Tuesday, December 18, 2007

நினைவுகளின் தடத்தில் (6)

சிறுவயதில் நடந்த விஷயங்கள், சந்தித்த நண்பர்கள் இப்படி பலவற்றில் ஒரு சில மிக பசுமையாக, ஏதோ கண்முன் நேற்று நடந்தது போல் நினைவில் இருக்கின்றன. பல மறந்து விடுகின்றன. நேற்று நடந்த விஷயங்கள் எவ்வளவு தான் நினைவைக் கிளறிப் பார்த்தாலும் ஞாபகத்திற்கு வருவதில்லை. பின் எப்போதாவது வேறு சிந்தனையில் இருக்கும் போது, தேடாத இந்த நினவுகள் மனதில் பளிச்சிடும். மனித மனது எப்படித்தான் செயல்படுகிறது, அல்லது செயல்பட மறுக்கிறது என்பது ஒரு புரியாத புதிர். ரஸ்ஸல் வேடிக்கையாகச் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார்; மனவியல் அறிஞர்கள் (psychologists) மனது என்ற ஒன்று கிடையாது என்று வெகு தீர்மானமாகச் சொல்கிறார்கள். அதேசமயம் பௌதீகவியல் (physicists) அறிஞர்களும் தம் தரப்புக்கு பொருள் (matter) என்று ஏதும் கிடையாது என்று. இந்த விஞ்ஞானிகள் எதைப் பற்றி வாழ்நாள் முழுதும் ஆராயகிறார்களோ, அதுவே இல்லை என்றால்..... எதை ஆராய தம் வாழ்நாளைச் செலவிட்டார்கள் ? என்று கேட்க நமக்குத் தோன்றும். இப்படி மனோவியல் அறிஞர்களும் பௌதீக விஞ்ஞானிகளும் சொல்வது, தையல்காரர்கள் இந்த ஊரில் யாருமே உடை அணிவதில்லை, எல்லோரும் நிர்வாணமாகத்தான் இருக்கிறார்கள் என்றும், செறுப்புத் தைக்கிறவர்கள், எல்லோரும் வெறுங்காலோடு தான் நடந்து செல்கிறார்கள் என்றும், சொல்வது போல இருக்கிறது என்று வேடிக்கையாகக் கூறுவார்.(History of Western Philosophy - அத்தியாயம் பக்கமெல்லாம் தெரியாது. எப்ப்வோ 50-களின் இறுதியில் படித்தது, நினைவிலிருந்து சொல்கிறேன்) வேடிக்கை தான் ஆனால் அது உண்மையும் கூட. அது பற்றிப் பின்னர்.

இப்போதைக்கு மனது என்ற புதிர் பற்றி.
எதற்காகச் சொல்லவந்தேன் என்றால், எது இக்காலத்தில் நம் அரசியலின், சமூகத்தின் குரல்வளையைப் பிடித்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறதோ, எது எல்லோர் பிரக்ஞையையும் முழுதாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறதோ, அது என் சிறுவயதுப் பிராயத்தில் இருந்ததில்லை. அது ஒரு பெரிய விஷயமாகவே இருந்ததில்லை. எங்கள் நண்பர் குழு ஒன்றில் ஒருவர் எல்லோரையும் நோக்கி ஒரு கேள்வி கேட்டார். "உங்கள் குழந்தை படிக்கும் பள்ளிக்கூடத்தில், வகுப்பில் ஒரு தாசியின் குழந்தையும் சேர்க்கப்பட்டால் என்ன செய் வீர்கள்? " அப்போது நான் சொன்னேன், "குழந்தைகள் எல்லாமே குழந்தைகள் தானே?" என்று. அப்போது உடனே எனக்கு மனதில் பட்ட பதிலைச் சொன்னேன். யோசிக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. ஏதும் ஆராய்ச்சிக்கான விஷயமும் இல்லை இது. பிறகு ஒரு நாள் கழித்துத்தான் எனக்கு, அப்போது என் சிறுபிராய அனுபவத்தில் நடந்ததைச் சொல்லியிருக்கலாமே என்று தோன்றிற்று.


எங்கள் வகுப்பில், என் ஞாபகத்தில் அது ஏழாவது படிக்கும் போது என்று சொல்லவேண்டும். இரண்டே இரண்டு பெண்கள் தான் இருந்தார்கள். அவர்கள் தனியாக ஒரு பெஞ்சில் உட்கார்வார்கள். வகுப்பில் சுமார் 30 பையன்கள் இருக்கலாம். நான் ஒரு பெஞ்சில், கடைசி என்று சொல்லும் படிக்கு பின் வரிசையில் ஒன்றில். எங்கள் பெஞ்சில் நாலு பேர். அவர்களில் ஒருவன் அங்கண்ணன் என்று பெயர் என்று ஞாபகம். நல்ல உயரம். கறுப்பு. அவன் ஒரு தலித், இன்றைய சொல்லாடலில். என் வகுப்பிற்கு வாத்தியார் என் மாமா தான். அவர் தான் ஹெட்மாஸ்டரும். நாங்கள் அவனை தலித் என்று அறிந்து கொண்டது, பெயரை ஊரை அல்லது இது போன்ற பல விவரங்களை அறிந்து கொண்டது போலத் தான். அதற்கும் மேல் உள்ள அர்த்தங்கள் எங்களுக்குச் சொல்லப் படவுமில்லை. நாங்கள் அறிந்து கொண்டதுமில்லை. யாரும் அவனை தலித் என்று சொல்லி வித்தியாசமாக நடத்தியது கிடையாது. நல்ல உயரம் என்பதும், அடிக்கடி ஒவ்வொரு வகுப்பிலும் அவன் இரண்டு வருடங்களாவது தங்கி விடுவான் என்பதும் தான் முக்கிய தகவல்கள். அப்படி ஒரு வருடத்திற்கு மேல் அதே வகுப்பில் தொடர்வது என்பது பல மாணவர்களுக்கு சகஜமான விஷயம். அங்கண்ணன் கொஞ்சம் அதிகம் ஒரே வகுப்பில் தங்கி விடுவான்,. அவ்வளவே.


ஒரு முஸ்லீம் மாணவனும் எங்களுடன் படித்தான். அப்துல் வஹாப் என்று பெயர். அவனுடைய வீடு பள்ளிக்குப் போகும் வழியில் நீண்ட தெருவின் மத்தியில் இருக்கும். அப்துல் வஹாபின் அப்பா வீட்டின் முன் ஒரு கட்டிலில் உட்கார்ந்திருப்பார். நல்ல பாரியான உடம்பு. துருக்கிக்காரர் மாதிரி பின்னால் ஒரு குஞ்சம் தொங்கும் தொப்பி ஒன்றை எப்போதும் அணிந்திருப்பார். அவர் லேவா தேவி செய்து வந்தார். முஸ்லீம்கள் கடனுக்கு பணம் கொடுத்து வட்டி வாங்கிப் பிழைப்பது ஹராம் என்று இஸ்லாத்தில் நம்பப்படுகிறது. ஆனால் நான் சிறு வயதில் பார்த்த முதல் முஸ்லீமின் தொழிலே அதாகத்தான் இருந்தது. பின்னால் வட்டிக்குக் கடன் கொடுத்து பயமுறுத்தும் மனிதராகத்தான் பட்டாணியர்களை நாமும் பார்த்திருக்கிறோம். நம் தமிழ் சினிமாவிலும் பட்டாணியனுக்கான் நிரந்தர வேஷமும், தொழிலும் அது தான். நிலக்கோட்டையில் நான் அதிகம் முஸ்லீம்களைப்பார்த்ததில்லை. ஆனால் மெயின் ரோடை விட்டு உள்ளே தள்ளிச் செல்லும் ஒரு சந்தின் நடுவில் பள்ளி வாசல் இருந்தது. ஏதோ ஒரு முஸ்லீம் பண்டிகையின் போது தெருவில் புலிவேஷம் ஆடுவதை நான் பார்த்திருக்கிறேன். வேறு எந்தத் திருவிழாவிலும் புலிவேஷம் ஆடி நான் பார்த்ததில்லை. ஒரு சமயம் நாங்கள் விளையாடிக்கொண்டிருந்த போது அப்துல் வஹாப் என்னைத் துரத்த நான் ஓட, ஒரு மண்மேட்டின் அருகே அவன் என்னைப் பிடித்து விடுவான் போலிருக்க நான் சட்டென அந்த மேட்டைச் சுற்றி வளைந்து ஓடினேன். அவன் கால் சறுக்கி குப்புற விழுந்து அவன் முன் பற்கள் உடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்து கிடந்தான். நான் பயந்து விட்டேன். நான் தான் தள்ளி விட்டேன் என்று சொல்வார்கள், மாமா அன்று என்னைத் துவைத்து எடுத்துவிடுவார் என்று பயந்து கிடந்தேன். ஆனால் ஆச்சரியம், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. மாமாவும் பயந்து தான் இருந்தார். அப்துல் வஹாபின் அப்பா வந்து என்ன ரகளை நடக்கப் போகிறதோ என்று. பின்னால் எனக்குச் சொன்னார்கள். "வாத்தியார் வீட்டுப் பிள்ளைதானே. ஏதோ விளையாட்டிலே இப்படி ஆகிப் போயிருச்சி. சரி விடுங்க" என்று அப்துல் வஹாபின் அப்பா சொன்னாராம். இன்னொரு பையன் பழனிச்சாமி. 'சாமிநாதா, நான் எட்டாம்புக்கு மேலே படிக்கப் போறதில்லே. எங்க ஐயா சொல்லிட்டாரு" என்று மிக சந்தோஷமாகச் சொல்வான். ஏன்? என்று கேட்டதற்கு, "அதுக்கு மேலே படிக்கிறதுக்கு ரொம்ப மூளை வேணுமாம். பத்தாம்புக்கு போனாலே ஒவ்வொத்தருக்கு படிச்சுப் படிச்சு மூளையே கெட்டுப் போயிருமாம்" என்று சொல்வான்.


நான் முக்கியமாகச் சொல்ல வந்தது எங்கள் வகுப்புப் பெண்களைப் பற்றி. ஒருத்தி பெயர் சௌந்திரம் என்று நினைக்கிறேன். எங்கள் பள்ளிக்கூட மானேஜர், அல்லது கரஸ்பாண்டண்ட்டின் பெண். சௌராஷ்டிரர். மதுரை ஆர்.வி.மில்லின் நூல் ஏஜென்சி. அவர்கள் எங்கள் பள்ளியை நடத்தும் ஒரு குடும்பத்தின் மூன்று சகோதரர்களில் ஒருவர். மாறி மாறி அவர்கள் பள்ளிக்கு மானேஜராக இருப்பார்கள். நான் இருந்த காலத்தில் அந்த குடும்பம் தான் நிலக்கோட்டையிலேயே பணக்கார குடும்பம். அவர்கள் வசித்த தனித்தனி வீடு ஒவ்வொன்றும் பெரிய மாளிகை என்று சொல்லவேண்டும். அந்தப் பணக்கார சௌந்திரத்தோடு ஒட்டி உட்கார்ந்திருந்த இன்னொரு பெண் பெயர் ராம திலகம். மிக அழகானவள். கருப்பு நிறம் தான். என்றாலும் கருப்பு என்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கறுப்பு இல்லை. ஆனால் அழகி. அவள் ஒரு தாசி குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்படியென்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. வகுப்பில் அவர்கள் இருவரே இருந்ததால், இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் இருவரும் வகுப்புத் தோழிகள். அவ்வளவே. மேலும், தாசி என்றால், ஏதோ ஒரு குலம், அல்லது உத்யோகம், என்பதற்கு மேல் அந்த பெயர் எங்களுக்கு எந்த அர்த்தத்தையும் கொடுத்ததில்லை. இந்த விவரமும் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது. எனக்குத் தெரியும். ஏனெனில் அவள் 'ட' வடிவத்தில் இருக்கும் எங்கள் தெரு என்று சொன்னேனே, எங்கள் வீடு அந்த 'ட' வின் இருகோடுகளின் சந்திப்பில் இருந்தது. ராமதிலகம் வத்தலக்குண்டு போகும் ரோடைத் தொடும் கோட்டின் நடுவே குளத்தை நோக்கி இருக்கும் வீட்டில் இருந்தாள். அவள் அம்மாவோ, பாட்டியோ ஒரு கிழவியோடு. அதற்கு அடுத்த வீட்டில் ஒரு இளம் பெண். அவ்வப்போது டூரிங் சினிமா நான் சொன்ன பேட்டையில் முகாமிட்டால், அதன் முதலாளி, அங்கு தான் தங்குவார். கழுத்தில் கையில் தங்க செயின். மல் வேஷ்டி. கறுப்பு தான், ஆனால் ஆணழகன் என்று சொல்லவேண்டும். என் மாமா கூட வீட்டில் யாருடனோ பேசும் போது அவரைப் பற்றி, "நல்ல மனிதர் தான். மரியாதை தெரிந்தவர். ஆனால், என்னவோ இப்படி ஒரு பலஹீனம்.." என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்


ராம திலகம் இருந்த எங்கள் தெருவின் நீட்சியில் அவள் வீடு நடுவில் இருந்தது என்றேன். அதன் இரு பக்கங்களிலும் முதலில் இரண்டு வீடுகளில் இரண்டு முஸ்லீம் குடும்பங்கள் இருந்தன. அவற்றில் முதல் வீட்டின் முன் ஆடு ஒன்று கட்டியிருக்கும். பின் ராமதிலகம் வீடு. பின் ஒரு இளம் பெண் இருந்த வீடும். அதற்கு அடுத்த வீட்டில் ரெவென்யூ இன்ஸ்பெக்டர். அதற்கு அடுத்த வீட்டில் அடிக்கடி யார் யாரோ வாடகைக்கு வந்து போவார்கள்

.
எங்கள் தெருவின் பெயர், வெங்கடேஸ்வர அல்லது வெங்கடேச புர அக்கிரஹாரம். எது என்று நிச்சயமாக ஞாபகமில்லை. அந்தப் பெயர் வீண் தான். ஒரு சமயம் ஒரு தகரத் துண்டில் தெருப் பெயர் எழுதி சுவற்றில் ஆணி அடித்துச் சென்றார்கள். ஆனால் அந்தத் தெருப் பெயரை யாரும் எங்கும் உபயோகித்தது கிடையாது. பெயரை எழுதி, ஹெட்மாஸ்டர், நிலக்கோட்டை என்று எழுதினால் தபால் வந்து சேர்ந்து விடும். அல்லது வழியில் பார்க்க நேர்ந்தால் 'சார் உங்களுக்கு தபால் " என்று சொல்லிக் கொடுத்து விடுவார்கள். நிலக்கோட்டையில் வீட்டு எண், தெருப் பெயர் என்பதெற்கெல்லாம் ஏதும் அர்த்தம் கிடையாது. எங்கள் வீட்டின் எதிரே ஒரு சாரியில் ஒரு பெரிய வீடு காம்பௌண்டு சுவர் அடைக்க இருக்கும். அது எப்போதும் எங்கள் ஊருக்கு மாற்றலாகி வரும் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு என்று தீர்மானமாகிய வீடு. ஸ்ரீ ராமவிலாஸ் சர்வீஸோ அல்லது கொடைக்கானல் மோட்டார் யூனியன் (ஜெயராஜ் நாடார் என்பவர் நடத்தி வந்தது) பஸ்ஸோ, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் டூர் போகிறார் என்றால் அவர் வீட்டுக்கு முன்னால் வந்து பஸ் நின்று காத்திருக்கும். அவர் தயாரானதும் பஸ்ஸில் டிரைவர் இருக்கைகுப் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து கொள்வார். அது அவருக்காகக் காலியாக வைக்கப்பட்டிருக்கும். மற்றவர்களோடு சேர்ந்து அவர் உட்காரமாட்டார். டிவிஎஸ் வண்டி இப்படி வந்து அவருக்காகக் காத்திருந்து நான் பார்த்ததில்லை. அவர் வீட்டு வேலைக்கு என்று ஒரு ஏட்டையாவோ, கான்ஸ்டபிளோ இருப்பார். அவர் தினம் காலையில் வந்து இன்ஸ்பெக்டரின் ஷூவை பாலிஷ் செய்து கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். தினம் ஒரு பஸ் காலையில் அவர் வீட்டின் முன் வந்து நிற்கும். பஸ்ஸின் மேலேயிருந்து இரண்டு குடங்கள் வந்திறங்கும். அவை நிலக்கோட்டையிலிருந்து 22 மைல் தூரத்திலிருக்கும் பெரியகுளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வந்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வீட்டில் கொடுக்கும்.

அந்த வீட்டு காம்பவுண்டை அடுத்து ஒரு வெட்ட வெளி. அதன் ஒரு ஓரத்தில் ஒரு குடிசை. அதில் நாகு என்று அழைக்கப்பட்ட வற்றிய உடம்பும் ஏழ்மையின் வடிவே ஆன ஒரு ஸ்திரி. அவள் புருஷன் நல்ல தாட்டியான மனிதன். அவன் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டு 'பெரிய குளம், பெரிய குளம்' வண்டி கிளம்பப் போகுது" என்று கூவிக்கொண்டிருக்கப் பார்த்திருக்கிறேன். அவன் குடிசைக்கு வரும்போதெல்லாம் சண்டை தான், கூச்சல் தான். ஆனால் அவன் எப்போதாவது தான் காட்சியளிப்பான். நாகு தான் எந்நேரமும் ஏதோ செய்து கொண்டே இருப்பாள். அத்தோடு யாரையாவது வைது கொண்டும் இருப்பாள். அவள் ஆடு வளர்த்தாள். ஆடு என்றால் ஒரு மந்தை. ஊரெல்லாம் சுற்றி சாணி பொறுக்கி வரட்டி தட்டி பிழைத்து வந்தாள். அவள் குடிசையைச் சுற்றி இருக்கும் சிதைந்து கிடக்கும் நீளக் குட்டிச் சுவரில் எப்போது வரட்டிகள் காய்ந்து கிடக்கும். அவள் குடிசைக்கு எதிரே, எங்கள் தெருவின் மறு சாரியில் நடுவே ஒரு பாழடைந்த வீடு இருக்கும். அதில்தான் அவள் வரட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்

.
இதற்கு எதிர்த்த சாரியில் ஒரு பெரிய வீடு. அது நான் முன் சொன்ன எஸ்.ஆர். ராமய்யர் என்னும் எங்கள் பள்ளிக்கூடத்தை ஸ்தாபித்து நிர்வகித்து வந்த சௌராஷ்டிர குடும்பத்தின் மூத்த சகோதரர் வாங்கிப் போட்டிருந்த வீடு. அந்த வீட்டில் எப்போதாவது தான் ஒரு பெரிய அதிகாரி வாடகைக்கு வந்து தங்குவார். ஒரு சமயம் ஒரு சப் கலெக்டர் வாடகைக்கு இருந்தார். அவர் ஒரு வில் வண்டியில் தான் பயணம் செய்வார். பசு மாடு, வில்வண்டிக்கான மாடு எல்லாம் அந்த வீட்டின் ஒரு பக்கத்தில் இருந்த கொட்டகையில் கட்டியிருக்கும். அதற்கு அடுத்த ஒரு சின்ன வீட்டில் தான் நடராஜன் என்னும் அம்பி வாத்தியார் இருந்தார், ஒரு வயோதிக அப்பா அம்மாவோடு, இரண்டு தம்பிகளோடும். அவர் வாங்கிய 19 ரூபாய் சம்பளத்தில் எப்படி காலம் தள்ளினாரோ என்று இப்போது நான் திகைக்கிறேன். அடுத்து ஒரு பெரிய வீடு. இன்ஸ்பெக்டர் ஆ·ப் ஸ்கூல்ஸ் இருந்த வீடு. அடுத்து ஒரு வாத்தியார் வீடு. ஒரு சமயம் நாராயண அய்யர் என்று ஒரு வாத்தியார் இருந்தார். பின் வெட்ட வெளி. பின் நாகு பயன் படுத்திய பாழடைந்த வீடு. அந்த வீட்டில் சில சமயங்களில் பகல் வேஷக்காரர்கள் வந்து தங்குவதுண்டு. தினம் ஒரு வேஷம் போட்டுக்கொண்டு வருவார்கள். அவ்வப்போது ஏதாவது கேட்பார்கள். அல்லது கடைசியில் ஊர் விட்டுப் போகும் போது அவர்களுக்கு ஏதோ கொடுப்பார்கள். அந்த நாற்பதுக்களுக்குப் பிறகு நான் வேறு எங்கும் இப்படியான பகல்வேஷக்காரர்கள் என்று கேட்டதுமில்லை. பார்த்ததுமில்லை. அதை அடுத்து மறுபடியும் ஒரு வாத்தியார் வீடு. ரங்கநாதன் என்றோ அல்லது ரங்கசாமி என்றோ பெயர். எனக்கு ஆறாம் வகுப்பு வாத்தியாராக இருந்தார். அது தவிர அவர் பாட்டும் சொல்லிக்கொடுப்பார். ஊரின் மற்றொரு கோடியில் வெகுதூரத்திலிருந்த பெருமாள் கோவில் பாட்டராச்சாரியார் குடும்பமோ என்னவோ இரண்டு சிறுமிகள் வந்து பாட்டுச் சொல்லிக்கொண்டார்கள். அத்தெருவின் நடுவே ரோட்டைப் பார்த்தவாறு பிள்ளையார் கோவில். தெருவின் மறுகோடியிலிருந்த நாங்களும் பிள்ளையாரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டிருப்போம்.


வெங்கட் சாமிநாதன்/24.8.07

Monday, November 19, 2007

நினைவுகளின் தடத்தில் (5)

எப்போதோ யாரோ எழுப்ப கண்விழித்தபோது, ஒரு ஹரிகேன் விளக்கும் கையுமாக, அம்பி வாத்தி யாருடன் மாமா நின்று கொண்டிருந்தார். "எழுந்திருடா, வா போகலாம், அம்மா வந்திருக்கா" என்றார். கோபம் இல்லை அவர் முகத்தில். குரலில் சீற்றம் இல்லை. வெகு சாதாரண பாவத்தில் பொழுது விடிந்து விட்டதைச் சொல்லி எழுப்பும் பாவனையில் சொன்னார். அம்பி வாத்தியார் தான் திட்ட ஆரம்பித்தார். 'அறிவு இருக்காடா உனக்கு? ஏன் சினிமா பாத்துத் தான் ஆகணுமோ? ராஜாவைப் பாத்தியா? அவன் ஒன்னைப் போலவா இருக்கான்? புத்தி வேணும்டா? வீட்டை விட்டு ஓடறதுக்கு நேரம் பாத்தே பாரு, அம்மா ஊருலேருந்து வந்திருக்கப்போ. மாமாவப் பத்தி என்ன நினைச்சுப்பா? கொஞ்சமாவது நினைச்சுப் பாத்தியா? அம்மா ஊரிலேருந்து வந்ததும் வராததுமா அழுதுண்டு உக்காந்திருக்கா? போ. போய் சினிமாவுக்கு காசு குடுக்கலேன்னு ஒடினேன்னு சொல்லு உங்கம்மா கிட்ட" அவர் நிறுத்தவில்லை. திட்டிக்கொண்டே வந்தார். இடையில் "எல்லாம் நீங்க கொடுக்கற இடம் சார், அதான் இப்ப்டி கெட்டுப் போறான். நானா இருந்த வச்சு நாலு சாத்தற சாத்திலே, சினிமான்னு மூச்சு விடமாட்டான்." என்று மாமாவைப் பாத்தும் சொல்லிக்கொண்டே வந்தார். என்னைத் திட்டுவதற்கு அவர் உரிமை எடுத்துக் கொள்வார். மற்ற சமயங்களில் அவர் செல்லமாக கிண்டலும் செய்வார். பள்ளிக்கூடத்தில் அவர் எங்களுக்கு சொல்லிக்கொடுக்க வரும்போது மற்றவர்கள் சிரிக்க கிண்டலும் செய்வார். 'சரிப்பா அம்பி, விடு போறும். அப்பறம் இதுக்கு வேறே கோவிச்சுண்டு நாளைக்கு வேறே எங்கேயாவது ஓடினான்னா நான் எங்கேன்னு போய் தேடுவேன்?. அவன் அம்மா வந்திருக்கா? நல்லபடியா போகணும்" என்று மெல்லிய குரலில் தன் வேதனையைச் சொல்லி வந்தார். அம்மா ஊரிலிருந்து வந்திருக்கிறாள் என்று எனக்குத் தெரிந்தது அப்போது தான். அம்மா ஒன்றும் சொல்ல மாட்டாள் என்றாலும், அவள் ஊரிலிருந்து வந்திருக்கும் போது, என்னை பாட்டியும் மாமாவும் ஏதோ குழந்தையைக் கொடுமைப்படுத்தித் தான் நான் வீட்டை விட்டே ஓடிவிட்டேனோ என்று நினைத்துவிடுவாளோ என்ற பயம் இருவருக்குமே இருந்திருக்கும். அந்த வேதனையில் மாமாவால் என்னைத் திட்டக் கூட முடியவில்லை என்று நான் அதைப் பற்றியெல்லாம் பின்னர் நினைத்துப் பார்க்கும்போது தோன்றும். ஆனால் நடு ராத்திரியில் எங்கெங்கோ தேடி கடைசியில் பார்க்கில் அகப்பட்டது அவர்களுக்கு நிம்மதியைக் கொடுத்திருக்கும். ஆனால் அது வரை அவர்கள் எத்தனை வேதனைக்குள்ளாகியிருப்பார்கள் என்றெல்லாம் எனக்கு அப்போது நினைத்துப் பார்க்கமுடியவில்லை. என் துக்கம் எனக்கு. என்னால் சினிமா பார்க்க முடியவில்லை. அன்றுதான் கடைசி நாள். அது போய்விட்டது. இனி அது வருமா என்ன? வீட்டை விட்டு ஓடியும் பிரயோஜனமில்லாது போய்விட்டது. மாமாகிட்டவும் அம்பி வாத்தியார் கிட்டவும் திரும்பவும் மாட்டிக்கொண்டாய் விட்டது. இப்போ ஒன்றும் செய்ய முடியாது. அம்மாவும் ஊரிலேயிருந்து வந்திருக்கிறாள். அவளும் திட்டுவாள். இப்போது வழி நெடுக அம்பி வாத்தியார் திட்டிக்கொண்டு வருகிறார்.


