Wednesday, January 30, 2008

விருதுகளின் அரசியலும் கொச்சைப் படுத்தலும்

பாரத் ரத்னா விருது இவ்வருடம் யாருக்கும் இல்லை என்பது முடிவாகிவிட்டது. ஒவ்வொரு வருடமும் கொடுக்கப்படவேண்டும் என்பதும் இல்லை. இந்நாட்டின் மிக உயர்ந்த விருது இது. அத்தைகைய ஒரு விருது வழங்கப்படுவதற்கான விதிமுறைகள் மிகக் கடுமை யாகத்தான் இருக்க வேண்டும். கடந்த ஆறு ஏழு வருஷங் களாகவே இவ்விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. காரணம், அதன் கடுமையான விதிமுறைகளுக்கு ஏற்ப யாரும் இல்லை என்பது பொருளா என்ன? அப்படி இருந்தால் நாம் சந்தோஷப்படலாம். அப்படித்தான் அவ்விருது தொடங்கப் பட்டது. அப்படித்தான் சிலர் இந்த விருதை ஏற்க மறுத்துள்ளதாகச் செய்தியும் உண்டு. உதாரணமாக, மௌலானா அபுல் கலாம் ஆஸாத். 'விருதுக்கு சிபாரிசு செய்யும் குழுவில் இருந்து கொண்டு நானே எடுத்துக் கொள்வதா?' என்று சொல்லி நிராகரித்தார் என்று சொல்லப்பட்டது. அத்தகைய உயர்ந்த மனிதர்களை, சரித்திர புருஷர்களை இந்த நாடு தனக்கு வழிகாட்டிகளாகக் கொண்டிருந்தது ஒரு காலத்தில். பின்னர் தான், ஆஸாத் காலம் ஆனபிறகு அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. ஆனால் அது வழங்கப்பட்டது 1992-ல். அவர் காலம் ஆகி 16 வருடங்களுக்குப் பிறகு, அவர் இந்நாட்டின் அரசியலில் மறக்கவும் பட்ட பிறகு, வழங்கப்பட்டது. பின்னர் ஒரு கால கட்டத்தில் சரித்திரமும் மாறியது, காலத்தின் குணமும் மாறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். சர்தார் படேல் மறைந்தது 1951-ல். அவருக்கு பாரத் ரத்னா விருது அளிக்கப்பட்டது 1992-ல். இறந்து 41 வருஷங்களுக்குப் பிறகு. சாம்ராட் அசோகனுக்கும் கௌதம புத்தருக்கும், ஆதி சங்கராச்சாரியாருக்கும் பின் வரும் வருடங்களில் வழங்கப்படலாம். ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்படி ஏதோ அரசியல் காரணங்களுக்காக சரித்திர பாட புத்தகத்திலிருந்து பெயர்கள் தோண்டியெடுக்கப்பட்டு இவ்விருது வழங்கப் படுவதற்கான ஒரு மரபு ஆஸாதுக்கு வழங்கப்பட்டதிலிருந்தே தொடங்கியாயிற்று என்று தான் சொல்ல வேண்டும். இந்த நாட்டில் நடக்கும் கேலிக் கூத்துக்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. இன்னதுதான் நடக்கும் இனி இவ்வளவு, அல்லது இதைவிட இன்னும் மோசமாகப் போவதற்கு வழியில்லை என்று ஒன்றும் யாரும் நிச்சயமாகச் சொல்வதகில்லை. ஆனால், வேடிக்கையாக, இப்போது நமக்குச் சொல்லப் படுகிறது, 'இதை அரசியலாக்கக் கூடாது' என்று. இக்கதையின் இன்றைய வருட தொடக்கம், பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவரான லால் கிருஷ்ண அத்வானி, முன்னைய பிரதம மந்திரியும் பாஜக வின் தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாயக்கு இவ்விருது அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி, பின்னர் அக்கடிதத்தை பத்திரிகையில் வெளியிட்டது இந்த உயர்ந்த விருதை அரசியலாக்கிய செயலாகச் சொல்லப்படுகிறது. வாஜ்பாயின் பெயர் பிரஸ்தாபிக்கப்பட்டதுமே, அதை ஒன்றுமில்லாததாக ஆக்கும் ஒரே நோக்கத்துடன், "ஏன், ஜ்யோதி பாசுவும் வாஜ்பாயிக்கு இணையான தகுதி பெற்றவர் தானே" என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் தன் கருத்தை வெளியிடுகிறார். "இது அரசியலாக்கப்பட வேண்டிய விஷயம் இல்லை. இதற்கென இருக்கும் குழு தான் இது பற்றிய முடிவெடுக்கும்" என்று ஒரு மந்திய மந்திரி தன் கருத்தைச் சொல்கிறார். இது பற்றிய ஆலோசனை செய்ய வேண்டியது அந்தக் குழுவாக இருக்க, அந்தக் குழுவிற்கு சம்பந்தம் இல்லாத இரு காங்கிரஸ் தலைவர்கள் இப்படிக் கருத்துச் சொன்னது தான், ஏற்கனவே அரசியாக்கப்பட்டு விட்டதன் தொடர்ச்சிதான், இந்த காங்கிரஸ் தலைவர்கள் கருத்துப் பிரசாரமும். உடனே, ஆளுக்கு ஆள், கட்சிக்குக் கட்சி, தங்கள் தலைவர்கள் பெயர்களை முன்வைக்கத் தொடங்கினார்கள். திமுக வின் செயற்குழு 'பெரியார் அண்ணா வழி அரசியல் நடத்தும் கலைஞர்' மு கருணாதியின் பெயரை முன் வைத்ததாகச் சொல்லப்படுகிறது. என்று திமுக வின் செயற்குழு தன்னிச்சையாக எந்த ஒரு தீர்மானத்தையும் முன் வைத்து முடிவு எடுத்தது?, என்று திமுக தலைவர், செயற்குழு என்ன தீர்மானம் எடுக்கிறதோ! என்று கையைப் பிசைந்து காத்துக் கொண்டிருந்தார்? என்பது திமுக வரலாற்றிலேயே இனித் தான் நிகழவேண்டிய, நாமும் கேட்கக் காத்திருக்கும் ஒரு அதிசய நிகழ்வு. முதலமைச்சரின் நெருங்கிய நண்பரும் கவிஞருமான கவியரசு வைரமுத்துவும் கருணாநிதியின் பெயரை பிரஸ்தாபித்ததாக செய்தி படித்தேன். வடவர் ஆதிக்கத்தை ஒழித்துக் கட்ட வாழ்நாள் முழுதும் போராடி வந்த உலகத் தமிழினத் தலைவரின் பெயரை வடநாட்டவர் தரும் விருதுக்கு சிபாரிசு செய்யலாம், அவரும் இது வடவர் தரும் விருதாயிற்றே என்பதை சற்று மறந்து அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அவரிடம் காணும் இந்த மாற்றம் கண்டு நமக்கும் மகிழ்ச்சிதான். சமீபத்தில் தமிழினத் தலைவர் பேசும்போது, 'தமிழ் மத்திய அரசிலும் ஆட்சி மொழியாகும் வரை நம் போராட்டம் தொடரும்,' என்று அறிவித்திருக்கிறார். தமிழ் நாட்டில் ஆரம்ப வகுப்புகளில் கூட தமிழ் கட்டாய பாடமில்லை. தமிழ் படிக்காமலேயே ஒரு தமிழ்க் குழந்தை, சிறுவன், கல்லூரி வரை சென்று தன் படிப்பை முடித்துக்கொள்ளலாம் என்ற அவல நிலை பற்றி அவருக்கு கவலை இல்லை. மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக்க தொடர்ந்து அவர் போராடப் போகிறார். தமிழ் அரசியலில் தான் இத்தகைய கேலிக்கூத்து என்றில்லை. மத்திய அரசியலிலும் இம்மாதிரியான கேலிக்கூத்துக்கள் உண்டு தான்.


