நான் வெங்கட் சாமினாதன். வெசா என்று அழைப்பார்கள் என்னை. விமரிசனாகவும் அறியப்படுகிறேன்.
Tuesday, June 10, 2008
நினைவுகளின் தடங்கள் -(11)
முத்துசாமி ஐயர் அந்த வீட்டை விற்றுவிட்டு நிலக்கோட்டையை விட்டுப் போனதும் நாங்கள் அடுத்து இருந்த அவர் காலி செய்த வீட்டுக்கு மாறினோம். அதில் சில சௌகரியங்கள் இருந்தன. பின்னால் பெரிய தோட்டம். மேலே பெரிய மொட்டை மாடி. அதில் மூன்றில் ஒரு பங்கு கூரை வேய்ந்திருக்கும். முன்னிருந்த வீட்டில் திண்ணைக்கு மேலே தகரம் வேய்ந்திருந்தது. இந்த வீட்டிம் கூரைக்கு மங்களூர் ஓடு. அது சூட்டைக் கொஞ்சம் தணிக்கும் கடைசியாக பெரிய லாபம், அங்கு பின்னால் போரிங் பம்ப் இருந்தது. கோடை காலங்களில் அங்கு தண்ணீருக்கு பஞ்சம். குளம் வற்றி விடும். எங்கள் வீட்டுக்கும் குளத்துக்கும் இடையே இருந்த இடத்தில் ஒரு கிணறு இருந்தது. அந்தத் தெரு வாசிகளுக்கு பொதுவான கிணறு அது. குளத்தில் நீர் வற்றி விட்டால், கிணற்றிலும் தண்ணீர் வற்றி விடும். போரிங் பம்பிலும் தண்ணீர் வராது தான். அதுவும் வற்றி விடும். ஆனால் மற்ற நாட்களில் குடிக்கவும் சமையலுக்கும் மாத்திரம் கிணற்றிலிருந்து தண்ணீர் இழுத்து வந்தால் போதும். அதையும் பாட்டி தான் செய்வாள். அவளால் முடியாது. இருப்பினும் தன் ஆசாரத்தை விட்டுக் கொடுக்க இஷ்டம் இல்லை அவளுக்கு. கடும் கோடை காலங்களில் கிணற்றில் நீர் வெகு ஆழத்தில் ஒரு சிறு குட்டையாக சிறுத்து விடும். குடத்தை இறக்கி நீர் மொள்ள முடியாது. ஒரு செம்பைத் தான் தாம்பு கயிற்றில் இறக்கி நீர் மொள்ள வேண்டியிருக்கும். சில நாட்கள் காலை நாலு மணிக்கு எல்லோருக்கும் முன் எழுந்து கிணற்றில் ஊறியிருக்கும் நீரை எடுத்து வந்துவிடுவோம். ஒரு குடம் நிரம்பும். வீட்டில் இருக்கும் செம்பு, டபரா, டம்ளர் எல்லாத்திலேயும் நீர் நிரப்புவோம். நாங்கள் குளிக்க பேட்டைக் கிணறுக்கோ அல்லது சத்திரத்துக் கிணறு ஒன்று ஒரு ·பர்லாங்கு தூரத்தில் இருக்கும், அதற்கோ போவோம். நாங்கள் காலை நாலு மணிக்கே எழுந்து கிணற்றில் ஊறியிருந்த தண்ணீரை எடுத்து வந்துவிட்டோம் என்று பார்த்த மற்றவர்கள், மறு நாள் காலை மூன்றரை மணிக்கு எங்களுக்கு முன் எழுந்து கிணற்றுக்கு தண்ணீர் எடுக்கப் போய்விடுவார்கள். எங்களுக்குத் தண்ணீர் இராது. மாமா, நான், சின்ன மாமா எல்லோரும் ஆளுக்கு ஒரு குடத்தை எடுத்துக்கொண்டு சத்திரத்துக் கிணற்றுக்கு ஓடுவோம். அந்தக் கஷ்டத்தில் எல்லாம் பாட்டி ஒரு தடவை கூட தன் சுவாமிமலை நாட்களைச் சொல்லி இப்போதைய வாழ்க்கையைப் பழித்தது கிடையாது. தஞ்சை ஜில்லாவில் ஆற்றில் நீர் வந்து விட்டால், எந்த வீட்டுக் கிணற்றிலும் தண்ணீர் மட்டம் மேலெழுந்து விடும். ஐந்தடி அல்லது ஆறடி ஆழத்துக்கு மேல் தாம்புக் கயிறு கிணற்றுக்குள் இறங்க வேண்டியிராது. 'கைக்கு எட்டறாப்பலேன்னா இருக்கு" என்று சொல்லி சந்தோஷப்படுவார்கள். அதெல்லாம் இப்போது முற்றாக மாறிவிட்டது. தஞ்சை ஜில்லா உடையாளூரும் நிலக்கோட்டை ஆகிவிட்டது.
புதிதாகக் குடி மாறிய வீட்டில் மேலே இருந்த மொட்டை மாடி எங்களுக்குப் பிரியமான இடம். (அது ஒன்றும் தனியாகக் கட்டப்பட்ட வீடு இல்லை. ஒரே வீட்டின் குறுக்கே தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு இரண்டு வீடுகளாக ஆக்கப்பட்டிருந்தது). அந்த மொட்டை மாடி இப்போது எங்களுக்கே யானது. அந்த மொட்டை மாடியின் கூரை வேய்ந்திருந்த பாதி எங்களுக்கு அவ்வப்போது விளையாட்டிடமாகியது. அதில் என்னென்னவோ பழைய சாமான்கள் எல்லாம் ஒர் ஓரமாக அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். அது எங்களது இல்லை. முத்துசாமி ஐயர் காலி செய்யும் போது 'இதெல்லாம் என்னத்துக்கு" என்று விட்டு விட்டுச் சென்றவை. திறந்து கிடக்கும் மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் நாலா பக்கமும் விரிந்திருந்த நிலக்கோட்டையின் அந்தப் பகுதியைக் காணலாம். நிலக்கோட்டைக்கு பெயர் தந்த இடிந்த சுற்றுச் சுவர் கொண்ட கோட்டை அதன் நடுவில் தெரியும் உயர்ந்த ஜமீந்தார் மாளிகை. இன்னொரு பக்கம் பிள்ளையார் கோவில். அதை ஒட்டிய பேட்டை, அதன் சுற்றுச் சுவர். இன்னொரு பக்கம் குளம். பெரியகுளம்- மதுரை ரோடு. அணைப்பட்டி ரோடில் இருக்கும் சனிக்கிழமைச் சந்தை. பின் பஸ் ஸ்டாண்ட். டிவிஎஸ் பஸ் நிறுத்தப்பட்டிருக்கும் கொட்டகையை மறைத்து நிற்கும் கொடைக்கானல் மோட்டர் யூனியன் பஸ் ஒன்றின் முன் நின்று ஒரு கம்பியை நுழைத்து அதை பலமாகச் சுற்றினால்தான் என்சின் ஸ்டார்ட் ஆகும். கரி வண்டி தான் அந்நாட்களில். பெட்ரோல் கிடைப்பது அரிது. இதெல்லாம் மாடியிலிருந்து காணும் காட்சிகள். மாடியிலிருந்து கீழே இறங்கினால், மாமி கேட்பாள்: "மதுரை வண்டி கிளம்பி டுத்தாடா," என்று. மாடியிலிருந்தே பெரிய குளம், மதுரை போகும் எந்த வண்டி தயாராக இருக்கிறது, எது போய் விட்டது, மதுரை வண்டியானால், அது சோழவந்தான் போய் போகும் வண்டியா?, இல்லை, கொடைரோடு போய் போகும் வண்டியா? போன்ற உபரி தகவல்கள் எல்லாம் மாமிக்கு வேணும். மாமி மதுரை போகிறாள் என்றால், வண்டி வந்துவிட்டதா, கிளம்பப் போகிறதா என்ற விஷயங்களை மாமி எங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்கிறாள் என்றால் அது எனக்குப் பெருமையாக இருக்கும்.
அந்த மாடி கீற்றுக் கொட்டகையடியில் எனக்கு இன்னும் சில அதிசயங்கள் காத்திருந்தன. அவை பற்றிப் பின்னர். முத்துசாமி ஐயர் நிலக்கோட்டை விட்டுப் போய் ஓரிரண்டு வருஷங்கள் ஆனபிறகு தான் அவை பற்றி எங்களுக்குத் தெரிந்தது. ஒரு நாள் யதேச்சையாக அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தவற்றைக் குடைந்த போது சில புத்தகங்கள் கிடைத்தன. அவற்றைப் புரட்டியதில், அவற்றை நானும் படிக்கலாம் போலவும் தோன்றியது. எனக்கேற்ப எளிமையாக, சுவாரஸ்யமாக இருந்த புத்தகங்கள் அவை. அப்போது எனக்கு பதினொன்று அல்லது பன்னிரண்டு வயது இருக்கும். ஒன்று வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம். இரண்டாவது ஆர். கே.நாராயணனின் சுவாமியும் சினேகிதர்களும். அப்போது அவை எனக்கு சுவாரஸ்ய மான, வேடிக்கையான கதைகள். பின்னால் தான் இவை பெரிய தலைகள் எழுதியவை என்று தெரிந்து கொண்டேன். பிரதாப முதலியார் சரித்திரத்தில் சிரிப்பூட்டும் நிறைய உப கதைகள் இருந்தன. ஒன்று, "ஏண்டா பாவம் அந்த வாயில்லா ஜீவனை இப்படிப் போட்டு அடிக்கிறாய்,? என்று வழியில் போகிறவர் கேட்க, "அது என் மாடோ, கழுதையோ என்னது, நான் அடிப்பேன் இன்னும் என்னவெல்லாமோ செய்வேன். நீ யார் கேட்பதற்கு?" என்று பதில் வரும். கேட்டவருக்கு கோபம் வரும். மாட்டை அடித்தவனை இவர் ஒரு கழியால் நாலு சாத்து சாத்துவார். '"இது என் கழி. என் கை. இதை நான் என்ன வேணு மானாலும் செய்வேன். ?" என்று சொல்லித் தன் வழிச் செல்வார். சுவாமியும் சினேகிதர்களும் புத்தகத்தில், சுவாமிநாதன் தன் சினேகிதனை விளையாடக் கூப்பிடுவதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டுக்குப் போய் கூப்பிடுவான். இன்ஸ்பெக்டர் பையனுக்கு உடனே ஓடி சுவாமிநாதனோடு விளையாடப் போகணும் என்று ஆசை தான். ஆனாலும் தன் அப்பா தன் வீட்டுக்கு வருகிறவர்களைக் காக்க வைப்பது போல, தானும் செய்து பெரிய மனுஷனாக வேண்டும் என்று ஒரு ஆசை. கதவுக்கு பின்னால் மறைந்து நின்றுகொள்வான், நகைத்தைக் கடித்துக்கொண்டு. அப்படிக் காக்கவைக்க அவனுக்கே பொறுமை யிராது. நகத்தைக் கடித்துக் கொண்டு நிற்பான். அப்பா மாதிரி செய்யவேண்டுமே.
என் சின்ன மாமா, அவர் பெயரும் சுவாமிநாதன் தான். எங்கிருந்தோ கல்கி, ஆனந்த விகடன் எல்லாம் கொண்டு வருவார். வீட்டில் அதுவெல்லாம் வாங்குவது கிடையாது. கட்டி வராது. படிப்பது நானும் சின்ன மாமாவும் தான். இடையில் அம்பி வாத்தியார் வந்து சின்ன மாமாவிடம் என்ன பத்திரிகை இருக்கு? என்று கேட்டு அவரும் வாங்கிப் போவார். அவரும் வேறு இடத்திலிருந்து தான் வாங்கி வந்ததை சின்ன மாமாவுக்குக் கொடுப்பார். நான் இப்படி வருவதையெல்லாம் படித்து விடுவேன். அப்போது கல்கியில் பார்த்திபன் கனவு தொடராக வந்து கொண்டிருந்தது. சின்ன மாமாவும் அம்பி வாத்தியாரும் ரொம்ப சுவாரஸ்யமாக கல்கி கதையைப் பற்றிப் பேசிக்கொள்வார்கள். நான் அவர்களோடு சேரமுடியாது. சின்ன பையன். ஆனந்த விகடனில் எஸ்.வி.வி. எழுதிக்கொண்டிருந்தார். 'குருவிக்காரிச்சி' என்றோ என்னவோ ஒரு கதை இருந்தது. தலைப்பு தான் நினைவில் இருக்கிறது. கதை நினைவில் இருப்பது: ஒரு வயதான தம்பதிகள் சென்னை கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டிருக்கின்றனர். இருவருக்கிடையே ஒரு ஒட்டுதல். 'அந்த வயதில் ஒட்டுதலுக்கு என்ன காரணம்?', என்று கேட்டுக்கொண்டு, " இரண்டு பேரும் இவ்வளவு வருஷமாக ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்களே, பழகியிருக்கிறார்களே, அது போதாதா? ", என்றோ என்னவோ எஸ்.வி.வி இடையில் சொல்லிக்கொண்டிருப்பார். இப்படி நினைவுகள். இதெல்லாம் சரிதானா என்று சரிபார்க்கவோ திரும்ப படிக்கவோ நேர்ந்ததில்லை.
ஆனந்த விகடன் தீபாவளி மலர் ஒன்றில் மாலியின் கேலிச்சித்திரம் பக்கம் முழுதையும் அடைத்துக்கொண்டு பெரிதாக இருந்தது நினைவில் இருக்கிறது. ஒரு பெஞ்சில் பெரியவர் உட்கார்ந்து கொண்டு வெற்றிலை போட்டுக் கொண்டு இருப்பார். பக்கத்தில் அவர் மனைவி நின்று கொண்டிருப்பாள். ஒரு பிச்சைக்காரன் அவர் முன்னால் பாடுவான்: "ஈசனை சிவகாமி நேசனை, நினைந்து கொல்லுவாய் மனமே" என்று பாடுவான் என்று நினைக்கிறேன். அதற்கு பெஞ்சில் உட்கார்ந்திருப்பவர் அட்டகாசமாகச் சிரிப்பார். "அப்பா நீ நல்லாச் சொன்னே. முதல்லே அவனை கொன்னு போட்டியானா, அப்புறம் ஒரு வம்பிருக்காது பாத்துக்க" என்று சொல்லிக் கடகடவென்று சிரிப்பதாக இருக்கும் அந்த சித்திரம்.
நிலக்கோட்டையில் ஓடையைத் தாண்டினால் ஒரு பார்க் இருக்கும். அதில் ஒரு ரேடியோவும் ஒலிபெருக்கியும் இருந்தது. சாயந்திரம் அங்கு போனால் திருச்சி வானொலி யிலிருந்து வருவதையெல்லாம் கேட்கலாம். மாலை நேரம் மாத்திரம் தான். அத்தோடு அடுத்து அதை ஒட்டியிருந்த ஒரு வட்ட அறையில் பத்திரிகைகள் ஒரு மேஜையில் பரப்பியிருக்கும். என்ன பத்திரிகைகள் வரும் என்று எனக்கு நினைவில் இல்லை. அப்போதெல்லாம் தினசரி செய்திப் பத்திரிகைகள் படிக்கவேண்டுமென்று எனக்குத் தோன்றியதில்லை, ஆனால் வேறு என்னென்னவோ பத்திரிகைகள் எல்லாம் இருக்கும் அவற்றில் நிறைய படங்கள் இருக்கும். அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த காலம். அந்த பத்திரிகைகளில் ஒரே போட்டோக்களாக இருக்கும். சிப்பாய்கள், டாங்கிகள், ஏரோப்ளேன்கள் என்று. படங்களைப் பார்ப்பேன். வேறு ஒன்றும் படிக்க எனக்கு சுவாரஸ்யமாக எதுவும் இராது. ரேடியோவில் பாட்டு கேட்கலாம். ஒரு சமயம் தியாக ராஜ பாகவதரின் ரேடியோ நாடகம் ஒன்று ஒலிபரப்பாகியது. சில சமயங்களில் ஒரு குள்ள ஜப்பானியனின் சித்திரம் வரைந்திருந்த போஸ்டர் ஒட்டியிருக்கும். "இவன் நம் எதிரி. இவனிடம் எச்சரிக்கை யாக இருங்கள்" என்றோ என்னவோ தமிழில் எழுதி யிருக்கும். அவன் நிலக்கோட்டைக்கு வருவானா என்று யோசனை தோன்றும் எனக்கு. "எங்கேடா சுத்திட்டு வரே" என்று பாட்டி சில சமயம் கோவித்துக்கொள்வாள். "பார்க்குக்கு போய் ரேடியோ கேட்டுட்டு, படிச்சுட்டு வரேன்" என்பேன். பாட்டி சமாதானம் அடைந்து விடுவாள்.
பாட்டிக்கு நாங்கள் எல்லாம் நன்றாகப் படிக்கவேண்டும். பெரிய சர்க்கார் வேலைக்குப் போகவேண்டும் என்று ஆசை. ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் வாத்தியாராகப் போய்விடக்கூடாது என்பதில் அவள் வெகு தீர்மானமாக இருந்தாள். அதை அடிக்கடி சொல்லுவாள். பாட்டி படித்ததில்லை. பள்ளிக்குப் போனதே இல்லை. தமிழ் கூடப் படிக்கத் தெரியாது. பாட்டி ஆசைப் பட்டாளே தவிர அது என்னவோ நடப்பதாக இல்லை. சின்ன மாமா வத்தலக்குண்டு போய் அங்கு தான் ஒரு ஹைஸ்கூலில் படித்து வந்தார். நிலக்கோட்டையில் எட்டாவது வரை தான் படிக்கமுடியும். மேலே படிக்க கிட்ட இருந்த ஹைஸ்கூல் ஆறு மைல் தூரத்திலிருந்த வத்தலக்குண்டுவில் தான் இருந்தது . ஆனால் சின்ன மாமா ஸ்கூல் ·பைனலில் பாஸாகவில்லை. மறு படியும் படித்து பரிட்சை எழுத வேண்டும். எல்லாரும் சின்ன பையன்களாக இருக்கிறார்கள். நான் வேறு எங்காவது தான் படிப்பேன். வத்தலக்குண்டுக்குப் போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். வீட்டில் ஒரே ரகளை. மாமாவால் அம்மாதிரியெல்லாம் செலவு செய்ய முடியாது. இருந்தாலும், கடைசியில் மதுரையில் சின்ன மாமாவையும் என்னையும் சேதுபதி ஹைஸ்கூலில் சேர்த்தார்கள். நான் ஒன்பதாவது வகுப்பில். சின்ன மாமா பதினொன்றாவது வகுப்பில். சிம்மக்கல்லில் வைகை ஆற்றுக்குப் போகும் வழியில் ஒரு சின்ன அறை வாடகைக்கு எடுத்து எங்களுக்குப் பாட்டி சமைத்துப் போட நாங்கள் ஒரு வருஷம் மதுரையில் படித்தோம்.
இடையில் ஓரிரு மாதங்கள் தான். கோடை விடுமுறையில் என்று நினைக்கிறேன். சின்ன மாமாவுக்கு ஒரு சர்க்கார் உத்தியோகம் கிடைத்தது. நிலக்கோட்டை யில் இருந்த ஒரு அக்ரிகல்சர் இன்ஸ்பெக்டர் ஆபீஸில் அட்டெண்டர் வேலை. அது என்ன வேலை என்று இன்னமும் எனக்குப் புரிந்ததில்லை. சின்ன மாமாவுக்கு சர்க்கார் வேலை கிடைத்ததில் பாட்டிக்கு பரம சந்தோஷம். வேலைக்குச் சேர்ந்த அன்றோ அல்லது மறுநாளோ, தன் பிள்ளை சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பதைப் பார்க்க வேண்டும் என்று பாட்டிக்கு ஆசை. ஆனால் அப்படி யெல்லாம் பாட்டி ஆபீஸ¤க்கெல்லாம் போக முடியுமா என்ன? அதற்கு அடுத்த உபாயம், என்னைக் கூப்பிட்டு, "உனக்கு ஆபீஸ் தெரியுமோல்யோடா. போய் சாமா என்ன பண்றான்னு பாத்துட்டு வாடா," என்று சொன்னாள் பாட்டி. நானும் போனேன். ஆபீசுக்குள் எல்லாம் நுழைய முடியுமா என்ன? ரோடில் நின்று கொண்டே பார்த்தேன். வாசலைப் பார்த்த முன் அறையில் ஜன்னல் வழியாக சின்ன மாமா உட்கார்ந்திருந்தது தெரிந்தது. ஓடிப் போய் பாட்டியிடம் சொன்னேன். '"சரிடா என்னடா பண்றான்னு பாக்கலையா?" என்று கேட்டாள் பாட்டி. "அதெப்படிம்மா தெரியும்? வாசல்லே பாத்தேன். வேலை பண்ணீண்டு இருக்கா மாமா? " என்றேன். பாட்டிக்கு திருப்தியாயில்லை. "போடா, ஒரு காரியத்துக்கு துப்பில்லை உனக்கு?" என்று சலித்துக் கொண்டாள்.