நடராஜன் என்று பெயர் இருந்தாலும் அவரை எல்லோரும் 'அம்பி' என்று தான் அழைப்பார்கள். பள்ளிக் கூடத்திலும் மற்ற வாத்தியார்களும் பையன்களும் அவரை 'அம்பி வாத்தியார்' என்று தான் குறிப்பிடுவார்கள். ஆனால் அவரை மாமாவைத் தவிர வேறு யாரும் 'அம்பி' என்று அழைத்து நான் கேட்டதாக நினைவு இல்லை. நாங்கள் இருந்த தெருவில் சில வீடுகள் தள்ளி அவர் வீடு இருந்தது. நல்ல தாட்டியான சரீரம். நல்ல உயரம். மாமாவுக்கு உதவியாக இருப்பார் எப்போதும். ஏதும் உதவி தேவையானால், மாமா அவரைத் தான் கூப்பிடுவார். அவருக்கு மாமா 'ஸார்' தான்.


எல்லோரும் விழித்துக் கொண்டு இருந்தார்கள். நான் அகப்படுகிறேனோ என்னவோ, எங்கே போனேனோ என்று அவர்களுக்கு கவலை இருந்திருக்கும். அம்மாவும் பாட்டியும் ஆளுக்கு ஆள் மஞ்சள் துணியில் காசு முடிந்து ஸ்வாமிக்கு வேண்டிக் கொண்டிருப்பார்கள். 'நல்ல படியா பிள்ளை திரும்பி வரணுமே, பகவான் தான் காப்பாத்தணும். இப்படி ஒரு புள்ளே கஷ்டப்படுத்துமோ'.


வீடு வங்ததும், 'பார்க்கிலே படுத்துண்டு இருந்தி ருக்கான். நடு ராத்திரிலே வேறே எங்கே போவான். நல்ல படியா வந்து சேந்துட்டான். ஒண்ணும் சொல்லாதேங்கோ. நிம்மதியா தூங்குங்கோ இனிமே. நாளைக்குப் பாத்துக் கலாம், சார் நான் வரேன்" என்று சொல்லிக்கொண்டு அம்பி வாத்தியார் தன் வீ ட்டுக்குத் திரும்பினார். "ஏண்டா இப்படி படுத்தறே? கதி கலங்க வச்சிட்டயே" என்று பாட்டிதான் வேதனையோடு சொன்னாள். "வா, வந்து கொஞ்சமாவது சாப்பிட்டு படுத்துக்கோ, உனக்காக யாருமே சாப்படாம கொட்டு கொட்டுனு முழிச்சிண்டுருக்கா" வேறு யாரும் எதுவும் சொல்லவில்லை. இரவு வெகு நேரம் ஆகிவிட்டது.
அப்போது தீராத என் துக்கங்கள் எனக்கு. எனக்கென்று பெரிய ஆசைகள் ஏது இல்லையென்றாலும், ரொம்பவும் அடக்கமான பையன் என்று எல்லோரும் சொன்னாலும், சில சமயங்களில் எனக்கும் கூட சில ஏக்கங்கள் வந்து மாமாவை ரொம்பவும் கஷ்டப்படுத்தியிருக்கிறேன் என்பது பின்னாட்களில் எனக்கு உறைத்தது.


மாமாவின் வாழ்க்கை ரொம்பவும் வேதனைகள் நிறைந்தது. சில சாதாரண, இயல்பான எதிர்பார்ப்புகள் கூட அவருக்கு நிறைவேறியதில்லை. வறுமை. பொறுப்புக்களை நிறைய தன் சக்திக்கு மீறி தன் மீது சுமத்திக் கொண்டார். அவரால் ஓரளவுக்கு மேலே அப்பொறுப்புக்களை சமாளிக்க முடிந்ததில்லை. அவர் இயல்பில் மிக சாதுவான மனிதர். வெளியே யாரோடும் அவர் சத்தமிட்டுப் பேசியோ, முரண்டு பிடித்தோ, சண்டை யிட்டோ பார்த்ததில்லை நான். ஆனால், வீட்டில் அவருக்கு வேதனை மிகும்போது அசாத்திய கோபம் வரும். முன் கோபி. பின்னால் வருந்துவார். அவருக்கு கோபம் வந்துவிட்டால் அந்தக் கணங்களில் அவர் தான் என்ன செய்கிறோம் என்பதே அவருக்கே தெரியாது போய்விடும்.

எங்கள் தெரு 'ட' வடிவில் இருக்கும். அந்த 'ட'வின் இரு கோடுகளின் சந்திப்பில் எங்கள் வீடு இருந்தது. தெருவின் ஒரு கோடி பெரியகுளம், வத்தலக்குண்டு போகும் மெயின் ரோடில் போய்ச் சேரும். இன்னொரு கோடியில் ஒரு பிள்ளையார் கோயில். சின்ன ஒரே ஒரு அறையே கர்ப்பக்கிரஹமாகக் கொண்ட கோயில். அதில் பிள்ளையாருக்குத் தான் இடம் இருந்தது. அது எப்படி எங்கள் பராமரிப்பில் வந்தது என்று எனக்குத் தெரியாது. சாவி எங்களிடம் இருக்கும். தினம் கோவில் கம்பிக் கதவைத் திறந்து, ஒரு குடம் தண்ணீர் பிள்ளையார் மீது கொட்டி அவரைக் குளுப்பாட்டி, விளக்கேற்றி வர வேண்டும். இது தினம் மாலை நடக்கும்.


ஒரு நாள் மாலை மாமா, '"போடா, கோவிலைத் திறந்து ஸ்வாமிக்கு விளக்கேத்திட்டு வாடா," என்று சொன்னார்: பித்தளைக் குடம் ஒன்று சின்னதாக நான் தூக்கக்கூடியது. அதில் தண்ணீர் நிரப்பிக்கொண்டேன். ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய். இடைகழிச் சுவற்றில் எனக்கு எட்டும் உயரத்தில் தான் கோவில் சாவியும் தீப்பெட்டியும் இருக்கும். ஒரு கையில் தண்ணீர் நிரப்பிய குடம். மற்றொரு கையில் எண்ணெய்க்கிண்ணம். எண்ணெய்க் கிண்ணக்கையோடு உயர இருந்த சாவியையும் தீப்பெட்டியைம் எடுத்தேன். என் சாமர்த்தியம் எனக்கு உதவவில்லை. கிண்ணம் சாய்ந்து எண்ணெய் கீழே சிந்தியது. அதை மாமா பார்த்துவிட்டார். 'ஒரு காரியம் உனக்கு ஒழுங்கா செய்யத் தெரியுமாடா கழுதே" என்று சத்தமிட்டுக் கொண்டே வந்தவர், கிட்ட வந்தது தான் தெரியும். அடி விழுந்தது. சரமாரியாக அடித்துக் கொண்டே இருந்தார். குடத்தைக் கீழே வைத்தவன் அடி தாங்காமல் கீழே விழுந்தேன். அப்படியும் அவர் கோபம் அடங்க வில்லை. காலால் உதைத்தார். அடி விழுவதும் நிற்கவில்லை. இதற்குள் என் அலறலையும் மாமாவின் கூச்சலையும் கேட்டு புறக்கடையில் இருந்த பாட்டி ஓடி வந்தாள். மாமாவைப் பார்த்து சத்தம் போட்டாள், "ஏண்டா இப்படி அவனைப்போட்டுக் கொல்றே.? இப்படியாடா ராக்ஷசன் மாதிரி. ஒன்னுக்கொன்னு எதாவது ஆயிட்டதுன்னுடா என்னடா பண்றது" என்று பாட்டியும் சத்தம் போட ஆரம்பித்தாள். "உனக்கொண்ணும் தெரியாது. நீ பேசாம இரு. நீ செல்லம் கொடுத்துக் கொடுத்துதான் அவன் ஒண்ணுக்கும் இல்லாமே போயிண்டு இருக்கான்." என்று மாமா சொல்லிக்கொண்டிருக்கும்போது எனக்கு அடி விழுவது நின்றது. 'சரி போறது போ" எண்ணெய் என்ன கொஞச்ம் போறத்தானே சிந்தியிருக்கு. போடா, வேறே எண்ணெய் விட்டுத் தரேன். போய் விளக்கேத்திட்டு வா, போ" என்று பாட்டி அந்த இடத்தை விட்டு என்னை விரட்டினாள்.


எனக்கு அன்று விழுந்த அடி மாதிரி அங்கு மாமாவோடு இருந்த பன்னிரெண்டு வருஷங்களில் என்றும் விழுந்ததில்லை. மாமா முன் கோபக் காரர் தான். ஆனால் வெகு சீக்கிரம் அவர் கோபம் அடங்கிவிடும். கொஞசம் சத்தம் போடுவார். இரண்டு அடி கொடுப்பார். பின் சரியாகிவிடும். ஆனால் அன்று, கொஞ்சம் எண்ணெய் சிந்தியதற்கு நான் பட்ட அடியும் உதையும் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. "என்னடா அப்படி ஆயிடுத்துன்னு இப்படி போட்டு கொல்றே. செங்கல் தரையிலெ கொஞ்சம் எண்ணெய் சிந்தினாக் கூட அது வழிஞ்சி பரவிடும். ஏதோ வீசை எண்ணெய் போயிட்டாப்பலே. படாத இடத்திலே பட்டா என்ன ஆகும்" என்று பாட்டி திருபத் திரும்ப மாமாவைத் திட்டிக் கொண்டே இருந்தாள். மாமாவோ, "நீ பேசாமே இரேன்.உனக்கொண்ணும் தெரியாது போ" என்று தான் அவர் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்,

.
மறு நாள் காலை மாமா பேப்பர் வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தார். சின்ன மாமா எஸ் எஸ் எல் ஸி பரிக்ஷை எழுதிய ரிசல்ட் வந்திருந்தது. அம்பி வாத்தியார் வந்து கொண்டிருந்தார். வீட்டுப் படி ஏறிக்கொண்டே, 'என்ன சார், பேப்பர் பாத்தேளா, சாமா நம்பரைக் காணோமே, நான் தான் சரியாப் பாக்கலையா, உங்க பேப்பர்லே இருக்கா" என்று கேட்டுக் கொண்டே படி ஏறினார். அவர் சாமா என்று சொன்னது என் சின்ன மாமாவை. சின்ன மாமாவின் பெயரும் சுவாமிநாதன்.
"எந்த பேப்பரைப் பாத்து என்ன? போயிடுத்து. போயிடும்னு நேத்திக்கே எனக்குத் தெரிஞ்சுடுத்து" என்று வெகு தீனக் குரலில் சுரத்தின்றி மாமாவிடமிருந்து பதில் வந்தது. "நேத்திக்கே தெரியுமா? " என்று ஒன்றும் புரியாத திகைப்பில் கேட்டார், அம்பி வாத்தியார்.

Tuesday, November 06, 2007

மதுரம் பாட்டி

சில விஷயங்கள் மறப்பதில்லை. எவ்வளவு நீண்ட காலம் ஆனாலும். நேற்றைய சமாச்சாரம் மறந்து விடுகிறது. இதை எப்படி புரிந்து கொள்வது?. கோர்ட்டில் இந்த மாதிரி சாட்சி சொன்னால், 50 வருஷத்திற்கு முன்னால் நடந்தது நினைவில் இருக்கிறது. பத்து நாட்கள் முன்னால் மறந்து போவது எப்படி? நீங்கள் சொல்வது பொய் என்று வக்கீல் என்னைக் குறுக்கு விசாரணை செய்தால், நான் என்ன பதில் சொல்லமுடியும்? நிச்சயம் நான் 'பொய்யன்' என்று தான் கோர்ட்டும் முடிவு கட்டும். இப்படித்தான் நினைவும் மறதியும் என்னுடன் மாத்திரம் இல்லை, நம் எல்லோருடனும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் விளையாடி வருகிறது.

அவர் பெயர் எஸ் நடராஜன். எஸ். என். ராஜா என்று தான் அவரை நாங்கள் எல்லோரும் அறிவோம். காவேரிப்பட்டனத்திலிருந்து ஹிராகுட்டிற்கு வேலைக்கு வந்தவர். நான் ஹிராகுட்டுக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர். ஹிராகுட்டில் 1950 களில் எஸ். என். ராஜா எனக்கு ரொம்ப பெரியவர். வந்ததும் அவர் வீட்டில் தான் தங்கியிருந்தேன். நான் மட்டுமல்ல இன்னும் சிலரும். அவர்களில் எஸ். என். ராஜாவின் மச்சினனும் ஒருவன். அப்போல்லாம் ராஜாவைத்தவிர மற்றவர்கள் எல்லாமே 'ன்" தான். அந்த மச்சினன் பெயர் மறந்து விட்டது. ஆனால் அவன் அசகாய சூரன். என்னை விட இரண்டு வயது தான் பெரியவன். இருந்தாலும் நான் அவனை அசகாய சூரன் என்று சொல்லக் காரணம், வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழையும் போதே ரேடியோவில் கச்சேரி கேட்டுக்கொண்டே, "யாரு வயலின்? ராஜமாணிக்கம் பிள்ளை தானே? " என்பான். அவனால் அந்த வயசில் எப்படிச் சொல்ல முடிந்தது என்பது இன்னும் எனக்கு ஆச்சரிய மாக இருக்கும். அவனுக்கும் ராஜாவுக்கும் என்னிடம் பிரியம் அதிகம். ராஜாவின் மனைவி ஊரிலிருந்து வருகிறார் என்றதும் நான் வேறு இடம் தேடினேன். அணைக்கட்டு அலுவலகமே எனக்கு வீடு கொடுத்து ஆர்டர் கொடுத்து விட்டது. இன்னொருவருக்குக் கொடுத்த வீட்டில் நானும் பங்கு கொள்ளவேண்டும். ஆரம்ப காலத்தில் இப்படித்தான் நடந்து வந்தது. பத்மனாபன் என்னும் ஒரு எலெக்ட்ரீஷியன். அவனுக்கு ஒரு உதவி ஆள். அவனும் அந்த வீட்டில் தான் இருந்தான். அவன் ஒரு க்ளாஸ் ப்ராண்டியோ விஸ்கியோ உள்ளே போடாமல் விளக்குக் கம்பத்தின் மேல் ஏறமாட்டான். ஒய்.பி.வி. ராவ் என்று ஒரு தெலுங்கன். முழு பெயர் யெடவில்லி புட்சி வெங்கடேஸ்வர ராவ்.(இது எப்படி ஞாபகம் இருக்கு?) ஒரு மாதிரி கிறுக்கு. எப்போ பார்த்தாலும் ஸ்ரீ ஸ்ரீ யின் கவிதைகளைப் படித்துக்கொண்டிருப்பான். ஸ்ரீ ஸ்ரீயின் தெலுங்குக் கவிதைகளில் நிறைய ஆங்கில வார்த்தைகள் தெளிக்கப்பட்டிருக்கும். தீவிர செக்கச் செகப்பான கம்யூனிஸ்ட். இதையெல்லாம் பார்த்த ராஜாவுக்கு கொஞ்சம் பயமாக இருந்திருக்கிறது. எனக்கு அப்போது வயசு பதினாறு தான். சம்பளம் கிடைத்ததும் ஊருக்கு அப்பாவுக்கு பணம் அனுப்ப வேண்டும். நான் ஒழுங்கா இருப்பேனா என்று. அவருக்கு சந்தேகம் ."தனியா வந்துட்டோம்னு இருக்காதே, ரெண்டு நாளைக்கு ஒரு தடவையாவது வந்து போய்க்கொண்டிரு" என்றார். அவருக்குக் கொஞ்சம் மனம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது தான். எப்படி சிலர் வெகு சீக்கிரம் மிக ஒட்டுதலாகி விடுகிறார்கள்!

எனக்கும் அங்கு ஆதரவு தரும் பெரியவர் யார்? அவர் வீடு ஒன்றும் வெகு தூரமில்லை. நாலைந்து ப்ளாக் தள்ளி ஒரு நூற்றைம்பது அடி தூரத்தில் தான். அடிக்கடி போய் வருவேன். நாயர் ஹோட்டல் டீயே சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியுமா? சாயந்திரம் போன உடனே "காபி சாப்பிடறயாடா" என்று மாமி கேட்பார். வேறென்ன வேண்டும்.?

ஒரு நாள் ராஜா சொன்னார். "உங்க ஊர்க்காரா இங்கே இருக்காளே தெரியுமோ சாமா? " என்று கேட்டார். " எங்க ஊர்க்காராளா? இங்கேயா? ஹிராகுட்டிலேயா?." என்று எனக்கு வியப்பாக இருந்தது. எங்க ஊர் கொஞ்சம் விசித்திரமான ஊர். யாராவது பனியனும், காலில் செருப்புமாக தெருவில் நடந்தால் போதும், " என்னடா ராமேந்திரா, கும்மோணமா? " என்று கேட்பார்கள். கும்மோணம் இல்லாவிட்டால் இந்தப் பக்கம் தஞ்சாவூர். அதைத் தாண்டி இருக்கும் லோகம் அவர்களுக்கு வேண்டியதில்லை. "என்னத்துக்குடா, கும்மோணம் பெரிய தெருவிலே கிடைக்காத ஜாமான் லோகத்திலே உண்டா சொல்லேன் பார்ப்போம்" என்பார்கள். "புள்ளையாண்டான் எங்கியோ வடக்கே போயிட்டானாமே" என்று தான் என்னைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட ஊரில் ஒருத்தர் புத்தியில் இங்கே ஒரிஸ்ஸாவில் ஆதிகுடிகள் வசிக்கும் ஒரிஸ்ஸா எப்படிப் பட்டிருக்கும்? ஆச்சரியமாக இருந்தது. "நிஜமாத்தான் சாமா, எனக்கே ஆச்சரியமாத்தான் இருந்தது. இப்போ நான் வரலியா காவேரிப்பட்டனத்திலேர்ந்து. இல்லே நீ தான் வரலியா? எல்லாம் அப்படித்தான். வா. உடனே போய்ப் பாத்துட்டு வரலாம் இங்கே தான் பக்கத்திலே ஜி.ப்ளாக்கிலே தான் இருக்கா" என்றார். எனக்கு எங்கள் ஊரில் யாரையும் அதிகம் தெரியாது. நான் 14 வயது வரை வளர்ந்தது நிலக்கோட்டையில். நான் உடையாளுருக்கு வந்தது, கும்பகோணத்தில் 9-வது 10-வது பள்ளிப்படிப்பை முடிக்கத்தான். ஆற்றில் தண்ணீர் இருக்கும் நாட்களில் கும்பகோணத்திலேயே தங்கி விடுவேன். சனி ஞாயிறுகளில் தான் உடையாளுருக்கு வருவேன். பள்ளி நாட்களில் ஐந்தரை மைல் தூரம் நடந்து மூன்று ஆறுகளைக் கடந்து பாணாதுரை ஹைஸ்கூலுக்குப் போக வேண்டும். காலை 8 மணிக்குக் கிளம்பினால் சாயந்திரம் ஏழு மணிக்குத் தான் உடையாளூர் திரும்ப முடியும். இன்னமும், எங்கள் வீடு இருந்த சாரியில் அக்கம் பக்கத்து நாலுவீட்டு மனிதர்களைத் தெரியும். அதற்கு மேல் யாரையும் எனக்குத் தெரியாது.

ஆக, ராஜா எங்கள் ஊர்க்காரர்கள் முன்னிலையில் என்னை நிறுத்தி, "சாவித்திரி, இதோ வந்திருக்கான் பார் உங்க ஊர் பிள்ளையாண்டான்'," என்றவர் என்னைப் பார்த்து, "தெரியறதா, யார்ன்னு?" என்று கேட்ட போது, "இல்லையே" என்று அசடு வழியச் சிரித்தேன். "அவனுக்கு எப்படித் தெரியும்? நான் உடையாளூரில் இருந்த போது அவன் அங்கே இல்லை. எங்கேயோ மதுரைக்குப் பக்கத்தில் அவனோட மாமாதான் படிக்க வச்சிண்டிருக்கார்னு சொன்னா. நானே இவனைப் பாத்ததேயில்லையே." என்று எனக்கு ஆதரவாக அந்தப் பெண் பேசினாள். என்னைவிட நான்கு ஐந்து வயது தான் பெரியவளாக இருந்திருப்பாள். சற்று தாட்டியான உடம்பு. கலகலப்பான சிரித்த முகம். அவளுடைய புருஷன் நல்ல உயரம். நல்ல பருமனும் கூட. ஆனால் நல்ல கருப்பு.


"இவனைப் பாத்ததில்லையே தவிர இவா எல்லாரையும் எனக்கு நன்னா தெரியும். ராஜம் சாஸ்த்ரிகளாம்னா ஊரிலே எல்லாருக்கும் நன்னா தெரியும். கபிஸ்தலத்திலேர்ந்து அப்பப்போ வந்து போயிண்டுதான் இருப்பேன். பாட்டி அழைச்சிண்டு வருவா. நம்ம மனுஷாள மறக்கப்படாதும்பா. " அப்போ எல்லாரையும் விசாரிச்சுப்பேன். பாட்டியும் சொல்லுவா..... நன்னா இருக்கியாடா இங்கே. அப்பாக்கு ஒழுங்கா பணம் அனுப்பரயோல்யோ. அனுப்பிண்டுரு. இல்லாட்டா ரொம்ப கஷ்டப்பட்டுப் போவா. ரொம்பச் சின்ன வயசிலேயே, இத்தனை தூரம் வந்து வேலை பாத்து அப்பா அம்மாவைக் காப்பாத்தணும்னு ஆயிடுத்து, கஷ்டந்தான். . ரொம்ப சின்னவனா இருக்கியேடா.. " பேசிக்கொண்டே போனாள் அந்தப் பெண். அவள் புருஷனுக்கு பேச ஒன்றும் இல்லை. பேசுகிறவர்களைப் பார்த்துக்கொண்டு சிரித்துக் கொண்டும் இருந்தார். ராஜா சொன்னார். '" நான் கூட நினைச்சேன் அவன் வரதுக்கு முன்னாலே, வொர்க் ஷாப்பிலே சேத்துடலாம்னு. நிறைய கத்துக்கலாம். ஆனா இப்படி ஒடிஞ்சு விழறாப்பிலே நோஞ்சானா இருக்கானேன்னு தான் சரி நடக்கறபடி நடக்கட்டும்னு விட்டுட்டேன்" என்றார். "அப்பா அம்மாள்ளாம் சௌக்கியமா இருக்காளா, அவாளுக்கு என்னெ நன்னா தெரியும். அம்மாவக் கேள் நிறைய சொல்வா" என்றாள். " "சாவித்திரியப் பாத்தேன் இங்கே தான் இருக்கா"ன்னு ஊருக்கு லெட்டர் போடறபோது எழுது. என்ன எழுதறயா?" என்றாள். ஊர்க்கதை யெல்லாம் பேசிக்கொண்டிருந்தாள்.. இப்போதான் கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் ஆயிருக்கிறது. இங்கே வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவளது கலகலப்பு வைத்தியநாதனிடம் இல்லாவிட்டாலும், சினேகமாக இருந்தார். அவ்வப்போது ஏதாவது கடன் கேட்பார். கொடுப்பேன். அப்புறம் சம்பளம் வந்த கையோடு அவசர அவசரமாக, முதல் காரியமாக வீடு தேடி வந்து கொடுத்துவிட்டுப் போவார். அந்த அவசரமும் நேர்மையும் ரொம்ப அதிகப்படியாகத் தோன்றும். மனசுக்குக் கஷ்டமாக இருக்கும். சொன்னால் கேட்க மாட்டார்.