கோவிலில் சுண்டல் பிரசாதம் கொடுக்கிறார்கள் என்றால் சிறுவர்கள் கோவிலுக்கு ஓடோடி வந்து நெருக்கியடித்துக் கொண்டு கை நீட்டமாட்டார்களா என்ன? மாயாவதி அம்மையார், தன் தலைவர் மான்யவர் கன்ஷிராமுக்கு பாரத் ரத்னா விருது அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். வேறொருவர் பால் தாக்கரே பெயரை முன் வைத்தார். இதறகிடையில் சச்சின் டெண்டுல்கருக்குக் கொடுக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை. இந்த சந்தடி சாக்கில், நானும் இருக்கிறேன், என்று ஒரிஸா முதல்வரும், பிஜூ ஜனதா தளத் தலைவர் தன் தந்தை பிஜூ பட்நாயக்கின் பெயரை பாரத் ரத்னா விருதுக்கு கோரிக்கை விடுத்தார். இன்னும் எத்தனையோ பெயர்கள். எல்லாப் பெயர்களும் இந்த சமயத்தில் நினைவுக்கு வர மறுக்கிறது. இந்தக் கூத்துக்களின் நடுவே, கூத்துக்களிலேயே கூத்தாக, காங்கிரஸ் கட்சி, வாஜ்பாயின் பெயரை நிராகரிக்க தன் அரசியல் சொக்கட்டான் ஆட்டத்தில் சகடைக்காயாக முன் வைத்த ஜ்யோதி பாஸ¤வின் பெயரை கம்யூனிஸ்ட் பார்ட்டியே நிராகரித்தது. எங்கள் கட்சிக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. நாங்கள் கொள்கையாகவே கொண்டுள்ளோம் என்றார்கள். இவர்களின் தியாக உணர்வைக் கேட்டு உள்ளம் பரவசமடைகிறது என்று தான் சொல்லவேண்டும். தேவ புருஷர்கள் தான் இவர்கள்!.உலகனைத்தும் உள்ள தம் கட்சி அடியார்களுக்கு லெனின், ஸ்டாலின் பரிசுகளை வாரி வாரி வழங்கிய கட்சி அவர்களது. தமிழ் நாட்டு கம்யூனிஸ்ட் தலைவர், ரா நல்லகண்ணுவுக்கு இப்போது தான் அம்பேத்கர் விருது அளித்தார் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். தமிழ் நாட்டு விருதுகள் பட்டங்கள் ஒரு தனி ரகம். இருப்பினும், அகில இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ. பி.வரதனோ அல்லது தமிழ் நாட்டு கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியனோ, அந்த விருதுக்கு எதிராக ஏதும் சொல்லவில்லை. நல்ல கண்ணுக்கு அம்பேத்கர் விருது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் இந்த மாதிரியான கோமாளிக்கூத்துக்கெல்லாம் அப்பாற்பட்ட, தமிழ் நாட்டு அரசியலிலேயே நாம் மதிக்கத் தக்க, கண்ணியம் மிக்க ஒரே தலைவர் நல்லகண்ணு தான். இருப்பினும் நம் அரும் தமிழ் நாட்டு அரசியலில் அவர் விழுந்து கிடப்பதால், இதையெல்லாம் அவர் சகித்துக் கொள்ளத் தான் வேண்டும்


எந்த உன்னதத்தையும் கொச்சைப் படுத்துவது, அரசியலாக்குவது என்பது காங்கிரஸ் கட்சிக்கு புதிய விஷயம் இல்லை. அது எப்போதோ ஆரம்பித்து விட்டது. பாரத் ரத்னா விருது, பாரத பிரதமரே, தான் அமைத்துக் கொள்ளும் ஒரு அந்தரங்க ஆலோசனைக்குழுவின் முடிவிற்கேற்ப அவர் தீர்மானிப்பது என்று சொல்லப்படுகிறது. அப்படித்தானா எப்போதும் என்பது தெரியவில்லை. 1955-ல் ஜவஹர்லால் நேருவுக்கு பாரத் ரத்னா விருது அளிக்கப்பட்டது. நிச்சயம் நேரு தானே தனக்கு இந்த விருதை வழங்கிக்கொள்ளவில்லை. நேரு ரஷ்யா விஜயம் செய்து திரும்பியதும், நிர்ணயிக்கப் பட்டுல்ள வளமுறையை (ப்ரோடோகோல்) மீறி, குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தில்லி விமான நிலயம் சென்று நேருவை வரவேற்றார். அப்போது ராஜேந்திர பிரசாத், நேருவுக்கு பாரத் ரத்னா விருது அளிக்கத் தீர்மானித்து அதை வெளிப்படையாகச் சொல்லவும் செய்தார். இது வளமுறை மீறல் என்றாலும், நேருவுக்கும் பிரசாதுக்கும் அவ்வளவாக நல்ல நட்புறவு இல்லை என்று சொல்லப்பட்ட காலத்தில், இப்படி