Thursday, May 10, 2012












திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்

நூறாண்டு விழா கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார் இன்றைய திராவிட இயக்க கட்சிகளில் ஒன்றின் தலைவர். இககட்சிகளில் பிரதானமானதும், திராவிட என்ற பெயருக்கு உரிமை கோரும்  கட்சிகளில்  மூத்ததுக்கு , முக்கிய  வாரிசாக தன்னைக் காண்பவரும், தமிழ் நாடும் அவ்வாறே அங்கீகரிக்கும் அதிர்ஷ்டம் பெற்றவரும் அவர் தான். இப்படியெல்லாம் சொல்வதற்குக் காரணம் அவரது சிந்தனைகளோ செயல்களோ இவற்றோடு உறவு கொள்ளாதவை. சொல்லப் போனால், திராவிட என்னும் அடை மொழிதான் தொடர்ந்து வருகின்றதே அல்லாது, தொடக்கம் முதலே இதன் வரலாற்றில் இந்த அடைமொழி களுக்கெல்லாம் ஏதும் அர்த்தம் இருந்ததில்லை. இவை எதுவும் தமிழ் நாட்டைப் பற்றியோ தமிழ் மக்களைப் பற்றியோ சிந்தித்தவை இல்லை. ஆரம்பத்திலிருந்தே இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் நோக்கங்கள் ஒன்றாகவும் ஆனால் முன் வைத்த கொள்கைகளும் கோஷங்களும் பிறிதாகவுமே இருந்து வந்துள்ளன

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று பெத்த பேருடன் தொடங்கப்பட்டது இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வெள்ளையர்களுக்கு அடிமைச்சேவகம் புரிந்த பட்டு வேஷ்டி ஜரிகைத் தலைப்பாகை முதலியார்கள், ரெட்டியார்கள், செட்டியார்கள், நாயர்கள் எல்லாம் அவர்கள் கால பிராமணர்களைக் கண்டு வளர்த்துக்கொண்டிருந்த பதவிப் போட்டியாலும் பொறாமையாலும்  விளைந்தது தான். பதவிப் போட்டியும் பொறாமையும் தான் இன்று வரை ஒரு நூற்றாண்டு காலமாக நீடித்து வருகிறது. கொளுந்து விட்டெறியும் இந்த ஆசை தான் வன்னியர்களுக்கு என்றும் மூவேந்தர்களுக்கு என்றும், இன்னும் எத்தனை ஜாதிகள் உண்டோ அவ்வளவுக்கும் அவரவர் பங்கு பெற கட்சிகள். இங்கு முளைத்துள்ளன. அவர்கள் உரத்துச் சொல்லும் கொள்கைப் பிரகடனங்கள் என்னவாக இருந்தாலும் அவரவர் ஜாதி மீறிய சிந்தனைகள் ஏதும் அவற்றுக்குக் கிடையாது. தம் ஜாதி, பதவி, இவை சார்ந்த பிற சொந்த நலன்கள். இப்படித் தொடங்கியது தான் நூறாண்டு வரலாறு படைத்துள்ளது. அதைத்தான் “நூறாண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் “பார்ப்பனர் நடு நடுங்க “ என்று நினைவு படுத்துகிறார் இன்றைய தலைவர். அவர் தம் திராவிட இயக்க சிந்தனைகளைப் பெற்றது, பனகல் மகாராஜா பற்றிய பள்ளிப் பாடத்திலிருந்து என்று சொல்கிறார். அவரது பார்ப்பன துவேஷத்துக்கு அவரது நெஞ்சுக்கு நீதியில் காரணம் தேடினால் கிடைக்காது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் அன்றைய நாயர்கள் பனகல் ராஜாக்கள், ரெட்டியார்களுக்கும் சரி அவர்களது இன்றைய வாரிசுகளுக்கும் சரி திராவிட என்றால் என்னவென்று தெரியாது. நமது தந்தை பெரியார் கன்னடக்காரர் தான் என்றாலும் காவிரி நீர் ஒரு சொட்டுக் கூடக் கிடைக்காது.  நமது கலைஞர், வை கோ, விஜய காந்த், நேரு எல்லாம் தெலுங்கர்கள் தான் என்றாலும் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது நிற்காது. டி.எம். நாயரை நாங்கள் நினைவு கொண்டுள்ளோம் நீங்கள் மறந்தாலும் ,எங்கள் இயக்க பிதாமகர் அவர், என்று என்ன கூச்சலிட்டாலும் முல்லைப் பெரியார் தகராறு தொடரும். காரணம் திராவிட பிரக்ஞை அவர்களுக்கு இருந்ததில்லை நமக்கும் இல்லை. நமது சிந்தனைகள் ஒரு பக்கம் பிராமண துவேஷம் மறுபக்கம் சுயஜாதி வெறி. மற்றது பதவி வேட்டை. சுயநலம். இதற்கெல்லாம் மேலாக, சமீபத்தில் சேர்ந்து கொண்டது அவரவர் குடும்ப நலம். குடும்ப நலமே கட்சி நலமும். கட்சி ஒரு குடும்பம்..அதுவே திராவிட நலனாகக் கோஷமிடப்படும்.  