ஊருக்குப் போகப் போகிறேன். வந்து ஒரு வருஷத்துக்கு மேலே ஆகப்போகிறது என்று ஒரு நாள் அவர்களிடம் சொன்னேன். சாவித்திரிக்கு ஒரே சந்தோஷம். "அப்படி யாடா, எத்தனை நாளைக்கு? எங்க பாட்டியைப்பாத்துட்டு வரயாடா. நாங்க சௌகரியமா இருக்கோம். அடிக்கடி பார்த்துப் பேசிப்போம்னு சொல்லு என்ன? சொல்றயா? எங்கேயோ கண் காணாத தூர தேசத்திலே இருக்காளே ன்னு கவலப்படுவா. கூட இருக்கறவா சொன்னா கொஞ்சம் ஆறுதலா இருக்கும். அதுக்குத் தான் சொல்றேன். உடையாளுருக்குப் போனா கும்பகோணம் போயிட்டு வருவியோல்யோ, இல்லே ரயில்வே ஸ்டேஷனோடே சரியா?" என்று கேட்டாள். " இல்லே கட்டாயம் போய் பாத்துட்டு பேசிட்டு வரேன். அட்ரஸ் எழுதிக்கொடுங்கோ" என்றேன். எழுதிக் கொடுத்தாள். "ரெட்டிராயர் குளம் மேற்குத்தெருவா? அங்கே கூட எதுக்கோ போயிருக்கேன்னு நினைக்கறேன். போயிட்டு வந்து எழுதறேன்." என்று சொல்லிவிட்டு வந்தேன். அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.


வந்ததும் அம்மாவுக்கு என்னோடு பேச நிறைய இருந்தது. போன உடனே ஜெம்ஷெட்பூர்லே இருந்து ஆறு மாசம் படிப்பும் வேலையுமா இருந்தது, பின்னால் ஹிராகுட் போனது, வேலை, ஊர், சாப்பாடு எல்லாம் பற்றி அம்மாவுக்குத் தெரிந்து கொண்டே ஆகணும். ஊரை விட்டுப் போய் ஒன்றரை வருஷம் ஆயிடுத்து. இப்போதான் ஆறுமாசமா என்கிட்டேயிருந்து பணம் வந்துண்டு இருக்கு. போறலே தான். இருந்தாலும் சமாளிச்சுக்கலாம். போகப்போக எல்லாம் சரியாயிடும். அடகு வச்ச நகைய வேறே மீட்டாகணும், கொஞ்சம் கொஞ்சமா. நீ பணம் அனுப்பாட்டா ரொம்ப திணறிப் போயிடும்டா அதை நினைவிலே வச்சுக்கோ" என்று நிறைய பேசிக்கொண்டே இருப்பாள். நான் போனப்பறம் நடந்த ஊர்க்கதையெல்லாம் சொல்வாள். பிறகு சாப்பிடும் போது, கேட்டாள்: "ஏண்டா அங்கே சாப்பாடெல்லாம் எப்படி இருக்கு?. அங்கே ராஜான்னு சொன்னயே. இப்போ அங்கே இல்லேன்னியே. எங்கே சாப்பிடறே?" என்று கேட்டாள். அங்கே ஒரு நாயர் ஹோட்டல் இருக்கும்மா;. புழுங்கல் அரிசி தான் போடறான். மத்தபடி பரவாயில்லே. ஆனா அத விட்டா வேறே கதி இல்லே" என்றேன். அம்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.; அப்பாவைப் பார்த்தாள். அப்பாவுக்கும் கேட்கப் பிடிக்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியாது திக்கிட்டுப் போய் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். "போற இடத்திலே நம்ம சௌகரியப்படி எல்லாம் கிடைக்குமா? எல்லாம் அப்படி அப்படித் தான் இருக்கும்" என்றார் அப்பா.


அடுத்த நாள் அம்மாவிடம் சொன்னேன். "சாவித்ரீன்னு ஒரு பொண்ணும்மா. ஹிராகுட்டுக்கு வந்திருக்கா. இப்போ தான், ரண்டு வருஷத்துக்கு முன்னாலே கல்யாணம் ஆச்சுன்னு சொன்னா. இந்த ஊர்தான்னு சொன்னா. அவளோட புருஷனுக்கு கபிஸ்தலம் போல இருக்கு. அவளோட பாட்டி இப்போ கும்பகோணத்திலே ரெட்டி ராயர் குளம் மேற்குத் தெருவிலே இருக்காளாம் போய் பாத்துட்டு பேத்தி சௌகரியமா இருக்கான்னு சொல்லச் சொன்னா" இன்னிக்கு மத்தியானம் போய்ட்டு வந்துடறேனே" என்றேன். அம்மாவுக்கு பேசிக்கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நிறைய பேசவேண்டியதிருக்கு. இருந்தாலும், "போய்ட்டு சீக்கிரம் வந்துடு. அப்புறம் சுத்தறதெல்லாம் வச்சுக்காதே, இதோ லீவு முடிஞ்சு போயிடுத்துன்னு ஓடிப்போயிடுவே.....என்றாள் அரைமனதோடு.


அப்போது மூணு ஆறும் வற்றிக் கிடந்தது. வயல்களுக்குக் குறுக்கே வரப்போட நடந்தா ஐந்து ஐந்தரை மைல் இருக்கும். ஸ்கூலுக்குப் போக இரண்டு வருஷம் நடந்து பழக்கமான வயல்தான் வரப்புதான். கும்பகோண த்துக்கும் உடையாளூருக்கும் பஸ் வசதி கிடையாது. மாட்டு வண்டிப்பாதை கூட கிடையாது. வலங்கிமானுக்குப் போய் அங்கிருந்து தான் கும்பகோணத்துக்குப் போகவேண்டும். வலங்கிமானுக்குப் போகக்கூட மூணு மைல் நடக்கணுமே. அதுக்கு இது தேவலை. நாதன் கோயில் தாண்டி விட்டாலே கும்பேஸ்வர ஸ்வாமி, சாரங்கபாணி கோயில் கோபுரங்கள் வானைத் தொட்டுக் கொண்டு நிற்பது தெரியும். நினைத்துப் பார்க்கும்போது அதுவும் அழகாகத் தான் இருக்கிறது. பார்த்துக்கொண்டே போகலாம். அரசலாற்றங்கரையிலிருந்து ஆரம்பித்தால் ஒவ்வொரு தெரு முடியும் போதும் ஒவ்வொரு கோவிலாகத்தான் கடந்து செல்லவேண்டும் அவ்வளவு கோவில்கள். குளங்கள். இரண்டு வருஷங்கள் மகாமகக் குளக்கரைத் தெரு ஒன்றில் தான் நான் படித்த காலம் கடந்தது. ரெட்டி ராயர் குளம் கும்பகோணத்தின் இன்னொரு கோடியில் இருந்தது. பழைய, அப்படி ஒன்றும் பழைய அல்ல, ஒன்றரை வருஷம் தான் ஆகிறது இதையெல்லாம் விட்டு வந்து, ஆனால் இனி இங்கு வருவது அரிதாகத் தான் நிகழும் என்னும் போது அது மிகப் பழையாகத் தோற்றம் கொண்டு ஒரு சோகம் கப்பும். ஆக, அப்போதே சமீப் பழசு மிகப் பழசாகிவிடும். நினைவுகளுக்கு அப்படி ஒரு புகைமூட்டம் கவிழ்ந்து விடும்.

சாவித்ரி சொன்ன வீட்டுக்குப் போனேன். "இருங்கோ, கூப்பிடறேன்" என்று என்னை முன் வாசல் திண்ணையில் உட்கார்த்திவிட்டு ஒரு பெண் உள்ளே போனாள். சாவித்திரியை விட வயது கொஞ்சம் கூட இருக்கும் போலத் தெரிந்தது. ஒரு பாட்டி சற்று நேரத்துக்குப் பின் உள்ளே யிருந்து வந்தாள். " யாருடாப்பா நீ குழந்தே. சாவித்ரியப் பாத்தேன்கிறயே, உட்காந்துக்கோ. எங்கேருந்து வரே" அன்பும், கரிசனமும் வாத்சல்யமும் அவள் பேச்சில் குழைந்து வந்தது. சொன்னேன். "என்னது ராஜம் வாத்தியார் பிள்ளயா நீ. ஆமாம், உடையாளுர்லேர்ந்தா வரே, இவ்வளவு தூரம் இந்த வெயில்லே நடந்து வந்திருக்கியேடா குழந்தே." பாட்டி நல்ல உயரம். நல்ல நிறம். பாட்டிக்கு வயசு அறுபதுக்கு மேலே இருக்கும்னு சொன்னா. ஆனால் பாட்டிக்கு முகத்தில், எங்கும் ஒரு சுருக்கம் இல்லை. நல்ல ஆரோக்கியமான உடம்பு. விதவைக் கோலம் தான் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அறுபது வயதுக்கு விதவைக்கோலம் நம் நாட்டில் அப்படி ஒன்றும் அசாதாரண விஷயம் இல்லை. பாட்டியின் பேச்சில், தோற்றத்தில் வறுமையோ, முதுமையோ சொல்ல முடியாது. கஷ்டங்கள் அறியாது வளர்ந்தவள் போல. ஆனால்...."

"ஆமாண்டா இப்போ நெனவுக்கு வர்ரது. நீ எங்கியோ உன் மாமா கிட்டே இருந்து படிச்சிண்டுருக்கேன்னு சொன்னா. அப்பறம் எங்கியோ வடக்கே வேலேலே இருக்கேன்னு சொன்னா. அது தானா நீ. எப்படிடாப்பா இருக்கு அங்கே எல்லாம். மனுஷா எல்லாம் நல்ல மனுஷாளா இருக்காளா,..... எல்லாம் நாம் இருக்கறத்ப் பொறுத்து இருக்கு நாம நன்னா இருந்தா அவாளும் நன்னாத் தான் இருப்பா... சாவித்ரி எப்ப்டி இருக்கா. அவளுக்கு உன்னத் தெரிஞ்சுதா. ரெண்டு பேரும் குழந்தக. எங்கேயே வளந்துருக்கேள். ராஜத்த எனக்கு நன்னாத் தெரியும். தங்கத்தையும் தான். தங்கம்னா அவ தங்கம் தான். சரி சொல்லு, சாவித்திரி எப்படி இருக்கா. மாப்பிள்ளைக்கு என்ன வேல. அவரும் உன்னோட நன்னா பேசுவாரா? அவாளுக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லியே. என்ன பன்றது சொல்லு. இதோ கபிஸ்தலம் பக்கத்திலே தானே இருக்குன்னு நினைச்சேன். ஆனா, இப்படி கண்காணாத இடத்தெலே தான் மாப்பிள்ளைக்கும் விதி எழுதிருக்குன்னா நாம என்ன செய்யக்கிடக்கு சொல்லு..... ஆனா நீ வந்து சொல்றப்போ மனசுக்கு நிம்மதியாருக்கு. இரு பேசீண்டே இருந்துட்டேன் இரு இதொ வந்துட்டேன்" என்று சொல்லி உள்ளே போனாள்

பாட்டி உள்ளிருந்து வந்தாள். "ராத்திரி இங்கேயே தங்கிட்டுப் போலாமேடா. ஊருக்குப் போகணும்னு என்ன அவசரம்?" என்றாள். "அம்மா கோவிப்பாள். இப்போதான் முதல் தடவையா லீவில் வந்திருக்கேன்" என்றேன். " அதுவும் சரித்தான். நீ வந்ததே பெரிசு. இங்கே வந்த இடத்திலே நான் வேறே உன்னத் தக்க வச்சுண்டா எப்படி?சரி சாப்டுட்டுப் போலாம். என்ன? அவ இப்போதானே அங்கே வேலைக்கு சேந்திருக்கா. இப்போ வரமுடியாது தான். நீ லீவுக்கு வர போதெல்லாம் வா, என்ன? செய்வியா?,,.,...." பாட்டி பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கணும் போல இருந்தது. எப்படி இந்த சாதாரண சமாச்சாரங்களை இத்தனை வாத்சல்யத்தோடு சொல்ல முடிகிறது? வாத்சல்யத்தோடு பிரியமானவர்களைப் பிரிந்த சோகமும் கலந்தே இருந்தது. இந்த இரண்டின் கலப்பும் மனதை என்னவோ செய்துவிடும். பாட்டி பேசிக்கொண்டே இருந்தாள். கேள்விகளும் நிறைய சாவித்ரி, அவள் கணவன், ஹிராகுட் வாழ்க்கை என்று நிறைய கேட்டுக் கொண்டே இருந்தாள். எனக்கு அவள் முகமும், அந்த ஆதுரமும் தான் நினைவில் இருக்கின்றன. சற்று நேரத்தில் சாப்பிட அழைப்பு வந்துவிட்டது. சீக்கிரம் சாப்பிட்டுடு. ஊருக்குப் போய்ச் சேர்ரதுக்குள்ளே நாழியாயிடும். " என்றாள் பாட்டி. இவ்வளவு சீக்கீரத்தில் ஒரு வத்தல் குழம்பு, வடாம், ஒரு ரசம் தயாராகிவிட்டது ஆச்சரியமாக இருந்தது. வத்தல் குழம்பும் அருமையாகத் தான் இருந்தது. சாப்பிட்ட பிறகு, ஒரு பொட்டலம் ஒன்று தயாராக இருந்தது. "இந்த இதக் கொண்டு போய் சாவித்ரி கிட்டே கொடுத்துடு. ஒரு புடவையும் ரவிக்கைத் துணியும் கொஞ்சம் பணமும் இருக்கு. பத்திரமா எடுத்துண்டு போவியா? ஏண்டாப்பா, நிஜமாத்தான் ஊருக்குத்தான்ன் போகப் போறயா, இல்லே ராத்திரி சினிமா பாக்கப் போறயா? இல்லாட்டா அப்பறமா வந்து எடுத்துண்டு போறயா? " என்று கேட்டாள்.

பாட்டிக்கு புத்தி மிகக் கூர்மையாகத்தான் இருந்திருக்கிறது. சினிமா பாத்துவிட்டு நாளை காலை தான் ஊருக்குப் போவதாக என் மனசில் இருந்தது. இப்போது அதெல்லாம் நடக்காது. பாட்டியிடம் பொய் சொல்லக் கூடாது. அப்புறம் இந்த புடவைப் பார்சலை வைத்துக் கொண்டு எங்கே எந்த வீட்டுத் திண்ணையில் படுப்பது? பாட்டியிடம் நல்ல பேர் வாங்கிக்கொண்டு கிளம்பினேன் ஊருக்கு.

வெயில் காலமானாலும் ஊருக்குத் திரும்பும் போது இருட்டி விட்டது. "ஏண்டா இத்தனை நாழி, இருட்டினப்பறம்? கவலயா இருக்காதாடா? என்று திட்டினாள் அம்மா.

மறு நாள் சாவகாசமாக சாப்பாடு எல்லாம் முடிந்த பிறகு கூடத்தில் சாவகாசமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது அம்மாவிடம் பாட்டி பேசினது, கேட்டதெல்லாம் சொன்னேன். " அம்மா, உன் பேர் மட்டும் தங்கமில்லையாம். நீ தங்கமே தானாம், பாட்டி சொன்னாள்" என்றேன். அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். "பாட்டி ரொம்ப கஷ்டப்பட்டுட்டாடா, ரொம்பவும் பாவப் பட்ட ஜன்மம்" என்றாள் சட்டென முகத்தில் கவிந்த சோகத்துடன். இருக்கும் ஏதாவது. நம் எல்லார் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கட்டத்தில் ஏதாவது பெரிய துன்பம் ஏற்பத்தானே செய்கிறது. ஆனால் அம்மா சொன்னாள்:

அப்பல்லாம் ரொம்ப சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணிக்குடுத்துடுவா. பாட்டிக்கு அப்போ ஏழு வயசோ என்னவோ தான். கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டா. ஆனா பண்ணிக்கொடுத்த இடத்திலே அந்தப் பையன் ரொம்ப நாள் இருக்கலே. பன்னெண்டு வயசிலேயே போய்ச் சேர்ந்துட்டான். மதுரத்தோட அப்பா, '"நான் பொண்ணை எங்கிட்டயே வச்சுக்கறேன்'"னு அழச்சிண்டு வந்துட்டா. பாட்டி பெரியவளாகறதுக்கு முன்னாலேயே இப்படி யாயிட்டுது. அத்தோடே போகலே. இப்போ நீ சொன்னியே, பாட்டிக்கு வயசு ஆன மாதிரியே தெரியலே அப்படி இருக்கான்னு. சின்ன வயசிலே அவளுக்கு அப்படி ஒரு அழகு. பாத்துண்டே இருக்கலாம்போல இருக்கும். அந்தப் புள்ளேக்குத் தான் கொடுத்து வக்கலே. ஆனா ஊரெல்லாம் இதச் சொல்லிச் சொல்லி மாஞ்சுது. ஒரு நாளைக்கு கிணத்தடிலேர்ந்து மதுரம் திடீர்னு அலர்ற சத்தம் கேட்டது. என்ன ஏதுன்னு அவ அப்பா அலறி அடிச்சுண்டு கொல்லப்பக்கம் ஓடிப்போய்ப் பாத்தா மதுரம் அலறி அடிச்சிண்டு அப்பாவைப் பாத்து ஓடி வரா. கொல்லைக் கதவு படீர்னு அடிச்சிண்டு சாத்திக்கறது. "என்னடி குழந்தே என்ன ஆச்சு என்னத்தே பாத்து பயந்தேன்னு" அப்பா கேக்கறா. " என்னமோ தொப்புனு. சத்தம் கேட்டுது. பாத்தா எவனோ ஒத்தன் சுவரேறி குதுச்சு உள்ளே வந்துட்டான். பயந்துட்டேன்பா" ன்னு நடுங்கிண்டே சொன்னாளாம்.

இனிமே இந்த ஊர்லே இருக்கப்பட்டாதுன்னு, ஊர்லே யாரும் வாய்க்கு வந்தபடி ஏதும் பேசறதுக்கு முன்னாடி கும்மோணத்துக்குப் போய்ட்டார். கிராமத்திலே அவ்வளவு பாதுகாப்பு இல்லேன்னு. டவுன்லேன்னா அப்படி யாரும் உள்ளே வந்துட முடியாதுன்னு. தன் ஆயுசு வரைக்கும் அவர் அப்படிப் பாத்துண்டுட்டார். தனக்கு அப்புறம் யாரை என்ன நமபறது, அவ சோத்துக்காவது கஷ்டப்படாம இருக்கட்டும்னு பாதி சொத்தை அவ பேர்லேயே எழுதி வச்சுட்டுத்தான் போனார். மதுரத்துக்கு, அதான் அந்தப் பாட்டிக்கு, குழந்தைகள் கிட்ட அப்படி ஒரு பிரியம். தம்பி குழந்தகளே பின்னாலெ அந்தக் குழந்தைக்கு குழந்தகளே பாட்டிதான் வளர்த்தா, வளர்த்துண்டு இருக்கா....

கேட்டுக்கொண்டு இருக்கும் போதே யாரோ சம்மட்டியால் ஓங்கி அடிப்பது போலிருந்தது. நாம் என்ன நினைத்துக் கொண்டிருந்தோம். என்னவெல்லாம் நடந்து முடிந்து விட்டது உலகத்தில், நடந்த சுவடே தெரியாமல்..!ஆனால், அந்தப் பாட்டி,

ஏழு வயசிலிருந்து...... வாழ்க்கையே வாழாது இத்தனை காலம், அப்படி வஞ்சிக்கப்பட்ட ஒரு ஜீவனா அந்தப் பாட்டி, அத்தனையையும் துடைத்துவிட்டு எப்படி இப்படி அன்பைச் சொரிந்து கொண்டு இருக்க முடிகிறது?இதையும் தெய்வம் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறது?

வெங்கட் சாமிநாதன்/12.10.06

Saturday, October 27, 2007

நினைவுகளின் தடத்தில் - (4)

நான் நிலக்கோட்டையில் பாட்டியுடனும் மாமாவுடனும் இல்லாதிருந்தால், அப்பாவும் அம்மாவும் இருக்கும் உடையாளூர் கிராமத்திலியே இருந்திருந்தால், என் விருப்பங்களும், ரசனையும் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்ப்பேன். எனக்கு விருப்பமானது என்பது ஏதும் உள்ளிருந்து சதா கொதித்துக் கொண்டு இருக்கும், என்றோ மூடியை உதறித் தள்ளிக்கொண்டு வெளியே பீறிடும் ஏதும் ஆன்மீக, கலைப் பசி என்கிற சமாச்சாரங்கள் ஏதும் இல்லை என்று தான் நான் நினைக்கிறேன். விதவைப் பாட்டிக்கு புராணப்படங்களே தஞ்சம் எனவாகிப் போனதும், வீட்டுக்கு நேர் எதிரே ரோட்டுக்கு அந்தப் புறம் சினிமாக் கொட்டகை என்று ஆகிப் போனதும் சந்தர்ப்பங்கள் தான். நிலக்கோட்டையில் தங்கியிருந்த வீடு ஊருக்குள்ளே இருந்திருந்தால் பாட்டிக்கு இதெல்லாம் சாத்தியமாகியிராது. எனக்கும் அந்த சந்தர்ப்பங்கள் கொசுராகக் கிடைத்திராது. பாட்டிக்கு இது புண்ணியம் சம்பாதிக்கும் நவீன மார்க்கமாகிப் போனது. எனக்கு விளையாடுவது போல, சோளக்கொல்லையில் புகுந்து சோளக கதிரைத் திருடித் தின்பது போல, கல்லெறிந்து மாங்காய் அடித்துத் தின்பது போல, வேறு ஒருவிதமான பொழுது போக்கு. இப்போது என் சொந்த கிராமம் என்றும், நான் பிறந்த இடம் என்றும் சொல்லிக்கொள்ளும், (அது பிறந்த இடமும் இல்லை, சொந்தமும் இல்லை) உடையாளூரில் இருந்திருந்தால், சினிமா, நாடகம், சோளக்கதிர் திருடித் தின்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், முதலில் ஊடையாளூரில் அப்போதிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தைத் தாண்டி மேற்சென்றிருப்பேனா என்பதே சந்தேகம். என் பாட்டிக்கு நான் பிரியமாகிப் போனது, தன் பேரப்பிள்ளையைத் தானே வளர்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் என் நிலக்கோட்டை வாசத் திற்குக் காரணமாகிப் போயின. பாட்டி ஆசைப்பட்டது இருக்கட்டும், அம்மாவுக்கு எப்படி தன் முதல் குழந்தையை அதன் இரண்டு வயதில் விட்டுப் பிரிய மனம் வந்தது என்று சில சமயம் யோசிப்பேன். பதில் கிடைக்காது. அத்தோடு அந்தக் கேள்வி மறைந்து விடும்.