எனக்கு துப்பில்லை என்று பாட்டி சலித்துக் கொண்ட இன்னொரு சம்பவமும் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. மாமாவுக்கு ஒரு தபால் கார்டு வந்தது ஒரு நாள். மாமா வீட்டில் இல்லை. பாட்டிக்கு தெரிந்து கொள்ள வேண்டு மென்று பல விஷயங்கள் இருந்தன. "கார்டிலே என்ன எழுதியிருக்கு?" என்று கேட்டாள். படித்துச் சொன்னேன். "இங்கிலீஷ்லே எழுதியிருந்தா படிக்கத் தெரியுமாடா? என்று கேட்டாள். "'ஊம் படிப்பேனே, இதிலேயே அட்ரஸ் இங்கிலீஷிலே தானே எழுதியிருக்கு," என்றேன். 'அப்படியா', என்று பாட்டிக்கு சந்தோஷம். "அப்போ படிடா. பாக்கலாம்" என்றாள் நான் படித்தேன். "எஸ். ஆர். சுப்பிரமணிய அய்யர், ஹெட் மாஸ்டர், சௌராஷ்டிரா ஹையர் எலிமெண்டரி ஸ்கூல், நிலக்கோட்டை" பாட்டிக்கு அது திருப்தி தருவதாக இல்லை. "இங்கிலீஷ்லே படிடான்னா, தமிழ்லேன்னாடா படிக்கறே" என்று பாட்டி கோபித்துக் கொண்டாள். பாட்டி, "ஹெட் மாஸ்டர், ஹையர் எலிமெண்டரி ஸ்கூல்" என்றெல்லாம் தான் எல்லோரும் சொல்லக் கேட்டு வந்ததால் அதெல்லாம் தமிழ் தான் என்று நினைத்துக் கொண்டாள். வேறு எவ்விதமாகவும் யாரும் சொல்லி அவள் கேட்டதில்லை
வெங்கட் சாமிநாதன்/24.10.07
Wednesday, May 07, 2008
உ.வே.சா வின் நினைவில்
உ.வே.சா மறைந்தது 1942-ல். ஆக, அவர் மறைந்து 66 வருடங்களுக்குப் பிறகு தான் அவருக்கு ஒரு நினைவகம் என்பது சாத்தியமாகியுள்ளது. தமிழ்த் தாத்தா என்றும், மகாமகோபாத்யாயா என்றும், தக்ஷ¢ணாத்திய கலாநிதி என்றும், - இன்னும் கூட நிறைய என்னென்னவோ பட்டங்கள் விருதுகள் இருக்கக்கூடும், எனக்கு ஞாபகம் இருப்பவை இவ்வளவு தான் - பலவாறாக அவர் சிறப்பிக்கப் பட்டிருந்தாலும், உ.வே.சா என்ற மூன்றெழுத்துக்களே போதும் அவரைத் தனித்துக் காட்ட. மூன்றெழுத்து என்றாலே முகம் சுளிக்கத் தோன்றும் அளவுக்கு தமிழ் நாட்டின் பிரசாரத் தலைமைகள் கொச்சைப்படுத்தியுள்ள அனேக மற்றவற்றுள் மூன்றெழுத்து என்ற பதமும் ஒன்று. தன் பெயரைக் குறிப்பிடுதலே நாகரீகமும் பண்பும் அற்ற செயலாக கருதப்படும் அளவுக்கு விருதுகளையும் பட்டங்களையும் கட்டியணைத்துக் கொள்ளும் கலாச்சாரமாக தமிழ் வாழ்க்கை மாறிவிட்ட இன்றைய சூழலில், உ.வே.சா தன் பெயரிலேயே தன் வாழ்நாளிலேயே ஒரு legend (இதைத் தமிழில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை) ஆகிவிட்ட ஈடற்ற சாதனையும் ஆளுமையும் கொண்டவர் அவர். அப்படியிருக்க அத்தகைய ஒரு legend-க்கு நினைவாலயம் என்பது சாத்தியமாக 68 வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. அதுவும் வேறு எந்த மொழி பேசும் உலகத்திலும் காணாத அளவிலும் குணத்திலும், தமிழ் நாட்டில் தமிழ் பற்றிய பிரசாரத்தின் இரைச்சலும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் காணப்படும் காலத்தில், 66 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன. இதை நான் சொல்லக் காரணம் இந்தப் பிரச்சாரத்தில் இரைச்சலும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் தான் காணப்படுகின்றனவே தவிர உள்ளீடோ உத்வேகமோ இல்லை என்ற காரணத்தால் தான் ஒரு legend-ன் நினைவகத்திற்கு இத்தனை காலம் தேவையாக இருந்திருக்கிறது.
சுதந்திரத்திற்குப் பின் வந்த நமது ஆட்சியாளர் களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் தான் உ.வே.சா தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும், தமிழ் உணர்வு களுக்கும் ஆற்றியுள்ள பங்களிப்பு பற்றிய நினைவுகள் இல்லாது போயிற்றெனத் தோன்றுகிறதே ஒழிய, ஒரு சில இடங்களில் அவர் நினைவு தொடர்ந்துள்ளது. சென்னையில் அவரது பெயரில் உள்ள நூல் நிலையம் அவரது நூல்களை பதிப்பித்து வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் முச்சந்தியிலும் சிலை வைப்பதே ஒருவரது நினைவைப்போற்றும் ஒரே வழியென ஒரு கலாச்சாரம் இப்போது பரவியுள்ளதைப் போல் அல்லாது, அவரது நினைவைப் போற்றும் வகையில் உள்ள ஒரே சிலை ஒன்று சென்னைப் பல்கலைக் கழக வெளியில் அமைந்துள்ளது. அது தான் அவர் சிலை இருக்கவேண்டிய இடம். அந்த இடத்தில் உள்ளது அதன் சிறப்பு. அவரது நினைவின் சிறப்பு.
ஆனால் அவர் பழம் இலக்கியங்களைத் தேடி, சரி பார்த்து பதிப்பித்த முறையின் ஒழுங்கும் விஞ்ஞான பூர்வமான கட்டுப் பாடும் அவரே தன் இயல்பில் வளர்த்து கடைப்பிடித்த ஒன்று. அது பின்னர் வையாபுரிப்பிள்ளை போன்றோரிடம் காணப்பட்டது போல் அது ஒரு மரபாயிற்றா என்பது சந்தேகத்திற்குரியது. அம்மரபு போற்றலும், உ.வே.சா விட்ட இடத்திலிருந்து அவ்வழியில் தொடர்வதும் அவரது நினைவைப் போற்றல் தான். ஆனால் அது நம் இந்தமிழ் மரபில் இல்லாத ஒன்று. சிலை வைத்தலும், வருடம் ஒரு நாள் மாலை அலங்காரம் செய்து அலங்காரத்தமிழில் சொற்பொழிவாற்றி பத்திரிகைகளில், தொலைக்காட்சியில் இடம் பெற வழிவகைகள் செய்து கொண்டப்பின் வீடு திரும்பலும் தான் நம் தமிழ்ப் பண்பு.
எனக்குத் தெரிந்து அறுபதுகளில் ஒரு தமிழ் பற்று கரைபுரண்டு ஓடிய ஒரு பதிப்பு முறை தலை நீட்டியது. வேதநாயகம் பிள்ளையின் நாவல் பிரதாப முதலியார் சரித்திரத்தில் உள்ள வடமொழிச் சொற்களையெல்லாம் நீக்கி தூய தமிழ்ச் சொற்களைப் பெய்து தமிழ் தொண்டாற்றத் தொடங்கினார்கள் ஒரு பதிப்பகத்தார். அது அனேகமாக சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமாக இருக்க வேண்டும். உறுதியாகச் சொல்ல இயலவில்லை. அது என்ன காரணத்தாலோ தொடரவில்லை. விட்டுப் போன அந்த மரபைப் புதுப்பிக்கும் வகையில் தினம் தமிழறிஞர் நன்னன் அவர்கள் தூய தமிழ் எதுவென்னும் பாடம் நடத்தி வருகிறார் மக்கள் தொலைக் காட்சியில். நாம் சோர்ந்து சோம்பியிருக்கும் வேளைகளில் விவேக், வடிவேலு காட்சிகள் எப்படி நம் சோர்வை அகற்றி புத்துணர்ச்சி தருகின்றனவோ அவ்வாறான அரிய சேவையை நன்னனின் தூய தமிழ்ப் பாடங்களும் எனக்களிக்கின்றன. பாடம் நடத்தும் போது காணும் அவரது முக பாவங்களும் எனக்கு மகிழ்வையூட்டும்.
ஆனால் அவர் பார்வையிலான தூய தமிழ் ஒரு ஆரோக்கியமான தமிழாக உயிரோட்டமுள்ள தமிழாக எனக்குத் தோன்றவில்லை. பிரதாப முதலியார் சரித்திரத்தைத் தூயதமிழில் பெய்தளிக்க முயன்ற காரியம் எப்படி வேதநாயகம் பிள்ளையின் எழுத்தை முடமாக்கியதோ அப்படித்தான் தூய தமிழும் தமிழை முடமாக்கி ஒரு விசித்திர பிராணியாக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. தமிழ் சரித்திரம், இலக்கியம், தமிழ் பண்பாடு, பாரம்பரியம் என்று தமிழ் பற்றிய ஒவ்வொரு விஷயத்திலும் நம் பார்வைகள் என்னவோவாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் எல்லாம் ஒரு சரித்திர உணர்வு, கலை உணர்வு, இலக்கிய உணர்வு, பாரம்பரியம் பற்றிய அறிவு எல்லாம் பழுது பட்டதாக, முடமாக்கப் படுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. வேதநாயகம் பிள்ளை வாழ்ந்த காலம் அவரது ஆளுமை இவற்றிற்கும் அவரது எழுத்திற்குமான ஒரு உறவு, பின்னைப் பிணைந்த ஒன்று உண்டு. அதை நாம் உணர வேண்டும். அதைக் காக்க வேண்டும். நமது இன்றைய அரசியல் தேவைகளுக்கு அடி பணிந்து அந்த பிணைப்பை மாசுபடுத்தக் கூடாது. அது தான் நாம் வேதநாயகம் பிள்ளைக்கும், சரித்திரத்திற்கும் தமிழுக்கும் அளிக்கும் மரியாதையாகும். வேதநாயகம் பிள்ளையின் எழுத்து அவரது காலத்தை, அவரது ஆளுமையை பிரதிபலிக்கும். அந்த நினைவுகளை அழியாது காப்பாற்றும். இப்போது 23 மூன்று லட்ச ரூபாய்கள் செலவில் உருவாக்கப் பட்டிருக்கும் உ.வே.சா நினைவகம் ஒரு புதிய கட்டிடம். அவர் வாழ்ந்த வீடு இருந்த மனையில் எழுப்பப்பட்டுள்ள புதிய கட்டிடம். அது உ.வே.சா. வின் நினைவுகளை நமக்கு அளிப்பதில்லை. சென்னையில் டா. ராதாகிருஷ்ணன் சாலையில் ஒரு பெரிய மூன்றோ ஐந்தோ நக்ஷத்திர ஹோட்டல் இருக்கிறது. பிரம்மாண்டமான கட்டிடம் தான். வெளியில் நடைபாதையில் நின்று கொண்டே பார்த்தோமானால் அதன் ஒரு மூலையில் சுற்றுச்சுவரை ஒட்டி கட்டிடத்தில் உள்ளே ஒரு அறிவுப்புப் பலகையைக் காணலாம். அங்கு தான் மகாத்மா காந்தி முதன் முதலாக சென்னை வந்தபோது தங்கி அன்றைய சென்னைப் பிரமுகர்களைச் சந்தித்தார் என்று சொல்லும். எனக்கு நினைவில் இல்லை. அது சீனிவாசாச்சாரியார் இல்லமோ என்னவோ. அங்கு தான் காந்தி ராஜாஜியுடன் பேசிக் கொண்டிருந்த போது திடீரென்று பாரதியார் உள்ளே நுழைந்து, "மிஸ்டர் காந்தி, இன்று நான் சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசப்போகிறேன் அதற்கு நீங்களும் வந்து கலந்து கொள்ளமுடியுமா? என்று கேட்டதாகவும் காந்தியார் தன் உதவியாளரிடம் விசாரிக்க, அவர் நேரம் இல்லை யென்று சொல்ல, காந்தியார் தான் வரமுடியாததற்கு வருத்தம் தெரிவித்ததாகவும், "அப்படியா, நல்லது. உங்கள் சென்னை வருகை வெற்றியடையட்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றோ என்னவோ பாரதி சொல்லி திரும்பிச் சென்றதாகவும், பின்னர் காந்தியார் ராஜாஜியிடம் இவர் யாரென்று கேட்க, ராஜாஜி, "இவர் ஒரு தமிழ் கவிஞர்" என்று சொல்ல "நீங்கள் இவரை நன்கு கவனித்துக்கொள்ளவேண்டும்" என்று சொன்னதாகவும் ஒரு வரலாற்றுச் செய்தி உண்டு. இபபடி மகாத்மா வந்து தங்கியிருந்த அந்த இடத்திற்கு அனேக வரலாற்றுச் சிறப்புக்கள் உண்டு. அந்த இடத்தில் அந்த பழைய வீடு இருக்கலாமா? ஒரு 5 நக்ஷத்திர ஹோட்டல் தான் தமிழ் நாட்டின் பொருள் வளத்திற்கும் முன்னேற்றத்திற்கும் சாட்சியம் தரும். ஒரு வரலாறு நடந்ததற்கு ஒரு அறிவுப்புப் பலகை வைத்தால் போயிற்று. பிரச்சினை தீர்ந்தது. இது இன்றைய தமிழனின் முன்னோக்கிய பார்வை.
சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். அதில் ஒரு வரலாற்று அறிஞர் சொல்கிறார். பஞ்சாபில் இருந்த சீக்கிய மத, வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பல முன்னூறு நானூறு வருடங்கள் பழமை வாய்ந்த புராதன கட்டிடங்கள், வரலாற்றுச் சின்னங்கள் 90 சதவிகிதம் அழிக்கப்பட்டு விட்டன. அவற்றின் இடத்தில் சலவைக் கற்களால் ஆன மாளிகைகள் பல எழுந்துள்ளன. இதற்குக் காரணமே, சீக்கிய மத குருக்கள், சீக்கிய அரசியல் கட்சிகள், மட்டுமின்றி குருத்வாராக்களுக்குள் வந்து வெள்ளமெனப் பாயும் வெளிநாட்டில் வாழும் சீக்கியர்களின் பணம். அவர்களிடம் எல்லாம் மத உணர்வும் உண்டு. கொள்ளை கொள்ளையாய் பணமும் உண்டு. ஆனால் சரித்திர உணர்வோ, பாரம்பரியம் பற்றிய உணர்வோ, தம் வரலாறு பற்றிய கர்வமோ கிஞ்சித்தும் இல்லாது போனது தான் இந்த சீரழிவுக்குக் காரணங்கள்' என்கிறார் அந்த சீக்கிய வரலாற்று அறிஞர்.
அவர் சொன்ன காரணங்களில் மிக முக்கியமானது இன்றைய மதிப்புகளின் சீரழிவு. மத உணர்வுகளின் உத்வேகத்தில் குறை இல்லை. பணத்துக்கும் குறையில்லை. ஆனால் குறைபட்டது சரித்திர உணர்வும், பாரம்பரியத்தின் கர்வமும். முன்னூறு வருட பழைய கட்டிடத்தை பழைய நிலைக்கு புணரமைப்பதில் ஆராய்வு தேவை. தொழில் நுட்பம் தேவை. சிரமங்கள் அதிகம். இவ்வளவும் செய்து ஒரு பழைய கட்டிடத்திற்கு உயிர் கொடுப்பதில் என்ன சிறப்பு என்று நினைக்கும் மதிப்பு மாற்றம். அதற்கு பதில், நிறைய பணம் செலவழித்து ஒரு புதிய கட்டிடம் எழுப்புவது பெருமைக்குரியது. அதில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கட்டிட குத்தகைக் காரப் பார்வையே ஆதிக்கம் செலுத்துகிறது என்றார் அந்த வரலாற்று அறிஞர். ஆக, பணம் இருந்தும், செயல்பாடு இருந்தும், ஆர்வம் இருந்தும், மாறிய வாழ்க்கை மதிப்புகள் பாரம்பரியத்தையும், சரித்திரத்தையும் அழித்து விடுகின்றன.
உத்தம தானபுரம் உ.வே.சா நினைவகம் இத்தகைய வேதனை உணர்வைத்தான் என்னில் எழுப்பியுள்ளது. அரசியலாக்கப்பட்ட, கோஷமாக்கப்பட்ட தமிழ் உணர்வு, உள்ளீடற்ற வரண்ட ஒன்று அது. அது இரைச்சலிடும். கோஷங்கள் எழுப்பும். அது அரசியலுக்கு பயன் படலாம் பயன் பட்டுள்ளது. ஆனால் தமிழுக்கு அதனால் ஒரு பயனும் இல்லை. அது வரலாற்றை அழித்து நிற்கும். பாரம்பரியத்தை அழித்து நிற்கும். காலத்தின் நினைவுகளை அழித்து நிற்கும்.
என் குடும்ப நினைவுகளிலிருந்து ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது. 1955 அல்லது 1956 என்று நினைக்கிறேன். நான் ஒரிஸ்ஸாவில் ஹிராகுட் அணைகட்டும் இடத்தில் வேலைக்கிருந்தேன். என் தம்பி அப்போதைய தமிழ்நாடு ரெவென்யூ டிபார்ட்மென்டில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுக்கு அடிக்கடி மாற்றலாகிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த மாற்றல்கள் கும்பகோணம், குடவாசல், பாபநாசம் என்று எல்லாம் பக்கத்து ஊர்களாகத்தான் இருக்கும். அவனுக்கு வேலை கிடைத்ததும் உடையாளூர் என்ற கிராமத்தில் இருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு அவன் மாற்றலாகிப் போகும் இடங்களுக்கு போக வர வசதியான ஒரு இடத்திற்கு எங்கள் குடும்பம் குடிபெயரும். அப்போது என் தம்பிக்கு பாபநாசத்திற்கு மாற்றலாகியிருந்தது. வழக்கம் போல, எங்கள் குடும்பம் பாபநாசத்திற்கு அருகே இருந்த உத்தம தானபுரத்திற்கு குடி பெயர்ந்தது. தினம் உத்தமதான புரத்திலிருந்து அருகிலிருக்கும் பாபநாசத்திற்கு பஸ்ஸில் வேலைக்குச் செல்வது சௌகரியமாக இருந்தது. இதெல்லாம் எனக்குத் தெரிய வந்தது அப்பா ஹிராகுட்டிலிருந்த எனக்கு எழுதிய கடிதத்தில். அவர் எழுதியிருந்த விஷயம். "இப்போது கிருஷ்ணனுக்கு பாபநாசத்துக்கு மாற்றலாகியிருக்கிறது. நாங்கள் உத்தமதானபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து இருக்கிறோம். இங்கிருந்து பாபநாசத்துக்கு போய்வருவது சௌகரியம். இங்கே வாடகைக்கு எடுத்திருக்கும் வீடு பெரிய வீடு. சௌகரிமாக இருக்கிறது. இந்த வீடு சாமிநாதய்யர் இருந்த வீடு என்கிறார்கள். அவர் தமிழில் ரொம்ப பெரிய மனுஷராம். உனக்குத் தெரிந்திருக்கும். வீடு பிடித்திருக்கிறது. "நீங்கள் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள்," என்று வீட்டுக்காரர் சொல்கிறார். 3000 ரூபாய் கேட்கிறார். அவ்வளவு பணத்துக்கு எங்கே போறது? அதோட, கிருஷ்ணனுக்கு எங்கேயாவது ரொம்ப தூரம் உள்ள ஊருக்கு மாற்றலானால் என்ன பண்றது? ஆகையால் இங்கே இருக்கற வரைக்கு இருக்கோம்" என்று சொல்லியிருக்கிறேன்"
வீடு வாங்குவது என்ற பிரச்சினையே எழுவதற்கில்லை. எங்களுக்கு 1950 களில் 3000 ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. 1956-ல் ஹிராகுட் அணை கட்டி முடியப்போகிற தருவாயில் இருந்தது. அதிகம் போனால் ஒரு வருடத்திற்கு மேல் அங்கு இருக்க முடியாது. வேறு வேலை தேடவேண்டும். தேடிக்கொண்டிருந்தேன். மூன்று இடங்களிலிருந்து எனக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்தன. பிகானீர், கல்கத்தா இரண்டிலிருந்தும் ரயில்வேயில் வாய்ப்புக்கள். மூன்றாவதாக தில்லியில், மத்திய அரசாங்கத்தின் உள்விவகார அலுவலகத்தில். எங்கே போவது என்று திணறிக்கொண்டிருந்த போது மூன்றாவதாக வந்த தில்லி அழைப்பு எனக்கு மாதம் ருபாய் 210 தருவதாக இருந்தது. அது மற்ற இடங்களை விட 35 ரூபாயோ என்னவோ அதிக சம்பளம் தருவதாக இருந்தது. ஆக அந்த 35 ரூபாய் தான் என்னைத் தில்லிக்கு இட்டுச் சென்றது. எந்த இடத்திற்கு வேலையில் சேர்வது என்பதை 35 ரூபாய் தீர்மானிக்கும் நிலையில் இருந்த நான், கிராமத்தில் வீடு வாங்க 3000 ரூபாய்க்கு எங்கே போவேன்? ஆக பாரம்பரியமும், வரலாறும் கொண்ட ஒரு நினைவுச் சின்னம் கைவரப்பெறும் பாக்கியம் எங்களுக்கில்லாது போய்விட்டது.
கைவரப்பெறும் பாக்கியத்தைப் பற்றிப் பேசுவானேன். நான் அந்த வீட்டைப் பார்க்கும் பாக்கியத்தைக் கூடப் பெறவில்லை. அந்நாட்களில் நான் அப்படி ஒன்றும் அடிக்கடி விடுமுறையில் கிராமத்துக்குச் சென்றவனில்லை. சில சமயங்களில் மூன்று நான்கு வருடங்கள் கூட ஆகிவிடும் நான் விடுமுறையில் கிராமத்துக்குச் சென்று பெற்றோர்களைப் பார்க்கச் செல்வது என்பது. கையில் அவ்வளவு காசு இருப்பதில்லை என்பது தான் காரணம். இதெல்லாம் போகட்டும் விஷயத்திற்கு வரலாம்
.