மற்றதெல்லாம், நாத்திகம், பகுத்தறிவு, வடவர் ஆதிக்கம், தமிழ்ப்பற்று, ஈழத்தமிழர் போராட்டம், இத்யாதி எல்லாம் இப்பயணத்தில் அவ்வப்போது அவசியத்துக்கு சேர்த்துக் கொண்டவை,. பெரியாரின் நாத்திகம் இந்த வகையினது தான்
எதுவும் முக்கியமில்லை. பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ரா பெரியாருக்கு தமது 45வது வயது வரை ஜாதி பற்றிய சிந்த்னையோ பீராமண துவேஷமோ நாத்திக சிந்தனைகளோ இருந்ததில்லை. 1925-குடியரசு பத்திரிகை தொடங்கிய போது’ அவர் ஒரு மடாதிபது சுவாமிகளை ஆசீர்வதிக்கும் படி வேண்டி பின் வருமாறு தலையங்கள் எழுதுகிறார், வெகு சீக்கிரம் பகுத்தறிவுப் பகலவன் ஆக இருப்பவர்.

”இப்பத்திரிகாலயத்தைத் திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ ஸ்வாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும் சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலை பெற, மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்”.

பகுதறிவுப் பகலவன் ஆகப் போகும் ஈ.வே.ராமசாமி நாயக்கர்  வேண்டிக்கொண்டது திருப்பாதிரிபுலியூர் ஞானியார் மடம் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞான சிவாசாரியார் சுவாமிகளை.

இன்னொரு முகம் வெகுசீக்கிரம் பிராமண துவேஷியாக அவரதாரம் எடுக்க இருப்பவர் எழுதியது. இதுவும் அவரது குடியரசு பத்திரிகை யிலிருந்து தான். .

”பார்ப்பன எதிர்ப்பே தன் முழுமுதற் கொள்கையாகக் கொண்ட நீதிக்கட்சித் தலைவர் ஸர். பிட்டி தியாகராஜ செட்டியார் இறந்த போது ஈ.வே.ரா. இரங்கல் எழுதுகிறார்:

“…”.என்னே மனிதர் தம் வாழ்நாளின் நிலை. அரசியல் உலகில் எனக்கும் அப்பெரியாருக்கும் உள்ள வேற்றுமை வடதுருவம் தென் துருவம் எனின் குன்றக் கூறுதலேயாகும். … நமது தமிழ்நாட்டுத் தவப் பேற்றின் குறைவினால் பார்ப்பனரல்லாதார் கூட்டம் ஒன்று கண்டார். அத்தகைய கூட்டம் ஒன்று காணாது காங்கிரஸ் வழி நின்று தேசத் தொண்டாற்ற வந்திருப்பாராயின் நமது நாட்டின் நிலைமை இன்று வேறுவிதமாகத் தோன்றும் என்பது எனது கொள்கை”.. .