மாமாவால் அவருக்கு வந்த சம்பளத்தில் எங்களையெல்லாம் ரக்ஷிப்பது என்பது சாத்தியமாக இருக்கவில்லை. என் சின்ன வயதில் பாட்டி கொடுத்த செல்லத்தில், ஒரு சில சமயங்களில் நான் மாமாவை மிகவும் வருத்தியிருக்கிறேன் என்பதை பின்னர் வடக்கே வேலையில் சேர்ந்து என் பிழைப்பை நானே பார்த்துக்கொள்ள ஆரம்பித்த போது உணர ஆரம்பித்தேன். அன்றைய நிலையில் வரம்புக்கு மீறி நான் எதற்கும் ஆசைப்பட்டேன் என்று சொல்வதற்கில்லை. அப்படி ஆசைப்பட ஒரு உலகம் என்பதே என் பிரக்ஞையில் இல்லாதது. நான் தான் முன்னாலேயே சொல்லியிருக் கிறேனே . மூ ன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை எதிரிலிருக்கும் கீற்றுக் கொட்டைகயில் படம் மாறும் என்று. அவற்றில் வரும் எல்லா புராணக்கதைப் படங்களையும் பாட்டி பார்த்து விடுவாள். மாமா ஒன்றும் சொல்ல மாட்டார். பாட்டிக்கு மாத்திரம் தானே டிக்கட் வாங்கவேண்டும். அந்நாட்களில், தரை டிக்கட் முக்கால் அணாதான். அணா என்றால் இன்றுள்ளவர் எத்தனை பேருக்குப் புரியும் எனபது தெரியவில்லை. ஒரு ரூபாய்க்கு பதினாறு அணாக்கள். ஒரு அணாவுக்கு பன்னிரண்டு காசுகள். ஒரு காசுக்கு விலைக்கு வாங்கக் கூடிய பொருடகள் அன்று இருந்தன. ஒரு கூறு கடலையோ, இலந்தைப் பழமோ, சின்ன கொய்யாப் பழமோ ஒரு காசுக்குக் கிடைத்து விடும். முக்காலணா கொடுத்தால் நானும் பாட்டியும் ஒரு சினிமா பார்த்து விடுவோம். தான் பார்ப்பது மட்டுமல்லாமல், பாட்டிக்கு சில படங்கள் ரொம்பவும் பிடித்து விட்டால், எல்லோரிடமும் அதை மிகவும் சிலாகித்து நிறைய பேசுவாள். எனக்கு ஞாபகம் இருக்கிறது. அனேகமாக, ஹரிச்சந்திரா என்று நினக்கிறேன். பி.யு.சின்னப்பாவம் கண்ணாம்பாவும் நடித்த படம். அதில் கண்ணாம்பா நிறைய வசனம் பேசி நெடு நேரம் பாடி கதறி அழும் கட்டம் உண்டு. மயானத்தில் தன் பிள்ளை லோகிதாசனின் சடலத்தை வைத்துக் கொண்டு, அவனைப் பெற்று வளர்த்த கஷ்டத்தை யெல்லாம் சொல்லி ஒப்பாரி வைப்பாள். ஒன்றாம் மாதம், இரண்டாம் மாதம், என்று ஒவ்வொரு மாத கஷ்டத்திற்கும் ஒரு வேதனை வர்ணணை, பாட்டு இப்படி. பாட்டி மனம் உருகிவிட்டது. வீட்டுக்கு பத்து பாத்திரம் தேய்க்க ஒரு கிழவி வருவாள். அவளுக்கு மாதம் சம்பளம் ஒன்றே கால் ரூபாய். அந்தக் கிழவியிடம் கண்ணாம்பாவின் உருக்கமான புலம்பலைச் சொல்லிச் சொல்லி அந்தக் கிழவியும், அவ்வப்போது, 'ஆமாம்மா இருக்காதா அம்மா, சும்மாவா இருக்கு ஒரு பிளையைப் பெத்து வளக்கறது, அதே செத்துப் போய், அதப் புரிஞ்சுக்காத புருஷன் முன்னாலேயே கொள்ளி வைக்கறதுன்னா,' என்று அவ்வப்போது சந்தர்ப்பத்தை ஒட்டி குரல் கொடுத்துக் கொண்டிருப்பாள். கடைசியில் கிழவிக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது. பாட்டிக்கு மனம் இளகி விட்டது. தன் கதையைக் கேட்க இப்படி ஒரு ரசிகை கிடைத்த சந்தோஷம். 'இந்தா கிழவி, நான் காசு தரேன். நீயும் போய்ப் பாரு' என்று சொல்லி விட்டாள் அந்த உணர்ச்சி வசத்தில். கிழவிக்கு எப்படி முக்காலணா கொடுத்தாள் என்று எனக்கு ஞாபகமில்லை. கட்டாயம் கொடுத்திருப்பாள். ஆனால் காசு மாமாவிடமிருந்து தான் வாங்க வேண்டும். நான் கொஞ்சம் பெரியவனாகி விட்ட காலத்தில், எப்போதாவது மாமா எனக்கு காலணா கொடுப்பார், 'பாவம் பசங்க ஒண்ணுமே கேக்கறதில்ல, ரொம்ப ஏங்கிப் போயிட்டதுக" என்று பாட்டியிடம் சொல்லுவார். நான் அந்த காலணாவுக்கு மூன்று கொய்யாப் பழங்கள் வாங்கி, நான், என் மாமா பெண், பையன் மூன்று பேறும் ஆளுக்கு ஒன்றாக வாங்கிக் கொள்வோம்.

ஒரு சமயம் ஏதோ ஒரு படம் வந்திருந்தது கொட்டகையில். அது நிச்சயமாகப் புராணப் படமாக இல்லாதிருந்தக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் பாட்டி அழைத்துச் சென்றிருப்பாளே. நான் தனித்து விடப்பட்டேன். படம் பார்க்கவேண்டும், காசு வேணும் என்று மாமாவை நச்சரித்துக் கொண்டி ருந்தேன் இரண்டு நாட்களாக. பாக்கலாம்டா என்று சொல்லி மாமா தள்ளிப் போட்டுக்கொண்டிருந்தார். காசு பெயரும் வழியாக இல்லை. அன்று தான் கடைசி நாள். எனக்கோ வாழ்க்கையில் ஏதோ ஒன்று மகத்தான ஒன்று என்றென்றைக்குமா இழக்கப்போகிறோம் என்ற துக்கம். இந்த சினிமா பார்க்க முடியவில்லை என்றால் வாழ்க்கைக்குத் தான் என்ன அர்த்தம்? நம் வாழ்க்கை ஏன் இப்படி ஒரு சுகமும் ஒருசந்தோஷமும் இல்லாமல் ஆகிவிட்டது? எத்தனை பேர் மூன்று நாட்களாக சினிமாவுக்கு போய்க் கொண்டிருக் கிறார்கள்? அவர்கள் எவ்வளவு பாக்கியவான்கள்? எனக்கு என்று ஏன் இத்தனை துரதிர்ஷ்டம்? கடைசியாக, 'அடி பின்னிப் பிடுவேன் ராஸ்கல், ரொம்பத்தான் அடம் பிடிக்கிறே? எத்தனை சினிமா பாத்திருக்கே, ஒண்ணு பாக்காட்ட என்ன குடி முழுகிப் போறது?' என்று சீறினார். இன்னம் அதிகம் முரண்டு பிடித்தால் நாலு சாத்து சாத்திவிடுவார் என்று தோன்றியது. துக்கமோ, என் துரதிர்ஷ்டத்தை நினைத்துப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் பீறிட்டுக் கொண்டு வந்தது. அஸ்தமனம் ஆயிற்று. வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. எங்கெங்கோ மனம் போனபடி சுற்றிக் கொண்டிருந்தேன். வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று. இப்படியும் ஒரு வீடு, ஒரு மாமா, ஒரு பாட்டி, ஒரு சினிமா பாக்க காசு கொடுக்காதா மாமாவும் பாட்டியும். சே. நினைக்க நினைக்க மனம் கொதிப்படைந்து கொண்டு வந்தது. ஓடையைத் தாண்டியதும், ஒரு பார்க் இருக்கும். அதில் தான் ஒரு வாசக சாலை, ஒரு ரேடியோப் பெட்டி; கூட ஒரு ஒலிபெருக்கியும் இருக்கும். . திருச்சி வானொலியை அதில் கேட்கலாம். திருச்சி மாத்திரமே. செய்திகள், பாட்டுக்கள், நாடகங்கள், இத்யாதி. நல்ல பார்க் அது. மாலை நேர பொழுது போக்குக்கு நிலக்கோட்டை வாசிகளுக்கு அது உகந்த இடம். நிலக்கோட்டை பஞ்சாயத்தின் பொறுப்பில் இருந்தது. பார்க்கில் இருக்கும் மரங்கள் கொடி செடிகள், நிறைய க்ரோட்டன்கள் எல்லாவற்றுக்கும் ஒரு கிணறும் ஏற்றமும் உண்டு. அந்த வாசக சாலையில் நிறைய பத்திரிகைகள், யுத்த செய்திப் படங்கள் நிறைந்த பத்திரிகைகள் இருக்கும். அந்த பார்க்கில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். இனி வீட்டுக்குப் போவதில் அர்த்தமில்லை. இவ்வளவு அநியாயம் நடக்கும் வீட்டுக்கு யார் போவார்கள்?

பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்தேன். இருட்டியது. என்ன செய்யலாம்? எங்காவது மாமா கண்டு பிடிக்க முடியாத ஊருக்குப் போய்விடலாம். ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம். வேலை கிடைகாதா என்ன? கிளப்பில், பஸ்ஸில் எத்தனை என் வயதுக் கார சின்ன பசங்கள் வேலை செய்கிறார்கள். அவர்கள் சினிமா பார்க்க யாரிடம் காசு கேட்க வேண்டும்? எவ்வளவு அதிர்ஷ்டம் அவர்களுக்கு? ரேடியோவில் ஒலி பரப்பு முடிந்தது. விளக்கை அணைத்தும் விட்டார்கள். பார்க்கைச் சேர்ந்த ரீடிங்க் ரூம் வட்ட வடிவில் இருக்கும். அதைச் சுற்றிய ஒரு வராண்டா. அந்த வராண்டாவில் யார் யாரோ படுத்திருப்பார்கள். நானும் அங்கேயே படுத்து விட்டேன். எப்போது தூங்கினேன் என்பது தெரியாது.

Sunday, October 21, 2007

நினைவுகளின் தடத்தில் - (3)

எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்தே, நான் பாட்டியை விதவைக் கோலத்தில் தான் பார்த்திருக்கிறேன். அப்படித்தான் பாட்டி இருப்பாள், அது தான் பாட்டி என்று எனக்குள் நினைத்திருப்பேன். ஏதும் வேறு விதமாக, ஏன் பாட்டி இத்தோற்றத்தில் இருக்க வேண்டும் என்றெல்லாம் அப்போது அது பற்றி என் சிந்தனைகள் சென்றதில்லை. பின்னாட்களில், கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு, பாட்டியின் வைதவ்ய கோலம் மிகப் பெரிய சோகமாக நினைப்புகளில் கவிழும். அவ்வப்போது பாட்டி தன் மனம் நொந்து போன வேளைகளில் தனக்குள் சொல்லிக்கொள்வாள். தனக்கு விதிக்கப்பட்ட விதியை எண்ணி, இப்போது வாழும் வறுமையை எண்ணி. 'ஒண்ணா ரெண்டா, ஒண்ணொணா குழிலேண்ணாடா போட்டேன்" என்று சொல்லிச் சொல்லி புலம்புவாள், மாய்ந்து போவாள். மாமாவுக்கு அடுத்து என் அம்மா, பின் ஒரு பெரிய இடைவெளி. கடைசிகுழந்தை என் சின்ன மாமா. என் அம்மாவுக்கும் சின்ன மாமாவுக்கு இடையே பிறந்த குழந்தைகள் குழந்தைகளாகவே இறந்து விட்டன. அதைத் தான் நினைத்து நினைத்து பாட்டி புலம்பிக் கொண்டிருப்பாள். மாமா கும்பகோணம் காலேஜில் FA பரிட்சை எழுதப் போயிருக்கிறார். தாத்தா இங்கு சுவாமி மலையில் இறந்து விட்டார்,. "உடனே கூட்டிக்கொண்டு வா," என்று காலேஜுக்கு ஆள் அனுப்பி, மாமா வந்தவர் தான். பின் படிப்பைத் தொடரும் வசதி இல்லை. இதெல்லாம் பாட்டி அவ்வப்போது தன் விதியை நொந்து புலம்பும் போது சொன்ன விவரங்கள்.

படிப்பை நிறுத்திய பிறகு, குடும்பம் எப்படி நடந்தது, ஆசிரியப் பயிற்சி மாமா பெற்றது எங்கே, எப்படி, என்பதெல்லாம் தெரியாது. தாத்தாவின் மறைவிற்குப் பிறகு குடும்பம் எப்படி நடந்தது என்பதும் தெரியவில்லை. மறைந்த தாத்தாவுக்கு உடன் பிறந்தவர்கள் ஆணோ, பெண்ணோ யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. எனக்கு விவரம் தெரிந்தபோது, பிறகு, உமையாள்புரம், பாபுராஜபுரம், சுவாமி மலை என்று அடுத்தடுத்து இருக்கும் ஊர்களில், தாத்தாவுக்கும் பாட்டிக்கும் ஒன்று விட்ட சகோதரர்கள், சகோதரிகள் என்று தான் இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியவந்தது. அவரவர் குடும்பம், வாழ்க்கை அவரவர்க்கு என்றாகியிருக்க வேண்டும். மாமா பிறந்த வருடம் 1910. அவர் FA பரிட்சை எழுதிக் கொண்டிருந்த போது தாத்தா இறந்தார் என்றால், அனேகமாக அது 1927-28 வருட வாக்கில் இருக்க வேண்டும்.

ஆசிரியப் பயிற்சி பெற்று மாமா பெற்ற முதல் உத்தியோகம் நிலக்கோட்டை சௌராஷ்டிரா உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியராக. 60-வது வயதில் ஓய்வு பெற்றதும் அப்பள்ளியிலிருந்து தான். மாமாவின் ஆசிரிய சேவைக்குக் கிடைத்த ஒரே அங்கீகாரம், மத்திய அரசு தரப்பிலிருந்து டாக்டர் ராதாக்ருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாட மத்திய அரசு வருடா வருடம் தரும் ராஷ்டிரபதியே வழங்கும் சிறந்த ஆசிரியர் விருது. அந்த விருது வாங்க மாமா தில்லி வந்திருந்தார், 1969-ம் வருடம். என்று என் நினைப்பு. மாமா பள்ளிக்கூட வாத்தியார். நான் நிலக்கொட்டை சௌராஷ்டிரா உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் போது மாமா ஏழாம் வகுப்பு ஆசிரியர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர் வாங்கிய சம்பளம் ரூ 25 அணா 4. அனேகம் மற்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் ரு 19 ஆக இருந்தது. இடைநிலையில் பலர் இருந்தனர். வீட்டு வாடகை நான் அங்கிருந்த கடைசி வருடங்களில் (1945-46) ரூ 6. மிகுந்த பணத்தில் தான், மாமா எங்கள் எல்லோரையும் சம்ரக்ஷ¢த்தார். நாங்கள் மாமா. மாமி, இரண்டு குழந்தைகள், நான், சின்ன மாமா பின் பாட்டி, ஆக மொத்தம் ஏழு பேர் மிகுந்த 19 ருபாயில் தான் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. பாட்டி எப்போதும் மாமாவிடம் புகார் செய்து கொண்டிருப்பாள். மாமாவுக்கு பதில் சொல்ல ஏதும் இராது. 'நான் என்னதான் செய்யறது சொல்லேம்மா' என்று தன் இயலாமையில் கதறுவார். நான் மாமாவை அறிந்த நாட்களில், அவர் முகம் மலர்ந்து பார்த்ததில்லை. பள்ளிக்கூடத்திற்கு நான் மேல்சட்டையில்லாமல் போன நாட்களும் உண்டு. மாமா ஆசிரியர் ஆதலால், எனக்கு சம்பளம் கிடையாது. புத்தகங்களும் விலைக்கு வாங்க வேண்டாம். ஆனால் சிலேட் நோட்புக் எல்லாம் வாங்கித் தான் ஆகவேண்டும்.


நான் மாமா பற்றியும், அம்மா பாட்டி பற்றியும் தான் எழுதி வருகிறேன். ஏனெனில், அந்த வயதில் அந்நாட்களில் நான் அறிந்தவர்கள் மாமாவும் பாட்டியும் தான். முதலில் தெரிந்த ஊர், மதுரை ஜில்லாவின் ஒரு சின்ன ஊரான நிலக்கோட்டை தான். இப்போது அது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும். நான் படித்த காலத்தில் மதராஸ் மாகாணத்தில் மொத்தம் எட்டு ஜில்லாக்கள் தாம். இப்போது நாம் வாழ்வது தமிழ் நாடு சரித்திரத்தின் பொற்காலம் என்று சொல்லப்படுவதால், அத்தகைய வளத்தில் 27-ஓ 28-ஓ மாவட்டங்களாக தமிழ் நாடு வளம் பெற்றுள்ளது. நிலக்கோட்டையில் இருந்த காலத்தில் என் பெற்றோர்கள், நிலக்கொட்டையில் இருக்கும் மாமாவும் பாட்டியும் இல்லை, அவர்கள் தஞ்சை ஜில்லாவின் ஒரு குக்கிராமத்தில், உடையாளுரில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிய வந்தது, எனக்கு ஏழோ எட்டோ வயதிருக்கும் போது, எனக்கு பூணூல் போடவேண்டுமென்று மாமா எல்லோரையும் உடையாளுருக்கு அழைத்துச் சென்றார். அப்போது தான் உடையாளூரிலிருக்கும் என் அப்பா அம்மா, ஒரு தங்கை எல்லோரையும் தெரிந்து கொண்டேன்.


நான் குழந்தையாக இருந்த போதே பாட்டி என்னைத் தன்னோடு அழைத்துக்கொண்டு நிலக்கோட்டைக்கு வந்து விட்டாள். மாமாவும் பாட்டியும் தான் என்னை வளர்த்தார்கள். படிக்க வைத்தார்கள். பாட்டியை நான் 'அம்மா' என்று தான் கூப்பிடுவேன். ஏனெனெல், வீட்டில் எல்லோரும், மாமா, மாமி, சின்ன மாமா எல்லோரும் பாட்டியை 'அம்மா' என்று தானே கூப்பிடுவார்கள். பூணூல் போட உடையாளூருக்கு அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த என் நிஜ அம்மாவை, "அம்மா' என்று அழைக்க எனக்கு வரவில்லை. இயல்பாக இல்லை. பாட்டிதானே எனக்கு அம்மா.

பாட்டிக்கு நான் மிகவும் செல்லம். தன் பிள்ளைகள் இருவரில், சின்ன மாமாவிடம் பாட்டிக்கு மிருந்த கரிசனம். சின்ன மாமா என்ன செய்தாலும் பரிந்து பேசுவாள். இடி படுவது மாமா தான். அவர் எதற்குத் தான் பதில் சொல்வார், எதைத்தான், எப்படித்தான் சமாளிப்பார், என்பதெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் மனம் மிகவும் நொந்து போகிறது. அவருக்கு எல்லாப் பக்கங்களிலும் இடி. அவர் சாது. அதே சமயம் முன் கோபியும் கூட. இப்போது நினத்துப் பார்க்கும் போது, அவருக்கு இருக்கும் வேதனைகள் போதாதென, நானும் அவரை மிகவும் வருத்தியிருக்கிறேன்.
பாட்டிக்குத் தெரிந்த, கிடைத்த மன நிம்மதி தரும் பொழுது போக்கு சினிமா தான். அதுவும் டூரிங் டாக்கீஸ் முகாமிடும் மூன்று மாத காலம். அதிலும் வருவது புராணப்படமாக இருந்தால். நிலக்கோட்டையில் ஒரு பிராமண விதவைக்கு வேறு ஏது போக்கிடம்? கதா காலட்சேபமா, பஜனையா, ஏதும் இல்லை. எந்த சுப காரியங்களிலும் பாட்டிக்கு இடம் இல்லை. பெண்கள் கூடிப் பேசும் வழக்கம் இன்னும் வரவில்லை. வந்தாலும், பாட்டி அந்த வயதைத் தாண்டியவள். புராணக் கதைகள் சொல்லும் தமிழ் படங்கள் தான் பாட்டியின் பக்தி சிந்தனை அறிந்த ஒரே பொழுது போக்கு மார்க்கம். நான் பாட்டிக்குச் செல்லமாதலால் என்னையும் சினிமாவுக்கு பழக்கி விட்டு விட்டாள். நாடகங்களும் அப்படித்தான். எத்தனையோ பாய்ஸ் கம்பெனிகள். அவற்றில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்று ஒரு பெயர் நினைவில் தங்கியிருக்கிறது. அது தவிர சில சமயம் ஸ்பெஷல் நாடகங்கள் என்று வேறு போடுவார்கள். அக்கால சூப்பர் ஸ்டார்கள் சிறப்பு வருகை தருவார்கள். V.A. செல்லப்பா என்று தான் நினைக்கிறேன்.அல்ல்து V.S செல்லப்பாவா, தெரியவில்லை. பின் எஸ். பி. தனலெக்ஷமி என்று ஞாபகம். இவர்கள் ஸ்பெஷல் நாடகங்கள் நடக்கும். எல்லாம் வீட்டுக்கு எதிரிலேயே, நிலக்கோட்டை- பெரியகுளம் ரோடுக்கு ஒரு புறம் சினிமா கொட்டகை. மறுபுறம் எங்கள் வீடு. அந்த நாடகங்களிலும் வள்ளியும், முருகனும், தெய்வயானையும் வருவார்களாதலால், பாட்டி அவற்றையும் பார்த்து விடுவாள். செல்லப்பா- தனலக்ஷ¢மி ஜோடி மிகப் பிராபல்யம் பெற்ற ஜோடி. நன்றாக பாடுவார்கள். என்ன நாடகம் என்று சொல்லி விட்டால் போதும். கதை தெரியும். பாத்திரங்கள் தெரியும். வசனங்கள் அவ்வப்போது சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் கற்பனை செய்து பேசிவிடுவார்கள். பாட்டுக்களும் தெரிந்தது தான். அவர்களுக்கு எந்த ஒத்திகையும் தேவையில்லை. எந்த நாடகத்தில், எந்த சந்தர்ப்பத்தில் எந்த பாட்டு என்பதெல்லாம் ஏதும் கட்டுப்பாடுகள் கிடையாது. ஜனங்கள் கேட்டு ரசித்த எந்தப் பாட்டானாலும், எந்த நாடகமானாலும், பாடிவிடுவார்கள். கைதட்டலும் பெற்று விடுவார்கள்.

ஒரு சமயம் சிவராத்திரி அன்று இரவு முழுதும் விழித்திருக்க ஏதுவாக ஒரு படம் போட்டார்கள். படத்தின் பெயர் ஞாபகமில்லை. ஒரே பாட்டாகவே இருந்ததால், வேடிக்கையாக இருந்தது. வேடிக்கையாக இருந்ததால், பாட்டுக்களை எண்ண ஆரம்பித்தேன். 45-46 பாட்டுக்களை எண்ணியதாக ஞாபகம். இதற்கிடையில். ஒரு சீன் முடிந்து இன்னொரு சீன் ஆரம்பிக்கும் முன் திரை விழும் அந்நாட்களில். அப்போதெல்லாம். அந்த சிவராத்திரி தினத்திற்கென்று ஒரு டான்ஸ் ஷோவும் ஏற்பாடாகியிருந்தது. ஒரு பெண் பாவாடையும், குட்டையான சட்டையும் அணிந்து, லம்பாடிப் பெண் போன்ற தோற்றத்தில் ஒரு டோலக்கோ தம்பொரீனோ என்னவோ ஒன்றை கையில் வைத்துக்கொண்டு அதை மற்றொரு கையால் தட்டியோ, அல்லது ஆடிக்கொண்டே தொடையில் அல்லது தூக்கிய முட்டியில் அடித்தோ 'சல் சல் என்ற தாள சப்தமெழுப்பிக்கொண்டு ஆடினாள். சிவராத்திரிக்கு சிவனின் நாமத்தை இரவு முழுதும் ஜபிக்க இதுதான் சரியான வழியென்று நினைத்தார்களோ என்னவோ. இம்மாதிரியான மசாலாக்கள் சேர்த்து மக்களுக்குக் கலைத்தொண்டும் ஆற்றி அத்தோடு பக்தி பாவத்தையும் இணைத்துவிடும் சாமர்த்தியம் அன்று ஒருவருக்கு அந்த சினிமாக் கொட்டகை முதலாளிக்கு இருந்தது.


