்கும்.
தோட்ட வேலையில் பொழுதைப் போக்குவது எனக்குப் பிடித்திருந்தது. மண்ணைக்கொத்தி, உரம் இட்டு விதை விதைத்துவிட்ட பிறகு அது முளை விடுவதைப் பார்க்கவே ஆனந்தமாக இருக்கும். அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் சந்தோஷமளிக்கும். ஒரு ஜீவன் வளர்வது, மண்ணைக் கிழித்துக் கொண்டு வெளிவரும் முளையைப் பார்க்க எனக்கு அதிசயமாக இருக்கும். ப்ப்என்னைப் பார்த்து புன்னகைப்பது போல உணர்வேன். உ.வே.சாமிநாத ஐயர் தன் குரு மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்ட ஆரம்ப நாட்களைப் பற்றி எழுதியிருப்பார். பிள்ளையவர்கள் தினம் காலையும் மாலையும் தோட்டத்தைச் சுற்றி வருவார். அப்போது சாமிநாதய்யரும் அவருடன் சுற்றி வருவாராம். ஏதும் புதிதாக முளை விட்டிருந்தாலோ, அல்லது மொட்டு விடத் தொடங்கியிருந்தாலோ, 'இதோ, இதோ' என்று பிள்ளையவர்களுக்கு முன்னே சென்று பிள்ளயவர்களுக்குச் சொல்லுவாராம். பிள்ளைவர்களுக்கும் சாமிநாதய்யர் காட்டும் இடத்திற்கு விரைந்து சென்று பார்த்து மகிழ்வாராம். 'இதே போல முன்னாலேயே வந்து பார்த்து வைத்து எனக்கு சொல்லும்" என்று பிள்ளைவர்கள் சொன்னாராம். சாமிநாதய்யருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. தனக்கு சந்தோஷம் அளித்தது பிள்ளையவர்களுக்கும் மகிழ்ச்சி தருகிறது என்று. ரொம்ப அற்ப விஷயங்களாக இவை பலருக்குத் தோன்றக் கூடும். பிள்ளையவர்களை சாமிநாதய்யர் காக்கா பிடிக்கும் சமாச்சாரம் இது என்று தமிழ் நாட்டு இன்றைய தலைமுறைகள் எண்ணக்கூடும். சாதாரணமான, இயற்கையுமான இந்த அற்பம் என்று தோன்றும் விஷயங்களை, வியக்க வைக்கும் நிகழ்ச்சிகளாக உணர்ந்து அனுபவிக்கக் கூடியவர்களுக்குத் தான் இந்த மகிழ்ச்சியின் அனுபவம் கிடைக்கும்.


ஆனால் இந்த மகிழ்ச்சிகள் நான் நிலக்கோட்டையை விட்டு நீங்கிய பிறகு, எனக்குத் திரும்பக் கிடைக்க வெகு ஆண்டுகள் ஆயின. 1981-ல் தில்லியில் கிடைத்த அரசாங்க வீட்டின் முன்னும் பின்னும் தோட்டம் வைக்க சிறிய மல்ர் மரங்கள் வளர்க்க வசதி கிடைத்தது. அது, நான் அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்றதும் 1992-ல் அறுபட்டு பின்னர் நான் சென்னைக்கு வந்த பிறகு 2000-லிருந்து இப்போது தான் மலர்கள் பூத்துக் குலுங்கும் செடிகளையும் மரங்களையும் வீட்டின் sit out-ல் உட்கார்ந்தால் பார்த்து மனதுக்கு சந்தோஷம் தரும் காலைகளும் மாலைகளும் கிடைத்துள்ளன.


வெங்கட் சாமிநாதன்/11.10.07