கோவை அய்யாமுத்து தன் :எனது நினைவுகளில் எழுதுகிறார்: “வைக்கத்துப் போர்க்காலத்தில், நாயக்கரும் நானும் திருவிதாங்கூர் முழுதும் பயணம் செய்தோம். நாயக்கர் கையில் எப்போதும் பாரதியாரின் பாட்டுப் புத்தகம் இருக்கும். மோட்டாரில் போய்க்கொண்டே வந்தேமாதரம், வாழ்க செந்தமிழ், மறவன் பாட்டு முரசுப் பாட்டு ஆகியவைகளை உரத்துப் பாடுவார்”
.
குடியரசு தொடங்கப்பட்ட முதல் சில இதழ்களில் முதல் பக்கத்தில் பாரதியார் கவிதை ஒன்று இடம்பெற்றிருந்தது.
இரண்டு மூன்று இதழ்களுக்குப் பிறகு பாரதிக்கு அங்கு  இடமிருக்கவில்லை. ஏனெனில் அவர் பார்ப்பனர் என்று     பகுத்தறிவுப் பகலவனுக்குத் தெரிந்து விட்டது. இந்த மாற்றம், நாத்திகமும், சாதி எதிர்ப்பு என்று லேபிள் தாங்கிய பிராமண துவேஷமும் எப்படி ஒரு மனிதனின் மனத்தில் திடீரென்று இடம்பெறும்? காங்கிரஸிலிருந்து விலகியதும் இது எல்லாம் அவரை ஒரு package deal – ஆக வந்தடைகின்றன. கட்சி மாறுவதற்குக்கூட வருஷக் கணக்கில் மாதக்கணக்கில் ஆகும். ஆனால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் திடீரென்று பகுத்தறிவுப் பகலவனாக, தந்தை பெரியாராக ஆகிவிடுகிறார். புராணங்களில்  சொல்லப்படும் வரமோ சாபமோ தான் இதைச் சாதிக்கும்

இத்தகைய மனமாற்றம், சிந்தனை மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அவரும் சொன்னதில்லை. யாரும் அவரைக் கேட்டதும் இல்லை. ஆனால் அவர் இப்புதிய சிந்தனை பற்றிப் பேசும் போதும் எழுதும்போதும் அது மிக பாமரத்தனமானதாகவும், அவ்வப்போதைய தேவைக்கு ஏற்றதாகவும் இருக்கும். “ராஜாஜி என் நண்பர் தான். ஆனால் அவர் பார்ப்பான். அவர் சிந்தனைகள் பார்ப்பனருக்குச் சாதகமானதாகத் தானே இருக்கும்?” என்று சொல்லும் அவர் தனது சிந்தனையும் நாயக்கர் சாதிக்கு மாத்திரம் தானே சாதகமாகத்தானே இருக்கும்,? அப்படித்தானே எல்லோருக்கும் அவரவர் சாதிக்கு சாதகமாக இருக்கும்  தனது மாத்திரம் எப்படி திராவிட இனம் முழுதுக்குமாக இருக்கக் கூடும்? என்று அவர் யோசித்ததாகவோ, அதற்கு பதில் கண்டதாகவோ செய்தி இல்லை. சாட்சியம் இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் தன் கட்சியையும் சொத்துக்களையும் தனக்கு நம்பிக்கை தருபவரிடம் ஒப்படைக்கிறேன் என்று தனக்கு சேவை செய்து வந்த 26 வயதுப் பெண் மணியம்மையை மணம் செய்துகொள்கிறார். அண்ணாவிலிருந்து தொடங்கி கடைசித் தொண்டன் வரை யாரிடமும் அவருக்கு நம்பிக்கை இல்லை. அவர் யோசனை கேட்டது ராஜாஜியிடம். அப்போது பார்ப்பனருக்கு சாதகமான முடிவைச் சொல்வாரே என்ற சந்தேகம் அவருக்குத் தோன்றவில்லை. ஆக, தந்தை பெரியார், பகுத்தறிவுப் பகலவன் சிந்தனையும் பேச்சும் எந்த ஒரு வகைக்கும் உட்படாத அவ்வப்போதைய தன் மனப் போக்குக்கும் சுய நலனுக்கும் ஏற்பத் தான் இருக்கும். என்பது நமக்குத் தான் தெளிவாகிறது. அவர் சொன்னது கிடையாது. கழகக் கண்மணிகளும் கேட்டது கிடையாது..