ராஜேந்திர பிரசாத் நடந்து கொண்டது, அக்கால மனிதர்கள் எவ்வளவு கண்ணியம் மிக்கவர்கள், தம் சின்ன சச்சரவுகளை மீறி எவ்வளவு உயர்ந்த மனத்தோடு செயல்படுபவர்கள் என்பதை இச்செயல் காட்டியது. இது ஒரு கோடி. இதற்கு நேர் எதிர்மாறான, தான் பிரதம மந்திரியாகக் காரணமாக இருந்த காமராஜை ஒதுக்கி, கட்சியைப் பிளந்து காமராஜையும் அவமானப்படுத்திய இந்திரா காந்தி, (காலா கௌவா (கருப்புக் காக்கை) என்று காமராஜைக் குறிப்பிட்டதாக ஒரு வதந்தி உண்டு. அதை நான் நம்பவில்லை) காங்கிரஸ் கட்சியில் அந்த தில்லி வட்டத்தில் அப்படி நடந்திருக்கக்கூடும். காங்கிரஸின் கலாச்சாரம் அப்படிச் சீரழிந்து தான் போயிற்று அப்பொழுதிலிருந்து) காமராஜ் இறந்ததும் அவருக்கு பாரத் ரத்னா விருது அளித்தார். தமிழ் நாட்டில் இருக்கும் ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்களின் ஓட்டைக் கவரும் எண்ணத்தோடு செய்த காரியம். மேலும் ஸ்தாபன காங்கிரஸில் இருந்து கொண்டு தனக்கு எதிராகச் செயல்பட்ட ஒரு தலைவரை மதிக்கும் பெருந்தன்மையைக் காட்டும் முகமாகவும் இருக்கக் கூடும். இதே போலத்தான் 1988-ம் வருடம் எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு இந்த விருது வழங்கப்பட்டதும். தேர்தல் வரவிருக்கிறது. எம்.ஜி.ஆரின் செல்வாக்கு தெரியும். விருதைக் கொடுத்து அவர் ஓட்டுக்களை முடிந்தால் அப்படியே அள்ளி விடவேண்டும் என்ற தேர்தல் அரசியல் சாமர்த்தியம் தான். இரண்டு ரூபாய் அரிசி, கலர் டிவி போன்றுதான், எம்.ஜி.ஆரும் பாரத் ரத்னா விருதும் பகடைக்காயாயிற்று.

.
போ·பர்ஸ் பீரங்கி ஊழலை வெளிக்கொணர்ந்து தன் பதவியை இழந்த தியாகியாகக் காட்டிக்கொண்ட வி.பி.சிங் இதே ரக அரசியல் தந்திரங்களைக் கையாண்டு தன்னை பிற்படுத்தப்பட்டோரின் நலன் காக்க வந்த தேவபுருஷனாக அவதாரம் எடுத்தார். திடீரென்று அவருக்கு பி.ஆர். அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ் எல்லோரும் பாரத் ரத்னாக்களாகத் தென்பட ஆரம்பித்தனர். சுபாஷ் போஸின் சந்ததியினர் இதை ஏற்க மறுத்தனர். இப்படி விருதை ஏற்க மறுத்த உயர்ந்த மனிதர்கள் இந்த நாட்டில் இந்த அரசியல் தலைவர்களையும் மீறி வாழ்ந்திருக்கிறார்கள். உஸ்தாத் விலாயத் கான் தனக்கு அளிக்கப்படவிருந்த விருதை ஏற்க மறுத்தார். "எனக்கு விருது அளிக்கும் தகுதி உங்களுக்கு இல்லை" என்றார் அவர். இத்தகைய சுய கௌரவமும் அகம்பாவமும் பெற்ற கலைஞர் வாழும் காலத்தில் நாம் வாழ்வது நமக்குப் பெருமை தரும் விஷயம். இந்திய பாதுகாப்பு விஷயங்களில் நிபுணரான கே.சுப்ரமண்யம், "அரசு அதிகாரிகள் விருதை ஏற்கக்கூடாது. இதில் பாரபட்சம், அரசியல் சார்புகள் செயல்படும்", என்று சொல்லி மறுத்தார். பத்திரிகையாளர்கள் எந்த விருதையும் அரசிடமிருந்து பெறுவது தவறு என்று மூத்த பத்திரிகையாளர், நிகில் சக்கரவர்த்தி விருதை ஏற்க மறுத்தார். தன்னை குடியரசுத் தலைவராக்கும் எண்ணம் ஜனதா கட்சிக்கும் மொரார்ஜி தேசாய்க்கும் இருப்பதாகத் தெரிந்ததும், அதை ஏற்க மறுத்தவர் நம் தமிழ் நாட்டு ருக்மிணி அருண்டேல். இவர்கள் தான் ஒரு சமூகத்தின் நாகரீகத்தை உருவாக்குகிறவர்கள். காப்பவர்கள். அதே சமயம், ஒரு கௌரவ டாக்டர் பட்டம் பெற என்ன ரகளை, என்ன விபத்துக்கள் நடந்தாலும் அது பற்றி கவலைப் படாத டாக்டர் பட்டம் பெறும் தன் லட்சியக் கனவுகள் கண்டு பெற்றவர்களும் இந்த தமிழ் நாட்டில் உண்டும். பட்டம், விருது, என்று தமிழ் நாடே மனம் பேதலித்துக் கிடப்பது போலத் தான் தோன்றுகிறது.