ஒரு சமயம் ஒரு ஸ்பெஷல் ஷோவுக்கு வரவிருந்த ஒரு நல்ல அந்த வட்டாரத்தில் புகழ் பெற்ற பாடகர்/நடிகர் வரவில்லை. 'நான் இல்லாமல் நீ எப்படி நாடகம் போடப்போகிறாய், பார்த்துவிடுகிறேன்" என்று கருவிக்கொண்டு கழுத்தறுத்தாரோ என்னவோ. இன்னொருவரை உடனே எங்கிருந்தோ பிடித்துக் கொண்டு வந்துவிட்டார் நாடக சபா முதலாளி. புதிதாக வந்தவர் எமகாதகர். கறுப்பும் ஒல்லியுமான சரீரம். ஆனால் சாரீரமல்லவா நாடகத்திற்குத் தேவை. தினம் ஒரு பாத்திரம், சில சமயம் ஒன்றுக்கு மேல். எந்தப் பாட்டு, எந்த நாடகத்திற்கான பாட்டு என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்கவில்லை. கருவிக்கொண்டு போன ஸ்டார் கருவிக்கொண்டு போனது நல்லதாயிற்று. இந்த புதிய கறுப்பு ஒல்லி வித்வான் தன் பாட்டால், சாரீரத்தால் எல்லோரையும் மயக்கி விட்டான்,. எத்தகைய திறன்களெல்லாம் அந்நாட்களில் எந்த பட்டி தொட்டிகளில் எல்லாம் காணக் கிடைத்தன என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. அதோடு கொஞ்சம் துக்கமாகவும் இருக்கிறது. அவர்கள் பிறந்த, காலம் அவர்களை அப்படி ஆக்கிவிட்டிருந்தது. இப்போதோ அவர்கள் எவ்வளவு லக்ஷக்கணக்கில் சம்பாதித்துக்கொண்டு, தமிழ் நாடு முழுதும் எவ்வளவு பிரபலமாகியிருப்பார்கள் என்று எண்ணித் திகைக்கத் தோன்றுகிறது. சம்பாத்தியமும் பிராபல்யமும் கிடைத்திருக்கலாம். ஆனால் இதைப் பெற அவர்கள் அன்று பெற்றிருந்த சங்கீதத் திறனைக் கொண்டவர்களாக இன்றிருந்திருப்பார்களா என்று நினைத்தால், பதில் அவ்வளவு சுலபமும் இல்லை. கிடைக்கும் பதில் மகிழ்ச்சி தருவதாகவும் இராது என்று தான் எண்ணுகிறேன்.


வெங்கட் சாமிநாதன

Wednesday, October 10, 2007

என்னைப் பற்றி சில வரிகளும், என் புத்தகங்கள் பற்றி முழுதும்


வெங்கட் சாமிநாதன் - தஞ்சை மாவட்டம், உடையாளூர் கிராமம். - 1.6.1933

வேலை தேடி வடக்கே பயணம் ஆகஸ்ட் 1949. 1950 லிருந்து 1991 வரை மத்திய அரசாங்கத்தின் பல்வேறு இடங்களில் வேலை. தொடக்கம் ஜெம்ஷெட்பூரில். கடைசியாக தில்லி. சென்னை திரும்பியது நவம்பர் 1999-ல்.
தொடர்புக்கு: தொலை பேசி: 2243 0483: செல்: 938088 0639


வெளியீடுகள்:

இலக்கிய விமர்சனம்: (கட்டுரைத் தொகுப்புகள்)

1. பாலையும் வாழையும்: அன்னம் பதிப்பகம், (1976)
2. எதிர்ப்புக் குரல், அன்னம் பதிப்பகம்(1978)
3, என் பார்வையில், அன்னம் பதிப்பகம் (1982)
4. என் பார்வையில் சில கவிதைகள்: கலைஞன் பதிப்பகம் (2000)
5. என் பார்வையில் சில கதைகள், நாவல்கள்: கலைஞ்ன் பதிப்பகம்(2000)
6. சில இலக்கிய ஆளுமைகள்: காவ்யா பதிப்பகம் (2001)
7. பான்ஸாய் மனிதன்: கவிதா பதிப்பகம், (2001)
8. இச்சூழலில்: மதி நிலையம் (2001)
9. விவாதங்கள், சர்ச்சைகள்: அமுத சுரபி பிரசுரம்(2003)
10, ஜன்னல் வழியே: சந்தியா பதிப்பகம் (2005)
11. புதுசும் கொஞ்சம் பழசுமாக: கிழக்கு பதிப்பகம்(2005)
12. யூமா வாசுகி முதல் சமுத்திரம் வரை: எனி இந்தியன் பிரசுரம் (2006)
13. க்டல் கடந்து: விருட்சம் பிரசுரம்: (2006)
14. இன்னும் சில ஆளுமைகள்; எனி இந்தியன் பிரசுரம் (2006)

நாடக விமர்சனம்:

15. அன்றைய வரட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை: அன்னம்
பதிப்பகம், (1985)
16. பாவைக் கூத்து அன்னம் பதிப்பகம்.(1986)
17. இன்றைய நாடக முயற்சிகள்: தமிழினி பிரசுரம்(2004)


திரைப்படம்

18. அக்கிரகாரத்தில் கழுதை {திரைப்பட பிரதி} (இரண்டாம் பதிப்பு: காவ்யா
பதிப்பகம்(1997)
19. திரை உலகில் (திரை விமர்சனங்கள்) காவ்யா பிரசுரம்(2003)

கலை விமர்சனம்

20. கலைவெளிப்பயணங்கள்: அன்னம் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு (2003)
21. கலை உலகில் ஒரு சஞ்சாரம்: சந்தியா பதிப்பகம்(2004)
22. சில கலை ஆளுமைகள், படைப்புகள்: சந்தியா பதிப்பகம் (2004)

தொகுப்புகள்

23. தேர்ந்தெடுத்த பிச்சமூர்த்தி கதைகள்: சாகித்ய அகாடமி (2000)
24. பிச்சமூர்த்தி னைவாக: மதிலையம்(2000)
25. யாத்ரா இதழ் தொகுப்பு: பாகம் ஒன்று, : சந்தியா பதிப்பகம்(2005)
26. யாத்ரா இதழ் தொகுப்பு: பாகம் இரண்டு: சந்தியா பதிப்பகம்(2005)

மொழி பெயர்ப்புகள்

27. A Movement for Literature: Ka.Naa.Subramaniam: சாகித்ய அகாடமி(1990)
28. தமஸ்: (நாவல்: ஹ’ந்தி மூலம்: பீஷ்ம சாஹ்னி) சாகித்ய அகாடமி(2004)
29. ஏழாம் முத்திரை: (Ingmaar Bergman's filmscript); (தமிழில்) : தமிழினி, (2001)

வாழ்க்கை விமர்சன குறிப்புகள்

30. வியப்பூட்டும் ஆளுமைகள்: தமிழினி (2004).

உரையாடல்கள்:

31. உரையாடல்கள்: விருட்சம் வெளியீடு, (2004)

விருது:

டோரண்டோ பல்கலைக் கழகமும் கனடா இலக்கியத் தோட்டமும் இணைந்து அளிக்கும வாழ்நாள் சாதனைக் கான இயல் விருது 2003.

பிற:

1. Consulting Editor for Tamil: Encyclopaedia of Indian Literature, Sahitya Akademi, Delhi

2. Script,commentary and conception: Yamini Krishnamoorthy's TV serial, Natyanjali (1991)

Sunday, October 07, 2007

நினைவுகளின் தடத்தில் (2)

என் மிகப் பழைய ஆரம்ப ஞாபகங்கள் சில அடிமனதில் பதிவானவை அவ்வப்போது மேலெழுந்து நினைவில் நிழலாடிச் செல்லும். இப்போது அவற்றை எழுத்தில் பதியத் தோன்றுகிறது.


அப்போது எனக்கு இரண்டரை அல்லது மூன்று வயதிருக்கலாம். அந்த வீட்டில் பாட்டியை நன்கு நினைவிருக்கிறது. மாமா வையும் நன்கு நினைவிருக்கிறது. கொல்லைப்புறம் இருக்கும் கிணற்றிலிருந்து தான் தண்ணீர் எடுத்து வரவேண்டும். பாட்டி குடத்துடன் கிணற்றுக்குச் செல்வாள். குடத்தில் தண்ணீர் நிரப்பி இடுப்பில் வைத்துக் கொண்டு திரும்பும் போது நான் பாட்டியை முந்திக்கொண்டு வீட்டுக்கு ஒடுவேன். இது ஒரு நினைவோட்டம்.

பின் மங்கலாக மனத்தில் திரையோடும் ஒரு துண்டுக் காட்சி. குரங்கு ஒன்று என்னைத் துரத்துகிறது. ஒரு பெரிய உயர்ந்த மண்டபத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு என்னை மிரட்டுகிறது. வெகு வருடங்களாக இந்த மாதிரி ஒரு காட்சி என்னில் அவ்வப்போது திரையோடினாலும், அந்த மாதிரி ஒரு இடத்தில் நான் இருந்ததாகவே நினைவில் இல்லை. என்னவோ என் மனதுக்குள் கற்பனை செய்து கொண்டிருக்கிறேனோ என்று நினைத்துக்கொள்வேன். ஆனாலும், அந்த மண்டபம், குரங்கு மிரட்டுவது எல்லாம் அவ்வப்போது, சிறுவயது ஞாபகங்கள் வரும்போது, இக்காட்சியும் உடன் வந்து மறையும். பின் ஒரு முறை பழனிக்குப் போயிருந்தேன், என் சின்ன மாமா பெண்ணின் கல்யாணத்திற்காக. பத்து வருடங்களுக்கு முன். அப்போது தான் நான் பழனிக்கு முதன் முறையாகச் செல்கிறேன். நிலக்கோட்டையிலிருந்து அப்படி ஒன்றும் வெகு தூரத்தில் இல்லை பழனி. அருகில் இருந்த போதிலும், என் மாமா தீவிர முருக பக்தர் என்ற போதிலும், பழனி சென்றதில்லை அது வரை.


அப்படித்தான்நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், கல்யாணத்திற்குப் பழனி சென்றவன் கோவிலைப் பார்க்கச் சென்ற போது அடிவாரக் கோயிலின் முகப்பு மண்டபம், என் சிறு வயதிலிருந்து திரையோடிக்கொண்டிருக்கும் மண்டபம் போலவே இருந்தது. சிறு வயதில் குரங்கு என்னைப் பார்த்து மிரட்டியது இங்கு தானோ? ஒரு வேளை மாமா என்னையும் அழைத்துக் கொண்டு பழனி வந்திருப்பாரோ? இருக்கலாம். என்னவோ தெரியவில்லை. ஆனால் அந்த அடிவார முகப்பு மண்டபத்தைப் பார்த்ததும், சட்டென சிறுவயதிலிருந்து இன்று வரை அவ்வப்போது நிழலாடிச் செல்லும் நினைவு, இப்போது கண்முன் பிரத்யட்சமாகியுள்ளது போன்று ஒரு திகைப்பு. எப்படியும் விளக்கவோ, விளங்கிக் கொள்ளவோ முடியாத dejavu -க்கள்.

வீட்டுத் திண்ணையில் கம்பி அடைப்பிற்குள் நின்று எதிரிலிருக்கும் ரோடையும் வண்டிப் பேட்டையையும் பார்த்து நின்று கொண்டிருப்பேன். அந்த வண்டிப் பேட்டையில் அடிக்கடி டூரிங் டாக்கீஸ் வந்து கொட்டகை போடுவார்கள். மூன்று நான்கு மாதங்களுக்கு சினிமா பார்க்கலாம். மூன்று நாட்களுக்கு ஒரு முறை படம் மாறும். திண்ணையில் உட்கார்ந்து கொண்டே சினிமா வசனங்களையும் பாட்டுக்களையும் கேட்கலாம். தியாகராஜ பாகவதர் நடித்த அசோக் குமார் படம் நன்கு நினைவிருக்கிறது. படத்திலிருந்து ஒரே ஒரு காட்சியும் ஒரே ஒரு பாட்டும் தான் இன்னமும் நினைவிலிருக்கிறது. குழந்தையை தூளியில் இட்டு தூங்கச் செய்யும் காட்சி: 'கண்மணி நீயே கண்ணுறங்காயோ' என்ற பாட்டு. என் பாட்டிக்கு சினிமா பார்ப்பதில் ஆர்வம் அதிகம். ஒரே ஒரு நிபந்தனை. அது புராணப்படமாக இருக்கவேண்டும். புராணப்படம் என்றால் சாயந்திரம் ஆறு மணி ஆட்டம் பார்க்கக் கிளம்பி விடுவாள். என்னையும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு. தரை டிக்கட். முக்காலணா. பாட்டிக்கு மாத்திரம் தான் டிக்கட். எனக்கு மிகவும் நன்றாக இருக்கிறது. அந்த டூரிங் டாக்கீஸ் முதலாளி நல்ல கறுப்பு. ஆனால் மிக வசீகரமான முகமும் சுபாவமும் கொண்டவர். மிகவும் சிரமப்பட்டு என்னை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவர், 'பாட்டியம்மா, ஏன் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு சிரமப்படுறீங்க. இறக்கி விடுங்க. நான் டிக்கட் கேக்க மாட்டேன்.' 'அதுக்கு இல்லேடாப்பா, 'தூக்கிக்கோ'ன்னு ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறான். என்ன பண்றது சொல்லு, எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு" என்று பாட்டி சமாளிப்பாள். பின் வருடங்களில் ஒரு சமயம் 'திருவள்ளுவர்" என்ற படம் வந்தது. பாட்டி கேட்டாள். 'என்னடா இது புதுசா இருக்கே. புராணப் படமாடா?' என்று மாமாவைக் கேட்டாள். மாமா இல்லையென்று சொல்லிவிட்டார். ஆனால், மறு நாளே படம் பார்க்கக் கிளம்பி விட்டாள். " புராணப்படம் இல்லேன்னு சொன்னியே, அதிலே நாரதர் வரார். விஷ்ணு பகவான் வரார்'னு பாத்தவா சொல்றாளேடா" என்று மாமாவைக் குறுக்கு விசாரணை செய்யத் தொடங்கிவிட்டாள். 'பிடிச்சிருந்தா போய்ட்டு வாயேம்மா, ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன்' என்று மாமா சமாதானமாகச் சொன்னார்.

நான் நிலக்கோட்டையில் என் பதிமூன்றாவது வயது வரை மாமாவின் வீட்டில் தான் வளர்ந்து படித்து வந்தேன். வண்டிப்பேட்டைக்கு எதிர் வீட்டில் எவ்வளவு வருடங்கள் இருந்தோம் என்பது நினைவில் இல்லை. அந்த வண்டிப் பேட்டையின் அருகிலேயே, அந்த ரோடில் சற்றுத் தள்ளி எதிர்புறமாக நீளும் தெருவில் ஒரு வீட்டுக்குக் குடி பெயர்ந்தோம். குடி பெயரும் போது, ரொம்ப சின்னச் சின்ன சாமான்களை, புது வீட்டுக்கு நான் எடுத்துச் சென்றது ஞாபகம் இருக்கிறது. வண்டிப்பேட்டையில் அவ்வப்போது முகாமிடும் சினிமாக் கொட்டகை அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய இடம் பிடித்துக் கொள்ளும். புதிதாகக் குடிபெயர்ந்த வீடும் அப்படி ஒன்றும் தூரத்தில் இல்லை. புதிய வீட்டின் தெரு முனையில் வண்டிப் பேட்டையின் வலது பக்கச் சுற்றுச் சுவரைப் பார்க்கலாம். படம் பார்க்க முடியாதே தவிர, சினிமா வசனங்கள், பாட்டுக்கள் எல்லாவற்றையும் புதிய வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டே கேட்கலாம். இப்போ என்ன சீன் நடக்கிறது?, அடுத்தாற்போல் யார் வரப்போறா? என்று எங்கள் பேச்சுக் களிடையே பரிமாறிக் கொள்வோம். மூன்று நாட்களுக்கொரு முறை புராணப்படமாக இருந்தால் பாட்டி என்னையும் அழைத்துக் கொண்டு போவது தொடரும்.

ஒரு முறை டூரிங் டாக்கீஸ் முகாமிட்டிருந்த காலத்தில் சிவராத்திரி இடைப்பட்டது. அப்போது இரவு முழுதும் படம் ஒடும்படியான படம் ஒன்று, பெயர் நினைவில் இல்லை. ஒரே பாட்டாக இருந்தது. வந்தால், வந்தேனே என்று ஒரு பாட்டு. போகும்போது 'போய் வருவேன்' என்று நீட்டி முழக்கி விடை பெற்றுக்கொள்ள ஒரு பாட்டு. அந்தக் காலத்தில் எந்த படமும் பாட்டுக்கள் நிறைந்ததாகவே இருக்கும். பாட்டுக்கள் தான் படத்தின் வெற்றிக்கு அச்சாரமாக இருக்கும். நாங்கள் இருந்த இடத்திலிருந்து, வீடு மாறிய போதிலும், வீட்டுக்கு அருகாமையில் தான் ஒரு பெரிய சுற்றுச் சுவர் கொண்ட மைதானத்தில் சனிக்கிழமை தோறும் வாராந்திர சந்தை கூடும். பெரிய மைதானம். பெரிய சந்தை அது. காய்கறி, மீன் வியாபாரத்தோடு, மாட்டுச் சந்தையும் அப்போது உண்டும். சந்தை தினத்தன்று வியாபாரம் முடிந்து சினிமாப் பார்க்கக் கூட்டம் நெரியும். படம் முடிந்ததும், தங்கள் கிராமத்துக்குத் திரும்பும் வண்டிகள். அப்போது சினிமாப் பாட்டுக்களை பாடிக்கொண்டே தான் வண்டி ஓட்டிச் செல்வார்கள். 'மானமெல்லாம் போன பின்பே, வாழ்வதும் ஓர் வாழ்வாமோ?' என்ற பாட்டை சந்தையிலிருந்து திரும்பும் வண்டியோட்டிச் செல்பவர்கள் பாட அடிக்கடி கேட்டிருக்கிறேன். சில நினைவுகளும் காட்சிகளும் மிக ஆழமாகப்பதிந்து விடுகின்றன. மிகச் சிறு பிராயத்தில் கேட்டவை, நினைவில் பதிந்தவை.; காரணம் வீட்டின் எதிரிலேயே சினிமா கொட்டகை இருந்ததா. இரவு பூராவும் சினிமா கேட்டுக்கொண்டிருந்ததா? பாட்டிக்கு புராணப் படங்களாக சினிமா பிடித்து விட்ட காரணமா? புராணப்படங்கள் தான் பாட்டிக்கு ஒரே பக்தி மார்க்கமாக இருந்தது காரணமாக இருக்கலாம். தெரியாது. என்னவாக இருந்தாலும், 'எனக்குங்க இரண்டு வயசிலேர்ந்தே கலை ஆர்வம் வந்துட்டதுங்க' என்று நான் என் அவதார மகிமைகளை சினிமா நடிகர்களைப் போல சொல்லிப் பெருமை பேசிக்கொள்ள முடியாது. நிலக்கோட்டையிலும் சுற்று வட்டாரத்தில் இருந்த பட்டி தொட்டிகளிலும் இருந்த எல்லா ஜனங்களுக்கு இருந்த சினிமாப் பைத்தியம் தான் எனக்கும் இருந்தது.

நிலக்கோட்டையில் தஞ்சை மாவட்ட சூழல் கிடையாது. கோவில் பிர வசனங்கள், கதா காலட்சேபங்கள் கிடையாது. ராமாயண பாரதக் கதைகள் கேட்க கதா காலட்சேபங்கள் நிலக்கோட்டையில் கிடையாது. நிலக்கோட்டையில் இரண்டு பெரிய கோயில்கள் இருந்தன. மிகப் பிரசித்தமானது மாரியம்மன் கோயில். அதை ஒட்டி பெருமாள் கோயில் ஒன்றும் உண்டு. நானோ மாமாவோ அல்லது நாங்கள் வேறு யாருமோ பெருமாள் கோயிலுக்குப் போய் ஞாபகமில்லை. மாரியம்மன் கோயில் தான் மிகப் பிரசித்தம். மாரியம்மன் உத்சவமும் மிகப் பெரிய அளவில் நடக்கும். கடைத் தெரு முழுதும் பந்தல் போட்டு விடுவார்கள். என் சிறுவயதுப் பிராய நிலக்கோட்டை சின்ன ஊர்தான். சுமார் 6000 பேர் வசிக்கும் ஊர். ஆகவே மாரியம்மன் உத்சவத்தின் போது ஊரே விழாக்கோலம் கொள்ளும். இரண்டு கோயில்களும் நிலக்கோட்டையின் ஒரு கோடியில். நாங்கள் இருந்தது நிலக்கோட்டையின் மறு கோடியில். பாட்டியை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு போன நினைவு எனக்கில்லை. நானும் மாமாவும் தான் போவோம். மாமா மிகவும் பக்தி நிறைந்தவர். பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆக, புராணக் கதை சொல்லும் தமிழ் சினிமாப் படங்களில் தான் பாட்டி பக்தி பரவசம் அடைவாள். மிக நன்றாக நினைவிருக்கும், காதில் இன்னமும் பாட்டியின் குரலில் ஒலிப்பது, ஏதோ ஒரு படத்தில் செருகளத்தூர் சாமா கிருஷ்ணனாக நடித்திருப்பார். அவர் அடிக்கடி குந்தியை, 'அத்தை', என்று விளித்துப் பேசுவார். பாட்டிக்கு அதைக் கேட்டு மிகவும் பரவசமடைந்து போவாள். படம் பார்த்து வீடு திரும்பிய பாட்டி, வீட்டுக்கு வருவோரிடம் தான் சினிமா பார்த்ததைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போவாள். "கிருஷ்ணன் 'அத்தே' 'அத்தே', ன்னு கூப்டறது ஒண்ணே போறுமே. எத்தனை தடவ வேணும்னாலும் கேட்டுண்டே இருக்கலாம் போல்ருக்கு" என்பாள்.