அவரது எல்லா சிந்தனைகளும் இந்த ரக வெளிப்பாடாகவே இருந்துள்ளன. “சரஸ்வதி நாக்கில் உறைபவள் என்று சொல்கிறார்கள். அப்படியானால் அவள் மலஜலம் எங்கு கழிப்பாள்.? என்பது பகுத்தறிவுப் பகலவனின் கேள்வி.  இந்த ரகத்தில் தான் அவரது சிந்தனைகள் எல்லாமே இருந்துள்ளன. புராணங்கள் இதிகாசங்கள் எல்லாம் அறிவுக்கொவ்வாதவை என்று சொல்லும்போது அவர் சிலப்பதிகாரம் திருக்குறள் போன்ற திராவிட இயக்கத்தவர் தம் தமிழ்ப்பற்றில் போற்றிக் கொண்டாடுவதை எல்லாம் அவர் உதறி எறிந்துள்ளார்.

“தமிழ்ப் பண்டிதர்கள் என்பவர்களின் யோக்கியதையை நான் பார்த்த பிறகு மக்களை அறிவுக்காகத் தமிழைப் படி என்று சொல்வது மீக மோசமான காரியம் என்றே படுகிறது”

இது குடியரசு பத்திரிகையில் தந்தை பெரியாரின் அருளுரை. 

ஆனால் தந்தை பெரியாரின் இந்தமாதிரியான கருத்துக்களையும் சரி, தமிழ் ஒரு காட்டு மிராண்டி பாஷை என்று திரும்பத் திருப சொன்னதையும் தமிழ் மொழியை வடமொழி ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றியதாகவும் தமிழ் மொழிதான் தம் மூச்சு என்று சொல்லுபவர்கள் எவரும், தாய்மொழியை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன் என்று சூலுரைத்த பாரதி தாசனும் ஈ.வே ராவை எதிர்த்து முணுமுணுத்ததாகக் கூட செய்தி இல்லை. திராவிடத்தந்தை தமிழ் ஒரு காட்டு மிராண்டி மொழி என்றவர். சிலப்பதிகாரமும் திருக்குறளும் மூட நம்பிக்கையை வளர்ப்பவை. என்று சொன்ன திராவிட தந்தைக்கு என்ன பதில் சொன்னார்கள்?

கருணாநிதி காலையில் குளிக்கச் சென்றால் கூட திராவிடத் தந்தைக்கு பொறுப்பதில்லை. ”ஏன்யா அவன் என்ன இங்கே வேலைசெய்ய வந்தானா, இல்லை குளிக்க வந்தானாய்யா? என்று கடிந்து கொள்வார் பெரியாரும் அண்ணாவும் தமக்கு வழி காட்டியவர்கள்  என்று அடிக்கடி சொல்லி தம் சிஷ்ய பெருமையை காட்டிக்கொள்ளும் கலைஞர் அவர்கள். வேறு யாரும் சொல்லியிருந்தால் முரசொலியில் கவிதை, தலையங்கம், அல்லது உடன்பிறப்புக்கு கடிதம் எழுதி தந்தை வழி நடக்கச் சொல்வாரா தெரியவில்லை.   

காரணம் என்ன? ஏன் இந்த மௌனம்? எது இவர்களை யெல்லாம் ஒன்று சேர்த்தது?. தமிழ் காட்டு மிராண்டி பாஷை என்றும் சிலப்பதிகாரமும் திருக்குறளும் மூட நம்பிக்கையை வளர்ப்பது என்றும் சொன்ன பெரியார் எப்படி தந்தை பெரியார், பகுத்தறிவுப் பகலவன் ஆனார்? அன்றிலிருந்து இன்று வரை திராவிட கட்சிகள் அனைத்திலும், ஏன் தத்தம் சாதி நலனுக்கு என்றே கட்சிகள் தொடங்கிய அனைத்துமே இதே திராவிட இயக்க சிந்தனையின் பாரம்பரியத்தில், கலாசாரத்தில் வந்தன தான். அவை அனைத்தும் தம் சாதி நலன், பதவி வேட்டை, பணத்தாசை இந்த மூன்றின் அடித்தளத்தில் இருப்பது ”பிராமணனை ஒதுக்கி வை” என்னும் மூல மந்திரம் தான்.. இதை நாகரீகமாக ”நாங்கள் வெறுப்பது பிராமணீயத்தை, பிராமணனை அல்ல,” என்று சொல். கவுண்டரீயம், நாயக்கரீயம் வன்னியரீயம் என்றெல்லாம் ஏதும் கிடையாது. பிராமணரை எல்லா தளத்திலிருந்தும் ஒதுக்க இன்னொரு முக்கிய காரணம் இவர்கள் எல்லாரையும் பீடித்துள்ள தாழ்வு மனப் பான்மை. இந்த தாழ்வு மனப்பான்மை தான் திராவிட இயக்கத்தின் ஒவ்வொரு தலைவருக்கும், ஒவ்வொரு சொட்டா மோட்டா நடிகருக்கும் பட்டங்கள் அள்ளிச் சொரிந்து அந்தப் பட்டங்களையே டமாரம் அடிப்பது. சினிமா வசனம் எழுதினால் கலைஞர். வாத்தியார் வேலை பார்த்திருந்தால், பேராசிரியர், எல்லாம் திலகம் தான் சிகரங்கள் தான். உலகத்தில் வேறு எங்கும் காணாத ஒரு அபத்த கலாசாரம்.  