அப்பா பெரிய வீடு என்கிறார். தஞ்சை ஜில்லாவில் எல்லா வீடுகளும் இரண்டு கட்டு வீடாகத்தான் இருக்கும். ஒரே அமைப்பும் கட்டுமானப் பொருள்களும் கொண்ட தாகத்தான் இருக்கும். சில பெரிய வீடுகளாக இருக்கலாம். அது மூன்று கட்டுக்கள் கொண்டதாக இருந்திருக்கலாம். கொல்லையில் பெரிய தென்னந்தோப்பு இருந்திருக்கிறது. 1950களில் எங்கள் குடும்பம் அங்கு குடியேறிய போது அது வாழும் இடமாகத்தான் இருந்திருக்கிறது. அதற்குப் பிறகும் பல பத்து வருடங்களுக்கு வாழும் இடமாகத்தான் இருந்திருக்க வேண்டும். அப்படி எவ்வளவு வருடங்களாக அது வாழும் இடமாக இருந்தது, எப்போது சிதிலமடையத் தொடங்கியது என்பது தெரியவில்லை. அவர் வாழ்ந்த உத்தமதானபுரத்தில் உ.வே.சா.வின் நினைவில் ஏதும் செய்யவேண்டும் என்று ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சிந்தனை எழுந்ததென்றும் அப்போதைய அரசு 23 லட்சம் ரூபாய் இதற்கென ஒதுக்கியது என்றும் ஒரு செய்தி படித்தேன். ஆக இதன் ஆரம்பமும் செயல் முனைப்பும் ஜெயலலிதா காலத்தில் தொடங்கப்பட்டது என்பது பற்றி இப்போது நினைவகம் திறக்கப்பட்ட சமயம் யாரும் மூச்சு கூட விடவில்லை. இது இன்றைய தமிழ் அரசியல் பண்பாட்டின் குணம் சார்ந்தது தான். ஆனால் அப்போது உத்தமதானபுரத்தில் நினைவகம் என்ற சிந்தனை எழுந்த போதே, அவர் இருந்த வீடு சிதிலமடைந்து இருப்பதாகவும் ஆகவே அந்த இடத்தில் ஒரு புதிய கட்டிடம் எழுப்பத் தீர்மானிக்கப்பட்டது என்றும் அந்த செய்தி சொன்னது. இது தான் நம் தமிழ் நாட்டில் உள்ள பெரும்பான்மையினரது சிந்தனைக்கோளாறு. தஞ்சை ஜில்லாவில் எத்தனை பெரிய வீடாக இருந்தாலும் அது மிக எளிமையான, வாழ்க்கைக்குகந்த வீடு. மிக எளிய பொருட்களால் கட்டப்பட்டது. அனேகமாக ஒரே கட்டமைப்பைக் கொண்டது. நாட்டு ஓடு வேய்ந்த வீடுகள். தாழ்வாரம் கூடம் என இரண்டு அல்லது மூன்று கட்டுக்கள் கொண்டவை. எல்லாம் அருகே கிடைக்கும் மூங்கில் போன்ற மரங்களால் ஆனவை. உடையாளூரில் நாங்கள் இருந்த வீடு இரண்டு கட்டு வீடு தான் என்றாலும் மண்தளம் கொண்ட வீடுதான். வாழத் தகுந்த, கோடையிலும் வெப்பம் குறைக்கும் வீடு தான். உத்தமதானபுரத்தில் சிதிலமடைந்த உ.வே.சா.வின் வீடு எவ்வளவு பெரிய வீடானாலும், அதன் கட்டமைப்பு பெரிதாக இருந்தாலும், அது மீண்டும் புணரமைக்கப் படக்கூடிய ஒன்று தான். ஏதும் பர்மா தேக்கு என்றும் இதாலியிலிருந்து வந்த சலவைக்கல் என்றும் சங்கடப்படுத்துபவை அல்ல. ஏதும் ஐரோப்பிய கட்டிடக் கலைஞரின் வரைபடம் கொண்டு எழுப்பப்பட்டதல்ல. எல்லா தஞ்சை கிராமத்து வீடுகள் போல ஒரு வீடு. அது எத்தனை பெரியது எவ்வாறு கட்டப்பட்டிருந்தது என்பதை சிதிலத்திலிருந்தும் கண்டறியலாம். அக்கிராமத்தாரி டமிருந்தும் கேட்டறியலாம். அதில் அதிகம் செலவும் ஆகாது. ஆனால் அத்தகைய புணரமைப்பை, புத்துயிர் கொடுக்கப்படும் பழைய கட்டிடத்தை விரும்புவார் இல்லை. அதை மதிப்பாரும் இல்லை என்பது தான் உண்மை. அதில் பெறப்படும் லாபமும் ஏதும் இல்லை என்னும் கட்டிட குத்தகைக்காரர் பார்வையும் அதில் இருந்திருக்கக் கூடும்
.
இப்புதிய நினைவகத்தைப் பார்த்துமே, அல்லது உள்ளே நுழைந்ததும் நமக்கு என்ன தோன்றும்?. உத்தம தானபுரம் கிராமத்துக்கு திரும்பி வந்த ஒரு புதிய பணக்காரரது வீடோ என்று தான் நினைக்கத் தோன்றும். அது உவேசா வின் காலத்தை, அக்காலத்தின் சூழலை, அவர் வாழ்ந்த வாழ்க்கையின் தோற்றத்தை அது நினைவுறுத்துமா? ஆனால் அவர் வாழ்ந்த, இப்போது சிதிலமடைந்த இல்லம் இன்னம் குறைந்த செலவில், ஆனால் நிறைந்த அக்கறையோடும் ஆராய்வோடும் புணரமைக்கப்பட் டிருக்குமானால் அது உ.வே.சா வின் நினைவுகளை அவர் வாழ்ந்த காலத்தையும் சூழலையும் தக்க வைத்திருக்கும். அத்தகைய சிந்தனை நம்மிடம் இல்லை.
நம் சிந்தனைகளே இப்படித்தான் வேலிகட்டி குறுகிப்போனவையோ என்று தோன்றுகிறது. பாரதி இறந்தது 1921-ல். கல்கி பாரதிக்கு நினைவு மண்டபம் ஒன்று எழுப்ப நினைத்தது நாற்பதுகளில் என்று நினைக்கிறேன். எட்டைய புரத்தில். ஒரு புதிய கோவில் மண்டபம் போல ஒன்று எழுப்பப்பட்டது. பாரதி
வாழ்ந்த இல்லங்கள் 30 வருடங்களுக்குள்ளாகவா இடிந்து தரைமட்டமாகியிருக்கும்? அவை புதுப்பிக்கப்பட்டிருக்கக் கூடாதா? அப்படி யாரும் நினைக்கவில்லை. நினைக்கத் தோன்றவில்லை. ஒரு புதிய கட்டிடம் எழுப்பவேண்டும். பெரிய கட்டிடமாக, பார்க்க பிரம்மாண்டமாக. அது தான் பெருமை தருவதாக இருக்கும். என்ற நினைப்புதான் முன்னின்றது
சரித்திரம் தொடர்கிறது. புதிய சட்டமன்றம், அலுவலகங்கள், செயலகம் எல்லாம் புதிதாக பிரம்மாண்டமாக, எழுப்பப்ட இருக்கின்றன. முத்தமிழ் வித்தகர், உலகத் தமிழினத் தலைவர், டாக்டர் கலைஞரின் நல்லாட்சி நடக்கும் இப்பொற்காலத்தில் அவர் சிந்தனையில் உதித்தவை இவை, அவர் காலத்தில் அவர் ஆட்சியில் எழுந்தவை இவை என்று சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்ற தமிழ்ச் சான்றோரின் பிரமாண பத்திரம் வேறு இருக்கவே இருக்கிறது தமிழ் மரபில். எனவே பழைய கழிதல் தவிர்க்கப்படமுடியாதது. அட்மிரால்டி ஹவுஸ் போன்றவை மிக அழகானவை.தான். கம்பீரமானவை. தான். ஆனால் அவை 200 ஆண்டு சரித்திரம் கொண்டவை. இருந்தால் என்ன?. பழையன கழியத்தானே வேண்டும்?.
Tuesday, April 08, 2008
பதங்களும் ஜாவளியும் - பக்தியும் சிருங்காரமும்
காதல், விரஹ தாபம், தோழியைத் தூது அனுப்புதல், பின் இந்தக் காதலே இறைவனிடம் கொள்ளும் பக்தியாக பரிணாமம் பெறுதல், இவை அத்தனையும், கவிதையாக, சங்கீதமாக, நடனமாக, பல ரூபங்களில் பரிணாமம் பெறுதல், அத்தனையும் ஒரு நீண்ட வரலாறாக, இடைவிடாத பிரவாஹமாக சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் தமிழ் வரலாற்றில், வாழ்க்கையில், அதன் கலைகளில் பரிணமித்திருப்பது போல வேறு எங்கும் இதற்கு இணை உண்டா என்பது எனக்குத் தெரியவில்லை. தமிழில் பரதநாட்டியப் பாடல்கள் என்ற ஒரு தொகுப்பைப் பார்த்த போது, நமக்குத் தெரிந்த ஒரு இரண்டாயிர வருஷ நீட்சி என் முன் விரிந்தது.
ஊடலும் கூடலும் குகையில் வாழ்ந்த காலத்திலேயே தொடங்கியது தான். ஆனால்
"நில், ஆங்கு நில், நீ நாறு இருங் கூதலார் இல செல்வாய், இவ் வழி ஆறு மயங்கினை போறி, நீ வந்தாங்கே மாறு."
என்று அது கவிதையாக மலர்ந்து நம் முன் விரிகிறது. பரத்தை வீடு சென்று வந்த தலைவனை 'வந்த வழியைப்பார்த்துப் போய்யா', என்று விரட்டுகிறாள் காதலி. ஏதோ சட்டென கிடைத்த ஒன்றைச் சொன்னேன். தமிழ்க் கவிதையில் இதற்கும் பின்னோக்கி நாம் செல்லக்கூடும். இதற்கு மாறாக, திருமங்கை ஆழ்வார் தன்னையே திருமாலின் அழகில் மயங்கி நிற்கும் மங்கையாகக் கற்பித்துக் கொள்கிறார்.
தஞசம் இவர்க்கு என் வளையும் நில்லா நெஞ்சமும் தம்மதே சித்த்¢த்தேற்குவஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்தது ஒன்று பணித்தது உண்டு.
இப்படி நாம் அகப்பாடல்களிலும் ஆண்டாள் நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் பாசுரங்களிலும், மாணிக்கவாசகர் திருக்கோவையாரிலும் நெடுக காணலாம். அது இசையிலும் ஆடலிலும் தொடர்ந்து வந்துள்ளது. கானல் வரியிலிருந்து இந்த காதலும், பிரிவாற்றாமையும், தவறாகப் புரிந்து பிணங்குதலும் ஆடலிலும் சங்கீதத்திலும் சேர்ந்தே வெளிப்பாடு பெற்று வந்துள்ளன. இது நமக்கே உரிய சிறப்பு.
இப்போது நான் யோசிக்கும் போது, காதலும், அது பக்தியாக மேல் நிலைப்படுத்தப்பட்டு உன்னதமாக்கப் பட்டும் சங்கீதமாகவும், நடனமாகவும் பரிணாமம் பெற்றுள்ள ஒரு உதாரணம், ஜெயதேவர். ஜெயதேவர் இல்லாது ஒடிஸ்ஸி ஏது? ஒடிஸ்ஸி இல்லாது கொனாரக் சிற்பங்களும் ஏது?
தெற்கிலும், தமிழ் நாட்டிலும் இந்த கூட்டுக் கலவையான மரபு தொடர்ந்து வந்துள்ளது தான். ஆனால் இப்போது நமக்குக் கிடைக்கும் பதங்கள் அதிகம் பின்னோக்கிப் போனால் 16-ம் நூற்றாண்டு முத்துத் தாண்டவரோடு நின்று விடுகிறோம். ராமானுஜரும் வைஷ்ணவ ஆச்சாரியார்கள் சிலரும் சரியாக நூறாண்டு வாழ்ந்ததாக சொல்கிறார்கள். அது போல முத்துத் தாண்டவர் வாழ்ந்ததும் சரியாக ஒரு நூறாண்டு (1525-1625) காலம். தஞ்சையில் நாயக்கர்கள் ஆண்ட காலம். கிட்டத்தட்ட 200 வருஷங்களுக்கு மேலாக விஜயநகர் ஆட்சியிலும் நாயக்கர்களின் ஆட்சியிலும் தமிழ் நாடு இருந்த போதிலும், இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகளுக்கு அவர்கள் தந்த ஆதரவு ஒரு புறம் இருந்த போதிலும், 17-ம் நூற்றாண்டு கடைசி வரையிலும் இசையிலோ நாட்டியத்திலோ அல்லது நாடகத்திலுமோ தமிழ் தான் தொடர்ந்து வெளிப்பாட்டு மொழியாக இருந்து வந்துள்ளது. தெலுங்கு இன்னும் மேலாண்மை பெற்று விடவில்லை. இசைக்கு ஏற்ற மொழி தெலுங்கு தான் என்று யாரும் சொல்லத் தொடங்கவில்லை. இசைக்கும் நாட்டியத்துக்கும் கீர்த்தனங்களும் பதங்களும் தந்தவர்கள் என, முத்துத் தாண்டவர், பாப விநாச முதலியார் போன்ற தெரிந்த பெயர்களோடு வென்றி மலைக்கவிராயர் என்று அவ்வளவாகத் தெரிய வராத பெயர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் இதற்குள் ஆந்திராவிலிருந்து தஞ்சைக்கு சொக்கநாத நாயக்கர் காலத்தில் தான் §க்ஷத்திரக்ஞர் வருகிறார். வேங்கட மஹியின் சதுர்தண்டி பிரகாசிகை அப்போது தான் எழுதப்பட்டு வருகிறது. ஆக, சுமார் 200 வருஷங்களுக்கு மேல் நீண்ட விஜய நகர, நாயக்கர்கள் ஆட்சியிலும் கூட இசையிலும் நடனத்திலும் தமிழே வெளிப்பாட்டு மொழியாக இருந்து வந்திருக்கிறது. அதற்குக் காரணம் இவ்விரண்டு கலைகளும் தமிழ் மண்ணில் ஊன்றியிருந்த ஆழ்ந்த வேர்கள் என்று தான் நினைக்கிறேன்.
தொடர்ந்து, மாரிமுத்தா பிள்ளை (1712-1782), அருணாசலக் கவிராயர் (1711-1779), ஊத்துக்காடு வெங்கட சுப்பய்யர் (1715-1794) போன்றோரின் கீர்த்தனைகளும் பதங்களும் வெளிவருகின்றன. இப்படிப் பெயர்களைச் சொல்லிக்கொண்டு போனால் சட்டென இவர்களுடைய ஆளுமையின் கீர்த்தி புலப்படாது. "சேவிக்க வேண்டுமய்யா, சிதம்பரம் சேவிக்க வேண்டுமய்யா" (முத்துத் தாண்டவர்) "தெண்டனிட்டேன் என்று சொல்லடி", "காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே, என்னைக் கைதூக்கி ஆள் தெய்வமே" (மாரி முத்தா பிள்ளை), "ஏன் பள்ளி கொண்டீரய்யா, ஸ்ரீரங்க நாதரே நீர் ஏன் பள்ளி கொண்டீரய்யா" (அருணாசலக் கவிராயர்), "தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி", "ஆடாது அசையாது வா கண்ணா" (ஊத்துக்காடு வெங்கட சுப்பய்யர்) போன்றவை நமக்கு இன்றும் பழகிய பதங்கள் கீர்த்தனைகள்.
இடைக்காலத்தில் சங்கீத மும்மூர்த்திகளின் ஆளுமையின் காரணமாகவும், இசைக்கும் நடனத்திற்கும் தமிழ்நாட்டின் படைப்பு மையமாக இருந்த தஞ்சை மரட்டிய மன்னர்கள் காலத்தில் தெலுங்கு பெற்று ஆதரவின் காரணமாகவும் தமிழ் பின்னுக்கு நகர்ந்தது. தமிழ்ர்களே ஆன முத்துசாமி தீக்ஷ¢தரும், சியாமா சாஸ்த்ரிகளும், பட்டனம் சுப்பிரமணிய ஐயரும் கூட சமஸ்கிருதம் தெலுங்கின் பக்கமே சாய்ந்தனர். அதோடு மட்டுமல்லாமல், மராட்டிய மன்னர்களே இசைக்கும் நடனத்துக்கும் போஷகர்களாகி விட்ட காரணத்தால், பதங்களுடன் ஜாவளி என்ற புதிய இசை வடிவமும் வந்து சேர்ந்தது. அது ஒன்றும் புதிய இசை வடிவம் அல்ல. இசையும் நடனமும் சொல்ல வந்த புதிய செய்தி என்று சொல்லவேண்டும். பதங்களில் பக்தியின் இடத்தில் சிருங்காரம் வந்து உட்கார்ந்து கொண்டது. தலைவி தலைவனுக்காக ஏங்கியதைச் சொல்லும் அகப்பாடல்கள், நேரடியாகவும், தலைவி எனத் தன்னைக் கற்பித்துக்கொண்டும் இறைவனைச் சரணடையும் மார்க்கமாகக் கொண்ட பதங்கள், பக்தியின் இடத்தைச் சிருங்காரமே மேலோங்கச் சொல்லும் ஜாவளிகள், மராட்டிய மன்னர்கள் காலத்தில் இறைவனுக்குப் பதிலாக, தன் கால நிர்ப்பந்தத்தில் மன்னனையே காமுறும் நிலையைச் சொல்லி மன்னனைத் திருப்திப் படுத்தின.
இதற்கு அதிக கால விரயம் தேவையாக இருக்க வில்லை. நடனம் ஆடுபவர்கள் மாதவி காலத்திலிருந்து தாசிகளே. நடனத்தை போஷித்தவர்களோ மன்னர்கள். அல்லது ஆங்காங்கே இருந்த பெருந்தனக்காரர்கள், ஜமீன்கள். சிருங்காரமே பதங்கள் சொல்லும் செய்தியாக மாற அதிகம் கஷ்டப்படவேண்டியிருக்கவில்லை. கோவலன் கானல் வரியில் கடலைப் பாடினாலும், மாதவி என்ன பாடினாள்? சரி, ஜெயதேவர் கண்ணனுக்காக ஏங்கும் ராதையைக் கற்பித்துக்கொள்ள அவருக்கு அருகிலேயே பத்மாவதி நடனமாடிக்கொண்டிக்க அவருக்கு வேறென்ன வேண்டும்?. சிருங்காரம் அல்லாமல் வேறு என்ன வரும்? இந்த சிருங்காரத்தைப் பதங்களில் வார்த்து தஞ்சைக்குக் கொண்டு வந்த §க்ஷத்திரக்ஞரை என்னேரமும் சூழ்ந்திருந்த வர்கள் தாசிகள். தாசிகள் மத்தியிலேயே திளைத்தவர் அவர். ஆக, அவ்ருக்கு, சிருங்காரம் அல்லாமல் வேறென்ன வரும்?. இருந்தாலும் அவை சிருங்காரத்திலிருந்து பக்திக்கு நம்மை இட்டுச் சென்றன. சடகோபரையும், திருமங்கையாழ்வாரையும், அரையர் சேவை செய்யும் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் அரையர்களையும் பக்திக்குத் தான் இட்டுச் செல்கின்றன.
என்னதான் சொன்னாரடி,
அன்னமே அவர் எப்போது வருவாரடி
என்று பல்லவி அமைத்துக்கொண்டால் கேட்கும் ஜமீந்தாருக்கோ மன்னருக்கோ சுகமாகத்தான் இருக்கும். பின்னால் அனுபல்லவியில் தான் அவள் விசாரிப்பது புதுவை வளர் பங்கயத் திருமார்பன், வெங்கடேஸ்வர ஸ்வாமியை என்பது தெரிய வரும். அதனால் என்ன? பின் வரும் சரணங்களும் திரும்பத் திரும்ப வரும் பல்லவியும் சொல்வது தன்னைத் தானென்று கற்பித்துக் கொள்ளலாம்.
ஆனால் இந்த கொஞ்சமளவு சால்ஜாப்பு கூட இல்லாது,
காசிருந்தால் இங்கே வாரும் -
சும்மா கடன் என்றால் வந்த வழி பாரும்
என்று கவி குஞ்சர பாரதி நேராகவே விஷயத்துக்கு வந்து விடுகிறார். கிட்டத் தட்ட இந்த மாதிரிதான் வேறு ஒரு ஜாவளி நான் கேட்டிருக்கிறேன். அது யார் எழுதியது என்பது தெரியவில்லை. அனேகம் பதங்கள் நமக்கு எப்போது எழுதியது, யார் எழுதியது என்பது தெரிவதில்லை. ஆனால் வெகு பிரபலமான பதங்கள் அவை. ஒன்று நான் கேட்டது,
காசில்லாதவன் கடவுளே ஆனாலும்
கதவைச் சாத்தடி....
என்று நேரடியாகவே விஷயத்துக்கு வந்து விடுகிறார் அவர்.
அழகுள்ள துரை இவர் யாரடி?
என்று ஒரு பதம் ஆரம்பித்தால் அது என்னத்தைச் சொல்லும்?
நேற்று ராத்திரிப் போன பெண் வீடு இதுவல்லநிலவரமாக உற்று பாரும்
என்பது சுப்புராமய்யர் என்பவர் இயற்றிய ஒரு பதம். ஜாவளி என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா?
பதங்களையோ ஜாவளியையோ இப்படி வார்த்தைகளைக் கேட்டு நாம் எந்த முடிவுக்கும் வரமுடியாது. ஏனெனில் அன்று ஆடிக்கொண்டிருந்தவர்கள், கௌரி அம்மாள், பாலசரஸ்வதி போன்றவர்கள். அபிநய தர்ப்பணை ஆங்கிலத்தில் எழுத ஆனந்த குமாரஸ்வாமிக்கு உதவியவர் மைலாப்பூர் கௌரி அம்மாள் என்று தெரிகிறது. பாலசரஸ்வதியைப் பற்றி ஏதும் சொல்லவே தேவையில்லை. ரவீந்திர நாத் தாகூரையும், மாயா ப்ளீசெட்ஸ்காயாவையும், சத்யஜித் ராயையுமே தன் நடனத்தில் மயங்கச் செய்தவர் அவர். ஒரு உன்னத நிகழ்ச்சி. பரதமே சிருங்காரம் தானே, சிருங்காரத்தை விட்டால் பரதம் ஏது? என்பவர் அவர். இப்படி ஒரு பார்வை வித்தியாசத்துக்கெல்லாம் இக்கலையில் இடம் உண்டு தான். சிருங்காரத்தையே முற்றிலுமாக ஒதுக்கி பக்தியையே அழுத்தமாகக் கொள்ளும் ருக்மிணி தேவிக்கும் இதில் இடம் உண்டு தான். அதுதானே நடனம் பிறந்த பரிணாமம் பெற்ற வரலாறே. ஆனாலும் நான் பார்த்த ஒரு காட்சி
.
உன்னைத் தூதனுப்பினேன் என்னடி நடந்தது உள்ளது உரைப்பாய் சகியே
என்னடி நடந்தது? என்ற கேள்வி கேட்கும் முகத்தின் பாவங்களும், ஆங்கீகா அபிநயமும், கண்கள் பேசும் பாவங்களும் ஒன்றல்ல, இரண்டல்ல. முதலில் சாதாரண கேள்வி, பின்னர், தோழிக்கு வழியில் ஏதோ நேர்ந்து விட்டதோ என்ற கவலை, பின்னர், போன இடத்தில் வேறு யாரும் அவளை ஏதும் செய்து விட்டனரோ என்ற கலக்கம், இது தலைவன் செய்துவித்த கோலம் என்றால், அது தன்னை நினைந்து தூது சென்றவள் இரையானாளா, அல்லது, தலைவன்தான் தூது வந்தவளைத் தான் விடுவானேன் என்று செய்த அலங்கோலமா, அல்லது, தூது சென்றவளே தலைவனை மயக்கித் தனக்குச் செய்த துரோகமா... இப்படி 'என்னடி நடந்தது?" என்ற சாதாரணமாகத் தோன்றும் கேள்வியில், நடனமாடும் பெண்ணின் கற்பனைக்கும் நடனத் திறனுக்கும் ஒரு விஸ்தாரமான வெளியை பரதமும் அதன் சஞ்சாரி பாவமும் உருவாக்கிக் கொடுத்து விடுகின்றன. அது ஒரு உலகம். ஒரு அனுபவம். அப்போதே நடனமாடும் கணத்தில் தோன்றி அப்போதே மறையும் அனுபவம். நினைவுகள் மாத்திரம் தங்கி, பின் காலம் மெதுவாக மங்கி மறையச் செய்துவிடும் அனுபவம். இப்போது தங்கி இருப்பது பதம் மாத்திரமே.