Sunday, September 30, 2007

எங்களைச் செல்லரிக்கும் தாலிபான்கள்

மனித சிருஷ்டிகள் சிலவற்றைப் பற்றி நினக்கும்போதெல்லாம் எழும் உணர்வை வியப்பு என்று சொல்வது மிக மிகச் சாதாரணமாகத் தோன்றுகிறது. இரண்டாயிரம் வருஷங்களுக்கு மேலாக வானளாவ நின்ற பாமியான் புத்தர் சிலைகள், எலிபெண்டா குகைகளில் காணும் திரிமூர்த்தி, சிரவணபேலாவில் உள்ள கோமதேஸ்வரர் மூர்த்தி, எல்லாம் மிகப் பிரும்மாண்டமானவை. மனிதனின் கற்பனைக்கு எல்லை இல்லை என்றாலும், அதன் செயல் சாத்தியம் கற்பனைக்கு ஒரு எல்லை வகுக்கும். அந்த எல்லையைப் பற்றியே சிந்தனை இல்லாது, தன் கற்பனக்கு உருக்கொடுக்க முனைந்து அதை சாத்தியமாக்கிக் காட்டியுள்ளானே, அதை நினைத்து அடையும் வியப்புக்கு எல்லை இல்லை.
சரிவின்றி, நெட்ட நெடிதுயர்ந்து நிற்கும் மலை, அதைக்குடைந்து ஒரு பிரும்மாண்ட சிலை எழுப்புவதென்றால், அதன் செயல் சாத்தியம் என்ன, மலையைக் குடையவும் உருவம் செதுக்கவும், அவ்வளவு உயரத்தில், அதற்கான கருவிகள் தொழில் நுட்பங்கள்.... 2000 வருடங்களுக்கு முன், மனித சஞ்சாரமோ, வாழும் வசதிகளோ அற்ற வனாந்திரமான மலை அடுக்குகளில்... என்று யோசனைகள் படர்கின்றன. அது சாத்தியமாகியிருக்கிறது. ஆஃப்கனிஸ்தான் இவ்வளவு நீண்டகால தன் சரித்திரத்தில் அடுக்கடுக்கான படையெடுப்புகளை, ஆக்கிரமிப்புகளை, வன்முறை நிறைந்த சரித்திர மாற்றங்களை, கொள்ளைகளை அது கண்டிருக்கிறது, கிரேக்கர்களிலிருந்து தொடங்கியது, இன்று அமெரிக்கர்கள் வரை நீண்டுள்ளது. இவ்வளவுக்கிடையிலும் பாமியான் புத்தரின் நின்ற திருக்கோலம் அவ்வளவு மாற்றங்களுக்கும் சாட்சியாய் நின்றிருக்கின்றது. எலிபெண்டா குகை சிற்பங்கள் போர்த்துகீசியரின் குண்டுப் பயிற்சிக்கு களமாகியிருந்திருக்கிறது. உலக மக்களின் வியப்பிற்கும், ஆஃப்கன் மக்களின் கர்வத்திற்கும் காரணமாகி இவ்வளவு ஆயிரம் ஆண்டுகாலமாக உயிர்த்திருந்த அந்த புத்தர் சிலைகள், ஆஃப்கானியர் சிலருக்கு, பாகிஸ்தானின் மதரஸாக்களில் இஸ்லாமியக் கல்வி பயின்ற தாலிபான்களுக்கு, 'இஸ்லாம் என்னும் இனிய மார்க்கத்திற்கு' விரோதமான ஒன்றாகிவிட்டன. பீரங்கி குண்டுகளுக்கு இரையாக அதிக நேரம் ஆகவில்லை. அலெக்ஸாண்டிரியா, யாழ்ப்பாணம் நூலகங்கள், ஜெர்மானிய நகர தெருக்களில் யூதர் எழுதிய புத்தகங்கள் குவிக்கப்பட்டு எரிந்து சாம்பலாக எவ்வளவு மணிகள் தேவையாயிருக்கும்? குண்டு வீசித் தகர்த்தவர்கள், செயல்வீரர்கள், சரித்திரத்தையே மாற்றி எழுத முனைந்தவர்கள். உலகை காஃபிர்களின் ஆபாசத்திலிருந்து காப்பாற்றும் புனித காரியத்தில் தம்மை தியாகம் செய்யத் தயாராகிவிட்டவர்கள். தினம் ஐந்து முறை அல்லாவை தியானிக்க நமாஸ் படிப்பதை கட்டாயமாக்கியவர்கள். நமாஸ் வேளை வந்ததும், வீதியில் நடப்பவர்களையெல்லாம் அல்லாவைத் தொழ நமாஸ”க்கு துப்பாக்கி முனையில் விரட்டியவர்கள். பாட்டும் கூத்தும் இஸ்லாமுக்கு பகை எனக்கண்டு அவற்றுக்கு தடை விதித்தவர்கள். அனேக கலை வெளிப்பாடுகள் இஸ்லாத்துக்கு விரோதமாக கருதப்படுகின்றன. காபூலின் புகழ் பெற்ற புராதனப் பொருட்காட்சியகத்தின் கலைச் செல்வங்களையெல்லாம் தாலிபான்கள் உடைத்து நாசமாக்கினர். அவற்றைக் காப்பாற்றப் பட்ட பெரும் பாட்டைப் பற்றி காட்சியகத்தின் பொறுப்பில் இருந்த முஸ்லீம் அறிஞர்களின் கதை வேதனை தருவது. எல்லாம் அல்லாவின் பெயரில் நடப்பவைதான். அதே அல்லாவின் பெயரைத் துதித்து வாழும், படிப்பு வாசனையற்ற சாதாரண ஆஃப்கன் ஏழைத் தொழிலாளி, புத்தர் சிலைகள் சிதைக்கப் பட்டது குறித்து வேதனைப் பட்டுப் பேசுகிறான். அவனும் அல்லாவின் பிரியத்துக்குரியவன் தான்.
விஷயம் என்னவென்றால் இவர்கள் காரியத்திற்கும் அல்லாவுக்கும் ஏதும் சம்பந்தமில்லை. எகிப்தில் நைல் நதியின் குறுக்கே அஸ்வான் அணைக்கட்டில் மறையவிருந்த அபுஸ’ம்பல் கோவிலின் பிரும்மாண்ட சிற்பங்கள் எல்லாம் சிதைவுறாது பெயர்க்கப்பட்டு பாதுகாப்பாக வேறு இடத்தில் திரும்ப் நிர்மாணிக்கப்பட்டன. அவர்களும் இஸ்லாமியர்கள் தான். அல்லாவைத் தொழுபவர்கள் தான். ஆனால் தாலிபான்கள் இஸ்லாமைப் பற்றியும் அல்லாவைப் பற்றியும் இவர்கள் கொண்டிருக்கும் நினைப்புகள், இந்நினைப்புகள் குடிகொண்டிருக்கும் இவர்கள் மன அமைப்புகள் கொடூரமானவை. கெட்டிப்பட்டவை. மாறுபட்ட சிந்தனையோ, பார்வையோ வாழும் உரிமை மறுப்பவை. இத்தகைய மன அமைப்பு அதிகாரம் பெற்று விட்டால், தனது தவிர மற்றெல்லாவற்றையும் அழித்து ஒழிப்பவை. பாமியான் புத்தர், ஒரு சிலையல்ல. அது ஒரு உருவகம். ஒரு கால கட்டத்தின் மனித சிந்தனையின், கற்பனையின், வரலாற்றின், வாழ்வின் பின் இரண்டாயிரம் ஆண்டு தொடர்ந்த அதன் நீட்சியின் இது அவ்வளவின் உருவகம் அது. அந்த உருவகம் கடந்த காலத்தின் எண்ணற்ற வேறுபட்ட சிந்தனைகளை மனதில் எழுப்பும் சக்தியை தன்னுள் கொண்டது. அது இடையில் வந்த ஒரு சிலரின் வன்முறை அழிவு நோக்கால் சில மணி நேரங்களில் ஒன்றுமில்லாததாகி விட்டது. ஜப்பான், ஸ்ரீலங்கா போன்ற பல நாடுகள் அச்சிலைகளை பெயர்த்து எடுத்துச் செல்லக் கோரியது மறுக்கப்பட்டது
தாலிபான்கள் பாமியான் சிற்பங்களை அழித்தது உலகையே அதிர வைத்தது. அதன் ஃபாஸ’ஸ்ட் செயல்பாடும் வன்முறையும்தான் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிட்டத்தட்ட இந்த அளவில் இல்லாவிட்டாலும் இதே மனப்பான்மையை மாவோவின் கலாச்சாரப் புரட்சி காலத்தில் சைனாவும் அழிபடத் தொடங்கியது. நல்ல வேளையாக, இப்போது, žன அரசு தன் சரித்திரத்தையும் கலைகளையும் பராமரிப்பதில் தீவிர அக்கறை காட்டுகிறது. பல பழங்கால வீடுகள், தெருக்கள் கூட அதன் சரித்திரப் பழமை மாறாது பாதுகாக்கப் படுகின்றன. மாவோ காலத்தில் வேதாகமமாக மதிக்கப்பட்ட கம்யூனிஸமும், மாவோ சிந்தனைகளும் இப்போது பிரார்த்தனைப் பீடத்தில் இல்லை. ஒரு கால கட்ட சிந்தனை அவ்வளவே. ஆனால். பாகிஸ்தான் தொலைகாட்சியிலோ வானொலியிலோ குரான் பற்றிய பிரசங்கங்களைக் கேட்பவர்கள், முகம்மது நபியின் தோற்றத்திற்குப் பின் தான் அதுகாறும் இருளடைந்திருந்த உலகம் ஓளிபெற்றது என்று பேசப்படுகிறது. And Then there was Light என்ற விவிலிய வாசகங்கள் போல.
இதெல்லாம் போகட்டும். நான் சொல்ல வந்தது நம்மைப் பற்றி. ஐந்து வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்ததும், நான் பெற்ற முதல் அதிர்ச்சி, சோழா ஹோட்டலோ என்னவோ பலமாடிகள் கொண்ட பெரிய கட்டிடம், அதன் சுற்றுச் சுவர் மூன்று அடி அகலமே கொண்ட நடைபாதையை ஒட்டி இருக்கும். அதன் ஒர் மூலையில் உட்புறமாக ஒரு சிறு அறிவுப்பு குறுஞ்சுவர் எழுந்திருக்கும், கரிய சலவைக்கல் தாங்கி. அக்கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகங்கள் இப்போது ஹோட்டல் இருக்கும் இடத்தில் தான் காந்தி சென்னைக்கு முதன் முதலாக வந்து இங்குள்ள தலைவர்களைச் சந்திக்க தங்கியிருந்த வீடு. வீடு போன இடம் தெரியவில்லை. இருப்பது இச்சலவைக்கல் வாசகம் தான். கடந்த நான்கு வருடங்களாக, ஜெயா தொலைக்காட்சியின் செய்தித் தொகுப்பில் இடையே 3 நிமிடத்திற்கு 'காலச்சுவடுகள் ' என்றொரு ஒளி பரப்புவார்கள். அனேகமாக நான் அதை தவற விடுவதில்லை. காலை 7.10லிருந்து 7.13க்குள் அதைப் பார்த்துவிடலாம். தமிழனின் இருபது நூற்றாண்டு கால சரித்திரத்தில் பாழ்பட்டு மறைந்து கொண்டிருக்கும் சரித்திர, கலைச் சின்னங்களை ஒவ்வொரு நாளும் காலச்சுவடுகள் பகுதியில் பார்க்கலாம். நாயக்கர் கட்டிய அரண்மனைகள், 8-ம் நூற்றாண்டு பாண்டிய, சோழ அரசர் நிர்மாணித்த கோயில்கள் சேதுபதி அரசர் கட்டிய சத்திரங்கள், படித்துறைகள், என. அவ்வளவும் பாழடைந்து சிதிலமாகிப் போனவை. மண்டிக்கிடக்கும் புதர்களுக்கிடையே பாதி மறைந்து கிடக்கும் கோபுரத்தில் செடிகளும் மரங்களும் செழிப்புடன் வளர்ந்து வான் நோக்கும். இப்பகுதி எப்போது ஆரம்பித்தது எனத் தெரியாது. எனக்கு ஐந்து வருடங்களாக நாள் தவறாது தரப்படுவது தெரியும். இந்த ஐந்து வருடங்களில் 5 x 365 = எவ்வளவு ஆயிற்று? நான் கணக்குப் போடவில்லை. 1700 க்கும் மேலாக இருக்கும். இந்த பகுதி இன்னும் எத்தனை வருடங்களுக்கு தொடருமோ தெரியாது. அவ்வளவுக்கு இந்த அரும் பெரும் தமிழ் நாட்டில் பாழடைந்து கிடக்கும் வரலாற்று கலைச் செல்வங்கள் மண்டிக்கிடக்கின்றன. இஸ்ரேலிலிருந்து வந்த ஒரு நாடகக் கலைஞர் சொன்னார், 'எங்கள் நாட்டில் ஒவ்வொரு கல்லும் ஒரு வரலாறு சொல்லும்' என்று. கை நிறைய கூழாங்கற்களை வைத்துக் கொண்டே அவர் ஒரு நாடகம் நிகழ்த்திச் சென்று விட்டார். கள்ளிக்கோட்டையில் ஒரு கடைத்தெருவின் நடுவில் இருந்த எஸ்.கே பொற்றெக்காடின் சிலையைக் காட்டி, இந்த கடைத்தெருவுக்கே அமரத்வம் தந்து விட்டார் பொற்றெகாட் என்றார் கேரள நண்பர். இந்த பூமி ஜான் ஆபிரஹாம் நடந்த பூமி என்றார். எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. அவர்களது பெருமை உணர்வும் கர்வமும் மன நெகிழச் செய்தது. ' ஆனால், தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊரும் வரலாறு சொல்லும்" என்றார். இப்பெருமையும் கர்வமும் நிறைந்த சொற்களை நான் தமிழ் நாட்டில் யாரிடமும் கேட்டதில்லை. நமது கலைகளைப் பற்றிய, வேறு யாருக்கும் இல்லாத நீண்ட வரலாற்றைப்பற்றிய உணர்வு இங்கு யாரிடம் கண்டோம். ஜெயா தொலைக்காட்சியில் காலச்சுவடுகள் பற்றிச் சொல்பவர், ஏதோ தகவல் அறிவிக்கும் பாணியில் எவ்வித இழப்புணர்வும் இன்றி தான் இலக்கியத் தமிழ் என்று கருதிக்கொண்டிருக்கும் அலங்கார வார்த்தைகளில் ஏதோ சொல்லி முடிக்கிறார். அபத்தமான அலங்கார வார்த்தைகளே கலையாகிவிடும், இலக்கியமாகி விடும் என்ற எண்ணம் பரவல்லாகக் காணப்படுகிறது. மேல்மட்டத்திலிருந்து கீழ்த் தொண்டன் வரை. நுண்ணிய உணர்வுகளுக்குத் தான் இங்கு பஞ்சமாகி விட்டது. ஒவ்வொரு பாழடைந்த கலைச் செல்வத்தைப் பற்றியும் ஒரு நிமிடம் சொன்ன பிறகு அலங்கார வார்த்தைகள் முத்தாய்ப்பாக வந்து விழும். ஒரு உதாரணம்: "பக்தர்களுக்கு அபயமளித்துக் கொண்டிருந்த கோயில் இப்போது அபாயமளித்துக் கொண்டிருக்கிறது" "வரலாற்று ஆசிரியர்களைத் தவிக்க வைத்தது இது. இன்று வரலாற்றில் தவித்துக் கொண்டிருக்கிறது. " "லோகமாதா கட்டிய கோயில், இப்போது இந்த லோகத்திலிருந்தே விடைபெற்றுக் கொண்டிருக்கிறது" ஒவ்வொரு நாளும் ஒர் பாழடையும் கலைச்சின்னம் ஒரு அலங்கார வாக்கியத்துடன் மறக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு சில சிதிலங்களுக்கு 'தொல் பொருள் ஆய்வினரின் பாதுகாப்பில் உள்ளது" என்ற ஒரு அறிவுப்புப் பலகை இருக்கும். அவ்வளவே. பாது காப்பு அவர்கள் கையில் இல்லை. நமக்கு இவை பற்றி ஏதும் இழப்புணர்வு இல்லை எனில், நுண்ணிய கலை உணர்வு இல்லை எனில் வேறு எதுவும் பாது காப்பு தராது. கட்சி மகா நாடுகள், பிரம்மாண்ட கட்-அவுட் டுகளுக்கு ஆகும் செலவில் எத்தனையோ பாதுக்காக்கப் படக்கூடும். நமக்கு அது பற்றி உணர்வு இல்லை. நாம் நாஜி ஜெர்மனியை விட, ஆப்கனிஸ்தானை விட சைனாவை விட எகிப்தைவிட மோசமான நிலையில் இருக்கிறோம். காரணம் இடையில் நேர்ந்த ஒரு அராஜகம் உணரப்பட்டு திருத்தங்கள் நிகழ்கின்றன. இங்கு நம்மைத் திருத்திக் கொள்ளும் நிலையில் நாம் இல்லை. அழிவு மெதுவாக, நிச்சயமாக, திருந்தும், சிந்தனை இல்லாது முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. திடீரென நிகழ்ந்தால் அது சோக சம்பவம். நமக்கு அது பிரக்ஞையே இல்லாது கொஞ்சம் கொஞ்சமாக நாம் அழிந்து கொண்டிருந்தால் அது இயற்கை, நாம் ஒன்றும் செய்வதற்கில்லை என்று சமாதானம் செய்து கொள்கிறோம். தாலிபான்களை விட நாம் வெற்றி நிச்சயம் கொண்டவர்கள்.


வெங்கட் சாமினாதன்

Thursday, September 13, 2007

நினைவுகளின் தடத்தில்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அண்ணா கண்ணன் நான் என் சுயசரிதத்தை எழுதவேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளார். அவர் அமுதசுரபியில் பொறுப்பு வகித்த காலத்திலிருந்து என்று சொல்லவேண்டும். என் வாழ்க்கை ஏதும் அதிசயங்களும் அவதார மகிமைகளும் நிறைந்ததென்று அவர் எண்ணியுள்ளதாக யாரும் அவசர அவசரமாக ஒரு முடிவுக்கு வரவேண்டாம். இப்படியான தம் அவதார மகிமைகளுடன் தான் நம் சினிமா நக்ஷத்திரங்கள் தம் பேட்டிகளைத் தொடங்குவதை நாம் படித்துப் பழக்கப்பட்டிருக்கிறோம். நம் கவிஞர்களுக்கும் சில எழுத்தாளர்களுக்கும் இப்படியான பிரமைகள் உண்டு தான். நியாயமாக நம் நர்த்தகிகளும், பாடகர்களும் தம் குழந்தைப் பருவத்திலிருந்தே இப்படியான சூழலில் தான் வளர்ந்துள்ளதாகச் சொல்ல வேண்டும். அவர்களைப் பற்றிய வரை அது உண்மை. நம்மூர் அரசியல் வாதிகள், சினிமா நடிகர்கள் தம் வாழ்க்கையை எழுதலாம். மிக சுவாரஸ்யமாக இருக்கும். அவர்கள் எழுதுவது உண்மையே யானால், அது நம் பண்பாட்டுக் கூச்சல்களுக்கும் நிமிடத்திற்கு ஒரு முறை, பேருந்துப் படிகளில் ஏறி இறங்கும் போதெல்லாம் என்று நமக்கு நினைவுறுத்தப்படும் வள்ளுவ வாசகங்களுக்கு அடியில் ஓரும் நீரோடையின் குணம், மணம் என்ன என்பது தெரிய வரும். இப்படியெல்லாம் சொல்லி அலட்டிக்கொள்ளாத மண்ணில், மகாராஷ்டிரத்தில் ஹம்ஸா வாடேக்கரும், வங்காளத்தில் வினோதினியும் தம் சுயசரிதையை ஒழிவு மறைவு இல்லாது அப்பட்டமாக எழுதியிருக்கிறார்கள். நம் அரசியல் தலைவர்களிடமிருந்தி இப்படி எழுத்துக்கள் பிறக்கு மானால்.......பின் அவர்கள் எப்படி அரசியல் வாதிகளாக இருப்பார்கள்?
ஆனால் என் வாழ்க்கையில் அப்படி எழுத ஒன்றுமே இல்லை. எழுத்துலகிலும் வெளியிலும் சில உன்னதமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களது சில குறைகளையும், பலவீனங்களையும் மீறியும் அவர்கள் உன்னதமான மனிதர்கள் தான். சில கடைத்தரமான இழிதகைகளையும் சந்தித்திருக்கிறேன், எழுத்துலகிலும், வெளியிலும். அவர்களது சில பலங்களையும் மீறி அவர்கள் இழிந்த மனிதர்கள் தான். 74 வருடங்கள் என்பது ஒரு நீண்ட காலம் தான். எவ்வளவோ மாற்றங்கள், வாழ்க்கை நியதிகளில், கலாச்சாரத்தில், வாழ்க்கை மதிப்புகளில். அவற்றை நினைத்துப் பார்த்தால், திகைப்பாக இருக்கும்.
இப்போது சென்னையின் புறநகர்ப் பகுதியான மடிப்பாக்கத்திற்கு வந்து எட்டு வருடங்களாகிவிட்டன. இந்த எட்டு வருடங்களில் நான் ஒரு சிட்டுக்குருவியைக் கூட இங்கு பார்த்ததில்லை. என் சிறு வயதில் நிலக்கோட்டை என்னும் தண்ணியில்லாக் காட்டில் கூட இராக்காலங்களில் தெருவில் பாடிவந்த இராப் பிச்சைக்காரனை நான் இங்கு பார்த்ததில்லை. பிச்சைக்காரர்கள் மறையவில்லை. அவர்கள் வருகிறார்கள். ஒரு பந்தாவோடு.
க.நா.சு. சொல்வார்: 'யாருடைய வாழ்க்கையிலும் சுவாரஸ்யமான சம்பவங்களும், மனிதர்களும் எதிர்ப்பட்டிருப்பார்கள். அவர்களைப் பற்றி கொஞ்சம் சிரத்தையெடுத்து எழுதினால் நல்ல சிறுகதைகள் நமக்குக் கிடைக்கும். ஆனால் நாவல் எழுதும் விஷயம் வேறு' என்பார். இப்படி எழுதியும் இருக்கிறார். அப்படிப் பார்த்தால், நானும் எழுபத்தைந்தாவது வயதில் அடி எடுத்து வைத்து விட்டேன். சென்னைப் பேருந்துகளும், பெண்களிடம் தன் வீரத்தைக் காட்ட நினைக்கும் டூ வீலரில் தம்மை ராணா பிரதாப் சிங் என்று கற்பித்து அமர்ந்திருக்கும் இளம் மீசைக் காரர்களும், மடிப்பாக்கம் தெருக்களுக்கு அம்மை வடு இட்டிருக்கும் குண்டு குழிகளும் என்னிடம் இரக்கம் காட்டினால் இன்னம் கொஞ்ச நாள் இருக்கலாம். இந்த நாட்களில், க.நா.சு. சொன்னது போல என் வாழ்க்கையில் எதிர்ப்பட்ட சுவாரஸ்யமான்ன மனிதர்கள் சம்பவங்கள் பற்றி எழுதலாம். அவர்கள் தான் என் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கியவை. இல்லையெனில் இந்த 74 வருடங்களும் தம் பாட்டில் தானே ஒடிய நாட்கள் தான். நான் அதற்கு ஏதும் வண்ணம் கொடுத்ததாக நினைக்கவில்லை. இதில் ஏதும் ஒரு ஒழுங்கு இராது. கால ஒழுங்கு, சம்பவ அடுக்கில் ஒர் வரிசைக் கிரமம் என்பது போல ஏதும் இராது. அவ்வப்போது எங்கிருந்தோ எங்கெங்கோ தாவுதல் நிகழும். நினைத்த போது இதைத் தொடரலாம். இடையில் வேறு விஷயங்களை எழுதத் தோன்றினால், இது அவற்றிற்கு இடம் அளிக்கும். மற்ற படி ஈக்ஷ்வரோ ரஷது.
நான் ஐம்பதுக்களில், ஹிராகுட்டிலும், புர்லாவிலும் பின் தில்லியில் அறுபதுகளில் இருந்த போது பழகிய இருவரை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. அவர்களை 40- 50 வருடங்களுக்குப் பிறகு சந்தித்தேன். அவர்களில் ஒருவரை எனக்கு முற்றிலுமாக அடையாளம் தெரியவில்லை. வெண்குஷ்டம் மாத்திரம் காரணமில்லை. கடைசியாக பார்த்து 50 வருடங்களுக்கு மேலாயிற்று. 'யார் என்று அடையாளம் சொல்லச் சொல்லி புதிர் விட்டுக்கொண்டிருந்த ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு யார் என்று எனக்குச் சொல்லப்பட்டதும், 'டேய் நீயாடா, எப்படிடா இப்படி மாறினே?' என்று கத்தத் தோன்றிற்று. எப்படி 'டா' போட்டு பேசுவது? நீண்ட காலம் கழித்துச் சந்திக்கும் எங்கள் யாருக்குமே அது அழகாக இருக்குமா? தயக்கத்தை மீறுவது எப்படி? 'டேய் ' என்று சத்தம் போட்டிருந்தால் தான் பழைய நாட்களின் நெருக்கத்துக்கு நியாயம் செய்வதாக இருந்திருக்கும். நாங்கள் பொய் மரியாதைகளில் தஞ்சம் புகுந்தோம்.
நினைத்துப் பார்க்கத் தோன்றியது. இந்த உலகில் என் இந்த இருப்பை உணர்த்திய முதல் கணம், என் ஞாபகத்தில் எது என்று. அது அக்காலத்தில் வளம் கொழித்த தஞ்சை ஜில்லாவில் இல்லை. கோடை காலங்களில் ராமநாதபுரம் போல தண்ணீருக்குத் தவிக்க வைக்கும் நிலக்கோட்டை என்ற ஊரில். மதுரையிலிருந்து கொடைக்கானல் போகும் வழியில் இருக்கும் ஊர். சுமார் எட்டு மைல் பெரிய குளம் நோக்கிச் சென்றால், வத்தலக்குண்டு (செல்லப்பா பெருமையோடு நினைவு கொள்ளும் ஊர். பி.ஆர். ராஜம் அய்யரையும், பி.எஸ் ராமையாவையும் நினைவு படுத்தும் ஊர். அது பொட்டல் காடல்ல. செழிப்பான இடம் தான். பின் இந்தப்பக்கம் மதுரைக்கு போகும் வழியில் சோழ்வந்தானும் நிலக்கோட்டை போல பொட்டல் காடல்ல. சோழ வந்தான் தெரியுமல்லவா, டி. ஆர். மகாலிங்கம் கண்டெடுக்கப்பட்ட ஊர். ஆனால் இடையில் அகப்பட்ட நிலக்கோட்டை கோடை காலத்தில் எங்களை மிகவும் வாட்டி விடும். சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய பிரக்ஞை முதலில் எனக்குப் பட்டது எனக்கு இரண்டு அல்லது இரண்டரை வயதாக் இருக்கும் போது. நிலக்கோட்டை வத்தலக்குண்டு ரோடில் ஊர் எல்லையில் தான் அந்த ஓட்டு வீடு இருந்தது. ஒரு வண்டிப் பேட்டை எங்கள் வீட்டுக்கு எதிர்த்தாற்போல் ரோடுக்கு அந்தப் புறம். நாங்கள் இருந்த வீட்டை ஒட்டி ஒரு பெரிய வீடு. அங்கு யாரிருந்தார்கள் என்று இப்போது எனக்கு நினைவில் இல்லை. வீட்டுக்குப் பின்னால் ஒரு பெரிய அரச மரம். அதில் ஒரு பிள்ளையார், எதிரில் ஒரு மூஞ்சுறும், இரு பக்கங்களிலும் நாக தேவதைகள் உடன் இருக்க. அதைத் தாண்டி ஒரு கிணறு. சுற்றிச் சுவர் எழுப்பப்படாத கிண்று. அதைத் தாண்டினால் ஒரு ஓடை. சில மைல்கள் தொலைவில் இருக்கும் செங்கட்டான் கரட்டில் மழை பெய்தால் அதிலிருந்து வடிந்து பெருகும் தண்ணீர் செக்கச் செவேலென்று பெருக்கெடுத்து, நிலக்கோட்டையின் மறு எல்லையில் ஏரி போல பரந்திருக்கும் கொக்கிர குளத்தில் சங்கமமாகும். எங்கள் வீட்டின் எதிரிலிருக்கும் ரோடோடேயே அம்மையநாயக்கனூர் (அதன் ரயில் நிலையத்திற்குப் பெயர் கொடைரோட்) நோக்கிப் போனால், கொக்கிர குள்த்தின் நீளும் கரையையும், அக்குளத்தின் மறு கரையில் நிலக்கோட்டை ஊரையே, அடுக்கி வைத்த பட்டாசுக் கட்டாகப் பார்க்கலாம்.