தொடர்ந்து அன்றைய 1910=க்களின் தொடக்கத்திலிருந்து இன்று வரைய சரித்திரம் திராவிட இயக்கத்தவர்கள் யாரும், அதன் முந்தைய அவதாரங்களையும் சேர்த்து, இன்றைய அதன் கிளைகள் பிரிவுகளையும் சேர்த்து எவரும் ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டவர்கள் கிடையாது. அவரவர்க்கு சொந்த குடும்ப, ஜாதி நலன்கள். அவற்றுக்கு அலங்காரமான  வெளியில் சொல்லத்தக்க ஒரு கொள்கை லேபிள். வடவர் ஆதிக்கம் என்று ஆரம்பித்தது, இன்று அன்னை சோனியா காந்தி சொக்கத் தங்கமாக காட்சி தருகிறது. விதவை மறு வாழ்வுத் திட்டத்துக்கு மனுச் செய்து கொள்ளலாம் என்று ஆலோசனை தரப்பட்ட இந்திரா காந்தி பின்னர் “நேருவின் மகளே, நிலையான ஆட்சி தருக” என்று வேண்டப்பட்டார். ஏன்யா தேர்தலுக்கு உஙகள் அணியில் சேர்ந்தவர்கள் எல்லாம் சாதிகட்சிகளாகவே இருக்கிறார்கள் என்று கேட்டால், சாதிகளையெல்லாம் இணக்கமாக ஒன்று சேர்த்து விட்டால் சாதியே ஒழிந்து போகுமே அதற்காக என்று பதில் சொல்லப்பட்டது. மதவாதக் கட்சி என்று வசைபாடிய பா.ஜ.காஅணியில் சேர்ந்திருந்தீர்களே என்றால், அதன் மதவாதத்தை கட்டுப்பாட்டில் வைப்பதற்காகச் சேர்ந்தோம் என்று பதில் தரப்படுகிறது. இதெல்லாம் பெரியார், அண்ணா காட்டியவழியில் சாதியை ஒழிக்கப் பிறந்த கட்சியின் தலைவர் அருளிய வாசகங்கள். ஹிந்தி அரக்கியை ஒழிக்கப்போராடிய கட்சியின் தலைவர் தன் மருமகனுக்கு ஹிந்தி நன்கு தெரியும் என்று மந்திரி பதவிக்கு சிபாரிசு செய்கிறார். ’என் குடும்பத்தில் எவருக்காவது பதவி தேடினால் என்னைச்செருப்பால் அடியுங்கள்,’ என்ற வன்னியர் கட்சித் தலைவர் தன் மகனுக்கு ராஜ்ய சபா சீட் ஏந்தக் கட்சி தரும் என்று தேடி அணி சேர்கிறார். தன் மகனை மந்திரியாக்கி அழகு பார்க்கவேண்டும். என்ற அவர் ஆசையும் தீர்கிறது.