இந்த லட்சணத்தில் எதையும் அரசியலாக்கி, கொச்சைப்படுத்தி, அதையே தம் மரபாகவும் வரலாறாகவும் கொண்ட கட்சிகளும் சக்திகளுமே மற்றவர்கள் மீது அரசியலாக்கும் கொச்சைப்படுத்தும் குற்றத்தை வீசுவது இக்காலத்தின் அலங்கோலம். தன் எதிர்கட்சியின் தலைவராக இருந்தாலும், வாஜ்பாயின் மூர்த்திகரத்தை அங்கீகரித்து அவருக்கு பாரத் ரத்னா விருது அளிக்கப்பட்டிருந்தால் அது இன்றைய அரசின், காங்கிரஸின் கௌரவத்தை உயர்த்தியிருக்கும். சம்பந்தப்பட்டவர்களும் கண்ணியம் மிக்க அரசியல்வாதிகளாக அறியப்பட்டிருப்பார்கள். ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் மிகவும் சின்ன மனது கொண்டவர்கள், கண்ணியம் என்பது அவர்கள் அறியாத குணம் என்பதை உலகம் அறிந்து கொண்டது. அத்வானியும் இப்படி ஒரு பிரசினையைக் கிளப்பி வாஜ்பாயின் பெயரை தெருவுக்கு இழுத்திருக்க வேண்டாம். ஆனால் ஒன்று, அவர் தன் கடிதத்தை வெளியிட்டிராவிட்டால், அற்ப் புத்திகள் இதை வந்த சுவடு தெரியாது மறைத்திருக்க முடிந்திருக்கும். மொய்லியையும், லல்லு பிரசாதையும், பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷியையும் பேசச் செய்து தன் அரசியல் அற்பத்தனத்தை வெளிக்காட்டியேதான் வாஜ்பாயின் பெயரை நீக்க முடிந்திருக்கிறது. பாவம் வாஜ்பாயிக்குத்தான் மெல்லவும் முடியவில்லை. விழுங்கவும் முடியவில்லை. இந்திரா காந்தியை துர்க்கையென்று பாராட்டிய மனிதருக்கு அதே குடும்பத்திற்கு இன்று கிடைத்துள்ள வாரிசிடமிருந்து அவர் பெற்ற பதில் இதுதான் போலும். சீரழிந்த காலத்தில் வாழும் பாவத்தை அனுபவித்துத் தான் ஆகவேண்டும்.

ஆனால், யார் யாருக்கு விருது வழங்கி கௌரவப்படுத்துவது என்றும் ஒரு பார்வை, வாழ்க்கை மதிப்பு இருக்கிறதல்ல்வா? அப்படியே அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டிருந்தாலும் நிகழவிருக்கும் ஆபத்திலிருந்து விதி அவரைக் காப்பாற்றியுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
வெங்கட் சாமிநாதன்/29.1.08

Sunday, January 13, 2008

நினைவுகளின் தடத்தில் - (7)

சந்தோஷம் யாருக்கு, என்ன காரணங்களால் கிடைக்கிறது என்று அவ்வளவு சுலபமாக சொல்லி விட முடிகிறதில்லை. நேற்று ஒரு ஃ·ப்ரென்சு படம் பார்த்தேன். தான் செய்யாத, ஆனால் தான் உடன் இருக்க நடந்து விட்ட ஒரு குற்றத்திற்காக கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஒரு தாய் என்னேரமும் வெறிச்சிட்ட முகமாகவே காணப்பட்டாலும் ஒரு சில கணங்களில் அவள் முகத்தில் புன்னகையையும் பார்க்க முடிகிறது. அவள் வசமாக கை ரேகை சாட்சியத்தோடு அகப்பட்டுக் கிடக்கிறாள். அவள் தான் குற்றமற்றவள் என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டாலும் அவளுக்கு விடுதலை என்பதே சாத்தியமில்லை. இருப்பினும் அவள் முகம் மலரும் கணங்களும் அவளுக்குக் கிடைக்கின்றன. நாம் எல்லோரும் அறிந்த ஒரு அரசியல் தலைவருக்கு எத்தனையோ ஆயிரம் கோடிகள் சொத்து குவிந்து கொண்டே இருக்கிறது. இன்னமும் பணம் எல்லா வழிகளிலும் சொத்து சேர்த்துக்கொண்டே தான் இருக்கிறார். காலையில் இரண்டோ மூன்றோ இட்டிலிக்கு மேல் அவரால் சாப்பிட முடிவதில்லை. மான் கறியும் முயல்கறியும் மிகுந்த ஆரவாரத்தோடு சாப்பிட்டவர் தான். இருப்பினும் வெறும் சொத்து சேர்ந்து கொண்டே போவதில் அவருக்கு சந்தோஷம் கிடைத்து விடுகிறது.