Wednesday, September 12, 2007

நினைவுகளின் தடத்தில் (6)

சிறுவயதில் நடந்த விஷயங்கள், சந்தித்த நண்பர்கள் இப்படி பலவற்றில் ஒரு சில மிக பசுமையாக, ஏதோ கண்முன் நேற்று நடந்து போல் நினைவில் இருக்கின்றன. பல மறந்து விடுகின்றன. நேற்று நடந்த விஷயங்கள் எவ்வளவு தான் நினைவைக் கிளறிப் பார்த்தாலும் ஞாபகத்திற்கு வருவதில்லை. பின் எப்போதாவது வேறு சிந்தனையில் இருக்கும் போது, தேடாத இந்த நினவுகள் மனதில் பளிச்சிடும். மனித மனது எப்படித்தான் செயல்படுகிறது, அல்லது செயல்பட மறுக்கிறது என்பது ஒரு புரியாத புதிர். ரஸ்ஸல் வேடிக்கையகச் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது. அவர் சொன்னார்; மனவியல் அறிஞர்கள் (psychologists) மனது என்ற ஒன்று கிடையாது என்று வெகு தீர்மானமாகச் சொல்கிறார்கள். அதேசமயம் பௌதீகவியல் (physicists) அறிஞர்களும் தம் தரப்புக்கு பொருள் (matter) என்று ஏதும் கிடையாது என்று. இந்த விஞ்ஞானிகள் எதைப் பற்றி வாழ்நாள் முழுதும் ஆராயகிறார்களோ, அதுவே இல்லை என்றால்..... எதை ஆராய தம் வாழ்நாளைச் செலவிட்டார்கள் என்று கேட்க நமக்குத் தோன்றும். இப்படி மனோவியல் அறிஞர்களும் பௌதீக விஞ்ஞானிகளும் சொல்வது தையல்காரர்கள் இந்த ஊரில் யாருமே உடை அணிவதில்லை, நிர்வாணமாகத்தால் செல்கிறார்கள் என்றும், செறுப்புத் தைக்கிறவர்கள், எல்லோரும் வெறுங்காலோடு தான் நடந்து செல்கிறார்கள் என்று சொல்வது போல இருக்கிறது என்று வேடிக்கையாகக் கூறுவார். வேடிக்கை தான் ஆனால் அது உண்மையும் கூட. அது பற்றிப் பின்னர். இப்போதைக்கு மனது என்ற புதிர் பற்றி.

எதற்காகச் சொல்லவந்தேன் என்றால், எது இக்காலத்தில் நம் அரசியலின், சமூகத்தின் குரல் வளையைப் பிடித்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறதோ, எது எல்லோர் பிரக்ஞையையும் முழுதாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறதோ, அது என் சிறுவயதுப் பிராயத்தில் இருந்ததில்லை. அது ஒரு பெரிய விஷயமாகவே இருந்ததில்லை. எங்கள் நண்பர் குழு ஒன்றில் ஒருவர் எல்லோரையும் நோக்கி ஒரு கேள்வி கேட்டார். "உங்கள் குழந்தை படிக்கும் பள்ளிக்கூடத்தில், வகுப்பில் ஒரு தாசியின் குழந்தையும் சேர்க்கப்பட்டால் என்ன செய்வீர்கள்? " அப்போது நான் சொன்னேன், "குழந்தைகள் எல்லாமே குழந்தைகள் தானே?" என்று. அப்போது உடனே எனக்கு மனதில் பட்ட பதிலைச் சொன்னேன். யோசிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏதும் ஆராய்ச்சிக்கான விஷயமும் இல்லை. பிறகு ஒரு நாள் கழித்துத்தான் எனக்கு அது என் சிறுபிராய அனுபவத்தில் நடந்ததைச் சொல்லியிருக்கலாம் என்று.

எங்கள் வகுப்பில், என் ஞாபகத்தில் அது ஏழாவது படிக்கும் போது என்று சொல்லவேண்டும். இரண்டே இரண்டு பெண்கள் தான் இருந்தார்கள். அவர்கள் தனியாக ஒரு பெஞ்சில் உட்கார்வார்கள். வகுப்பில் சுமார் 30 பையன்கள் இருக்கலாம். நான் ஒரு பெஞ்சில், கடைசி என்று சொல்லும் படிக்கு பின் வரிசையில் ஒன்றில். எங்கள் பெஞ்சில் நாலு பேர். அவர்களில் ஒருவன் அங்கண்ணன் என்று பெயர் என்று ஞாபகம். நல்ல உயரம். கறுப்பு. அவன் ஒரு தலித், இன்றைய சொல்லாடலில். என் வகுப்பிற்கு வாத்தியார் என் மாமா தான். அவர் தான் ஹெட்மாஸ்டரும். நாங்களை அவன் தலித் என்று அறிந்து கொண்டது, பெயரை ஊரை அல்ல்து இது போல பல விவரங்களை அறிந்து கொண்டது போலத் தான். அதற்கும் மேல் உள்ள அர்த்தங்கள் எங்களுக்குச் சொல்லப்படவுமில்லை. நாங்கள் அறிந்து கொண்டதுமில்லை. யாரும் அவனை தலித் என்று சொல்லி வித்தியாசமாக நடத்தியது கிடையாது. நல்ல உயரம் என்பதும், அடிக்கடி ஒவ்வொரு வகுப்பிலும் அவன் இரண்டு வருடங்களாவது தங்கி விடுவான் என்பதும் தான் முக்கிய தகவல்கள். அப்படி ஒரு வருடத்திற்கு மேல் அதே வகுப்பில் தொடர்வது என்பது பல மாணவர்களுக்கு சகஜமான விஷயம். அங்கண்ணன் கொஞ்சம் அதிகம் ஒரே வகுப்பில் தங்கி விடுவான்,. அவ்வளவே.

ஒரு முஸ்லீம் மாணவனும் எங்களுடன் படித்தான். அப்துல் வஹாப் என்று பெயர். அவனுடைய வீடு பள்ளிக்குப் போகும் வழியில் நீண்ட தெருவின் மத்தியில் இருக்கும். அப்துல் வஹாபின் அப்பா வீட்டின் முன் ஒரு கட்டிலில் உட்கார்ந்திருப்பார். நல்ல பாரியான உடம்பு. துருக்கிக்காரர் மாதிரி பின்னால் ஒரு குஞ்சம் தொங்கும் தொப்பி ஒன்றை எப்போதுன் அணிந்திருப்பார். அவர் லேவா தேவி செய்து வந்தார். முஸ்லீம்கள்கடனுக்கு பணம் கொடுத்து வட்டி வாங்கிப் பிழைப்பது ஹராம் என்று இஸ்லாத்தில் நம்பப்படுகிறது. ஆனால் நான் சிறு வயதில் பார்த்த முதல் முஸ்லீமின் தொழிலே அதாகத்தான் இருந்தது. நிலக்கோட்டையில் நான் அதிகம் முஸ்லீம்களைப்பார்த்ததில்லை. ஆனால் மெயின் ரோடை விட்டு உள்ளே தள்ளிச் செல்லும் ஒரு சந்தின் நடுவில் பள்ளி வாசல் இருந்தது. ஏதோ ஒரு முஸ்லீம் பண்டிகையின் போது தெருவில் புலிவேஷம் ஆடுவதை நான் பார்த்திருக்கிறேன். வேறு எந்தத் திருவிழாவிலும் புலிவேஷம் ஆடி நான் பார்த்ததில்லை. ஒரு சமயம் நாங்கள் விளையாடிக்கொண்டிருந்த போது அப்துல் வஹாப் என்னைத் துரத்த நான் ஓட, ஒரு மண்மேட்டின் அருகே அவன் என்னைப் பிடித்து விடுவான் போலிருக்க நான் சட்டென அந்த மேட்டைச் சுற்றி வளைந்து ஓடினேன். அவன் கால் சருக்கி குப்புற விழுந்து அவன் முன் பற்கள் உடைந்து ரத்தம் கொட்ட விழுந்து கிடந்தான். நான் பயந்து விட்டேன். நான் தான் தள்ளி விட்டேன் என்று சொல்வார்கள், மாமா அன்று என்னைத் துவைத்து எடுத்துவிடுவார் என்று பயந்து கிடந்தேன். ஆனால் ஆச்சரியம், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. மாமாவும் பயந்து தான் இருந்தார். அப்துல் வஹாபின் அப்பா வந்து என்ன ரகளை நடக்கப் போகிறதோ என்று. பின்னால் எனக்குச் சொன்னார்கள். வாத்தியார் வீட்டுப் பிள்ளைதானே. ஏதோ விளையாட்டிலே இப்படி ஆகிப் போயிருச்சி. சரி விடுங்க" என்று சொன்னாராம். இன்னொரு பையன் பழனிச்சாமி. 'சாமிநாதா, நான் எட்டாம்புக்கு மேலே படிக்கப் போறதில்லே. எங்க ஐயா சொல்லிட்டாரு" என்று மிக சந்தோஷமாகச் சொல்வான். ஏன் என்று கேட்டதற்கு, "அதுக்கு மேலே படிக்கிறதுக்கு ரொம்ப மூளை வேணுமாம். பத்தாம்புக்கு போனாலே ஒவ்வொத்தருக்கு படிச்சுப் படிச்சு மூளையே கெட்டுப் போயிருமாம்" என்று சொல்வான்.

நான் முக்கியமாகச் சொல்ல வந்தது எங்கள் வகுப்புப் பெண்களைப் பற்றி. ஒருத்தி பெயர் சௌந்திரம் என்று நினைக்கிறேன். எங்கள் பள்ளிக்கூட மானேஜர், அல்லது கரஸ்பாண்டண்ட்டின் பெண். சௌராஷ்டிரர். மதுரை ஆர்.வி.மில்லின் நூல் ஏஜென்சி. அவர்கள் எங்கள் பள்ளியை நடத்தும் ஒரு குடும்பத்தின் மூன்று சகோதரர்களில் ஒருவர். மாறி மாறி அவர்கள் பள்ளிக்கு மானேஜராக இருப்பார்கள். நான் இருந்த காலத்தில் அந்த குடும்பம் தான் நிலக்கோட்டையிலேயே பணக்கார குடும்பம். அவர்கள் வசித்த தனித்தனி வீடு ஒவ்வொன்றும் பெரிய மாளிகை என்று சொல்லவேண்டும். அந்தப் பணக்கார சௌந்திரத்தோடு ஒட்டி உட்கார்ந்திருந்த இன்னொரு பெண் பெயர் ராம திலகம். மிக அழகானவள். கருப்பு நிறம் தான். என்றாலும் கருப்பு என்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கறுப்பு இல்லை. ஆனால் அழகி. அவள் ஒரு தாசி குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்படியென்றால் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. வகுப்பில் அவர்கள் இருவரே இருந்ததால், இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்கள் இருவரும் வகுப்புத் தோழிகள். அவ்வளவே. மேலும், தாசி என்றால், ஏதோ ஒரு குலம், அல்லது உத்யோகம், என்பதற்கு மேல் அந்த பெயர் எங்களுக்கு எந்த அர்த்தத்தையும் கொடுத்ததில்லை. இந்த விவரமும் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது. எனக்குத் தெரியும். ஏனெனில் அவள் 'ட' வடிவத்தில் இருக்கும் எங்கள் தெரு என்று சொன்னேனே, எங்கள் வீடு அந்த 'ட' வின் இருகோடுகளின் சந்திப்பில் இருந்தது. ராமதிலகம் வத்தலக்குண்டு போகும் ரோடைத் தொடும் கோட்டின் நடுவே குளத்தை நோக்கி இருக்கும் வீட்டில் இருந்தாள். அவள் அம்மாவோ, பாட்டியோ ஒரு கிழவியோடு. அதற்கு அடுத்த வீட்டில் ஒரு இளம் பெண். அவ்வப்போது டூரிங் சினிமா நான் சொன்ன பேட்டையில் முகாமிட்டால், அதன் முதலாளி, அங்கு தான் தங்குவார். கழுத்தில் கையில் தங்க செயின். மல் வேஷ்டி. கறுப்பு தான், ஆனால் ஆணழகன் என்று சொல்லவேண்டும். என் மாமா கூட வீட்டில் யாருடனோ பேசும் போது அவரைப் பற்றி, "நல்ல மனிதர் தான். மரியாதை தெரிந்தவர். ஆனால், என்னவோ இப்படி ஒரு பலஹீனம்.." என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ராம திலகம் இருந்த எங்கள் தெருவின் நீட்சியில் அவள் வீடு நடுவில் இருந்தது என்றேன். அதன் இரு பக்கங்களிலும் முதலில் இரண்டு வீடுகளில் இரண்டு முஸ்லீம் குடும்பங்கள் இருந்தன. அவற்றில் முதல் வீட்டின் முன் ஆடு ஒன்று கட்டியிருக்கும். பின் ராமதிலகம் வீடு. பின் ஒரு இளம் பெண் இருந்த வீடும். அதற்கு அடுத்த வீட்டில் ரெவென்யூ இன்ஸ்பெக்டர். அதற்கு அடுத்த வீட்டில் அடிக்கடி யார் யாரோ வாடகைக்கு வந்து போவார்கள்.
எங்கள் தெருவின் பெயர், வெங்கடேஸ்வர அல்லது வெங்கடேச புர அக்கிரஹாரம். எது என்று நிச்சயமாக ஞாபகமில்லை. அந்த பெயர் வீண் தான். ஒரு சமயம் ஒரு தகரத் துண்டில் தெருப் பெயர் எழுதி சுவற்றில் ஆணி அடித்துச் சென்றார்கள். ஆனால் அந்தத் தெருப் பெயரை யாரும் எங்கும் உபயோகித்தது கிடையாது. பெயரை எழுதி, ஹெட்மாஸ்டர், நிலக்கோட்டை என்று எழுதினால் தபால் வந்து சேர்ந்து விடும். நிலக்கோட்டையில் வீட்டு எண், தெருப் பெயர் என்பதெற்கெல்லாம் ஏதும் அர்த்தம் கிடையாது. எங்கள் வீட்டின் எதிரே ஒரு சாரியில் ஒரு பெரிய வீடு காம்பௌண்டு சுவர் அடைக்க இருக்கும். அது எப்போதும் எங்கள் ஊருக்கு மாற்றலாகி வரும் சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு என்று தீர்மானமாகிய வீடு. ஸ்ரீ ராமவிலாஸ் சர்வீஸோ அல்லது கொடைக்கானல் மோட்டார் யூனியன் (ஜெயராஜ் நாடார் என்பவர் நடத்தி வந்தது) பஸ்ஸோ, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் டூர் போகிறார் என்றால் அவர் வீட்டுக்கு முன்னால் வந்து பஸ் நின்று காத்திருக்கும். டிவிஎஸ் வண்டி வராது. அவர் வீட்டு வேலைக்கு என்று ஒரு ஏட்டையாவோ, கான்ஸ்டபிளோ இருப்பார். அவர் தினம் காலையில் ஷ¥வை பாலிஷ் செய்து கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். தினம் ஒரு பஸ் காலையில் அவர் வீட்டின் முன் வந்து நிற்கும். பஸ்ஸின் மேலேயிருந்து இரண்டு குடங்கள் வந்திறங்கும். அவை நிலக்கோட்டையிலிருந்து 22 மைல் தூரத்திலிருக்கும் பெரியகுளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வந்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வீட்டில் கொடுக்கும். அந்த வீட்டு காம்பவுண்டை அடுத்து ஒரு வெட்ட வெளி. அதன் ஒரு ஓரத்தில் ஒரு குடிசை. அதில் நாகு என்று அழைக்கப்பட்ட வற்றிய உடம்பும் ஏழ்மையின் வடிவே ஆன ஒரு ஸ்திரி. அவள் புருஷன் நல்ல தாட்டியான மனிதன். அவன் குடிசைக்கு வரும்போதெல்லாம் சண்டை தான், கூச்சல் தான். ஆனால் அவன் எப்போதாவது தான் காட்சியளிப்பான். நாகு தான் எந்நேரமும் ஏதோ செய்து கொண்டே இருப்பாள். அத்தோடு யாரையாவது வைது கொண்டும் இருப்பாள். அவள் ஆடு வளர்த்தாள். ஊரெல்லாம் சுற்றி சாணி பொறுக்கி வரட்டி தட்டி பிழைத்து வந்தாள். அவள் குடிசையைச் சுற்றி இருக்கும் சிதைந்து கிடக்கும் நீளக் குட்டிச் சுவரில் எப்போது வரட்டிகள் காய்ந்து கிடக்கும். அவள் குடிசைக்கு எதிரே, எங்கள் தெருவின் மறு சாரியில் நடுவே ஒரு பாழடைந்த வீடு இருக்கும். அதில்தான் அவள் வரட்டிகள் அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்.
இதற்கு எதிர்த்த சாரியில் ஒரு பெரிய வீடு. அது நான் முன் சொன்ன எஸ்.ஆர். ராமய்யர் என்னும் எங்கள் பள்ளிக்கூடத்தை ஸ்தாபித்து நிர்வகித்து வந்த சௌராஷ்டிர குடும்பத்தின் மூத்த சகோதரர் வாங்கிப் போட்டிருந்த வீடு. அந்த வீட்டில் எப்போதாவது தான் ஒரு பெரிய அதிகாரி வாடகைக்கு வந்து தங்குவார். ஒரு சமயம் ஒரு சப் கலெக்டர் வாடகைக்கு இருந்தார். அவர் ஒரு வில் வண்டியில் தான் பயணம் செய்வார். பசு மாடு, வில்வண்டிக்கான மாடு எல்லாம் அந்த வீட்டின் ஒரு பக்கத்தில் இருந்த கொட்டகையில் கட்டி யிருக்கும். அதற்கு அடுத்த ஒரு சின்ன வீட்டில் தான் நடராஜன் என்னும் அம்பி வாத்தியார் இருந்தார், ஒரு வயோதிக அப்பா அம்மாவோடு, இரண்டு தம்பிகளோடும். அவர் வாங்கிய 19 ரூபாய் சம்பளத்தில் எப்படி காலம் தள்ளினாரோ என்று இப்போது நான் திகைக்கிறேன். அடுத்து ஒரு பெரிய வீடு. இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல்ஸ் இருந்த வீடு. அடுத்து ஒரு வாத்தியார் வீடு. ஒரு சமயம் நாராயண அய்யர் என்று ஒரு வாத்தியார் இருந்தார். பின் வெட்ட வெளி. பின் நாகு பயன் படுத்திய பாழடைந்த வீடு. அந்த வீட்டில் சில சமயங்களில் பகல் வேஷக்காரர்கள் வந்து தங்குவதுண்டு. தினம் ஒரு வேஷம் போட்டுக்கொண்டு வருவார்கள். அவ்வப்போது ஏதாவது கேட்பார்கள். அல்லது கடைசியில் ஊர் விட்டுப் போகும் போது அவர்களுக்கு ஏதோ கொடுப்பார்கள். அந்த நாற்பதுக்களுக்குப் பிறகு நான் வேறு எங்கும் இப்படியான பகல்வேஷக்காரர்கள் என்று கேட்டதுமில்லை. பார்த்ததுமில்லை. அதை அடுத்து மறுபடியும் ஒரு வாத்தியார் வீடு. ரங்கநாதன் என்றோ அல்லது ரங்கசாமி என்றோ பெயர். எனக்கு ஆறாம் வகுப்பு வாத்தியாராக இருந்தார். அது தவிர அவர் பாட்டும் சொல்லிக்கொடுப்பார். ஊரின் மற்றொரு கோடியில் வெகுதூரத்திலிருந்த பெருமாள் கோவில் பாட்டராச்சாரியார் குடும்பமோ என்னவோ இரண்டு சிறுமிகள் வந்து பாட்டுச் சொல்லிக் கொண்டார்கள். அத்தெருவின் நடுவே ரோட்டைப் பார்த்தவாறு பிள்ளையார் கோவில். தெருவின் மறுகோடியிலிருந்த நாங்களும் பிள்ளையாரும் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டிருப்போம்.