ஹிந்தி அரக்கியை விரட்டி தமிழுக்காகவே போராடிய இயக்கம் ஆண்ட 50 வருட கால ஆட்சியில் தமிழ் படிக்காமலேயே கல்லூரி வரை ஒருவர் கல்வி பெறமுடிகிறது தமிழ் நாட்டில். எந்தத் தொலைக் காட்சியிலும் தமிழ் பேசுகிறவர்கள் அரிதாகிக் கொண்டுவருகின்றனர். ஆங்கிலம் பேசுவது நாகரீகமாகக் கருதப்படுகிறது. முத்தமிழ்க் காவலர் குடும்பத்து SUN, KTV, SUN Music, SUN News என எதிலும் தமிழ் பேசுபவர்கள் கிடைப்பதில்லை.
அறுபது வருட கால திராவிட ஆட்சிக்குப் பிறகு, குழந்தைக்கு தமிழ்ப் பெயர் வைக்க மோதிரம் தரப்படும் என்று ஆசை காட்ட வேண்டியிருக்கிறது. தமிழ்த் திரைப்படத்திற்கு தமிழ்ப் பெயர் வைத்தால் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அரசு ஆனை பிறக்கிறது.  ஏன்? தம் குடும்பத்திலேயே கூட உதய நிதி, கலாநிதி, தயாநிதி என்று தான் பெயர்கள். அது போகட்டும். அவர்களுக்கு தங்க மோதிரம் வேண்டாம். தமிழ்ப் பற்றும் வேண்டாம். வேறென்ன வேண்டும்? பின் ஏன் எல்லா பெயர்களும் நிதி என்றே முடிகின்றன? இருப்பினும் கோஷம் என்னவோ பொறியியல், மருத்துவம், வானசாஸ்திரம் எல்லாம் தமிழில் போதிக்கப்படவேண்டும் என்று எல்லாக் கட்சிகளிலிருந்தும் வருகிண்றன பலத்து.

வடவர் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய கட்சி, இன்று தமிழ் நாட்டின் இயற்கை. வளங்கள் அத்தனையும் சுரண்டியாகிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மழை நீர் தேக்கி, வளம் தந்த ஏரிகள் தூர்த்தப்பட்டு வீட்டு மனைகளாகின்றன. விளை நிலங்கள் எல்லாம் தொழிற்சாலைகள் வசமாகின்றன. கேட்டால் தொழில் வளம் என்று கோஷமிடுகிறார்கள்.  நிலத்தடி நீர் எங்கோ அதளபாதாளத்துக்கு போகிறது. அண்டை மாநில திராவிடர்களோ 1971-லிருந்து எந்த ஆற்று நீரையும் பகிர்ந்து கொள்ளத் தயாராயில்லை. எல்லாவற்றிலும் திராவிடத் தலைமையோ விட்டுக்கொடுத்துக்கொண்டேயிருக்கின்றன. காரணம் என்ன வென்று தெரியவில்லை. கர்நாடகாவிலிருக்கும் தன் சொத்துக்களுக்கு ஆபத்து என்ற பயமோ? சுமுகமாகப் பேசித் தான் பிரசினைகளைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லப் படுகிறது. பிராமண துவேஷம் சாதி ஒழிப்பு என்று பெயர் பெறுவது போல, பேசித் தீர்த்துக்கொள்வது என்ற சொல் எதை மறைக்க என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஆற்று மணலை அள்ள ஒவ்வொரு குத்தகை விடப்படுகிறது. ஆற்று மணல் நூற்றுக்கணக்கான லாரிகளில் தினம் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இது நாட்டின் சொத்து. கவலையில்லைல் அரசியல்வாதிகளுக்கும் குத்தகை தாரருக்கும். ஒரு முறை ஆற்று மனல் முழுதுமாக அள்ளப்பட்டு விட்டால் தமிழ் நாடு இனி சகாரா பாலை வனம் தான். வேறு எந்த மாநிலமும்  தன் நில வளத்தை, கனிம வளத்தைச் இப்படிச் சுரண்ட விடுவதைல்லை

.திராவிட இனம், தமிழ் பற்று என்று 60-70 வருடங்களாக உரத்த கோஷம் இட்டவர்கள் தான் தமிழ் நாட்டை மீளமுடியாத ஒரு அழிவுக்கு இழுத்துச் செல்கிறார்கள். இது வரும் தலைமுறை தமிழ் மக்களை கூண்டோடு அழிப்பதற்கு ஒப்பாகும்.