இது தான் ஒரு சில கலைகளின் உன்னதமும் சோகமும். அகப்பாடல்களும் சரி, பக்தி கால தேவாரமும், பாசுரங்களும் சரி. எழுதப்பட்டவை அல்ல. பாடப்பட்டவை. பின்னர் நினைவு கூர்ந்து சேர்க்கப்பட்டவை. எத்தனை அழிந்தனவோ தெரியாது. லக்ஷக்கணக்கில் ஞான சம்பந்தர் பாடியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மிஞ்சியுள்ளது முன்னூத்திச் சொச்சம். இப்படித்தான் கீர்த்தனைகளும் பதங்களும். தியாகய்யர் பாடியதில் கிடைப்பது எழுநூறோ என்னவோ தான். இராமலிங்க ஸ்வாமிகள் பாடிச் செல்ல பாடிச் செல்ல உடன் சென்றவர்கள் பின் நினைவிலிருந்து எழுதியவை தாம் மிஞ்சியவை. இப்படித்தான் பதங்களும், ஜாவளிகளும். §க்ஷத்திரக்ஞர் பாடப் பாட அருகில் இருந்து கேட்டவர்கள் எழுதி வைத்தவை தான் எஞ்சியவை. தமிழிசை இயக்கம் இருந்திருக்க வில்லையெனில், எவ்வளவு பதங்களும் கீர்த்தனை களும், மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர், சுப்புராமயயர் போன்றவர்களது கிடைத்திருக்கக் கூடும் என்பது தெரியவில்லை. கிடைத்த ஜாவளிகள் என, டி.பிருந்தா தொகுத்து ம்யூசிக் அகாடமி பிரசுரித்தது என ஒரு குறிப்பு மு. அருணாசலம் ஆங்கிலத்தில் எழுதியுள்ள தமிழ் இசைப் பாடலகள் பற்றிய புத்தகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. என் பிரதியில் புத்தகத்தின் பெயர் கூட இல்லை.
எத்தனை பேருக்கு
என்றைக்கு சிவகிருபை வருமோ - ஏழைஎன் மனச் சஞ்சலம் அறுமோ
என்ற பதம் நீலகண்ட சிவன் எழுதியது என்பது தெரிந்திருக்கும். இதே போல,
வள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும்உள்ளங்குழையுதடி கிளியே - ஊனுமுருகுடீ
என்ற கிளிக்கண்ணி ஏதோ சித்தர் பாடல் என்று நான் என் அறியாமையில் ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன். இது அம்பா சமுத்திரம் சுப்பராயஸ்வாமி என்பவர் இயற்றியது. இது இன்னும் நிறைய கண்ணிகளைக் கொண்டது. அவர் ஒரு தலைமைக் காவலராக (ஹெட் கான்ஸ்டபிள்) இருந்தவர் என்றும் தெரிகிறது. அவர் கண்ணிகள் தான் ஏதோ சித்தர் பாடல் போல், நாட்டுப் பாடல் போல மிகப் பிராபல்ய மாகியிரு க்கிறதே தவிர பாவம் அம்பா சமுத்திர ஏட்டையாவை நாம் மறந்துவிட்டோம் என்று தோன்றுகிறது. "என்னடி நடந்தது" எனற பதத்திற்கு அபிநயித்த நடனமணி யார் என்பதும் அவரது அன்றைய மாலை கலையும் அன்று பார்த்த ரசிகர்களின் நினைவுகளோடு மறைந்து விட்டது போல.
நமது வரலாற்றில் எல்லாமே வாய்மொழியாகத்தான் ஒரு தலைமுறை தன் கலைகளை இன்னொரு தலைமுறைக்கு கொடுத்து வந்துள்ளது. அப்படித்தான் கலைகள் ஜீவித்து வந்துள்ளன. எழுத்து தோன்றிய பின்னும் வாய்மொழி மரபின் முக்கியத்துவம் முற்றாக மறைந்து விடவில்லை. பாரதியே தனக்குச் சொல்லிக்கொடுத்துள்ள பாடம் வேறு, அச்சில் வந்துள்ள பாடம் வேறு என்று சிறுமியாக பாரதி பாடக்கேட்டு வளர்ந்த யதுகிரி அம்மாள் தன் பாரதி நினைவுகளில் எழுதுகிறார். பாரதிக்கே அந்த கதி என்றால், தாசிகளின் நடன வாழ்க்கையில் தான் பதங்கள் வாழும் என்ற நிலையில், தாசிகளும் சமூகத்தால் இழிவுபடுத்தப்பட்டு, கோவில்களும் அவர்களைக் கைவிட்ட நிலையில், பதங்களுக்கும் ஜாவளிக்கும் நேரும் கதியைப் பற்றிச் சொல்லவேண்டும். நேற்று மறைந்த பால சரஸ்வதியின் ஆட்டப் பட்டியலைப் (repertoire) பார்த்தால் பிரமிக்க வைக்கும் எண்ணிக்கையில் அதில் வர்ணங்களும்(13), பதங்களும்(97), ஜாவளிகளும்(51) இருக்கும். அவ்வளவு நிறைவான ஆட்டப்பட்டியல் வேறு யாருக்கும் இருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் பாலசரஸ்வதிக்கு இவை எல்லாம் தஞ்சை சகோதரர் காலத்திலிருந்து அவர் குடும்பத்திற்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தவை. அவர் குடும்ப சொத்து போல. அந்த வரலாற்றின் தாக்கம் அதில் இருக்கும். எதற்குச் சொல்கிறேன் என்றால் பாலசரஸ்வதியின் இந்த ஆட்டப்பட்டியலில் தமிழின் பங்கு என்ன என்று பார்த்தால் ஏமாற்றமாக இருக்கும். 13 வர்ணங்களில் 2 தமிலிலும், 97 பதங்களில் தமிழ்ப்பதங்கள் 39-ம், இருந்தன. 13 ஜாவளிகளில் தமிழ் ஜாவளி என ஒன்று கூட இல்லை. இப்போது பால சரஸ்வதி இல்லை. அவரைச் சொல்லிக் குற்றம் இல்லை. அன்றைய நிலை அப்படி. மேடையில் ஆடப்பட்டால் தான் தமிழ்ப் பதங்களும் வர்ணங்களும், ஜாவளிகளும் வாழும். வாய்மொழி மரபின் இடத்தை அச்சு எடுத்துக்கொண்டுவிட்ட பிறகு அவை அச்சிலாவது பதிவாக வேண்டும்.
தற்செயலாக நடை பாதையில் கிடைத்த புத்தகங்களில் அச்சிடப்பட்டிருக்கும் பதங்களையும் ஜாவளிகளையும் ஒன்று சேர்த்துத் தரலாமே என்ற எண்ணம் ஒரு கிருஷாங்கினிக்குத் தோன்றி இந்த தொகுப்பு நம் கைகளுக்கு இப்போது வந்துள்ளது. நிறைய இன்னும் இருக்கின்றன. கிருஷாங்கினியைப் போல நம் கண்ணுக்குப் படுவதையெல்லாம் நாம் தொகுப்பது நம் மண்ணுக்கும், மொழிக்கும், கலைகளுக்கும் நாம் ஆற்றும் கடமையாகும்.
கடைசியில் எனக்கு ஏற்பட்ட ஒரு ஆச்சரியத்தைச் சொல்லத் தோன்றுகிறது. எனக்குள் கோபால கிருஷ்ண பாரதியைப் பற்றி ஒரு பிம்பம் இருக்கிறது. அது அவரது நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, பின் அவரைப் பற்றி உ.வே. சா எழுதியுள்ள சின்ன வாழ்க்கைச் சரிதம் இவற்றிலிருந்து பெற்றது. கிருஷாங்கினியின் தொகுப்பில் கோபால கிருஷ்ண பாரதியின் பெயரில் ஒரு கீர்த்தனை இருக்கிறது.
பேயாண்டி தனைக் கண்டு நீயேண்டி மையல் கொண்டாய்பெண்களுக்கழகாமோ...
என்ற பல்லவியுடன் தொடங்குகிறது அது. சிவனைப் பற்றியது தான். நிந்தாஸ்துதி தான். இருப்பினும் இப்படியும் கோபால கிருஷ்ண பாரதி எழுதியிருக்கிறாரா? என்று ஆச்சரியப்பட வைத்தது இது.
-_______________________________________________________________________________________________ தமிழில் பரத நாட்டியப் பாடல்கள்: தொகுப்பு: கிருஷாங்கினி: சதுரம் பதிப்பகம், 34- சிட்லபாக்கம் 2-வது பிரதான சாலை, தாம்பரம் சானடோரியம், சென்னை-47 பக்கம் 204 -ரூ 100
வெங்கட் சாமிநாதன்/4.3.08
Friday, March 21, 2008
நினைவுகளின் தடத்தில் - (10)
நான் அதிக நேரம் வீட்டின் கொல்லைப்புறத்தில் தான் செலவழித்தேன் என்று சொல்ல வேண்டும். எனக்கு அது பிடித்திருந்தது. கொல்லையில் ஒரு போரிங் பம்ப் இருந்தது. அதிலிருந்து தான் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அந்த வேலையும் தோட்ட வேலையில் அடங்கிவிட்டதால், பெரும்பாலும் தண்ணீர் பாய்ச்சுவது என் வேலையாகவே இருந்தது. நான் அதை ஒரு வேலை யாகவே எண்ணவில்லை. அதுவும் விளையாட்டாகப் போயிற்று.
அங்கு மூன்று கொய்யா மரங்கள் இருந்ததென்று சொன்னேன். ஒரு வருடம் அது அமோகமாகக் காய்த்தது. பழங்கள் சாப்பிட்டு மாளாது. பக்கத்து வீடுகளுக்கும் கொடுத்தோம். நானும் என் பாட்டுக்குத் தின்று கொண்டி ருந்தேன். கொய்யாப் பழம் பறித்து தின்பது என்பது ஏதோ மாலையில் செய்யும் காரியம் என்றில்லை. பழமாயிற்றே. தோட்டத்தில் இருக்கும் போதெல்லாம் கொய்யாப் பழம் தின்பேன். மூச்சு விடுவது மாதிரி. அதற்கு என ஒரு நேரம் காலம் உண்டா என்ன? யாரும் கண்டு கொள்ள வில்லை. "பையன் தோட்டத்தைப் பாத்துக்கறான் நன்னா" என்ற ஒரு எண்ணத்தை அவர்கள் மனத்தில் வைத்தாயிற்று. பின் யார் தடை சொல்வார்கள்?
காலையில் பழையது சாப்பிட்டுப் பள்ளிக்கூடம் போனால், மத்தியானம் சாப்பாட்டுக்கு வீடு வந்துவிடுவேன். பசங்களும் வாத்தியார்களும் சரி, அப்படித்தான். அனேகமாக எல்லோருக்கும் மத்தியானம் வீடு போய்த் தான் சாப்பாடு. அன்று எப்போ மத்தியான மணி அடிப்பார்கள், வீட்டுக்குப் போகப் போறோம் என்பதை ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் அன்று பாட்டி வெங்காய சாம்பார் பண்ணியிருப்பாள். எனக்கு ரொம்ப பிடிக்கும். பாட்டியிடம் கேட்டு நச்சரித்திருந்தேன். "சரிடா இன்னிக்கு பண்ணிவைக்கறேன் ஸ்கூலுக்குப் போ," என்று பாட்டி அலுத்துக் கொண்டே சொல்லியிருக்கிறாள்.
பாட்டிக்கு கிழங்குகள், வெங்காயம் எல்லாம் ஒதுக்கப் பட்டவை. சாப்பிடமாட்டாள். இங்கிலீஷ் காய் கறிகள் இல்லையா? வைதீக குடும்பத்தில் ஒரு விதவை இதையெல்லாம் சாப்பிடமாட்டாள். கிழங்குகளோ இல்லை வெங்காயமோ சமையலில் சேர்ந்தால், பாட்டி அதில் எதையும் தொடமாட்டாள். ரசமும் மோரும் மாத்திரம் சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவாள். ஒரு வேளை தான் சாப்பிடுவாள். காலையில் கா·பி. பின் மத்தியானம் சாப்பாடு. பின் ராத்திரிக்கு தோசையோ ஏதோ சாப்பிடுவாள். அவ்வளவு தான். இப்போது தான் நினைத்துக் கொள்வேன். ஏன் அப்படி யெல்லாம் பிடிவாதம் பிடித்தோம் என்று. இப்போது நினைத்து என்ன பயன்? அப்போது என் ருசியும் நாக்கும் தான் எனக்குப் பெரிதாக தெரிந்தது. எனக்கு மாத்திரம் இல்லை. மாமா ஒன்றும் கேட்க மாட்டார். ஆனால் மற்றவர்களுக்கெல்லாம் வெங்காய சாம்பாரோ மற்றதோ சமைத்தால் குஷி தான். சிறிசுகள் இவ்வளவு பேருக்கு பிடிக்கிறதே, குழந்தைகள் தான். நாங்கள் மூன்று பேர், எனக்கு ஐந்து அல்லது ஆறு வயது பெரிய சின்ன மாமாவையும் சேர்த்தால் ஐந்து பேர்கள் சிறிசுகள் ஆசைப்பட்டு சாப்பிடறதை, தான் சாப்பிடக் கூடாது என்பதற்காக சமைக்காமல் இருப்பதா என்று பாட்டிக்கு ஒரு ஆதங்கம் வருத்தும்.
எப்போடா மணி அடிக்கும் என்று காத்திருந்தேனே ஒழிய, எனக்கு வீட்டுகு வரும் பாதி வழியிலேயே சுரம் வந்து விட்டது. எப்படியோ வீட்டுக்கு வந்ததும் படுத்துக் கொண்டு விட்டேன். பாட்டி என்னை, எங்களைத் தொடமாட்டாள். தொட்டால் குளிக்க வேண்டும். என்னடா பண்றாது? என்று கேட்டு படுத்திருக்கும் என் முனகலையும், பார்த்து சுரம் என்று தெரிந்து கொண்டு விட்டாள். அடுத்த சில நிமிஷங்களில் வந்த மாமாவிடம், "சுரம் போலே இருக்குடா சுப்புணி, பாரு" என்றாள். மாமா தொட்டுப் பார்த்துவிட்டு 'சுரம் தான், உடம்பு கொதிக்கிறது" என்றார். அன்று பூராவும் பாட்டி அரற்றிக்கொண்டே இருந்தாள். "ஆசையா வெங்காயம் போட்டு சாம்பார் வையின்னு சொன்னான் பாரு, சாப்பிடக் கொடுத்து வக்கலை." என்று. "அவன் என்னமோ கொள்ளை போறாப்பல மரத்திலே இருக்கற கொய்யாப் பழத்தை, கொஞ்ச நஞ்சமாவது விட்டு வச்சாத்தானே, எப்போ பாரு வாயிலே கொய்யப்பழம். உடம்பு என்னத்துக்காகும்? சுரம் வராம என்ன செய்யும்?." என்று சத்தம் போட்டார். "சரி போறது போ. சுரத்திலே அவனை ஒண்ணும் சொல்லாதே" என்று பாட்டி சமாதானப் படுத்தினாள்.
தனக்கு மறுக்கப்பட்டது எதுவும் குழந்தைகளுக்கும் ஏதோ காரணத்தால் கிடைக்காமல் போவதை பாட்டியால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. அந்த நாள், இப்படி பல சம்பவங்கள், எனக்கு திரும்பத் திரும்ப மனதில் அலையோடும். அத்தோடு உடனே இன்னும் பல காட்சிகள் நிழலாடும். மதுரை சேதுபதி ஹைஸ்கூலில் ஒன்பதாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். காலையில் சாப்பிட்டு விட்டுப் போனபிறகு மத்தியானம் சாப்பாட்டுக்கு வடக்கு வெளி வீதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வருவேன். "படிக்கிற பையன், சின்ன வயசு, மத்தியானம் வந்து கொஞ்சம் மோரைப் போட்டு சாப்பிட்டுப் போகட்டும். அதுக்கு நீங்க ஒண்ணும் கொடுக்க வேண்டாம்" என்று ஹோட்டல் மானேஜர் தானே, மாமா கேட்காமலே சொல்லியிருந்தார். அந்த ஹோட்டல் சிம்மக்கல் வருவதற்கு கொஞ்சம் முன்னாலே இருந்தது. ஆக, நடை கொஞ்ச நீள நடை தான். பாதி வழியில் ஒரு வீட்டின் முன்னே லாரி ஒன்று நின்றிருந்தது. அதைச் சுற்றிக் கூட்டம். வீட்டு வாசலில் ஒரு விதவைப் பாட்டி கதறிக் கொண்டிருந்தாள். " குழந்தை சாப்பிட வரணுமே இன்னம் காணலியேன்னு காத்திண்டிருந்தேன். இப்படி குழந்தைய பிணமாக் கொண்டு சேத்திருக்கேளே" என்ற அவள் கதறல் எனக்கு இன்னும் மறக்கவில்லை. இந்தக் காட்சிகள் எல்லாம் ஒன்றையொன்று சங்கிலி போல் தொடர்ந்து மனதில் நிழலாடிச் செல்லும்.
அவர்கள் துக்கம் சிறு வயதில் நமக்கென்ன தெரியும். பாட்டிக்கு என்னிடம் பிரியம் அதிகம். அது எனக்கு வயதான பிறகு தான் தெரிகிறது. அப்போது பாட்டியை சில சமயம் வருத்தியுமிருக்கிறேன். "ஏண்டா இப்படி படுத்தறே" என்று திட்டுவாள். சில சமயம் "நீ நாசமத்துத் தான் போவே" என்பாள். அப்போது அது வசவாகத்தான் என் காதில் விழும். இப்போது அந்த "நாசமத்து" என்ற வசவை அவர்கள் எப்படிக் கற்றார்கள்? எப்படி அசாத்திய கோபத்தில் கூட "நாசமத்து" என்று வார்த்தைகள் விழுகின்றன என்று யோசித்தால் ஆச்சரியமாக இருக்கும்.
பாட்டிக்கு கா·பி இல்லாமல் ஆகாது. காலையிலும் சாயந்திரமும் கா·பி சாப்பிடவில்லையென்றால் பாட்டிக்கு தலைவலி வந்துவிடும். கா·பிக்கு மாத்திரம் விதி விலக்கு எப்படி வந்தது? என்று இப்போது கேட்கத் தோன்றுகிறது. ஆனால் இப்போது ஒரு வயதான விதவையிடம் அந்த மாதிரி யெல்லாம் கேட்க மாட்டோம். அவர்கள் தமக்கு மறுத்துக்கொண்டுள்ளது எத்தனையோ. சின்ன வயதில் கேட்டிருப்பேன் அப்போது ஆனால் அந்த மாதிரி சிந்தனையெல்லாம் செல்லவில்லை. பாட்டி ஏன் வெங்காயம் சாப்பிடமாட்டாள்? என்றெல்லாம் அப்போது ஆராயத் தோன்றவில்லை. என்னமோ அவளுக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவே விஷயம்
.
இப்போது நினைத்துப் பார்க்கும் போது பாட்டிக்கு கா·பி பழக்கம் எப்போது எப்படி ஏற்பட்டது என்று நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. மாமா கும்பகோணம் காலேஜில் எ·ப் ஏ பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் போது, தாத்தா இறந்துவிட்டார் என்று சொல்லி ஒரு ஆள் போய் அவரை சுவாமி மலைக்கு அழைத்து வந்துவிட்டார்கள். மாமா எ·ப் ஏ பரீட்சை எழுதினார் என்றால் அது அவரது 18 வது வயதில் இருக்கும். மாமா 1910-ல் பிறந்தவர். ஆக பாட்டி விதவையான வருடம் 1928 என்று ஒரு உத்தேசக் கணக்கு போடலாம். ஆக 1928-க்கு முன்னாலேயே கா·பிக்கு தமிழ் நாட்டுக் குடும்பங்கள் அடிமையாகி விட்டன போலும். 1921- ல் மறைந்த பாரதி கா·பி பற்றிப் பேசவில்லை. உ.வே.சாவும் பேசவில்லை. அவர்கள் கா·பி சாப்பிட்டதாக பதிவுகள் ஏதும் இல்லை
.
1950-ல் நான் ஹிராகுட் போய் வேலைக்குச் சேர்ந்தேன். அது அனேகமாக ஒரு பழங்குடி இனத்தவர் கணிசமாக வாழும் பகுதி. பஞ்சாபிகள் தான் அணைக்கட்டு வேலைக்கு முதலில் வந்து சேர்ந்தனர் அதிக அளவில். அவர்களுக்கும் அப்போது டீயோ கா·பியோ என்னவென்று தெரியாது. அவர்கள் வீட்டுக்குப் போனால், பால் சூடாக கொடுப்பார்கள். ,அல்லது தயிரைக் கெட்டியாகக் கரைத்து, லஸ்ஸி என்று கொடுப்பபர்கள். டீயா, லஸ்ஸியா என்ன சாப்பிடுவீர்கள்?" என்று தான் அப்போதெல்லாம் அவர்கள் உபசரிப்பார்கள். அப்போதுதான் எங்கள் காலனியில் ஒரு வானில் டீ போர்டு ஆட்கள் வந்து ஆங்காங்கே வண்டியை நிறுத்தி எல்லோருக்கும் சூடாக டீ போட்டுக் கொடுப்பார்கள். இலவச மாகத் தான். அது ஒரு பத்து பதினைந்து நாட்கள் நடந்தது. இலவசமாகக் கொடுத்துப் பழக்கப் படுத்தி விட்டால், பின்னால் தானே வாங்க வருவார்கள் என்று அந்த ப்ரமோஷன் காம்ப்பெய்ன் நடந்தது. இப்போது யார் வீட்டிலும் டீ தான் சாப்பிடக் கொடுப்பார்கள். லஸ்ஸி, பால் உபசாரம் செய்யும் காலம் போய்விட்டது.
அப்படி ஏதும் பிரசாரம் கா·பிக்கு நடந்ததாகத் தெரியவில்லை. அதிலும் கா·பிக்கு தென்னிந்தியர்கள் எப்படி பழக்கமானார்கள், வட இந்தியர்கள் எப்படி டீ பிரியர்களானார்கள் என்பது சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும். வடக்கு தெற்கு வித்தியாசங்கள் இருக்குமோ என்னவோ 1967-க்கு முன்னால் திராவிட கழகத் தலைவர் களைக் கேட்டிருக்கவேண்டும். இப்போது அவர்கள் வடக்கு தெற்கு என்று பேசுவதில்லை.