என்னை குழந்தைப் பருவத்திலிருந்து 14 வயது வரை வளர்த்துப் படிக்க வைத்த மாமாவை நினைத்துப் பார்க்கிறேன். அந்த வறுமை இப்போது நினைக்கக் கூட பயங்கரமானது. அவருடைய சம்பாத்தியமான 25 ரூபாய் 4 அணா வில் வீட்டு வாடகை ஆறு ரூபாய் போக மீதிப் பணத்தில் நாங்கள் ஆறு பேர் கொண்ட குடும்பத்தை எப்படி சமாளித்தார் என்பதல்ல விஷயம், சமாளிக்க முடிந்ததில்லை. ஆனாலும் அவர் என் அப்பாவுக்கு, "என்னால் முடியவில்லை, பையனை உங்களிடம் அனுப்புகிறேன்" என்று ஒரு கார்டு போட்டவரில்லை. என்னைப் பார்த்து அலுத்துக் கொண்டவரில்லை. யாரும் எந்த சமயத்திலும் நான் அந்த வீட்டில் ஒரு உபரி ஜீவன் என்று நினைத்ததில்லை; உணர்ந்ததில்லை முதலில்.
ஒரு சமயம் அவருக்கு என் அப்பாவிடமிருந்து ஐந்து ரூபாய் மணிஆர்டர் வந்தது. எதுக்கு இது வந்தது, இதற்கு என்ன அர்த்தம்? என்று மாமா அடிக்கடி தன்னையும் கேட்டுக் கொண்டார். பாட்டியையும் கேட்டுக் கொண்டிருப்பார். என்னை ஒன்றிரண்டு முறை அவர் கேட்டதுண்டு " ஏண்டா அம்மா வந்த போது உனக்கு பணம் வேணும்னு கேட்டியா? இல்லை உனக்கு ஏதாவது வேணும்னு சொன்னியா?" என்று துருவித் துருவிக் கேட்டார். எனக்கு இப்படியெல்லாம் எண்ணமே தோன்றியதில்லை. ஐந்து ரூபாய் என்பது அந்நாட்களில் பெரிய தொகை. எங்கள் வீட்டுக்கு எதிரில் இருக்கும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு, வீட்டு வேலை செய்ய வரும் கான்ஸ்டபிளுக்கு சம்பளம் மாதம் ரூபாய் 7. ஒரு வருஷம் கழித்து நாலணா சம்பளம் கூடும். அதில் தான் அவர் குடும்பம் நடத்தியாகணும். பிள்ளைகளைப் படிக்க வைத்து பெண்களுக்கு கல்யாணம் செய்து வைத்து...... எப்படியோ நடந்தது. சனிக்கிழமை சந்தைக்கு மாமா இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு என்னையும் அழைத்துக்கொண்டு போவார், வாராந்திர காய் கறிகள் வாங்க. அதிகம் போனால் ஒன்றே கால் ரூபாய் அல்லது ஒன்றரை ரூபாய் ஆகும். இரண்டு பைகளிலும் காய்கறிகள் நிரப்பி வீடு வருவோம். வந்து கணக்கு எழுதுவார். என்னென்ன வாங்கினார், என்ன விலை, என்ன செலவு ஆயிற்று என்று. அப்பாவிடமிருந்து ஐந்து ரூபாய் வந்த சிலநாட்களில், மாமா கணக்குப் பார்த்ததில் ஐந்து ரூபாய் குறைந்திருந்தது. பதறிப் போய்விட்டார், பதறி. என்ன யோசித்துப் பார்த்தும், என்ன செலவு செய்தோம் ஐந்து ரூபாய்க்கு என்று தெரியவில்லை. என்னிடம் கேட்டார். ஏண்டா, அப்பா அனுப்பின ஐந்து ரூபாயை நீ எடுத்தியா? என்று. நான் இல்லை என்றேன். ஒரு சந்தேகத்துக்குத் தான். ஐந்து ரூபாயை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்!. காலணா அரையணா குறைந்து நான் எடுத்திருப்பேன் என்ற சந்தேகம் கொஞ்சம் வலுவாக இருந்திருந்தால், மாமா விலாசியிருப்பார் விலாசி. அந்த ஐந்து ரூபாய் எப்படியோ தொலைந்து தான் போயிற்று என்பது நிச்சயமாகத் தெரிந்த பிறகு ஏதோ பெரிய சொத்து கொள்ளை போனது போல கதறத் தொடங்கிவிட்டார். வெகு நாட்கள் அவர் அதை மறந்து மீறமுடியவில்லை.