சாதி ஒழிப்பு என்பது பிராமணர்களைக் கண்ட துவேஷம், சுய ஜாதிப் பற்று என்பது, திராவிட ஆட்சி ஏற்பட்ட 1967 – லிருந்தே எத்தனை ஜாதிக் கலவரங்கள் படு கொலைகள், கீழவெண்மணியிலிருந்து நேற்றைய உத்தபுரம் வரை நிகழ்ந்துள்ளன. பட்டியலிட்டு சாத்தியமில்லை. ஆனால் இவைஎல்லாம் திராவிட கட்சிகளின் பாஷையில் திராவிடர்களே ஒருவருக்கொருவர் தம் ஜாதி வெறியினால் நிகழ்ந்தவை, உயிரோடு தீவைத்துக் கொளுத்தியது வரை. இதற்கு என்ன அர்த்தம்? எந்த திராவிடகட்சியாவது வாய்திறந்து தன் பகுத்தறிவுப் புலனாயவு செய்ததா? அல்லது தன் கொள்கைகளைத் தான் புணர் ஆய்வு செய்ததா? பறையர்களே பள்ளர்களை சமமாக ஏற்பதில்லையே. திருமாவளவனும் டா. கிருஷ்ணசாமியுமே ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசுவதில்லையே? எந்த பார்ப்பனர் இந்த சுய வெறுப்பை விளைவித்தார்? எத்தனை மொக்கையான, அர்த்தமற்ற அபத்தமும் பொய்யுமான சாதிக் கொள்கை இவர்களது? கம்யூனிஸ்ட் கட்சிகள் தான் இவற்றில் தலையிட்டு சமரசத்துக்கும் அமைதிக்கும் வழி தேடுகின்ற்ன. அவர்கள் எத்தரப்பு சுயஜாதி வெறியையும் கண்டனம் செய்வதில்லை. ஏன்?. அவர்களுக்கும் திராவிட கட்சிகள் போலவே ஜாதிவெறியின் முக்கியத்வம் தெரிகிறது. எல்லோருமே நாடகமாடுகிறவர்கள் தான். அவர்களின் கோஷங்கள் வெற்றுக் கோஷங்களே. ஒரு ஜாதியினரைக் கண்டித்தால் மற்ற ஜாதியினரின் ஓட்டை இழக்க நேருமே”

இவர்களில் எவருக்கும், திராவிட கழகங்கள் ஆகட்டும் மற்ற கட்சிகள் எதற்கும் சுய ஜாதி வெறி தான் ஆதாரமானது. அதை வைத்துத் தான் தேர்தலில் யார் போட்டியிடுவது என்பதும் கட்சிகளின் வெற்றி தோல்வியும்  தீர்மானிக்க[ப்படுகிறது. கல்வி, பதவி எல்லாவற்றுக்கும் ஜாதி சார்ந்து ஒதுக்கீடு. இதுவே ஜாதிகளை என்றென்றைக்குமாக நிரந்தமாக பாதுக்காக்கும் வழியுமாகிறது. ஜாதி என்பது எல்லாவற்றுக்குமான முதலீடு. அந்த முதலீட்டை யார் கைவிடுவார்கள்?

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஈழத் தமிழர்களுக்கு இவர்கள் உகுக்கும் கண்ணீரும், உதறுவதாகப் பயமுறுத்தும் மந்திரி பதவிகளும், டிவி காமிராக்களை வைத்துக்கொண்டு ஆடும் மூன்று மணிநேர உண்ணாவிரத நாடகங்களும், எல்லாமே திரைப்பட வசனங்கள் தாம். . இவர்களது தமிழ்பற்று போலத் தான். எத்தனை லக்ஷம் தமிழர்கள் முள்வேலிக்கம்பிச் சிறைகளில் அடைபட்டிருந்தாலும், ராஜபக்‌ஷேயிடம் தூது சென்று பரிமாறிக்கொண்ட புன்னகைக் காட்சிகள் பெற்று வந்த பரிசுகளும், குலுக்கிக்கொண்ட கைகளும் போதும் தமிழருக்கு நாம் அளித்த துரோகத்திற்கு சாட்சியம் தர.

இன்றைய மத்திய அரசுக்கு தமிழகத் தமிழரும் சரி, ஈழத் தமிழரும் சரி ஒரு பொருட்டே இல்லை. என்பதும் அதைவேடிக்கை பார்த்திருப்பது திராவிட கழகங்கள் மாத்திரமல்ல, காங்கிரஸ் கட்சியும் தான். அவ்வப்போது ஒரு கழகம் எதிர்க்குரல் எழுப்பினால், மற்றது மத்திய அரசுக்கு தன்னை மிகுந்த விசுவாசியாகக் காட்டிக்கொண்டு தன் எதிரிக்கழகத்தின் எதிர்ப்புக்க்குரலை மடியச் செய்யும். எத்தனை உதாரணங்கள் தேவை, காவிரி நீரா, சுனாமியா, தானே புயலா, ஈழத்தமிழர் மரண ஓலமா? எதையும் மத்திய அரசு காதில் விழாதது போல நாடகமாட எதிர் கழகம் துணை போகும்