வெங்கட் சாமிநாதன்/24.8.07

Monday, January 01, 2007

கருத்தும் பகைமையும்

ஐம்பதுக்களின் ஆரம்பத்தில் எனக்குக் கிடைத்த முதல் கலை மனமும், இலக்கிய ருசியும் கொண்ட நண்பன், ஒரு வங்காளி, மிருணால் காந்தி சக்ரவர்த்தி, எங்களிடையே இருந்த சுமார் ஆறு வருட நட்பின் ஆழத்திற்கு வெகு சமீபத்தில் வரக்கூடிய ஒரு நட்பு எனக்கு கிடைத்ததில்லை. அது அலுவலகத்தில் தான் ஒரு சிறு ஈகோ தகராறுடன் தொடங்கியது. பின் அவன் தன் ஈகோவை மறந்து என்னுடன் நட்பு கொள்ள அதிக மணி காலம் ஆகவில்லை. நெருக்கமான முதல் சம்பாஷணையை அவன் தொடங்கக் காரணமானது, அப்போது நான் என் இருக்கையில் இருந்து கொண்டு படித்துக் கொண்டிருந்த புத்தகம், அல்டஸ் ஹக்ஸ்லியின் 'Ape and Essence'. இந்த நட்பின் தொடக்கமாக இருந்த உரசலைப் பற்றி நான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு சமயம் அவன் ஒரு சம்பவத்தைக் கூறினான். சாந்தினிகேதனில் ரெவ். சி. எ·ப். ஆண்டிரூஸ் படிப்பித்துக் கொண்டிருந்த காலம். சாந்தினிகேதனில் ஒரு நாள் ரெவ்.ஆண்டிரூஸ் கையிலிருந்த புத்தகத்தில் கண் பதித்து நடந்த வாறே படித்துக் கொண்டிருந்த போது, திடீரென ஒருவன் அவர் முன் எதிர்ப்பட்டு அவர் தாடியை இறுகப் பிடித்து உலுக்கினானாம். திடுக்கிட்டுப் பார்த்த ரெவ். ஆண்டிரூஸ் அவனைக் கேட்டாராம். "யாரப்பா நீ? நான் உனக்கு எதுவும் நல்லது செய்ததாக நினைவில்லையே அப்பா? உன்னை எனக்குத் தெரியவே தெரியாதே? பின் ஏன் இந்த கோபம்?" என்றாராம். கேட்க இது வேடிக்கையாகத்தான் இருக்கும். சும்மா தமாஷ¤க்காகக் கற்பித்துச் சொல்லப்பட்டது என்றும் தோன்றும். ஆனால் இது ஒரு சில மனித மனோபாவங்களின் உண்மை.
பங்களாதேஷ் இந்தியாவுடன் இப்போது கொண்டுள்ள பகைமை ஒரு உதாரணம். முப்பது வருடங்களுக்கு முன் இன்னொரு முஸ்லீம் நாட்டின் கொடும்பிடியிலிருந்து விடுதலை பெற இந்தியா உதவிவயிருக்கலாம். அது பழைய கதை. இன்று அது ஒரு கா·பிர் களின் நாடு. என்ன இருந்தாலும் பாகிஸ்தான் தனக்கு பயம் தராத ஒரு சகோதர முஸ்லீம் நாடு. ஆக, எந்த உறவின் ஆரம்பமும் எப்படி இருந்தது என்பதில் பிரச்சினை இல்லை, உறவு கொள்பவர் இருவரின் மனோ பாவங்களைப் பொறுத்தது.
47-48 வருடங்களாகின்றன, நானும் மிருணாலும் சந்தித்துக்கொள்ளவில்லையே தவிர, ஒருவருக்கொருவர் மிகவும் மனம் கசியும் நினைவுகளுடனேயே இருக்கிறோம். சமீபத்தில் அத்தனை வருடங்களுக்குப் பின் சந்தித்த தமிழ் நண்பர் அப்படித்தான் மிருணாலைப் பற்றி என்னிடம் சொன்னார். இவை இரண்டு துருவ எல்லைகள். மறுபடியும் ரெவ். ஆண்டிரூஸ் தாடிக்கு வந்த துர்கதிக்குத் திரும்புவோம்.
இன்னுமொன்று. ஜே;பி.எஸ் ஹால்டேன் சூயஸ் பிரச்சினைக்குப் பிறகு கோபித்துக்கொண்டு இந்தியா வந்து தங்க ஆரம்பித்தார். அப்போது அவர் கட்டுரைகள் கல்கத்தா பத்திரிகைகளில் வெளிவரும். ஒரு கட்டுரையில், அவருடைய மனைவி ஒரு விஞ்ஞானிகள் கருத்தரங்கில் தெரிவித்த கருத்துக்கள் கடும் கண்டனங்களை எதிர்கொள்ளவேண்டி வந்தது என்றும், அன்று வீடு திரும்பிய திருமதி ஹால்டேன் அன்று அவர் கடும் கண்டனத்துக்கு உள்ளானது கடைசியில் அவரையும் ஒரு விஞ்ஞானி என்று அவர்கள் அங்கீகரிக்க வேண்டிவந்துவிட்டது என்று சொல்லி மிகவும் சந்தோஷப்பட்டார்" என்று எழுதியிருந்தார். அது காறும் அவரது அங்கீகாரத்திற்காக, திருமதி ஹால்டேன், பெண்ணீய வாதிகளிடம் முறையிடவில்லை. இதுவும் ஒரு கலாச்சாரம். நாம் கற்றுக்கொள்ளவேண்டிய கலாச்சாரம்.
இது தமாஷ¤க்கான கற்பனை அல்ல என்பது நான் எழுத ஆரம்பத்திலிருந்து இன்று வரை எனக்கு பலமுறை என் தமிழ் எழுத்தாள அன்பர்களில் பலர் ஆண்டிரூஸ் உண்மையைத் தான் அவர் வழியில் சொல்லியிருக்கிறார் என்பதை எனக்கு நினைவுறுத்திய வண்ணமாக இருக்கிறார்கள். தில்லியில் எண்பதுகளில் என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னவர்களிடம் சில அன்பர்கள் " என்னத்துக்கு வீணா? அந்த ஆள் மேலேல்லே விழுந்து பிடுங்குவான்?" என்று சொல்லித் தடுத்து விட்டதாக பின்னர் நேர்ந்த தற்செயல் சந்திப்பில் சொன்னவர்கள் உண்டு. அப்படி யார் என்று சொன்னவர் என்று கேட்டறிந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படி அவர்கள் தம் நண்பர்களைத் தடுத்தாட்கொள்ளும் வகையில் ஏதும் நிகழவில்லை. அப்படி ஏதும் இந்த இடைத்தரகர்களை நான் பயமுறுத்தியதுமில்லை. அவர்களிடமில்லை, மற்றவர்களிடம் காரசாரமாக கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்ததுண்டு. அது ஏன் பகைமைக்கு இட்டுச் செல்லவேண்டும் என்பது எனக்குப் புரிந்ததில்லை. க.நா.சு வோடு நிறைய நான் வாதிட்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் அவர் "அப்படியும் சொல்லலாம்" என்பார். செல்லப்பாவோடும் தான். அவர் க.நா.சு. போல விட்டு விட மாட்டார். ஆனால் இந்த காரசார விவாதங்கள் என்றுமே எங்களிடையே பகைமைக்கு இட்டுச் சென்றதில்லை. கருத்துப் பரிமாற்றம் என்பது மிகவும் கொஞ்சப் பேரிடம் தான் சாத்தியமாகியிருக்கிறது. 'சாமிநாதன் விஷயத்தை என்னிடம் விட்டு விடு, அதிலெல்லாம் தலையிட வேண்டாம் " என்று க.நா.சு பதில் சொன்னது என் காதில் விழுந்திருக்கிறது. "அவனோடு உங்களுக்கு என்ன பேச்சு? என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும். இந்த மனோபாவம் தான் தமிழ் எழுத்தாள சமூகத்தில் பரவலாகவும் ஆழமாகவும் வேரூன்றியிருக்கிறது. தன்னைப் புகழ் மறுக்கிறானா, வாதமிடுகிறானா, அப்போ அவன் தனக்கு எதிரிதான் என்ற மனோபாவம். சகஜமான, சினேக பூர்வமான கருத்துப் பரிமாற்றம் என்பது இங்கு சாத்தியமில்லாது இருக்கிறது. ஒரு முறை வலம்புரி ஜான், க.நாசு.வின் வீட்டில் அவரைச் சந்தித்து முன்னர் அவரைப்பற்றி தன் 'தாய்" பத்திரிகையில் வசை என்று சொல்லும் தரத்தில் தாக்கியதற்கு மன்னிப்பு கோரியிருக்கிறார். க.நா.சு.வின் வழக்கமான பதில், '" அட சர்த்தான்யா, விடும்" என்பதுதான். இது க.நா.சு.வோடு நெருக்கமாகப் பழகியவர்களுக்குத் தெரியும். கருத்துத் தளத்துக்கு வளம் சேர்க்கும் ஆழமான கருத்துக்கள் தான் பயனுடையவை. பரிமாறிக்கொள்ளும் இருவர் ஆளுமையையும் சிறப்பிப்பவை. க.நா.சு வை அறிந்து கொள்ள முயலும் யாரும் இன்று வலம்புரி ஜான் என்ன எழுதியினார் என்று தேடிச் செல்லப் போவதில்லை. கருத்துத் தளத்தில் வலம்புரி ஜான் இருந்ததே இல்லை. ஒரு கட்டத்தில் ஒரு வட்டத்தில் பரபரப்பை உண்டாக்கியவர். அவ்வளவே.
தமிழ் நாட்டில் கருத்துக்கள் பேணப்படுவதில்லை. கட்சிச் சார்புகள், வாசகப் பெருக்கங்கள், சாதி உணர்வுகள் பேணப்படுகின்றன. தொடக்க காலத்தில், ஐம்பதுக்கள் அறுபதுக்களில், வாசகப் பெருக்கம் ஒரு வாதமாக முன் வைக்கப்பட்டது. "என் எழுத்துக்களை லட்சக்கணக்கான வாசகர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். ஒரு சிலரின் முணுமுணுப்பை நான் பொருட்படுத்தப் போவதில்லை" என்பது பிரும்மாஸ்திரமாகக் கருதப்பட்டது. அன்று அந்த பாக்கியத்தைப் பெற்றவர்கள் இன்று மறக்கப்பட்டுவிட்டார்கள். அடுத்த இருபது முப்பது வருடங்களுக்கு கட்சிச் சார்பு துணை கொடுத்தது. முற்போக்கு என்று தன்னை அடையாளம் காட்டிவிட்டால் போதும். பிரசுரம் பெறுவது மிக சுலபம். பின் எழுதியதெல்லாம் பாராட்டப்படும் முற்போக்கு எழுத்தாளர் சங்கங்கள் அனைத்தும் பாராட்டும். அதே போல முற்போக்கு எழுத்தாளர் எவரையாவது நாம் அங்கீகரிக்காது போனால், வந்தது வினை. அவர்கள் தயாராக வைத்திருக்கும் வசைகளை அத்தனையும் நம்மீது வீசப்படும் தமிழ் நாட்டு முற்போக்குகள் அத்தனைபேரின் பகையையும் நாம் சம்பாதித்ததாகும். சி.ஐ.ஏ ஏஜெண்ட் என்பார்கள். அமெரிக்க பணம் வருகிறது என்பார்கள். பொய்க் குற்றச்சாட்டுக்களை கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் வீசுவார்கள். எந்த சக முற்போக்கும் பொய் எனத் தெரிந்தும் தடுக்கமட்டார்கள். இப்போதைய கட்டம் வெகுஜன ரசனையோ, முற்போக்கு கோஷங்களோ செல்லுபடியாகாத கட்டம். இபோது அரசோச்சுவது, சாதிப் பற்றும் கும்பல் மனோபாவமும். ஒவ்வொரு கால கட்டத்தில் ஒன்றொன்று. யாருடைய கருத்துமோ, படைப்புமோ, செயல்பாடுகளோ பற்றிக் கவலை இல்லை. சாதி பார்க்கப்படுகிறது. எந்த கும்பல் (clique) என்று பார்க்கப் படுகிறது.
முன்னர் வெகு ஜன ரசனையும், முற்போக்கும், திராவிட கட்சிக் கொள்கைகளும் சாதிக்காததை, இன்று தலித் எழுத்தாளர்கள் சாதித்துக் காட்டுகின்றனர். அவர்களுக்கு வழி காட்டும் சித்தாந்திகளோடு மோதிக்கொள்வதில்லையே தவிர வழிகாட்டப்படும் சித்தாந்தங்களோடு தலித் எழுத்துக்களுக்கு ஏதும் உறவு இருப்பதில்லை. இதை நான் சொல்லிக் காட்டுவதாலும், வேறு அடையாளங்களாலும், என் பாராட்டுக்களை தலித் எழுத்தாளர்கள் பலர் மௌனமாக பெற்றுக்கொண்டாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். தனியாக என்னைச் சந்திக்கும்போது அவர்கள் என்னிடம் சொல்வதை வெளித்தெரிய சொல்வதில்லை. தாடியைப் பிடித்து உலுக்கவில்லை. எதிர்ப்பட்டால், ஒதுங்கிச் செல்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். அவர்கள் கருணைக்கு என் நன்றி.
ஆனால், என்னால் வழிகாட்டப்பட்டவர்களாக ஒரு காலத்தில் சொன்னவர்களுக்கு இன்று நான் "அயோக்கியன்" ஆகியிருக்கிறேன். காரணம் நான் அவர்களுக்கு தொடர்ந்து புஷ்பார்ச்சனை செய்யவில்லை. ஒரு சிலரின் இஷ்ட தெய்வத்தின் சன்னதிக்குச் செல்லாததால் "ஞான சூன்யம்" ஆகியிருக்கிறேன். சொன்னவர்கள் இதற்கு பெண்ணீய லேபிள் தந்து தனக்கு ஆதரவாக, கோரஸ் எழவில்லையே என்று குறைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். முற்போக்குகள் போல பெண்ணீயம் யூனியனாக செயல்படுவதில்லை. ரொம்ப செலெக்டிவ் அவர்கள்.
வெ.சாவிடம் முன்னர் இருந்த கோபம் இப்போது இல்லை. குரல் மங்கி விட்டது என்று சொல்பவர்களில் ஒரு சாரார், தம் முதல் புத்தகத்திற்கு என் பாராட்டுக்களைப் பெற்றவர்கள். அல்லது என்னிடம் தாம் விரும்பும் அடையாளங்களைக் காணாதவர்கள். திறமை காட்டும் முதல் அடி வைப்புக்கு என் ஆதரவு என்றுமே உண்டு. கன்றுக்குட்டியை யாரும் செக்கிழுக்க வைப்பதில்லை. உழவு மாடாக்குவதில்லை. இது காறும் என் கோபங்கள் ராஜ பார்ட் உடை அணிந்து கொண்டு ஆகாயம் நோக்கி மூக்கை உயர்த்துகிறவர்களை எதிர்த்துத் தான். என் கோபத்தால் அவர்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்பட்டதில்லை. வாசகப் பெருக்கம் குறைந்ததில்லை. பரிசுகளும் விருதுகளும் அவர்கள் தான் பெறுகிறார்கள். ஒரு சில நண்பர்கள் என்னைக் கேலி செய்வதுண்டு. "என்னைத் திட்டி எழுதுங்களேன், சாகித்ய அகாடமியோ, சங்கீத நாடக அகாடமியோ எனக்கு பரிசு கொடுப்பார்கள்" என்று. என் கோபம் தணிந்துவிட்டது என்று சொல்பவர்களைக் கேட்பேன், "உங்கள் புத்தகத்தைப் பாராட்டியது தவறு என்கிறீர்களா? உம்மை செம்மட்டியை எடுத்து அடித்திருக்கவேண்டும் என்கிறீர்களா? அப்படியானால் தான் நீங்கள் சொல்வதற்கு அர்த்தமும் பலமும் இருக்கும்." என்று கேட்டால் ஒரு அசட்டுச் சிரிப்புத் தான் பதிலாகக் கிடைக்கும். ஒரு வேடிக்கை. நான் கோபம் தணிந்து சாதுவான பிராணி ஆகிவிட்டேன் என்று சொன்னவர் யாரும் தங்கள் கோபத்தை எங்கும் எதன் மீதும் காட்டியவர்கள் இல்லை. ஒரு பத்திரிகை முதலாளி சொன்னதை, கட்சி சொன்னதை, தம் சாதி உணர்வு சொல்வதை, தம் கும்பல் சொல்வதைச் செய்யும் ஏவல் பணியாளர்களாகவே இருந்தவர்கள். பரிதாபத்துக்குரியவர்கள். அல்லது தம் கோபத்தை காற்றில் கலந்து விடும் பேச்சுக்களில் பாதுகாப்பாகச் சொன்னவர்கள். தைரியமாக தம் கருத்தை என்றும் எப்போதும் முன் வைக்காதவர்கள். They want me to draw their chestnuts out of fire for them. இவர்கள் எட்ட இருந்து சுவைத்துச் சாப்பிட நான் நெருப்பில் என் கைகளைச் சுட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். சினிமா என்றால் என்ன என்று தெரியாத ஒருவரை விட்டு என்னைத் தாக்கித் திருப்திப்பட்டுக்கொள்ளும் மலிவான யுக்தியைக் கையாள்பவர் ஒருவர் தரமான சினிமா இதழ் நடத்துவதாகப் பெயர் பெற்ற ஒருவர். அவரது கட்சிக் கருத்து வெளிப்பாடும், மறைமுகமான சாதி உணர்வும் இப்படித்தான் வெளிப்படுகின்றன. பாராட்டு, திட்டு என்று இருவகைகளாகத் தான் புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறது இந்த தமிழ் எழுத்தாளர் சமூகம். இந்த இரண்டு வகைகளிலும் ஏதும் வாதமோ பார்வையோ இராது. இரண்டு வெற்று வார்த்தைகளே, தி.க.சி. வல்லிக்கண்ணன் ரகம். இதையெல்லாம் பற்றிக் கவலைப் படாமல் என் வழியில் நான் சொல்வதைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்.
ஆனால் ஆச்சரியம் தரும் வகையில், நான் தில்லிப் பத்திரிகைகளில் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் போதும், சாகித்ய அகாடமியில் சிலரிடமும், முற்றிலும் வேறு வகையான எதிர்கொள்ளலைப் பெற்றிருக்கிறேன். மாற்றுப் பார்வைகளை, கருத்துக்களை வரவேற்கும் மனோபாவத்தை எதிர்முனையில் இருந்தவர்களிடம் கண்டிருக்கிறேன். இது பற்றி வேறு இடங்களில் முன்னதாகவே பிரஸ்தாபித்திருக்கிறேன். அவசியம் இருந்தால் ஒழிய மறுமுறை திரும்பச் சொல்லவேண்டியதில்லை. சமீபத்தில் நிகழ்ந்த, நான் சொல்லாத சிலவற்றைச் சொல்லவேண்டும். எனக்கு மிகவும் மன நெகிழ்வைத் தந்தவை இவை.
எனக்கு 2003-ம் வருட இயல் விருது தரப்பட்டதற்குக் காரணமானவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. கனடா இலக்கியத் தோட்டத்துடன் சம்பந்தம் கொண்டிருந்த மகாலிங்கம் ஒருவர் தான் எனக்குப் பழக்கமான பெயர். பழக்கம் 30 வருடங்களுக்கும் நிகழ்ந்தது. 'பூரணி' இதழை எனக்கு வெ.சாமிநாத சர்மாவே நான் என்றெண்ணி அவர்) முகவரிக்கு அனுப்பி, தொடர்பு கொண்டு, க.கைசாசபதி பற்றி நடையில் எழுதிய 'மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்" என்ற நீண்ட கட்டுரையைத் திரும்பப் பிரசுரம் செய்வது பற்றி எனக்கு எழுதியது அவர். அவ்வளவே. பிறகு ஏதும் தொடர்பு இருந்ததில்லை. அதற்குப் பிறகு டோரண்டோவில் தான் அவரைப் பார்க்கிறேன். வேறு யாரையும் எனக்குத் தெரியாது. விருது அளிக்குமுன் பேசிய டோரண்டோ பல்கலைக் கழக பேராசிரியர், மைக்கேல் டான்னொலி, சொன்ன வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். " நான் பரிசு அளிக்கவேண்டும் என்றார்கள். அதற்கு முன் யார் இந்த வெங்கட் சாமிநாதன் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டாமா? என் மகனை கூகிளில் இவரைப்பற்றி ஏதும் கிடைக்கிறதா என்று பார்க்கச் சொன்னேன். "பாராட்டையோ, கண்டனங்களையோ பற்றிக் கவலைப்படாமல், தனக்குப் பட்டதை தைரியமாக முன் வைப்பவர்" என்று சொல்லியிருப்பதாகச் சொன்னான் என் மகன். "அட இது நம்மாளைய்யா" (Hey, here is my kind of man!) என்று நான் சந்தோஷப்பட்டேன்" என்றார். இந்த தேடலும், இந்த எதிர்வினையும் எத்தகைய கலாச்சாரம் அங்கு பேணப்படுகிறது என்பதைச் சொல்கிறது, என்று நான் சந்தோஷப்பட்டேன்.
ஒரு நாள் திடீரென்று தொலைபேசி அழைப்பு வந்தது. பாண்டிச்சேரி களம் அமைப்பினர், நாடகத் துறையைச் சேர்ந்த இளைஞர்கள், எனக்கு நவீன நாடக சிற்பி என விருது அளிக்கவிருப்பதாகச் சொல்லி பாண்டிச்சேரி அழைத்தனர். ஒரு பெரிய குழுவான அவர்களில் யாரையும் எனக்குத் தெரியாது. என்னோடு விருது பெறுபவர்கள் கலை ராணியும், ராஜூவும். அவர்கள் சரி. நான் எங்கு இங்கு வந்து சேர்ந்தேன்? ஒரு சிலவைத் தவிர நவீன நாடகம் என்பது தமிழில் வெறும் கேலிக்கூத்து, பந்தா பண்ணும் விவகாரம் என்றெல்லவா நான் சொல்லி வந்திருக்கிறேன். அப்படியிருக்க......தஞ்சையிலிருந்து ராமானுஜம் பேசினார்: "அவர்கள் உற்சாகம் மிகுந்த இளைஞர்கள். உங்களிடம் மரியாதை உண்டு. நானும் வருகிறேன். மறுக்காதீர்கள்" என்றார்.
பாண்டிச்சேரி போனால் அவர்கள் என்னை பாண்டிச் சேரியில் கருத்தரங்கில், நாடக விழாக்களில் பார்த்திருப்பதாகவும் பேசியிருப்பதாகவும் சொன்னார்கள். எனக்கு நினைவில் இல்லை. களம் இளைஞர்கள் ஒரு பெரிய கூட்டம். விழாவுக்குச் சென்றபோது அங்கு முன் வந்து என்னை மிக ஆர்வத்துடன் முக மலர்ச்சியுடன் வரவேற்றவர் எனக்கு அறிமுகமில்லாதவர். மேடையில் என் பக்கத்திலிருந்த ராஜுவிடம் "அதோ அவர் யார்? " என்று கேட்டதற்கு ராஜூ, "அவர் தான் வினோத், அவருடைய மாக்பெத் நாடகத்தைப் பற்றி நீங்கள் எழுதியிருக்கிறீர்கள், மிகக் கடுமையாகத் தாக்கி" என்றார். திகைப்பும் ஆச்சரியமும் எனக்கு. கீழே பார்வையாளரின் முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கும் வினொத், அவரைப் பற்றித்தான் பேசுகிறோம் என்று யூகித்து, சிரித்துக்கொண்டிருக்கிறார். டெல்லி தேசீய நாடக மன்றம் நடத்திய நாடக விழாவில், மிக மோசமான மாக்பெத் ஒன்று பார்த்ததும், அதை, " ஷேக்ஸ்பியரை இவ்வளவு மோசமாக உலகில் வேறு யாரும் தயாரித்து இருக்கமுடியும் என்று தோன்றவில்லை" என்றோ என்னவோ எழுதியிருந்தேன். அகில இந்திய மேடையில் தமிழ் நாட்டிலிருந்து வந்த நாடகத்தை இப்படி தாக்கி எழுதப்பட்டிருந்தால், அந்த இயக்குனர் அதை சந்தோஷத்துடன் வரவேற்றா இருக்கமுடியும்? வினோதின் முகத்தில் எந்த கசப்பையும் காணோம். "என்னிடம் உங்களுக்குக் கோபமே இல்லையா?" என்று கேட்டேன். "உங்களுக்குப் பட்டதை எழுதியிருக்கிறீர்கள்? அதற்கு நான் கோபிப்பானேன்?" என்றோ என்னவோ சொன்னார். எனக்கு விருது கொடுத்த களம் குழுவில் அவர் ஒரு உறுப்பினர். அவர் எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. மாறாக என்னிடம் மிகுந்த நட்புணர்வுடன் பழகினார். சென்னை வரை காரில் அவரும் நானும் பேசிக்கொண்டே வந்தோம்.
அது போலத்தான் கருஞ்சுழி ஆறுமுகமும். அவரது கருஞ்சுழி நாடகத்தை தில்லியில் பார்த்து, வட இந்திய பத்திரிகைகள் அதற்கு உரிய மரியாதை கொடுக்காதது கண்டு, நான் அது பற்றி Indian Express- ல் ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அது அவருக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கிறது. கருஞ்சுழி ஆறுமுகம் என்றே அவர் அறியப்படும் அளவுக்கு அது இந்தியா வெங்கும், உலகமெங்கும் எடுத்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு அவரது எந்த நாடகமும் எனக்குப் பிடித்ததில்லை. இருப்பினும் அவருக்கு ஏமாற்றம் இருந்ததே ஒழிய, என்னிடம் அவர் பகைமை பாராட்டியது இல்லை. ஆனால் அவரது நாடகங்கள், தயாரிப்புகள் எல்லாவற்றைப் பற்றியும் உயர்ந்த அபிப்ராயம் கொண்டவர். "உங்களுக்கு சில விஷயங்கள் புரிவதில்லை" என்பது தான் சிரித்துக் கொண்டே அவர் சொல்லும் பதில். நான் அவரைப் பாராட்டதற்காக, "அயோக்கியன்" என்று கூச்சலிட்டதில்லை.
கலா ராணி விருது பெற்றவர், சந்திரா, நான் கடுமையாக நிராகரித்த பல நாடகங்களில் மையப் பாத்திரமாக நடித்தவர், இவர்கள் பங்குபெற்ற எந்த நாடகத்தையும் பாராட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில்லை. ஆனால், இவர்கள் திறமையில் எனக்கு நிரம்ப நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையை இவர்கள் பங்கேற்பு எனக்குத் தந்ததுண்டு. இவர்கள் என்னிடம் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர்கள். நான் பாராட்டவில்லையே என்று இவர்கள் என்னிடம் பகைமை கொண்டதில்லை.
நவீன நாடகச் சிற்பி விருது, எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்த ஒன்று. அதன் பெயர் என்னவாக இருந்தாலும். 'சிற்பி' என்ற பெயரில் தான், ஏதோ கழகக் கலாச்சார வாடை வீசுவதாகப் படுகிறது. அது இப்போது தமிழ்க் கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. அனேகமாக, நாம் ஒவ்வொருவருமே ஒரு சில வருடங்களில், எதெதற்கோ மன்னர்கள், சிற்பிகள், அரசுகள், ஞாயிறுகள், சுடர்கள், மேதைகளாகிவிடுவோமோ என்று தோன்றுகிறது. போகட்டும். வீட்டுக்கு வந்து கதவைத் தட்டி தரப்பட்ட விருது இது. இது தான் தமிழ்க் கலாச்சாரத்திற்கு விரோதமான செயல். பெறுவற்கு மிக உழைத்துப் பெற்ற விருது அல்ல. உரிய விலை கொடுத்தும் பெற்றதல்ல. சிபாரிசுகள் தந்ததும் அல்ல. எத்தனை பேர் இப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்? ஆக, என் வழியில் நான் இருந்துவிட்டுப் போகிறேன், மிச்சமிருக்கும் கொஞ்ச காலத்துக்கும்.
கௌரவிக்கத் தரப்பட்ட இந்த விருது பல தரப்பட்ட தோற்றங்களைத் தரும் ஒரு வெண்கலச் சிலையாக, வந்து சேர்ந்துள்ளது. ரொம்ப கனமானது. ஒன்றரை அடி உயரம், ஐந்து கிலோ எடையும் கொண்டது, பீடத்தையும் சேர்த்து. பிரியமான இதை வைக்கும் இடம் தான் தெரியவில்லை.
வெங்கட் சாமிநாதன்/5.9.06