Wednesday, March 12, 2008
அவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்
எங்கள் தெருவின் மூத்த குடிமகன் நேற்று இறந்து விட்டார். கொஞ்ச நாளாகவே அவரை வீட்டுக்கு வெளியே காணவில்லை. அவரை வீட்டுக்கு வெளியே காணவில்லை என்பதே எங்களுக்குக் கொஞ்ச நாள் பொறுத்துத் தான் தெரிய வந்தது. இப்போதெல்லாம் அவர் அனேகமாக வீட்டினுள்ளே தான் அடைபட்டுக் கிடப்பார். எப்போதாவது தான் அவர் வெளியே வருவார். திறந்த மார்புடன், இடுப்பு வேட்டியை தூக்கிக் கட்டிக்கொண்டி ருப்பார். சில சமயம் அவரை வெறும் துண்டுடன் காணநேரும். வீட்டின் முன் இருக்கும் செமெண்ட் பெஞ்ச் போன்ற இருக்கையில் உட்கார்ந்திருப்பார். அவருக்கென சில வயது முதிர்ந்த நண்பர்கள் உண்டு. அவர்கள் எப்போதாவது வருவார்கள். சைக்கிளில் ஒருவர் வருவார். போகும் வழியில் சைக்கிளை நிறுத்தி, இரும்பு கேட்டைத் திறந்து உள்ளே போய் அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வார். பேசிக்கொண்டிருப்பார்கள் இருவரும். இப்படி சிலர் அவ்வப்போது வந்து போவார்கள். அவர்கள் வருகையும் சில நாட்களாக காணப்பட வில்லை. அவருக்கு உடல் நலம் சரியில்லை என்று தான் அவர்கள் வராதிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. அவர் வீட்டு முன் இருக்கையில் உட்கார்ந்திருக்கக் காணாது அவர்கள் தம் வழி போயிருக்கக் கூடும். நான் என் வீட்டு முன் திண்ணையில் (sit out) உட்கார்ந்த படி பத்திரிகை படிக்கும் போது அல்லது வேறு எந்த வேலையிலும் இருக்கும்போது அவர் தன் வீட்டு முன் இருக்கையில் இருப்பதும் இல்லாததும் கண்களில் படும். நான் அவர் அவ்வாறு வெளியே உட்கார்ந்திருக்கும் வேளைகளில் அவரிடம் சென்று பேசுவோம் என்று நினைத்தது கிடையாது. என்னவோ, ஏதும் காரியம் இல்லாது இங்கு நான் எவர் வீட்டுக்குள்ளும் போனது கிடையாது.
இறந்த பெரியவரின் வீட்டுக்கு நான் சில முறை போயிருக்கிறேன். ஏதோ விசேஷங்களுக்காக என்று தான். அவருடைய பெண்ணுக்கு குழந்தைகள் பிறந்த இரண்டு முறை. அவருடைய மகனுக்கு குழந்தை பிறந்த இரண்டு முறை. பின் அவருடைய மகனின் முதல் குழந்தை பிரசவத்திலேயே இறந்த போது. அந்த குழந்தை இறந்தது அவர் வீட்டினருக்கு மாத்திரம் இல்லை. எங்களுக்கும் அது துக்கமாகத் தான் இருந்தது. காரணம் அவரது மகனுக்கும் மறுமகளுக்கும் மாத்திரமில்லை, அவருக்கும் தன் மகன் வழியில் சந்ததி இல்லாது போய்விடுமோ என்று வேதனைப் பட்டுக் கொண்டிருந்ததை, அவர்கள் சொல்லாமல் நாங்கள் உணரமுடிந்திருக்கிறது. மகன் சிறுவயதிலேயே போலியோவினால் கால் ஊனமுற்றவன். மறுமகள் தன் புருஷனிடம் ஒட்டுதலோடு தான் இருந்தாள். அவர்கள் வீட்டில் சண்டை நடந்தால் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் காதை அடைத்துக் கொள்ள முடியாது. வீட்டுக்கார அம்மாள் மிகக் கொடூரமாகத் தான் திட்டுவாள் தன் மருமகளை. அதுவும் உரத்த குரலில். வீட்டில் வேறு யார் குரலும் கேட்காது. இறந்த நண்பர், வாய் பேசமாட்டார். அமைதியாகத்தான் இருப்பார். அவர் கோபித்தோ, கடுமையாகப் பேசியோ நான் கேட்டதில்லை.
வீட்டில் வீட்டுக்கார அம்மாள் தான் எந்த விஷயத்திலும் கடைசி முடிவு எடுக்கும் அதிகாரம் பெற்றவர் போலும். அதுவும் தவறு. கடைசி முடிவு என்று சொல்ல முடியாது. அவர் சொன்ன சொல்லுக்கு ஏதும் விவாதம் நடந்தால் தானே கடைசி முடிவு என்று சொல்லலாம். என்ன செய்ய வேண்டும் என்று அந்த அம்மாள் சொல்வார். அது மறு பேச்சின்றி நடத்தப்படும். இப்படித்தான் விஷயங்களை நாங்கள் வெளியிலிருந்து யூகித்துக் கொள்ளமுடிந்தது. ஏனெனில் எந்த விஷயத்திலும் அந்த அம்மாள் சொல்வார். அது பற்றி விவாதம் நடந்ததாக எங்களுக்குப் பட்டதில்லை. இறந்த பெரியவர் குரல் என்றும் கேட்டதில்லை. இந்த வீட்டு விவகாரங்களையெல்லாம் தன் மனைவியின் முடிவுக்கே விட்டு விடுவது அவருக்கு சுலபமாகவும், விவாதங்கள் எழுமாயின் விளையும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வழியாகவும் அவருக்குத் தோன்றியிருக்கக் கூடும். 72 வயதான அவருடைய நீண்ட தாம்பத்யத்தில் அனுபவமும் விவேகமும் நிறைந்த காரியமாகத் தான் அது இருந்தி ருக்கும். கடந்த இரண்டு மூன்று வருஷங்களாகவே அவர் அவ்வளவு ஆரோக்கியத்துடன் இருந்ததாகச் சொல்ல முடியாது. ஒரு நாள் நடு இரவில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவசர அவசரமாக கொஞச தூரத்தில் இருந்த இருதய நோய் மருத்துவரிடம் சென்றதும், இரவு பூராவும் அவர் மருத்துவ மனையின் கண்காணிப்பில் இருந்ததும் மறு நாள் காலையில் தான் எங்களுக்குத் தெரிய வந்தது. அதன் பின் வெளியில் இருக்கும் எங்களுக்கு வீட்டுப் பொறுப்பு அத்தனையும் அந்த அம்மையார் தான் கவனித்துக் கொண்டார் எனத் தோன்றிற்று.
அந்த அம்மையார் தான் வீட்டு வேலைகள் அத்தனையையும் செய்பவர். அவ்வப்போது வந்து போகும் மகள் அம்மாவின் செல்லத்திற்கு உரியவள். குழந்தைகளை பாட்டியிடம் விட்டு விட்டு வேலைக்குப் போவாள். சாயந்திரம் வேலையிலிருந்து திரும்பியதும் இங்கு வந்து ஒரு ஆட்டோவில் குழந்தையை அழைத்துக்கொண்டு இரண்டு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் தன் வீடு செல்வாள். இப்போது இரண்டு குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அந்த வீட்டு அம்மாளின் மீது சுமந்திருந்தது. செல்லம் கொடுத்து பிடிவாதம் வளர்ந்துள்ள ஏழு வயதுப் பெண் ஒன்று. பின் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று. அந்த அம்மாள் முகம் சுணங்கி நாங்கள் பார்த்ததில்லை. அந்தக் குழந்தைகள் இரண்டும் பெண்ணின் குழந்தைகள்.
இப்போதெல்லாம் மகனும் மருமகளும் அவர்களுடன் இல்லை. இரண்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள ஒரு புறநகர் பகுதியில் தனியாக வசிக்கத் தொடங்கியுள்ளார்கள். மருமகளுக்கும் அடிக்கடி கேட்கும் வசைகளுக்கு ஒரு முடிவு கிடைத்த நிம்மதி. மகனுக்கு தான் சம்பாதித்து தன் குடும்பத்தை ரக்ஷ¢க்கும் பொறுப்பு. ஆனாலும் தனியாக வந்த நிம்மதியில் ஒரு சந்தோஷம். தனித்துச் சென்றபிறகு அவர்களுக்கு குழந்தை பிறந்தது எல்லோருக்கும் சந்தோஷம் தருவதாக இருந்தது. முதல் பிரசவத்தில் குழந்தை இறந்தது அக்குடும்பத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. "நீங்கள் வாய் திறந்து சொல்லாவிட்டாலும் மனதில் இந்தக் குறை உங்களை வருத்திக் கொண்டிருந்தது எனக்குத் தெரியும். இப்போது சந்தோஷம் தானே?" என்று என் மகிழ்ச்சியை அவரிடம் தெரிவித்தேன். அப்போது தான் முதன் முறையாக அவர் தன் வீடு சம்பந்தப்பட்ட சொந்த விவகாரங்களை மிக ஈடுபாட்டுடன் சொன்னார். அவர் எப்போதும் உணர்ச்சி வசப்படுபவர் இல்லை. ஆனாலும், அவர் பேச்சில் அடக்கி வைத்திருந்த வெகுநாள் ஆதங்கம் இப்போது வெளிப் படுவதை உணர முடிந்தது. மகன் சிறு பிராயத்திலேயே இப்படி அங்கஹீனனாகிப்போனதும், என்ன்வெல்லாம் வைத்தியங்கள் பார்த்தும் குணமாகாது போய்விட்ட வருத்தமும், அவனுக்கு கல்யாணம் செய்யப்பட்ட பாடும், பின் பிரசவத்தில் குழந்தை மரித்ததும், அவனுக்கு குழந்தை பாக்கியமே இல்லாது போய்விடுமோ என்று வேதனைப் பட்டதுமான ஒரு பெரிய கதையே அவரிடமிருந்து வெளிப்பட்டது. இம்மாதிரியான சமயங்களில் எந்த மனிதனுக்கும் ஒரு ஆற்றாமையில் எழும் 'கடவுளே, ஆண்டவனே" என்ற பெருமூச்சுடன் வெளிவரும் வார்த்தையை அவர் உச்சரிக்கவில்லை. வெகு நிதான மாகத் தான் பேசிக்கொண்டு போனார். ஆனாலும் அதற்கிடையில், இந்த வீட்டில் இருக்கும் வரையில் அவர்களுக்குக் குழந்தை பிறக்காது என்றும் அது வாஸ்து சம்பந்தப்பட்டது என்று சொன்னதன் பேரில் அவர்கள் பிரிந்து சென்ற பிறகு இப்போது அவர்களுக்குக் குழந்தை பிறந்திருப்பதையும் சொல்லி அவர் சந்தோஷப்பட்டார். அவர்களால் தனித்து வாழ முடிகிறதா, போதிய வருமானம் வருகிறதா என்று கேட்டேன். அவ்வப்போது நாங்கள் உதவுவோம் என்று சொன்னார் அவர். ஆனால் என் மனைவி சொன்ன விவரம் வேறு மாதிரியாக இருந்தது. ஒரு நாள் மாமியார் மருமகளைத் திட்டும் படலம் மகனின் பொறுமைக்கு மீறிவிடவே, 'இனி நாங்கள் இங்கிருக்கப் போவதில்ல், நாங்கள் தனியாகப் போய்விடுகிறோம்" என்று சொல்லிவிட்டு மகன் மனைவியை அழைத்துக் கொண்டு தனியாகப் போயிருக்கிறான், என்று என் மனைவி சொன்னாள். "என்னங்கம்மா, அவங்களாலே சமாளிக்க முடிகிறதா, மகன் சம்பாதிப்பது வீட்டு வாடகைக்கே சரியாப் போய்விடுமே, பின் சாப்பிடுவது எங்கே?" என்று வீட்டுக்கார அம்மாளைக் கேட்டேன். "அவங்க என்னமோ தனியாப் போகணும்னாங்க. அவங்க அப்படி ஆசைப்படும் போது நாம ஏன் தடுக்கணும், அவங்களாலே முடியும்னா இருந்துக்கட்டுமே. முடியலேன்னு திரும்பி வந்தா வராதேன்னா சொல்லிடப்போறோம்?" என்று அந்த அம்மையார் சொன்னார்கள். இது என் மனைவி சொன்னதையே ஒரு வகையில் சாட்சியப்படுத்துவதாகத் தோன்றியது. அந்த அம்மையார் வாஸ்துவைக் காரணம் காட்டியிருக்கலாம். வம்பற்ற பாடு. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.
நண்பர் தனக்கென ஒரு தனி உலகத்தைச் சிருஷ்டி த்துக் கொண்டு அதில் அமைதி காண்கிறார் என்றே தோன்றிற்று
நான் சென்னையின் மடிப்பாக்கம் புறநகர் பகுதிக்கு எட்டு வருஷங்களுக்கு முன் குடி பெயர்ந்த போது, மடிப்பாக்கத்தின் எங்கள் தெருவின் மூத்த குடிமகன் அவர்தான் என்று சொல்லப்பட்டவர் அவர். எங்கள் தெருவுக்கென்ன, மடிப்பாக்கத்திலேயே அந்த விளைநிலங்களில் முதல் காலடி எடுத்து வைத்து வீடு கட்டியவர் அவராகத்தான் இருக்கவேண்டும். இரண்டு கிரௌண்ட் கொண்ட விஸ்தாரமான மனையில், 'இவ்வளவு தான் என்னால் முடியும் என்று சொல்லி விட்டேன், இது போதும் எங்களுக்கு" என்று ஒரு க்ரௌண்டில் வீடு கட்டிக்கொண்ட மடிப்பாக்கத்தின் முதல் குடிமகன் அவர். நாங்கள் இந்த தெருவுக்கு வீடு கட்டிக்கொண்டு வந்த போது, தெருவுக்கே மூத்தவராக, அனுபவமும், மனிதர் களிடையே செல்வாக்கும் மிகுந்தவராக அவரிடம் எல்லோரும் மரியாதை செலுத்தினார்கள். அப்போது புதியவனாக வந்து சேர்ந்த என்னிடம் அவர், நான் அணுகிய போதெல்லாம் அவரால் முடிந்த அளவு உதவ முயன்றார். என்னிடம் அடாவடித்தனமாக நடந்து கொண்ட ஒருவரை அவர் ஏன்? என்று கேள்வி கேட்கவில்லை. அது பாட்டிலே அது, என்று எனக்கு வேறு விதத்தில் உதவ முயன்றார். ஆக இருவரிடமும் அவருக்கு விரோதமில்லாது நடந்து கொண்டாயிற்று. சுற்றியிருக்கும் நாலைந்து தெருக்களு க்கான சங்கம் அமைத்த போது அதை பொறுப்பேற்று வழி நடத்தியவர் அவர். அப்போதும் தான் ஏதும் பொறுப் பேற்றுக் கொள்ளாது, வேலை செய்யும் மற்றவர்கள் செய்யும் வேலையில் குறைகள் காண்பதே தொழிலாகக் கொண்டு, அடாவடித்தனமாக குற்றம் சாட்டியவரை அவர் கடிந்து கொள்ளவில்லை. எதற்கும் சமாதானமாகப் போகும் வழி தான் அவரதாக இருந்தது.
எங்கள் வீடு கட்டி முடிந்ததும் புது மனை புகு விழாவிற்கு, மடிப்பாக்கதில் முன்னர் நிர்வாகியாக இருந்து நல்ல பெயர் வாங்கியிருந்த ஒரு இளம் அதிகாரி அப்போது முதல் அமைச்சரின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக முதலமைச்சரின் செயலகத்தில் இருந்தார். அவர் என்னுடன் நெருங்கிய நட்புணர்வு கொண்டிருந்தார். அவரும் வந்திருந்தார். ஒன்றிரண்டு முறை அவர் நம் அண்டை வீட்டு நண்பரின் வீட்டு தொலை பேசியில் என்னை அழைத்துப் பேசும் சந்தர்ப்பங்களும் இருந்தன. அதனால் தானோ என்னவோ மூத்த குடிமகனான நண்பர் என்னிடம் தாமாக வந்து தாராளமாக தயக்கம் இன்றி பேசும் பழக்கத்தையும் கொண்டிருந்தார். அப்போது தான் எனக்கு அவர் கருணாநிதியின் அருமை பெருமைகளை, நிர்வாகத் திறமைகளை, அவரது ஆட்சியின் மகிமைகளைப் பற்றியெல்லாம் வியந்து பாராட்டிப் பேசத் தொடங்கினார். கருணாநிதி கெட்டிக்காரர் தான். சாமர்த்தியசாலியும் கூட. ஆனால் நான் அவரது வியப்பையெல்லாம் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லை என்பதை அவருக்குச் சொல்வேன். "லஞ்சமெல்லாம் இந்தப் பசங்க, கீழே இருக்கற பசங்க செய்யறது, அவர் பேரு கெடுது", என்பார். "அப்படியென்றால் அது என்ன நிர்வாகம்?" என்று கேட்பேன். "அவருக்கு இப்படி ஆயிரங்கோடிக் கணக்கில் சொத்துசேர்ந்தது எப்படி?", என்று கேட்பேன். வாக்காளர் பதிவு நடந்து கொண்டிருந்தது. இரண்டு மூன்று முறை நான் முயன்றும் என் பெயர் பதிவாகவில்லை. என் நண்பர், முதலமைச்சர் செயலகத்தில் இருந்தவர் தம் அதிகாரத்தைச் செயல்படுத்திய பின்னும் என் பெயர் பதிவாகவில்லை. "வாருங்கள், நானும் வருகிறேன். பஞ்சாயத்து அலுவலகம் செல்வோம்" என்று சொல்லி அவர் பஞ்சாயத்து தலைவரிடம் சொன்னார். அவரும் இவர் சொல்வதைக் கேட்டு தலையாட்டினார். கடைசியில் நடந்தது என்னவோ ஒரு கூத்து. மடிப்பாக்கத்தின் மூத்த குடிமகனான அவர் பெயரே வாக்காளர் பட்டியலில், முதலில் இருந்தது இப்போது காணாமல் போயிற்று. என் பெயரும் பதிவாகவில்லை. என் மனைவியின் பெயர் வேறொரு வீட்டினரோடு சேர்க்கப்பட்டது. "இது தான் நீங்கள் பெருமைப் பட்டுக்கொள்ளும் ஆட்சியின் அழகு. உங்கள் பெயரையே காணோம்" என்றேன். அவர் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. வரும் வழியெல்லாம் "இந்தக் கோயில் இருந்த இடம் நான் வரும்போது குப்பை மேடாக இருந்தது. நாய்கள் படுத்துக் கிடக்கும். இப்போது கோவில் கட்டியிருக்கிறார்கள் பெரிதாக. மனுஷனுக்கு வாழ இடம் இல்லை. கோயில் கட்டி விடுகிறார்கள்" என்றார். "ஏரிகளை அல்லவா வளைத்துப் போட்டு மனைகளாக்கியிருக்கிறார்கள். மடிப்பாக்கமே நெல் வயலாக இருந்த இடம் தானே" என்று கேட்டேன். ஆனால், அவர் கருணாநிதியின் புகழ் பாடுவது நிற்கவில்லை. அவ்வப்போது முதலமைச்சர் செயலகத்தில் தானே உடனிருந்து பார்த்தது போல, என்னென்ன கட்டளைகளை முதலமைச்சர் அவ்வப்போது போட்டிருக்கிறார், எப்படி அவரது முடிவுகள் அசகாய புத்திசாலித்தனமானவை, தீரச்செயல் போன்றவை, என்று சொல்வார். அப்படி புகழ் பாடும்போது, அவர் தன்னை ஒரு நாஸ்திகராகக் காட்டிக்கொள்வார். தெய்வ நம்பிக்கையெல்லாம் மூடத்தனம் என்பதாக அவர் பேச்சு இருக்கும். அவர் குறிப்பாகப் பெயர் சொல்லாது மறைமுகமாக இந்த மூடத்தனத்துக்கெல்லாம் காரணமான மேல் ஜாதியைச் சாடுவார். "இப்படியெல்லாம் கோபப் படும் நீங்கள் இங்கு சுத்தியிருக்கும் அடாவடித்தனத்தை ஒரு முறை கூட கண்டித்ததாகக் காணோமே, அவர்களோடு சமாதானமாகத் தானே போகிறீர்கள், ஒதுங்கி விடுகிறீர்கள்" என்று கேட்பேன். ஜெய லலிதா ஆட்சி வந்ததும் கலைஞர் செய்ததையெல்லாம் கெடுத்துவிட்டதாகவும் லஞ்சம் பெருகிவிட்டதாகவும் சொல்வார். "இப்போ நடப்பதைச் சொல்வது சரி. ஆனால் முன்னால் என்ன வாழ்ந்தது? இந்த ஊழலை ஆரம்பித்து வைத்ததே அந்தப் பெருமகன் தானே. அது ஏன் உங்கள் கண்ணில் படமாட்டேன் என்கிறது?" என்று கேடடால் அதற்கு பதில் சொல்ல மாட்டார்.
அவர் மத்திய அரசாங்கத்திலோ அல்லது தமிழ் நாடு அரசிலோ வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். எங்கு என்பது எனக்குப் புரிந்ததில்லை. மத்திய அரசு என்று எனக்குத் தோன்றும். ஆனால் தான் வேலல பார்த்த்த இடங்கள் , தான் சண்டை போட்ட அதிகாரிகள் போன்ற விவரங் களைச் சொல்லும் போது, தமிழ் நாடு அரசு வேலை என்று தோன்றும். அவர் தனக்கும், தன் மகனுக்கும் நியாயமாகக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள், வேலை உயர்வுகள் கிடைக்காமல் போனது, "இந்த நாசமாப் போன ரிசர்வேஷன் காரணமாகத் தான்" என்று பல முறை அவர் வேதனைப் பட்டுப் பேசியிருக்கிறார். அவர் அலுவலகத்தி லேயே ரிசர்வேஷனில் பயனடைந்த அதிகாரிகளோடு வெளிப்படையாகப் பேசிய சம்பவங்களையும் அவர் சொல்லியிருக்கிறார்.
இதையெலாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் என் மனைவி, அவர் போன பின்பு, "இவர் தான் இப்படிப் பேசுகிறாரே ஒழிய அவர் வீட்டில், "எல்லாரும் கொள்ளையடிக்கிறாங்க. வர்ரவங்க எல்லாம் கொள்ளை யடிக்கத்தான் வராங்க, இதிலே அந்தக் கட்சி என்ன், இந்தக் கட்சி என்ன?" என்று அவங்க வீட்டுக்கார அம்மா சொல்றாங்க" என்பாள். என்னிடம் தாராளமாக அவர் மனம் விட்டுப் பேசுவது எதையும் அவர் வீட்டில் பேசுவது இல்லை என்று தான் தோன்றியது. இதுவும் என் யூகம் தான். எந்த விஷயத்திலும் அவர் தன் மனைவிக்கு எதிராக எதுவும் பேசிக் கேட்டதில்லை.