கழகங்களின் கூச்சலும் பிரசார நாடகமேடை ரக வசனங்களும்
சிந்தனைக்கோ இலக்கியத்துக்கோ எந்த கலைக்குமோ வித்தாக முடியாது. எல்லாத் துறைகளிலும், பத்திரிகை, மேடைப் பேச்சு, இலக்கியம், சினிமா, நாடகம், இப்போது தொலைக்காட்சி எதையும் இவர்கள் விட்டு வைத்ததில்லை. இவற்றில் எல்லாம் சுமார் 60 – 70 வருட காலமாக திளைத்து உலப்பி வந்தாலும், எல்லாம் மலையெனக் குவித்திருந்தாலும், எவையும் உயிரற்றவை. உண்மையற்றவை. உரத்த கூச்சல் கலையாவதில்லை. பொய்மையும் கலையாவதில்லை. திராவிட இயககங்கள் இதுகாறும் படைத்த எதுவும் இலக்கியம் என்றோ கலையென்றோ சொல்லத் தக்கவை அல்ல. ஒரு அடிப்படையான காரணம், இவர்களிடம் உண்மையுமில்லை. கலை உணர்வும் இல்லை. கடந்த கால முற்போக்குக் காரர்கள் போலத்தான். கூச்சலும் பிரசாரமும் அரசியலுக்குப் பயன்படலாம். கலைக்கோ இலக்கியத்துக்கோ அல்ல. தலித் எழுத்தாளர்கள் இந்த விஷயத்தில் நேர்மையானவர்கள். சிறந்த எழுத்துக்கள் அவர்களிடமிருந்து பிறந்துள்ளன.ஏனெனில் அவர்கள் தம் அனுபவங்களைத் தான் எழுதுகிறார்கள்.

கிறித்துவ, முகம்மதிய மதத்தினரிடம் நாத்திகம் பேச பயப்படுபவர்களீடம், அவர்களிடம் காணும் ஜாதீய தீண்டாமையைப் பேசப் பயப்படுபவர்களிடம் என்ன நேர்மை இருக்கமுடியும்? கக்கூசைக் கழுவ என்றே ஒரு சாதி என்ற இழிநிலைக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்று சொன்ன தலித் தலைவரிடம், பெரியார் சொல்கிறார், “இதுக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்க. வேறே யார் செய்வாங்க?
பறச்சிகள்ளாம் ரவிக்கை போட ஆரம்பிச்சா துணிப்பஞ்சம் வந்துராதா என்றாராம் பெரியார். காமராசன் ஸ்விஸ் பாங்கில் பணம் சேர்த்து வைத்திருக்கிறார் என்றும் காமராசர் என்ற அழகனின் தோலை உரித்தால் இரண்டு டமாரம் செய்யலாம் என்றும் பேசும் தலைவர்களைக் கொண்டது, கண்ணியம் கட்டுப்பாடு, கடமை என்று கோஷமிடும் கழகம் ஒன்று. 67 தேர்தலில் பத்து லட்சம் பக்தவத்சலம் என்று கோஷமிட்ட தலைவர்களைப் பற்றி  இன்று பேசுவதானால் எததனை ஆயிரம் கோடி என்று சொல்லி கோஷமிடவேண்டும்? கண்ணியம் தான். இது கழகம் ப்ராண்ட் கண்ணியம். . 

. .  . . .  .
.  

1 comment:

T.N.Elangovan said...

மன்னிக்க வேண்டும். இந்த கருத்து உங்கள் blog siteல் உள்ள அந்த blogஐப் பற்றியதுமல்ல. உங்கள் blogs கறுப்பு பின் நிறத்தில் இருப்பதால் படிப்பது மிக சிரமமாக உணர்கிறேன். கண் மிகவும் வலிக்கிறது படிக்கும்போது. எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கிறதா எனத் தெரியவில்லை. இன்னும் சிலரிடம் கருத்து கேட்டு தேவையெனில் மாற்றம் செய்யவும்