நிலக்கோட்டையில் இந்த மாதிரியான தினப்படியான வண்டிச் சகடையோட்ட வாழ்வில் சற்று மாறுதலுடன் உற்சாகம் தரும் நிகழ்வுகள் என்று மாரியம்மன் கோவில் நடக்கும் பங்குனி மாத திருவிழாவும் ஒன்று. நல்ல வெயில்கொளுத்தும். ஊரின் ஒரு கோடியிலிருக்கும் மாரியம்மன் கோவிலிலிருந்து தொடங்கி மறுகோடியில் மதுரை கொடைக்கானல் ரோடு வரை உள்ள நீண்ட கடைத்தெரு முழுதும் ரோடை அடைத்து தென்னங்கீற்றுப் பந்தல் போட்டு விடுவார்கள். கோடை வெயிலில் பந்தலின் கீழே நடக்கவும் ஆனந்தமாகவும் இருக்கும். அது அழகாகவும் இருக்கும். இருபுறமும் இருக்கும் கடைக்காரர்கள் தான் செலவைப் பங்கிட்டுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். இந்த பழக்கத்தை நான் வேறு எங்கும் கோடை கால கோயில் உற்சவத்தை ஒட்டி இப்படிச் செய்வதை அறிந்ததுமில்லை. கேட்டதும் இல்லை. கடைக்காரர்கள் பெரும்பாலும் நாடார்கள். ஒரு சிலர் சௌராஷ்டிரர்கள். மாரியம்மன் கோயில் நாடார்களின் நிர்வாகத்தில் இருந்தது. கோயிலைச் சுற்றி இருந்த இடத்தில் நிறையக் கடைகள் வந்து விடும். ராட்டினங்கள் வந்து விடும்.

முன்னரே சொல்லியிருக்கிறேன். மாமா பிறந்து வளர்ந்ததெல்லாம் சுவாமிமலையில். சுவாமிமலை மட்டுமல்ல. அனேகமாக தஞ்சையைச் சேர்ந்தவர்களுக் கெல்லாம் சுவாமி மலை சுவாமிநாதன் தான் குல தெய்வம் ஆகவே மாமாவுக்கும் சுவாமிநாத ஸ்வாமி தான். என் சின்ன மாமாவின் பெயரும் சுவாமிநாதன். என் பெயரும் அப்படியே. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு சுவாமிநாதன் இருப்பது சுவாமி மலைப் பக்கம் சகஜம். ஆனால் மாமாவுக்கு தன் குல தெய்வம் சுவாமிநாதன் தான் என்ற கட்டுப்பாடு ஏதும் கிடையாது. நிலக்கோட்டை மாரியம்மனிடம் அவருக்கு பக்தி அதிகம். அதனால் தானோ என்னவோ, ஒரு முறை அந்நாட்களில் தஞ்சைக்கு என்னை அழைத்துச் சென்றபோது, அவர் பெரிய கோவிலுக்குப் போகவில்லை. தஞ்சை மாரியம்மன் கோவிலுக்குத்தான் அழைத்துச் சென்றார். மாரியம்மன் கோவிலை அடுத்து பெருமாள் கோவில் ஒன்றும் இருந்தது நிலக்கோட்டையில். ஆனால் அந்தப் பெருமாள் ரொம்ப ஏழைப் பெருமாள். யாரும் அவரைப் பொருட் படுத்திய தாகத் தெரியவில்லை. மாமாவோடு அவர் கோவிலுக்குப் போகும் போதெல்லாம் நானும் அவருடன் செல்வேன். எனக்கு நாங்கள் பெருமாள் கோவிலுக்கு என்றும் போனதாக நினைவு இல்லை. பெருமாளும் நின்ற பெருமாளா, அமர்ந்த பெருமாளா அல்லது சயன கோலத்தில் சேவை சாதிப்பவரா என்று தெரியாது. அது பற்றி இப்போது நினைத்துப் பார்க்கும் போது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. பெருமாள் எந்த கோலத்தில் இருந்தாலும் அழகானவர். அதனால் அவர் அலங்காரப் பிரியரும் கூட. வடுவூருக்கு கைசிக நாடகம் பார்க்க ராமானுஜம் அழைத்திருந்தார். கோதண்ட ராமர் கோவில் பிரகாரத்தில் கைசிகி நாடகம் நடந்தது. அன்று தற்செயலாக எங்கள் அதிர்ஷ்டம் உற்சவ மூர்த்தியை வெளிப்பிரகாரத்தில் வைத்து அலங்காரம் செய்திருந்தார்கள். அந்த கோதண்ட ராமன் போல அழகான சிற்ப வடிவத்தை வேறு எங்கும் நான் பார்த்ததில்லை. ராமனுக்கு சேவை செய்து கொண்டிருந்த பாட்ராச்சாரியாரிடம், "ராமன் ரொம்ப அழகாக இருக்கிறார்," என்று சொன்னேன். அவரும் இத்தகைய அழகான உற்சவ மூர்த்திகள் நான்கோ ஐந்தோ இருப்பதாகவும் அவை இருக்குமிடங்களையும் சொன்னார். இப்போது எனக்கு மறந்து விட்டது. கோவில்கள் எனக்கு எப்போதுமே பெரும் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் தரும் இடங்களாக இருந்து வந்துள்ளன.