அவர் வீட்டின் முன் கூரை ஒன்று போட்டிருந்தது நான் வந்ததிலிருந்து பார்த்திருக்கிறேன். "அதை ஏன் எடுத்து விட்டீர்கள். வெயிலுக்கு பாதுகாப்பாக இருந்ததே?" என்று நான் கேட்டேன். "வாஸ்து, வாஸ்து" என்று சிரித்துக்கொண்டே கிண்டலாகச் சொன்னார்.. "வாஸ்துவா?" என்று நான் புரியாமல் கேட்க, "ஆமாம் அப்படித்தான் யாரோ வீட்டிலே சொல்லிட்டாங்க. அதை எடுத்துத்துட்டுத் தான் மறுவேலைன்னு எடுத்துட்டாங்க" என்றார். எனக்கு வருத்தமாக இருந்தது. அதன் பக்கத்தில் ஒரு பன்னீர் கொடி கூரை மேல் படர்ந்து நிறைய கொத்துக் கொத்தாக பன்னீர் புஷ்பங்கள் பூத்துக் குலுங்கும். "புழு வந்துட்டதுன்னு எல்லாத்தையும் எடுக்கச் சொன்னேன் என்று அந்தம்மா சொன்னாங்க" என்று என் மனைவி சொன்னாள். அதுவும் உண்மையாக இருக்கக் கூடும். ஏனெனில் அந்த அம்மாவுக்கும் என்னைப் போல் பூக்களின் மேல் மிகுந்த ஆசை உண்டு. அது தெரிந்தது. விடிகாலையில் அவர் வீட்டுக்குள் நுழைந்து சர்வ சுதந்திரமாக பூக்களைப் பறித்துச் செல்வதை அந்த அம்மாள் அனுமதிப்ப்பார். அதே சம்யம் வாசலில் பூக்களை விலைக்கு வாங்குவார். அந்த அம்மா நெற்றியில் பெரிதாக குங்குமப் பொட்டு இட்டுக் கொண்டிருப்ப்பார்கள். தலை வகிட்டிலும் தீட்டிய குங்குமத்தோடு தான் காட்சி தருவார்கள் எப்போதும். நிறைந்த பக்தி கொண்டவர்கள். தினம் விடியும் முன் எழுந்து வீட்டின் முன் பெருக்கு தண்ணீர் தெளித்து, பெரிதாக கோலம் போட்டிருப்பார்கள். விசேஷ தினங்களில் அது மிகப் பெரிதாகிவிடும் தெருவில் போவோர் வருவோர் அந்தக் கோலத்தை மிதித்துக் கொண்டே போகும் அந்த உதாசீனம் எனக்கு மிகுந்த கோபத்தையும் வெறுப்பையும் கொடுக்கும். மார்கழி மாதங்களில் ஒவ்வொரு நாளும் தவறாது, அந்த அம்மையார் வெளியே நின்று கொண்டிரு ப்பார். பஜனை கோஷ்டி அவர் வீட்டுக்கு முன் வந்ததும் அவர் அவர்களை சுற்றி வலம் வந்து தெருவிலேயே அவர்களை நமஸ்கரிப்பார். "பெரியவர்களை நமஸ்காரம் பண்ணலாம் தான். ஆனால் தெருவிலே எப்படி பண்றது? தெரு சுத்தமாவா இருக்கு?" என்பாள் என் மனைவி.
ஐயப்பன் கோவிலுக்கு அரிசி கொடுக்க வேண்டிக் கொள்வார். தன் வீட்டின் முன் அரிசியைக் கொட்டி வைத்துக்கொண்டு தெருவில் இருக்கும் பெண்கள் எல்லோரையும் அழைத்து தான் கொட்டி வைத்திருக்கு அரிசியை எடுத்து தானம் செய்யச் சொல்வார். சுற்றி யிருக்கும் கோவில்களிலிருந்து விழாக்காலங்களில் சுவாமி ஊர்வலம் எப்போது எங்கள் தெருவுக்கு வரும் என்று அந்த அம்மாவுக்குத் தெரியும் ஒரு நாள் கூட அவர் தேங்காய் பழம் சூடம் கொண்ட தட்டோடு இக்கட்டுரையின் நாயகர், இத்தெருவின் மூத்த குடிமகன், தட்டோடு ஸ்வாமி ஊர்வலத்திற்காக காத்திருப்பதைப் பார்க்க நான் தவறியதில்லை. தட்டைக் கொடுத்து ஏற்றிய சூடத்தைக் கண்ணில் அவர் மிகுந்த பவ்யத்தோடு ஒத்திக்கொள்வதை நான் பார்க்காத நாள் இல்லை. மிகுந்த பய பக்தியோடு காணப்படுவார். நம் வீட்டுக்கு வந்து இவ்வளவு தெய்வ நிந்தனை செய்பவர் எப்படி தவறாது இக்காட்சி தருகிறார் என்று நானும் என் மனைவியும் வியப்போம். கருணாநிதி புகழ் பாடினால் நான் அவரோடு வாதிடுவேனே தவிர, இந்த விஷயத்தை அவரிடம் பேசி அவரை வாயிழக்கச் செய்யும் மனம் எனக்கு இருந்ததில்லை. எங்கள் வீட்டில் பேசும் அவர் வேறு. அவர் வீட்டின் முன் தட்டு ஏந்தி ஸவாமி ஊர்வலத்திற்காகக் காத்திருக்கும் அவர் வேறு. எங்கள் வீட்டில் பேசும் அவரை அவர் மனைவி அறிவாரா என்பதே எனக்குச் சந்தேகம் தான்.
வெகு அமைதியாக, எவ்வித சச்சரவும் இன்றி, தன் நம்பிக்கைகளை, தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு, இரு வேறு எதிர் எதிர் உலகங்களில் வாழ்ந்து காட்டியவரா அவர்? உண்மையான அவரது ஆளுமை, ஆத்மர்ர்த்தம் நம்பிக்கைகள் என்ன? அவர் உணர்வோட்டங்கள் என்ன? அமைதி நாடி, வாழும் நிர்ப்பந்தங்களுக்காக வேறு வேறு மனிதராக, வீட்டிலும் தெருவிலும், உலகிலும் நண்பர்களிடமும் வாழ்ந்தவரா அவர்? எங்களுக்கும் மற்றவர்களுக்கும் அவராகக் காட்டிக் கொண்ட அவரைத் தான் எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும். தன் ஆசாபாசங்களை, தன் உள்ளுணர்வுகளை தன்னோடே அவர் எடுத்துச் சென்று விட்டார், அதை அவர் எங்களுக்குக் காட்டவில்லை என்று தான் தோன்றுகிறது. இனி அவர் தன் வீட்டின் முன் திறந்தமார்பும், இடுப்பில் கட்டிய வேட்டியுமாக நிற்கக் காணமுடியாது. தன்னோடு தன் உலகையும் அவர் எடுத்துச் சென்று விட்டார்.
வெங்கட் சாமிநாதன்/26.2.08
Wednesday, March 05, 2008
நினைவுகளின் தடத்தில் (9)
அடுத்த நாள் காலையில் பரிட்சை. அப்போது இரவு மணி ஏழோ ஏதோ இருக்கும். படித்துக் கொண்டிருந்தவன் புத்தகத்தை மூடிவைத்து விட்டு சத்திரத்திற்கு உடனே ஒடிப்போய் தண்டபாணி தேசிகர் ராஜமாணிக்கம் பிள்ளை யிடம் தனக்கு இருந்த பிரேமையைப் பற்றியும் அவரது வயலின் வாசிப்பில் தான் உருகியது பற்றியும் சொல்வதைக் கேட்க ராத்திரி பத்து பதினோரு மணி வரை அங்கேயே உட்கார்ந்திருப்பது எனக்கு மிக அவசியமாகி யிருந்திருக்கிறது. இது சரியில்லை என்று எனக்கு படவில்லை. "படிடா, நாளைக்கு பரிட்சை" என்று திட்ட அப்பாவோ, மாமாவோ, யாரும் இல்லை அங்கு எனக்கு. நான் எது சரி, எனக்கு எது பிடித்தது என்று நினைத்தேனோ அதைச் செய்ய எனக்கு சுதந்திரம் இருந்தது, அதை அனுபவிப்பதில் சந்தோஷம் இருந்தது. பரிட்சையில் தோற்றிருந்தால் என்ன ஆயிருக்கும், என்ன நினைத் திருப்பேன் என்று சொல்லத் தெரியவில்லை. அந்த மாதிரி தேர்வுகள் என் மனத்தில் ஓடியது என்றும் சொல்வதற் கில்லை.
நிலக்கோட்டையில் கிடைத்த நேரத்தில் எல்லாம் மாமா கல்யாணத்திற்கு அழைத்து வந்திருந்த சங்கீத வித்வான்கள் தங்கியிருந்த கூடத்திற்குச் சென்று அவர்கள் பேச்சையும் அரட்டையையும் கேட்டுக்கொண்டும், சாயந்திரம் கல்யாண பந்தலுக்குச் சென்று அவர்கள் பாடுவதையோ வாசிப்பதையோ இரவு வெகு நேரம் வரை கேட்டுக் கொண்டிருந்ததும் எனக்கு மிகுந்த உற்சாக த்தையும் சந்தோஷத்தையும் அளித்தன. அவர்கள் பேசியது புரிந்ததா, சங்கீதம் எனக்கு ஏதும் தெரியுமா ரசிக்க? என்பதெல்லாம் விஷயமே இல்லை. அப்படிப் பொழுது போக்குவது, விசித்திரமாகவும், புதிதாகவும் சந்தோஷம் தருவதாகவும் இவையெல்லாம் இருந்தன, அன்றாட வண்டிச் சகடை உருளலிருந்து வேறு பட்ட ஒன்று கிடைத்ததில் சந்தோஷம்.
அந்தக் காலத்தில் இரவு நேரங்களில் எப்போதாவது அபூர்வமாக ராப்பிச்சைக்காரன் யாராவது வருவதுண்டு. ஒரு நாள் வந்த ஒருவனின் நினைவு இப்போது நினைத்துப் பார்க்கவும் மனதுக்கு ரம்மியமாக இருக்கிறது. உண்மையில் அவன் பிச்சைக்காரனாக யார் வீட்டிலும் பிச்சை கேட்பதில்லை. பாடிக்கொண்டே வருவான். ஏதோ ஒரு வீட்டின் முன் நிற்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றும் போல. ஏதோ ஒரு உள்ளுணர்வில் தான் அவன் நிற்பதாகத் தோன்றும். உச்ச ஸ்தாயியில் அவன் பாடும்போது அந்த குரலின் கரகரப்பிற்கே ஒரு வசீகரம் இருப்பது போல் படும். அநாயாசமான கார்வைகள் வந்து விழும். விழும் என்று தான் சொல்ல வேண்டும். எப்படி இவ்வளவு நயமான குரல்! ஒரு இடத்தில் ஒரு பிசிறு விழுந்ததாகச் சொல்ல முடியாது. ஏதோ வீட்டிலிருப்பதைக் கொடுப்பார்கள். அவன் கத்திக் கூப்பிட்டுத்தான் பிச்சை கேட்க வேண்டுமென்பதில்லை. எப்படி இவனுக்கு மாத்திரம் இந்த சலுகை! அவன் கூடவே நாங்களும் செல்வோம். அம்பி வாத்தியாரும் ஏதோ கச்சேரியில் வித்வானுக்குச் சீட்டுக் கொடுப்பது போல, இந்தப் பாட்டு தெரியுமா, அந்தப்பாட்டு தெரியுமா? என்று ஒன்றொன்றாகச் சொல்லி வரும்போது அவன் ஒரு பாட்டைப் பாடுவான். அவரும் கூட கூட சற்று தூரம் வரை வருவார். அவன் அடிக்கடி ஏன் வருவதில்லை, மற்ற நாட்களில் என்ன செய்வானோ தெரியாது. ஆனால் அந்த நினைவுகள் மிக ரம்மியமானவை ஆண்டவன் யார் யாருக்கோ ஏதேதோ கொடைகளைத் தந்துவிட்டுப் போகிறான். அப்படியும் ஏன் அவன் பிச்சை எடுக்க வேண்டி வந்தது? இப்போதும் ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக என் மனத்தில் உறைந்திருந்த அந்த நினைவுகளை வெளிக்கொண்டு வந்து ரம்மியமான இரவுகளை எனக்குக் கொடுத்த அவனைக் குறிப்பிடும்போது பிச்சைக்காரன் என்று தானே சொல்கிறேன்?. ஏன்?, எப்படி இந்த அநியாயம் நேர்கிறது? இது தர்மமல்ல என்று கூட நாம் உணர்வ் தில்லை.
வீட்டில் மாமா குடும்ப வழியில் அங்கு யாருக்கும் அப்படி ஏதும் சங்கீதத்தில் ஈடுபாடு கிடையாது. மாமா பெண் ஜானகிக்கு மாமி பாட்டுச் சொல்லிக்கொடுத்தது ஞாபகம் வருகிறது. ஒரு ஹார்மோனியத்தை வைத்துக் கொண்டு தானும் பாடுவாள். ஜானகியையும் பாடச் சொல்வாள். நான் மாமாவின் பராமரிப்பில் இருந்த 12-13 வருடங்களில், மாமி ஹார்மோனியம் வாசித்ததும் ஜானகிக்கு பாட்டுச் சொல்லிக் கொடுத்ததும், ஏன் தினசரி நிகழ்வாக இருந்திருக்கவில்லை என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன். பதில் தெரியவில்லை. மாமியின் சின்ன தங்கை குஞ்சத்துக்கும் பெண் ஜானகிக்கும் ஒரே வயது தான். இருவரும் சேர்ந்து பாடிய காட்சி நினைவில் இருக்கிறது. மாமியும் அடிக்கடி தன் பிறந்த வீட்டுக்குப் போய்விடுவாள். முன்னால் கோவைக்கும் பின் வருடங்களில் மதுரைக்கும். எல்லா தமிழ்க் குடும்பங்களிலும் காண்பது போல, மாமியும் பாட்டியும் அவ்வளவாக ஒருவரை ஒருவர் விரும்பியவரில்லை. ஏன் ஒத்துப் போவதில்லை என்பதற்கெல்லாம் பதில் காணமுடியாது. சண்டை வந்துவிடும். மாமா பொறுத்துப் பார்ப்பார். பின் அவரும் சத்தம் போட ஆரம்பித்து விடுவார். மாமி 'நான் போகிறேன் அம்மாவிடம்" என்று மதுரைக்குப் போய்விடுவாள். ஆக மாமி அந்த குடும்பத்தில் வருடத்தில் பாதி நாள் தான் காட்சியளிக்கும் ஜீவன். எங்கள் எல்லோருக்கும் மாமியின் சமையல் ரொம்ப பிடிக்கும். பாட்டிக்கும் தான். மாமி இல்லாத சமயங்களில், தன் அண்டை அயல் சகாக்களிடம் "ஆனா லக்ஷ்மி ரொம்ப நன்னா சமைப்போ. அதையும் சொல்லணுமோல்யோ" என்பாள். "ஆனாலு'க்கு முன்னால் என்ன பேச்சு நடந்திருக்கும் என்பதை யாரும் யூகித்துக் கொள்ளலாம்.
ஆனால் (இது என்னுடைய 'ஆனால்') மாமி வீட்டில் நடத்திய பாட்டு க்ளாஸ் (தன் தங்கைக்கும் பெண்ணுக்கும்) மாலைகள் நன்கு நினைவிலிருக்கின்றன. அது ஒண்ணும் பாட்டு க்ளாஸ் என்று சொல்லக் கூடாது. ஹார்மோனி யத்தை வைத்துக் கொண்டு சொல்லிக்கொடுத்தாள் என்றாலே சரளி வரிசை, ஜண்டை வரிசை, என்று தான் உடனே நம் மனதில் பிம்பங்கள் எழும். அப்படி இல்லை. மாமி பாடுவாள். அவர்கள் திருப்பிப் பாடவேண்டும். அவ்வளவே. அந்தப் பாட்டுக்களில் சிலவும் என் நினைவில் இருக்கின்றன. 'ஜக ஜனனி, சுபவாணி கல்யாணி' என்று ஒரு பாட்டு. இப்போதெல்லாம் இந்தப் பாட்டுக்களை நான் அதிகம் கேட்பதில்லை. மாமியைத் தவிர வேறு யாரும் பாடியும் கேட்டதில்லை. கொஞசம் அபூர்வம் தான். அந்த ராகமும், ரதி பதி பிரியா', அதிகம் பாட நான் கேட்டதில்லை. அது இன்ன ராகம் என்பதெல்லாம் அப்போது தெரியாது. அப்படியெல்லாம் எண்ணங்கள் ஓடவில்லை. பின்னர்தான் வெகு நாட்களுக்குப் பிறகு தான், தற்செயலாகவே ராகங்களின் பெயர்களும் தெரியவந்தன. அதுபோலத்தான் இன்னொரு பாட்டும். 'அம்பா நீ இரங்காயெனில் புகலேது" என்ற பாட்டு. பாப நாசம் சிவனது. அடானா ராகத்தில். இதுவும் யாரும் அதிகம் பாடக் கேட்டதில்லை. யார் பாடல், என்ன ராகம் என்றெல்லாம் மாமியும் சொல்லவில்லை. அதற்கு அவசியமும் இல்லைதான். பின்னர் தான் தெரிந்து கொண்டேன். மாமியின் குடும்பத்தையும் நான் 1946-ல் ஒரு வருஷம் மதுரையில் இருந்த போது நெருங்கி அறியும் சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கும் மாயியைத் தவிர வேறு யாரும் சங்கீதம் தெரிந்தவர்களாக இல்லை. மாமிக்கு மாத்திரம் பாட்டு பாடவேண்டும் என்று தோன்றியது எப்படி, எங்கு கற்றுக் கொண்டாள் என்பதெல்லாம் அப்போதும் தெரிந்ததில்லை. இப்போதும் அதைத் தெரிந்து கொள்ளும் சாத்தியம் இல்லை. அஸ்தமித்ததும் முகத்தை அலம்பி குங்குமம் இட்டுக்கொண்டு சுவாமிக்கு விளக்கேற்றி நமஸ்கரித்து மாமி ஒன்றிரண்டு பாட்டு பாடுவாள். இப்போது அதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் அழகாக, சந்தோஷமாக இருக்கிறது.
ஆனால் மாமிதான் அடிக்கடி மதுரை போய்விடுவாளே. நிலக்கோட்டை ஆறு மாதம். கோயம்புத்தூரோ, இல்லை பின்னர் மதுரையோ ஆறு மாதம். 1945-லேயே எனது நிலக் கோட்டை வாசம் முடிகிறது. இடையில் ஒரு வருஷம் மதுரையில் சேதுபதி ஹை ஸ்கூலில் படித்த்தேன். பின்னர் மேலே படிக்க என் கிராமம் உடையாளுருக்கு வந்து விட்டேன். உடையாளுரில் இருந்து படித்துக் கொண்டிருந்த போது, மாமி உடம்பு சரியில்லாமல் இருக்கிறாள் என்று கடிதம் வந்தது. பின்னர் ஒரு சில மாதங்களில் மாமி இறந்தும் விட்டாள். மாமிக்கு அவ்வளவு மோசமாக என்ன நோய் தாக்கியது, உடனே உயிரைப் பறிக்க? அதிர்ச்சியாகத் தான் இருந்தது. யாரும் இப்படி ஒன்று சம்பவிக்கும் என்று எதிர்பாராது வந்த சோகம் அது. அப்போது மாமாவுக்கு வயது 37. மாமி 8-10 வயது சிறியவளாக இருந்திருப்பாள். மாமி இறந்த பிறகு மாமா கல்யாணம் செய்து கொள்ள வில்லை. பெண் கொடுக்க சிலர் வந்தார்கள். ஆனால் மாமா மறுத்து விட்டார். பட்டது போதும் என்று தோன்றி விட்டது போலும். தன் நான்கு குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டுமே என்பதே அவருக்கு பெரிய கவலையாக இருந்தது. அந்த கவலையில் மற்றதையெல்லாம் அவர் மறந்தவர் தான்
எனக்குத் தான் வருத்தமாக இருந்தது. மாமி என்னிடம் வாத்ஸல்யத்துடனேயே இருந்தாள். ஒரு போதும், மாமி இருந்த வரை, என்னை, அந்த வீட்டில் இயல்பாக சேராதவனாக, வந்து சேர்ந்த ஒரு தூரத்து உறவினர் பிள்ளையாக, நினைத்தது இல்லை. என்னை எதற்கும் ஒதுக்கியதும் இல்லை. மாமிக்கு பாட்டியுடனும் மாமாவுடனும் தான் ஒட்டுதல் இல்லையே தவிர எங்களிடம் அவள் பாசமாகத்தான் இருந்தாள். சின்ன வயசில் இறந்து விட்டாள். 30 வயதில் இறப்பது ஒரு சோகம். 37 வயதிலேயே தாம்பத்ய உறவுகள் அறுந்து போன மாமாவை, என்றுமே மனம் விட்டுச் சிரித்து பார்த்தறியாத மாமாவை நினைக்க இப்போதும் கூட, மாமா இறந்து 45 வருடங்கள் ஆகி விட்டன, மனத்தில் சோகம் கவிந்து விடுகிறது. பாட்டியின் சந்தோஷமான நாட்களையும் நான் பார்த்ததில்லை.
எனக்கு என்னமோ இவ்வளவு சோகங்களின் இடையிலும் என்னைச் சந்தோஷப்படுத்திக்கொள்ள பல விஷயங்கள் ஒன்றில்லாவிட்டால் ஒன்று கிடைத்துக் கொண்டு தான் இருந்தன. எனக்கு எது வேண்டும் என்று சுற்றியுள்ளவற்றில் நான் கண்டுகொள்வேன். தேடிக் கிடைப்பதல்ல. தானே நிகழ்வனவற்றில் நான் சந்தோஷப்பட்டுக்கொள்வேன். அப்படி என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம் வீட்டுக்குப் பின் இருந்த தோட்டம். பின்னால் கொல்லை இருக்கும் அடுத்த வீட்டுக்கு, அதில் இருந்த முத்துசாமி அய்யர் தன் மூன்று வீடு களையும் விற்றுச் சென்ற பின்னர், நாங்கள் குடிபுகுந்தோம். அடுத்து இருந்த அந்த வீட்டில், ஒரு மொட்டை மாடியும் இருந்தது. அதில் மூன்றில் ஒரு பகுதியில் கூரை வேய்ந்திருந்தது. அது எனக்குப் பிடித்த இடம். அதோடு கொல்லைப் புறமும். அங்கே மூன்று கொய்யா மரங்கள், ஒரு நார்த்தை மரம், பின் ஒரு பெரிய முருங்கை மரம். மிகுந்த இடத்தில் கீரை, போடுவோம். இரண்டு விதமான அவரை, புடல் என்று ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் விதை விதைத்து பயிரிட்டு வந்தோம். பந்தல் கட்டியிருக்கும் அவற்றின் கொடி படர. சில சமயங்களில் எங்களுக்கு முன்னர் தெரிந்திராத சில காய்களும் பயிரிட்டோம். ஒன்று மூக்குத்திக்காய். மற்றொன்று தட்டவரை என்று பெயர் சொன்னார்கள். மூக்குத்திக் காயை அதற்குப் பின் நான் பார்த்ததில்லை. ப்ப்ப்ஆனால் தட்டவரை அபூர்வமாக எப்போதாவது பார்ப்பதுண்டு. ஒரு அங்குல அகலமும் ஒன்பது பத்து அங்குல நீளமும் உள்ளது அது. நாலடி உயரம் வளரும் கீரைச் செடியும் ஒரு முறை பயிரிட்டிருந்தோம். இவ்வளவு உயரம் வளரும் கீரைச் செடியை எத்தனை பேர் பார்த்திருப்பார்களோ தெரியாது. அபூர்வம் தான். அதன் தண்டு மிக ருசியாக இருக்கும்.