மாமா குடும்பத்திற்கு குல தெய்வம் சுவாமிநாதன் என்றேன். தந்தைக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்த, கோவணம் தரித்த கோலத்தில் ஒரு பாலகன். ஹிந்து மதத்திலும் புராணங்களிலும் தான் என்னென்ன அழகான, விசித்திரமும், வசீகரமுமான கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று யோசித்தால் அதுவே இப்போது வியப்பாக இருக்கிறது. நிலக்கோட்டையிலிருந்து மதுரைக்குப் போகும் இரண்டு வழிகளில் பேருந்துகள் போகும். ஒன்று கொடைக்கானல் ரோடு என்று இப்போது தெரியப்படும் அம்மையநாயக்கனூர் வழி. இன்னொன்று, அணைப்பட்டி, சோழவந்தான் ஊர்கள் வழியாகச் செல்லும் இன்னொரு வழி. அணைப்பட்டி அப்படி ஒன்றும் தூரத்து கிராமம் இல்லை. ஐந்தோ ஆறோ மைல்கள் தூரத்தில் தான் அது இருந்தது. அது ஏன் அணைப்பட்டி என்று பெயர் பெற்றது என்பது எனக்கு அன்று யாரும் எனக்குச் சொன்ன தில்லை. அங்கு ஏதும் அணை கட்டப்பட்டிருக்கிறதோ என்னவோ. தெரியாது. நிலக்கோட்டையை விட்டு வந்த பிறகு அணைப்பட்டி என்று பெயர் ஏன் வந்தது? என்றா விசாரித்துக்கொண்டிருப்பார்கள் யாரும்? ஆகவே இப்போது எனக்குத் தெரியாது. ஆனால் அங்கு தண்டாயுத பாணி கோவில் ஒன்று உண்டு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆக, நிரம்ப தெய்வ பக்திகொண்டவரும், சுவாமிநாதனை குல தெய்வமாகக் கொண்டவருமான மாமா, ஐந்தே மைல் தூரத்திலிருக்கும் தண்டாயுத பாணி கோவிலுக்கு அடிக்கடி போய் தரிசனம் செய்து வருவார் என்று தான் நினைக்கத் தோன்றும். ஆனால் அவரும் போனதில்லை. அதனால் நானும் போனதில்லை. இதையெல்லாம் எதற்காக இவ்வளவு தூரம் சொல்ல வந்தேன் என்றால், நிலக்கோட்டையை விட்டு அவர் எந்த இடத்திற்கும் பெரிய நிர்ப்பந்தங்கள் இல்லாமல், சென்றதில்லை. அப்படி யெல்லாம் சுவாமி தரிசனத்திற்குக் கூட பக்கத்து ஊருக்குக் கூட போய் வருவோம் என்று அவர் போனதில்லை. அப்படியெல்லாம் செலவு செய்ய அவரிடம் பணம் இருந்ததில்லை என்பதைச் சொல்லத்தான். ஒரு முறை காந்தி மதுரைக்கு வருகிறார், இடையில் அவர் வரும் ரயிலை வழியில் நிறுத்திப் பார்த்து வரலாம் என்று நிலக்கோட்டையே கொடை ரோடுக்குச் சென்ற போது பள்ளிக்கூட மானேஜர் தன் வில்வண்டியில் மாமாவையும் அழைத்துச் சென்றதால்தான் மாமா வீட்டை விட்டு நகர்ந்தார். எனக்கும் அவர் "போடா யாரும் பசங்க போனா நீயும் போயிட்டு வாடா" என்று முதல் தடவையாக, என்னைத் தனியாக எங்கும் செல்ல அனுமதி தந்தார். நிலக்கோட்டையில் நான் 13 வயது வரை இருந்த காலத்தில் என்னைத் தனியாக எங்கும் செல்ல அவர் அனுமதி தந்தது "சரித்திரம் முக்கியத்வம் பெற்றுவிட்ட" அந்த ஒரு நாள் தான்.