தோட்ட வேலையில் பொழுதைப் போக்குவது எனக்குப் பிடித்திருந்தது. மண்ணைக்கொத்தி, உரம் இட்டு விதை விதைத்துவிட்ட பிறகு அது முளை விடுவதைப் பார்க்கவே ஆனந்தமாக இருக்கும். அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் சந்தோஷமளிக்கும். ஒரு ஜீவன் வளர்வது, மண்ணைக் கிழித்துக் கொண்டு வெளிவரும் முளையைப் பார்க்க எனக்கு அதிசயமாக இருக்கும். ப்ப்என்னைப் பார்த்து புன்னகைப்பது போல உணர்வேன். உ.வே.சாமிநாத ஐயர் தன் குரு மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்ட ஆரம்ப நாட்களைப் பற்றி எழுதியிருப்பார். பிள்ளையவர்கள் தினம் காலையும் மாலையும் தோட்டத்தைச் சுற்றி வருவார். அப்போது சாமிநாதய்யரும் அவருடன் சுற்றி வருவாராம். ஏதும் புதிதாக முளை விட்டிருந்தாலோ, அல்லது மொட்டு விடத் தொடங்கியிருந்தாலோ, 'இதோ, இதோ' என்று பிள்ளையவர்களுக்கு முன்னே சென்று பிள்ளயவர்களுக்குச் சொல்லுவாராம். பிள்ளைவர்களுக்கும் சாமிநாதய்யர் காட்டும் இடத்திற்கு விரைந்து சென்று பார்த்து மகிழ்வாராம். 'இதே போல முன்னாலேயே வந்து பார்த்து வைத்து எனக்கு சொல்லும்" என்று பிள்ளைவர்கள் சொன்னாராம். சாமிநாதய்யருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. தனக்கு சந்தோஷம் அளித்தது பிள்ளையவர்களுக்கும் மகிழ்ச்சி தருகிறது என்று. ரொம்ப அற்ப விஷயங்களாக இவை பலருக்குத் தோன்றக் கூடும். பிள்ளையவர்களை சாமிநாதய்யர் காக்கா பிடிக்கும் சமாச்சாரம் இது என்று தமிழ் நாட்டு இன்றைய தலைமுறைகள் எண்ணக்கூடும். சாதாரணமான, இயற்கையுமான இந்த அற்பம் என்று தோன்றும் விஷயங்களை, வியக்க வைக்கும் நிகழ்ச்சிகளாக உணர்ந்து அனுபவிக்கக் கூடியவர்களுக்குத் தான் இந்த மகிழ்ச்சியின் அனுபவம் கிடைக்கும்.
ஆனால் இந்த மகிழ்ச்சிகள் நான் நிலக்கோட்டையை விட்டு நீங்கிய பிறகு, எனக்குத் திரும்பக் கிடைக்க வெகு ஆண்டுகள் ஆயின. 1981-ல் தில்லியில் கிடைத்த அரசாங்க வீட்டின் முன்னும் பின்னும் தோட்டம் வைக்க சிறிய மல்ர் மரங்கள் வளர்க்க வசதி கிடைத்தது. அது, நான் அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்றதும் 1992-ல் அறுபட்டு பின்னர் நான் சென்னைக்கு வந்த பிறகு 2000-லிருந்து இப்போது தான் மலர்கள் பூத்துக் குலுங்கும் செடிகளையும் மரங்களையும் வீட்டின் sit out-ல் உட்கார்ந்தால் பார்த்து மனதுக்கு சந்தோஷம் தரும் காலைகளும் மாலைகளும் கிடைத்துள்ளன.
வெங்கட் சாமிநாதன்/11.10.07
Tuesday, February 26, 2008
ஆதியும் மூலமுமான ஆதிமூலம்
எப்படியோ அப்படித்தான் நானும் வளர்ந்து விட்டேன். அப்படித்தான் எதையும் பார்க்கத் தோன்றுகிறது. அதைத் தான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே எழுதியும் வருகிறேன். அந்த சமயத்தில் தமிழ் நாட்டில் ஓவியம், சிற்பம் பற்றி யாரும் நினைத்துப் பார்த்ததில்லை. அதிர்ஷ்ட வசமாக அந்த சமயத்தில் எழுத்து பத்திரிகையில் வந்து சேர்ந்த சச்சிதானந்தத்தை பின் வருடங்களில் சந்தித்தபோது அவருக்கு சென்னை ஒவியக் கல்லூரியுடனும், சமீக்ஷா பத்திரிகை கோவிந்தனுடனும் நெருங்கிய பழக்கமும் நட்பும் இருந்தது. இப்படி ஒன்றிரண்டு பேர்களாக, இங்கும் அங்குமாக இருந்தனரே தவிர, ஜெர்மனியில் முப்பதுக்களில் இருந்த பஹௌஸ் ஸ்கூல் போலவோ, இங்கிலாந்தில் இருந்த ப்ளூம்ஸ்பரி போலவோ, ·ப்ரான்ஸில் அபாலினேரைச் சுற்றி இருந்த, அவர் இயங்கி பாதித்த சூழல் போலவோ, ஒரு பெரும் குழுவாக, ஓவியர், கவிஞர்கள், சிந்தனையாளர், நாடகாசிரியர், அனைத்தினரையும் ஒருங்கிணைத்த சிந்தனை மையமாக இருக்கவில்லை. சுதந்திரப் போராட்ட காலத்தில், வங்காளத்தில் அது காணப்பட்டது. அறுபது எழுபதுகளில் பரோடாவை மையமாகக்கொண்ட குழு ஒன்று இயங்கியது. ஓவிய உலகில் பரோடா பள்ளியைச் சேர்ந்தவர்கள் கலகக் காரர்களாகக் கருதப்பட்டார்கள். அத்தகைய ஒன்று இங்கும் முளை விடுவதாக நான் அக்காலத்தில் எண்ணக் காரணம் எழுத்துவில் ஆரம்பித்தது, நடையில் உருப்பெற்று கசடதபறவிலும் தொடர்ந்தது தான். இப்போது எல்லாப் பத்திரிகைகளிலும் காணும் பல துறை விகாசம் எங்கு எப்போது ஆரம்பித்தது என்பது இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. தெரிந்தாலும் தெரிந்ததாகக் காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் அவர்கள் தான் மூலவர்கள் என்று ஸ்தாபித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம். தொடக்கத்திற்குப் போகவேண்டும்.
இந்த உறவுக்கும் பரஸ்பர அறிதலுக்கும் முக்கிய உத்வேகமாக இருந்தது ஆதிமூலம் தான். அவர் பெயரே சொல்வது போல ஆதியும் அவர் தான். மூலமும் அவர்தான். ஒரு புள்ளி பிரபஞ்சமாக விரிந்து பூதாகரிப்பது நமக்கு அன்னியமான ஒரு விஷயமில்லை. நம் மரபில் சிந்தனையில் ஊறிய விஷயம். அறுபதுகளின் இடைப்பட்ட வருஷங்களிலிருந்துதான், என் நினைவில், தமிழ் ஒவியர்களின் சித்திர கண்காட்சிகளை கூட்டாகவோ தனித்தோ பார்த்து வந்திருக்கிறேன். தில்லியில், ரவீந்திர பவனின் லலித் கலா அகாடமி ஓவியக் கூடத்தில். ஆதிமூலத்தின் கோட்டுச் சித்திரங்கள் இருந்தன. அவரோடு காட்சிக்கு வந்திருந்தவர்கள் என இப்போது என் நினைவுக்கு வருபவர்கள் என, எஸ், என் வெங்கடராமன், வரதராஜன் இருவரைத்தான் சொல்ல முடிகிறது. பெயர்கள் தான். சித்திரங்களை நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை. ஆனால் ஆதிமூலமும் அவரது சித்திரங்களும் நினைவுக்கு வரக் காரணம் அவர் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்ததும், பின் வருடங்களில் அவருடனான தொடர்பும் பரஸ்பர உறவும் இலக்கிய உலகிலும் விஸ்தரித்தது காரணமாக இருக்கலாம்.
அப்போதெல்லாம் தில்லியில், - நான் அக்காலத் தில்லியைப் பற்றித்தான் பேசமுடியும், - தெற்கிலிருந்து வரும் ஓவியர், சிற்பிகளைப் பற்றி அங்கு அதிகம் பேசப்படுவதில்லை. கொஞ்சம் பிந்தங்கியவர்கள் என்று அவர்களுக்கு மூக்கு வானத்தை நோக்கி உயரும். அவர்கள் கால்கள் இங்கு நிலத்தில் பாவியதில்லை. ஐரோப்பிய தாக்கம் சிந்தனையிலும் வாழ்க்கையிலும் உடையிலும் அதிகம் அவர்களுக்கு. ஸ·பாரி சூட்டும் உதட்டில் பைப்பும் ஓவியர் என்ற சீருடையை ஸ்தாபிக்கும். ஆனால் சென்னை ஓவியக் கல்லூரியிலிருந்து வந்தவர்கள் தம் மரபையும் மண்ணையும் விட்டு தம்மை அறுத்துக் கொள்ளாதவர்கள். அதற்கு அவர்கள் பள்ளியில் ஒரு ராய் சௌதுரியும் பணிக்கரும் இருந்தது காரணமாக இருக்கலாம்.
இதையெல்லாம் உடைத்து தன்னை ஸ்தாபித்துக் கொண்டவர் ஆதிமூலம். அவரது பலம் அந்நாட்களில் அவரது கோட்டுச் சித்திரங்களின் பலம் தான். அவரது திறனை இனங்கண்டு, மகிழ்ந்து, ஓவியக் கல்லூரியிலும் சேர்த்து ஆதிமூலத்தின் ஒவிய வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக இருந்த தனபாலே, அவரது சிஷ்யனைப் பற்றி, கிட்டத்தட்ட இந்தமாதிரி வார்த்தைகளில், சொல்கிறார். நினைவிலிருந்து எழுதுகிறேன். "நான் ஆதிக்குக் கற்றுக்கொடுத்தது ஒரு திசை காட்டலே. வழி காட்டியதும், அவன் ஐரோப்பிய மேதைகளுக்கு இணையாக கோடுகள் வரைவதில் வல்லவன். பாடத் தெரிந்து விட்டால் ராக ஆலாபனையில் தன் கற்பனையில் சொல்லிக் கொடுக்காததையும் தன்னை அறியாது பாடிவிட முடிகிறதல்லவா?" ஒரு தனபாலிடமிருந்து இது ஒரு சிஷ்யனுக்குக் கிடைக்கிறது. இந்த சிஷ்யன் ஒரு கீராம்பூர் கிராமத்தில் பிறந்து கோவில் சுவர் சித்திரங்களியும் சுட்ட மண் சிற்பங்களையும் பார்த்து வளர்ந்தவன். "நான் ஒன்றும் அறிவு ஜீவியில்லை. நான் கற்றது சித்தாந்தங்களைப் படித்து அல்ல. படைப்புகளைப் பார்த்து." என்று சொல்வார் ஆதிமூலம். இது வெற்றுத் தன்னடக்கம் இல்லை. தன்னை அறிந்த முழுமை. பந்தா இல்லாத, மூக்கு வானத்தை நோக்காத முழுமை. கீராம்பூர் கிராமத்தில் விளைந்தது லண்டனுக்கும் செல்லும் என்ற தன்னம்பிக்கையின் பிறந்த முழுமை.
இந்த எளிமையும் உண்மையும் தான் அவரை இன்றைய தமிழ்க் கூட்டத்தில் தனித்து உயர்ந்து நிற்கும் மனிதராகக் காட்டுகிறது. அவர் தன்னைச் சுற்றியோ தன் தலைக்குப் பின்னோ ஒரு ஒளி வட்டம் பிரகாசிப்பதாக எண்ணியதில்லை. ஆரம்ப காலத்திலும் சரி, கடைசி வருடங்களில் அவர் படைப்புகள் வேறு எந்த தென்னிந்தியருக்கும் கிட்டாத அளவிற்கு வியாபார வெற்றியடைந்த போதும் சரி. நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது சில வருடங்கள் முன்பு தான். பேசியது தொலை பேசியில் ஒரு வருடம் முன் (ஜனவரி 1907). தில்லி லலித் அகாடமி கண்காட்சி ஹாலில்(1960களின் பின் பாதி) பார்த்துப் பேசிய அதே ஆதி மூலம் தான். இப்போது கொஞ்சம் நெருக்கமும் பரஸ்பர புரிதலும் அதிகம். முதல் சந்திப்பில் அவர் என்னை யாரென்று அறிந்திருப்பாரோ என்னவோ. ஆனால், அடுத்த சந்திப்பு(1973) சென்னை மௌபரீஸ் ரோடில் என்று நினைக்கிறேன். அப்போது அந்தப் பெயரில்தான் அந்த ரோடு இருந்தது. நான் தங்கியிருந்த உறவினர் வீட்டு வாசலில் தற்செயலாக. "அட இங்கு வந்திருக்கி றீர்களா?எவ்வளவு நாட்கள் இருப்பீர்கள்? வாருங்களேன் சாவகாசமாக பேசலாம். இடம் தெரியாதா? சச்சிக்குத் தெரியுமே. அவரோடு வாருங்கள்" எல்லாம் விசாரித்து, கேட்டு அவரே பதில்களும் பிரச்சினைகளுக்குத் தீர்வும் சொல்லியாயிற்று. போனோம் நானும் சச்சிதானந்தமும். நான் அன்று தங்கி இருக்குமிடத்திற்கு நாங்கள் இருவரும் நடந்தே திரும்பினோம். எழும்பூர் Weavers" Centre, -லிருந்து தியாகராய நகர் திருமலைப் பிள்ளை ரோடில் சச்சி எனக்குத் தங்க ஏற்பாடு செய்திருந்த வீட்டிற்கு. தில்லி ரவீந்திர பவன் புல்வெளியில், தில்லி ப்ரெஸ் க்ளப்பில், அவர் ஒரு காலத்தில் இருந்த அடையாறு வீட்டின் முதல் தளத்தில். ஓவ்வொரு முறையும் நிறைய பேச்சும் அவர் வரைந்திருந்த ஓவியங்களைப் பார்ப்பதுமாக பொழுதுகள் போகும். சென்னை வந்த பிறகு நண்பர்களின் வீட்டுக் கல்யாணங்களில். பூந்தமல்லி ஹை ரோடு ஹோட்டலில்(ஹோட்டல் எவரெஸ்டா? நினைவில் இல்லை) முத்துக் கோயா, பிரபஞ்சன், பாஸ்கரனோடு. என் புத்தகங்களுக்கு வரைந்து அவர் கொடுத்தது, நான் நேரில் கேட்டு அல்ல. செல்லப்பாவோ, சச்சிதானந்தமோ அல்லது வேறு யாருமோ கேட்டு. ஒரு முன்னனணி ஓவியரைக் கேட்பது போல அல்ல. ஒரு நண்பரிடம் ஏதோ ஒரு வேலையை நமக்காகச் செய்யச் சொல்வது போல. ஒரு பந்தாவும் இல்லாத மனிதர். இதனால் அவர் பெற்றது ஏதும் கிடையாது. வியாபாரக் கணக்கில் ஒரு பைசா வரவில்லாத விஷயம். இது அறுபதுகளில் இருந்து தொடங்கி இறுதி மூச்சு வரை தொடர்ந்தது. அந்தக் காலத்தில் நடை பத்திரிகைக்கு அவரிடம் கேட்ட போது, அதனால் விளம்பரமும் கிடையாது. பண வருவாயும் கிடையாது. பிரக்ஞையுள்ள ஒரு சிறு வட்டத்திற்குள் ஒரு சலனத்தை, ஒரு பரிச்சயத்தை, ஒரு தெரிவை ஏற்படுத்துவது என்பதே நோக்கம். அவ்வளவே. அவரைத் தொடர்ந்து எண்ணற்ற பலரும் அதற்கு முன் வந்தனர். 1961-ல் எழுத்து பத்திரிகையில் ஒரு சிந்தனை வெளிப்பாடாகத் தொடங்கியது, பின் வருடங்களில் படிப்படியாக சின்ன முயற்சிகளாக இன்னும் பலர் சேர்ந்து செயல்பட்டது, இன்று ஒரு பகுதி சமூகத்தின் ஒட்டு மொத்த செயல்பாடாக வளர்ந்து பெருகியுள்ளது. கலை உணர்வு வளர்ந்துள்ளது, ஆழம் பெற்றுள்ளது என்று சொல்ல மாட்டேன். தெரிந்தும், பல இடங்களில் தெரியாமலும் அதன் மதிப்பு உயர்ந்துள்ளது. "இதென்னங்க ஒரே கிறுக்கலா இருக்கு. இதெல்லாம் அட்டையிலே போட்டா யார் வாங்குவாங்க? என்ற நிலையிலிருந்து, "இதெல்லாந்தாங்க இப்ப போடறாங்க, இதுக்கு ஒரு மதிப்பு இருக்குங்க," என்று அடுத்த பத்து பதினைந்து வருடங்களில் மாறி, இப்போது, "ஆதிமூலத்துகிட்டே போயி நானே இந்த மூணு புத்தகத்துக்கும் வரைஞ்சி வாங்கிட்டு வந்திடறேங்க, அப்பத்தான் நல்லா இருக்கும்" என்று ஆவலோடு முதலாளியே சொல்லும் நிலைக்கு வந்துள்ளது. தெரிவு மாத்திரமல்ல. அது ஒரு சிறு வட்டத்திற்குள் தான் சிறைபடும். ஆனால் snobbery நிறைந்த பலனைக் கொடுக்கும். பணம், செல்வாக்கு இத்யாதி. பாமரத்தனமான அலங்கோலமாக இருந்த புத்தக வெளியீட்டில் தனக்கே உரிய எளிமையைக் குணமாக்கினார் செல்லப்பா. அதற்கு தொழில் நுட்பத்தோடு கலை என்ற பரிமாணத்தையும் தரத் தொடங்கியது க்ரியா ராமகிருஷ்ணன். அதற்கும் அவருக்கு உதவியது ஆதிமூலம் தான். அந்த சிரமம் மிக்க, பலர் நகையாடிய ஆரம்பங்கள் இன்று எங்கு புத்தக வெளியீட்டுத் துறையை கொண்டு வைத்துள்ளது?
இது வேறு எங்கும் நடந்ததில்லை. நடந்திராது. புத்தகங்களுக்கு மாத்திரமில்லை. ஒவ்வொரு கான்வாஸ¥ம் பல பத்து லட்சங்களுக்கு விலை போகும், இன்று கடந்த முப்பது நாற்பது வருடங்களாக, ஆதி மூலம் தன் நண்பர்களுக்கு, அவ்வப்போது அன்புடன் கொடுத்துள்ளது எண்ணிக்கையில், அடங்காது. அவற்றின் பொருள் மதிப்பீட்டை அவரவர் யூகத்திற்கு விட்டு விடலாம்.. ஆனால் ஆதி மூலம் 70 களில் நான் பார்த்த ஆதி மூலம் தான்.
பல விஷயங்களை தமிழ்ச் சூழலின் சந்தர்ப்பத்தில் சொல்லத் தோன்றுகிறது. "நான் அறிவு ஜீவி இல்லை. நான் படித்துக் கற்றுக்கொள்ளவில்லை. உலகக் கலைப் படைப்புக்களைப் பார்த்துக் கற்று வளர்ந்தவன்," என்று தன்னைப் பற்றிச் சொல்லும் ஆதிமூலத்தின் வளர்ச்சியை, அவர் படைப்புக்களின் அவ்வப்போதைய சீரான மாற்றங்களில் பார்க்கலாம். தமிழ் மண்ணும் இந்திய ஓவிய மரபும் கோடுகளின் ஆதாரத்தில் பிறந்தவை. ஆதிமூலம் தன் உள்ளார்ந்த திறமையைக் கண்டுணர்ந்தது, சிறு வயதில் தன் கிராமத்தில் கண்ட சுதைச் சிற்பங்களை, சுவர் ஓவியங்களைக் கண்டு. அவரது வரை கோட்டுத் திறன் தன் வளர்ச்சியில் ஐரோப்பிய மேதைகளுக்கு இணையானது என்று தனபாலையே சொல்ல வைத்துள்ளது. வடநாட்டில், நகரங்களில் கால் வைத்த போது பொதுவாகவே தென்னாட்டு படைப்புக்கள் வரைகோடு சார்ந்து, உருவார்த்த குணம் சார்ந்திருப்பதன் காரணத்தால் ஏளனமாகப் பார்க்கப்பட்டபோதிலும் அவர் தன்னை வழி மாற்றிக்கொள்ளவில்லை. விஷயம் என்னவென்றால், அவர்கள் எப்போதாவது தம் வரைகோட்டுத் திறனை வெளிக்காட்டு சந்தர்ப்பம் நேரும்போது பார்த்தால் அவர்களது பலவீனமும் வெளிப்படுவதைப் பார்த்திருக்கிறேன். வரைகோடுகளின் ராஜ்யத்தில் ஆதிமூலம் மன்னன். அவரது வரைகோட்டுச் சித்திரங்கள் தம்மில் முழுமை பெற்றவை. நாடகார்த்தம், வீரியம், கொடூரம், மிருக பலம், கவித்வம், மெல்லிய இழையோட்டம் ஆகிய எல்லா குணங்களையும் அவை காட்ட வல்லவை. அவை வெளியையும் வெளியை நிரப்பும் திடத்தன்மையும் வெளிக்காட்ட வல்லவை. இவ்வளவுக்கும் ஆதிமூலம் தன்னை தன் இயல்பான வளர்ச்சியில் கண்டவர் தான். வெகு வருடங்களுக்கு அவர் கோட்டுச் சித்திரங்களை விட்டு நகரவில்லை. சில சமயங்களில் வண்ணங்கள் வாங்க பொருள் வசதியின்மையால் தான் என்று சொன்னதாகச் சொல்லப்படுகிறது. அது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இருந்தாலும், அது ஒரு குறையாக இருந்ததில்லை. அந்தப் புள்ளியிலிருந்து இன்று அவரது உருவத்தைக் கடந்த வண்ணவெளி என்று சொல்லத்தக்க ஓவியங்கள் வரை அந்த மாற்றத்தின் பாதையை படிப்படியாகப் பார்த்தோமானால், ஒரு மாற்றம் அதன் முந்திய நிலையின் அம்சங்களைக்கொண்டே பிறந்து வெளிப்பட்டுள்ளதைக் காணலாம். எதுவும் முந்தியதை அறவே மறுத்து ஒதுக்கி, புதிதாகப் பிறந்ததல்ல. இயல்பான வளர்ச்சியில் எந்த புதியதும் முற்றிலும் புதியதல்ல. எந்த பழையதும் முற்றிலும் பழையதுமல்ல. பழையதின் குணத்தைக் கொண்டிராத புதியதும் இல்லை. புதியதன் குணத்தைத் தன்னுள் கொண்டிராத பழையதும் ஏதும் இல்லை. ஆதிமூலத்தின் 40 வருட கால ஓவிய வாழ்க்கையே அவரது தன்னின் மலர்ச்சிதான்.
எவ்வெத்துறையிலோ சிற்பிகளை, ஓவியர்களை, கலைஞர்களை நாம் தமிழ் நாட்டில் விருது அளித்து, ஆடிக் கொண்டாடி முடிசூட்டிக் கொண்டாடி வருகிறோம். ஓவியத்துறையில் நாம் பெற்றுள்ள ஒரு தலைசிறந்த கலைஞரை, நாம் கலைஞராக காணவும் இல்லை. ஒரு கட்டத்தில் நாம் விருது பெறாத, ஏதோ ஒன்றிற்கு சிற்பியோ மன்னனோ, அரசோ இல்லாத ஒரு தமிழனைக் காண்பது சிரமமாக இருக்கும் போலிருக்கிறது. ஆனால் ஒரு கலைமாமணியாகக் கூட ஆதிமூலத்தை நாம் காணவில்லை. உண்மையில் பார்க்கப் போனால், அரசியல் சார்பு இருந்தால் ஒழிய ஓவியர்களும் சிற்பிகளும் தமிழ் நாட்டு அரசுகளுக்கு பெருமைப் படும் ஜீவன்களாகத் தெரிவதில்லை. ஆனால் எனக்குத் தோன்றுகிறது. அரசும் வாணிகமும், அரசியலும் இதில் தலையிடாதது நல்லதாகத்தான் இருந்திருக்கிறது. இல்லையெனில் சினிமாவிலும் (இது தான் தமிழ் நாட்டுக் கலை) நாடகத்திலும், இலக்கியத்திலும் நேர்ந்த பாமரத்தனமான விளைவுகளை ஓவிய சிற்ப உலகிலும் கண்டிருப்போம். எல்லாத் துறைகளிலும் இது போன்று அரசிடமிருந்தும், அரசியல் வாதிகளிடமிருந்தும் ஒரு காருண்யமிகுந்த அலட்சியம் (benign neglect) இருந்திருந்தால் எத்தனையோ பேரரசுகள், மன்னர்கள், திலகங்களிடமிருந்து தமிழ் நாடு தப்பிப் பிழைத்திருக்கும்.
ஆனால், ஆதிமூலம் இது பற்றியெல்லாம் கவலைப்பட்டவரில்லை. அது பற்றிய சிந்தனையே அவருக்கு இருந்ததில்லை. ஒரு கட்டத்தில் திருக்குறள் ஒன்றிற்கு அவர் ஏன் ஓவியம் வரைந்து கொடுத்தார் என்று நான் எண்ணியதுண்டு. அவர் அதை அமைதியாக மறுத்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. அந்த கலவரத்தை அவர் விரும்பாத காரணத்தால் தான் அவர் இயல்புக்கு விரோதமான ஒன்றைச் செய்தார் என்றும் தோன்றிற்று. அவர் பந்தா அற்றவர் மட்டும் அல்ல. அமைதியானவர். அமைதியாக, தன் இயல்புக்கான செயல்களைச் செய்து வாழ்ந்தவர். யாரிடமும் அவர் கோபம் கொண்டதாக, எது பற்றியும் அவர் சீற்றம் கொண்டதாக செய்தியில்லை. நான் தில்லியில் இருந்த காலத்தில் அவர் மத்திய லலித் கலா அகாடமிக்கான் சில பொறுப்புகளை வகித்ததுண்டு. அது அவரை வந்தடைந்தது அபூர்வமே. வட இந்தியர்கள் அவ்வளவு சுலபமாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அப்போதெல்லாம் அவர் அலட்சியத்துடன் ஒதுக்கப்பட்டு வந்த தென்னிந்திய ஓவியர்கள் சிற்பிகளை கவனத்தில் கொண்டு வர முயன்ற காரணத்தாலே வட இந்தியர்களிடையே சச்சரவுக்காளானார் என்றும் தெரிந்தது. எது பற்றியும் அவருக்குக் கவலை இல்லை. எந்த பதவியையும் பரிசையும், விருதையும், கௌரவத்தையும் அவர் நாடிச் சென்றதில்லை. அவர் அடைந்த வெற்றிகள் அவர் படைப்புகளுக்குக் கிடைத்த வெற்றி. அவர் படைப்புகள் அவரது ஆளுமையின் வெளிப்பாடுகள். வியாபார வெற்றி அவரை வந்தடைந்ததே தவிர அதை நாடி அவர் தன் படைப்பின் அதற்கான வழிமுறைகளைத் தேடியவரில்லை. இப்படி இந்திய பரப்பளவில் எத்தனை கலைஞர்களைப் பற்றிச் சொல்லமுடியும் என்று தெரியவில்லை.
ஒரு புள்ளிதான் தன் விகசிப்பில் பிரபஞ்ச பரிமாணம் பெறுகிறது என்றேன். தன் சிறுவயது கீராம்பூர் கோவிலும் அதன் சுவர் ஓவியங்களும், சுதைச் சிற்பங்களும், கிராமக் காட்சிகளும் மக்களும் என்று தொடங்கி சென்னை கலைக் கல்லூரி வாழ்க்கையின் காட்சிகளும் மனிதர்களும் (ராமானுஜம்), தான் வியந்த பிக்காசோக்களும், செகாலும், காந்தியும், மகாராஜாக்களும் என்று கடந்து, விரிந்த வெளியும் அதில் மிதக்கும் உருவங்களும் என அந்தப் புள்ளிதான் இப்படி பரிமாணம் பெற்றுள்ளது.
ஆதி மூலம் நிறைய படைப்புகளை, ஓவியக் கூடங்களில், வணிக நிறுவனங்களில், தனி நபர்களிடம், இந்திய, அன்னிய நாட்டு கலைக்கூடங்களில் விட்டுச் சென்றிருக்கிறார். அவை மொத்தமும் தமிழரின் கலைத் திறனுக்கு அடையாளமாக இருக்கும். அவ்வாறு கருதப்படும் ஒரு காலம் வரும். பிக்காஸோ ஸ்பெயினுக்கும் வான் கோ டச்சுக்கும் அடையாளமாகியிருப்பதைப் போல
.
வெங்கட் சாமிநாதன்/17.1.08
ஆதியும் மூலமுமான ஆதிமூலம்வெங்கட் சாமிநாதன்
இரவு பத்து அல்லது பத்தரை மணி இருக்கும். ஆதிமூலம் இன்று மாலை இறந்து விட்டார் என்று நண்பர் எஸ் கே எஸ் மணியிடமிருந்து எஸ் எம் எஸ் வந்தது. பின் மறு நாள் காலை க்ரியா ராமகிருஷ்ணன், சச்சி இப்படியாக தொடர்ந்து தொலைபேசிச் செய்திகள். என்ன சொல்ல? ஒரு வெறுமை, ஒரு வேதனை, ஒரு இயலாமை, ஏதோ என்னிடமிருந்து, தமிழ் சமூகத்திடமிருந்து பறிக்கப்பட்டு விட்ட உணர்வு தாக்கியது. மிக நெருக்கமான பழக்கம் என்றும் சொல்லமுடியாது. பரிச்சயம் என்று மாத்திரம் சொல்லி அதை அவ்வளவுக்கு குறைத்துக்கொள்ளவும் முடியாது. பரிச்சயமும் பழக்கமும் தொடங்கிய கடந்த கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில், நேரில் பார்த்துப் பழகியது அவ்வளவு அதிகம் இல்லை தான். நீண்ட காலம் தில்லியில் இருந்தது காரணமாக இருக்கலாம். ஆனால் நேர் சந்திப்புகளின் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு மனத்தின், உறவுகளின் ஆழத்தை நெருக்கத்தை அளவிட்டு விடமுடியாது. தனி மனித உறவுகளுக்கும் மதிப்புகளுக்கும் மேல் எழுத்துலகில், கலைகள் உலகில், சமூகத்தில், நானும் அங்கம் வகிக்கும் ஒரு உறுப்பினனாக, நானும் என்னைப் போன்ற மற்றோரும் உணரும் அவரது வியாபகமும் தாக்கமும் மிகப் பெரிது. இந்த உணர்வை, அவரை நேரில் அறிந்து பழகாத தமிழர்களில் பகிர்ந்து கொள்பவர்கள் கணிசமாக இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். நான் இதையெல்லாம் சொல்லக் காரணம் நான் ஆதிமூலத்தைப் பற்றி எண்ணும்போது, அந்த மனிதர், அவரது படைப்புகள், அவர் வாழ்ந்த சமூகத்தின் மதிப்புகள் எல்லாவற்றையும் பின்னிப் பிணைந்த ஒரு வாழ்க்கையின் முழுமையைத் தான் எண்ணத் தோன்றுகிறது.
எப்படியோ அப்படித்தான் நானும் வளர்ந்து விட்டேன். அப்படித்தான் எதையும் பார்க்கத் தோன்றுகிறது. அதைத் தான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே எழுதியும் வருகிறேன். அந்த சமயத்தில் தமிழ் நாட்டில் ஓவியம், சிற்பம் பற்றி யாரும் நினைத்துப் பார்த்ததில்லை. அதிர்ஷ்ட வசமாக அந்த சமயத்தில் எழுத்து பத்திரிகையில் வந்து சேர்ந்த சச்சிதானந்தத்தை பின் வருடங்களில் சந்தித்தபோது அவருக்கு சென்னை ஒவியக் கல்லூரியுடனும், சமீக்ஷா பத்திரிகை கோவிந்தனுடனும் நெருங்கிய பழக்கமும் நட்பும் இருந்தது. இப்படி ஒன்றிரண்டு பேர்களாக இங்கும் அங்குமாக இருந்தனரே தவிர, ஜெர்மனியில் முப்பதுக்களில் இருந்த பஹௌஸ் ஸ்கூல் போலவோ, இங்கிலாந்தில் இருந்த ப்ளூம்ஸ்பரி போலவோ, ·ப்ரான்ஸில் அபாலினேரைச் சுற்றி இருந்த, அவர் இயங்கி பாதித்த சூழல் போலவோ, ஒரு பெரும் குழுவாக, ஓவியர், கவிஞர்கள், சிந்தனையாளர், நாடகாசிரியர், அனைத்தினரையும் ஒருங்கிணைத்த சிந்தனை மையமாக இருக்கவில்லை. சுதந்திரப் போராட்ட காலத்தில், வங்காளத்தில் அது காணப்பட்டது. அறுபது எழுபதுகளில் பரோடாவை மையமாகக்கொண்ட குழு ஒன்று இயங்கியது. ஓவிய உலகில் பரோடா பள்ளியைச் சேர்ந்தவர்கள் கலகக் காரர்களாகக் கருதப்பட்டார்கள். அத்தகைய ஒன்று இங்கும் முளை விடுவதாக நான் அக்காலத்தில் எண்ணக் காரணம் எழுத்துவில் ஆரம்பித்தது, நடையில் உருப்பெற்று கசடதபறவிலும் தொடர்ந்தது தான். இப்போது எல்லாப் பத்திரிகைகளிலும் காணும் பல துறை விகாசம் எங்கு எப்போது ஆரம்பித்தது என்பது இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. தெரிந்தாலும் தெரிந்ததாகக் காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் அவர்கள் தான் மூலவர்கள் என்று ஸ்தாபித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம். தொடக்கத்திற்குப் போகவேண்டும்.
இந்த உறவுக்கும் பரஸ்பர அறிதலுக்கும் முக்கிய உத்வேகமாக இருந்தது ஆதிமூலம் தான். அவர் பெயரே சொல்வது போல ஆதியும் அவர் தான். மூலமும் அவர்தான். ஒரு புள்ளி பிரபஞ்சமாக விரிந்து பூதாகரிப்பது நமக்கு அன்னியமான ஒரு விஷயமில்லை. நம் மரபில் சிந்தனையில் ஊறிய விஷயம். அறுபதுகளின் இடைப்பட்ட வருஷங்களிலிருந்துதான், என் நினைவில், தமிழ் ஒவியர்களின் சித்திர கண்காட்சிகளை கூட்டாகவோ தனித்தோ பார்த்து வந்திருக்கிறேன். தில்லியில், ரவீந்திர பவனின் லலித் கலா அகாடமி ஓவியக் கூடத்தில். ஆதிமூலத்தின் கோட்டுச் சித்திரங்கள் இருந்தன. அவரோடு காட்சிக்கு வந்திருந்தவர்கள் என இப்போது என் நினைவுக்கு வருபவர்கள் என எஸ், என் வெங்கடராமன், வரதராஜன் இருவரைத்தான் சொல்ல முடிகிறது. பெயர்கள் தான். சித்திரங்களை நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை. ஆனால் ஆதிமூலமும் அவரது சித்திரங்களும் நினைவுக்கு வரக் காரணம் அவர் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்ததும், பின் வருடங்களில் அவருடனான தொடர்பும் பரஸ்பர உறவும் இலக்கிய உலகிலும் விஸ்தரித்தது காரணமாக இருக்கலாம்.
அப்போதெல்லாம் தில்லியில், - நான் அக்காலத் தில்லியைப் பற்றித்தான் பேசமுடியும், - தெற்கிலிருந்து வரும் ஓவியர், சிற்பிகளைப் பற்றி அங்கு அதிகம் பேசப்படுவதில்லை. கொஞ்சம் பிந்தங்கியவர்கள் என்று அவர்களுக்கு மூக்கு வானத்தை நோக்கி உயரும். அவர்கள் கால்கள் இங்கு நிலத்தில் பாவியதில்லை. ஐரோப்பிய தாக்கம் சிந்தனையிலும் வாழ்க்கையிலும் உடையிலும் அதிகம் அவர்களுக்கு. ஸ·பாரி சூட்டும் உதட்டில் பைப்பும் ஓவியர் என்ற சீருடையை ஸ்தாபிக்கும். ஆனால் சென்னை ஓவியக் கல்லூரியிலிருந்து வந்தவர்கள் தம் மரபையும் மண்ணையும் விட்டு தம்மை அறுத்துக் கொள்ளாதவர்கள். அதற்கு அவர்கள் பள்ளியில் ஒரு ராய் சௌதுரியும் பணிக்கரும் இருந்தது காரணமாக இருக்கலாம்.
இதையெல்லாம் உடைத்து தன்னை ஸ்தாபித்துக் கொண்டவர் ஆதிமூலம். அவரது பலம் அந்நாட்களில் அவரது கோட்டுச் சித்திரங்களின் பலம் தான். அவரது திறனை இனங்கண்டு, மகிழ்ந்து, ஓவியக் கல்லூரியிலும் சேர்த்து ஆதிமூலத்தின் ஒவிய வாழ்க்கக்கு வழிகாடியாக இருந்த தனபாலே, அவரது சிஷ்யனைப் பற்றி, கிட்டத்தட்ட இந்தமாதிரி வார்த்தைகளில், சொல்கிறார். நினைவிலிருந்து எழுதுகிறேன். "நான் ஆதிக்குக் கற்றுக்கொடுத்தது ஒரு திசை காட்டலே. வழி காட்டியதும் அவன் ஐரோப்பிய மேதைகளுக்கு இணையாக கோடுகள் வரைவதில் வல்லவன். பாடத் தெரிந்து விட்டால் ராக ஆலாபனையில் தன் கற்பனையில் சொல்லிக்கொடுக்காததையும் தன்னை அறியாது பாடிவிடமுடிகிறதல்லவா?" ஒரு தனபாலிடமிருந்து இது ஒரு சிஷ்யனுக்குக் கிடைக்கிறது. இந்த சிஷ்யன் ஒரு கீராம்பூர் கிராமத்தில் பிறந்து கோவில் சுவர் சித்திரங்களியும் சுட்ட மண் சிற்பங்களையும் பார்த்து வளர்ந்தவன். "நான் ஒன்றும் அறிவு ஜீவியில்லை. நான் கற்றது சித்தாந்தங்களைப் படித்து அல்ல. படைப்புகளைப் பார்த்து." என்று சொல்வார் ஆதிமூலம். இது வெற்றுத் தன்னடக்கம் இல்லை. தன்னை அறிந்த முழுமை. பந்தா இல்லாத, மூக்கு வானத்தை நோக்காத முழுமை. கீராம்பூர் கிராமத்தில் விளைந்தது லண்டனுக்கும் செல்லும் என்ற தன்னம்பிக்கையின் பிறந்த முழுமை.
இந்த எளிமையும் உண்மையும் தான் அவரை இன்றைய தமிழ்க் கூட்டத்தில் தனித்து உயர்ந்து நிற்கும் மனிதராகக் காட்டுகிறது. அவர் தன்னைச் சுற்றியோ தன் தலைக்குப் பின்னோ ஒரு ஒளி வட்டம் பிரகாசிப்பதாக எண்ணியதில்லை. ஆரம்ப காலத்திலும் சரி, கடைசி வருடங்களில் அவர் படைப்புகள் வேறு எந்த தென்னிந்தியருக்கும் கிட்டாத அளவிற்கு வியாபார வெற்றியடைந்த போதும் சரி. நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது சில வருடங்கள் முன்பு தான். பேசியது தொலை பேசியில் ஒரு வருடம் முன்(ஜனவரி 1907). தில்லி லலித் அகாடமி கண்காட்சி ஹாலில்(1960களின் பின் பாதி) பார்த்துப் பேசிய அதே ஆதி மூலம் தான். இப்போது கொஞ்சம் நெருக்கமும் பரஸ்பர புரிதலும் அதிகம். முதல் சந்திப்பில் அவர் என்னை யாரென்று அறிந்திருப்பாரோ என்னவோ. ஆனால், அடுத்த சந்திப்பு(1973) சென்னை மௌபரீஸ் ரோடில் என்று நினைக்கிறேன். அப்போது அந்தப் பெயரில்தான் அந்த ரோடு இருந்தது. நான் தங்கியிருந்த உறவினர் வீட்டு வாசலில் தற்செயலாக. "அட இங்கு வந்திருக்கி றீர்களா?எவ்வளவு நாட்கள் இருப்பீர்கள்? வாருங்களேன் சாவகாசமாக பேசலாம். இடம் தெரியாதா? சச்சிக்குத் தெரியுமே. அவரோடு வாருங்கள்" எல்லாம் விசாரித்து, கேட்டு அவரே பதில்களும் பிரச்சினைகளுக்குத் தீர்வும் சொல்லியாயிற்று. போனோம் நானும் சச்சிதானந்தமும். நான் இருக்குமிடத்திற்கு நாங்கள் இருவரும் நடந்தே திரும்பினோம். எழும்பூர் Weavers" Centre, -லிருந்து தியாகராய நகர் திருமலைப் பிள்ளை ரோடில் சச்சி எனக்குத் தங்க ஏற்பாடு செய்திருந்த வீட்டிற்கு. தில்லி ரவீந்திர பவன் புல்வெளியில், தில்லி ப்ரெஸ் க்ளப்பில், அவர் ஒரு காலத்தில் இருந்த அடையாறு வீட்டின் முதல் தளத்தில். ஓவ்வொரு முறையும் நிறைய பேச்சும் அவர் வரைந்திருந்த ஓவியங்களைப் பார்ப்பதுமாக பொழுதுகள் போகும். சென்னை வந்த பிறகு நண்பர்களின் வீட்டுக் கல்யாணங்களில். பூந்தமல்லி ஹை ரோடு ஹோட்டலில்(ஹோட்டல் எவரெஸ்டா? நினைவில் இல்லை) முத்துக் கோயா, பிரபஞ்சன், பாஸ்கரனோடு. என் புத்தகங்களுக்கு வரைந்து கொடுத்தது, நான் நேரில் கேட்டு அல்ல. செல்லப்பாவோ, சச்சிதானந்தமோ அல்லது வேறு யாருமோ கேட்டு. ஒரு முன்னனணி ஓவியரைக் கேட்பது போல அல்ல. ஒரு நண்பரிடம் ஏதோ ஒரு வேலையை நமக்காகச் செய்யச் சொல்வது போல. ஒரு பந்தாவும் இல்லாத மனிதர். இதனால் அவர் பெற்றது ஏதும் கிடையாது. வியாபாரக் கணக்கில் ஒரு பைசா வரவில்லாத விஷயம். இது அறுபதுகளில் இருந்து தொடங்கி இறுதி மூச்சு வரை தொடர்ந்தது. அந்தக் காலத்தில் நடை பத்திரிகைக்கு அவரிடம் கேட்ட போது, அதனால் விளம்பரமும் கிடையாது. பண வருவாயும் கிடையாது. பிரக்ஞையுள்ள ஒரு சிறு வட்டத்திற்குள் ஒரு சலனத்தை, ஒரு பரிச்சயத்தை, ஒரு தெரிவை ஏற்படுத்துவது என்பதே நோக்கம். அவ்வளவே. அவரைத் தொடர்ந்து எண்ணற்ற பலரும் அதற்கு முன் வந்தனர். 1961-ல் எழுத்து பத்திரிகையில் ஒரு சிந்தனை வெளிப்பாடாகத் தொடங்கியது, பின் வருடங்களில் படிப்படியாக சின்ன முயற்சிகளாக இன்னும் பலர் சேர்ந்து செயல்பட்டது, இன்று ஒரு பகுதி சமூகத்தின் ஒட்டு மொத்த செயல்பாடாக வளர்ந்து பெருகியுள்ளது. கலை உணர்வு வளர்ந்துள்ளது, ஆழம் பெற்றுள்ளது என்று சொல்ல மாட்டேன். தெரிந்தும், பல இடங்களில் தெரியாமலும் அதன் மதிப்பு உயர்ந்துள்ளது. "இதென்னங்க ஒரே கிறுக்கலா இருக்கு. இதெல்லாம் அட்டையிலே போட்டா யார் வாங்குவாங்க? என்ற நிலையிலிருந்து, "இதெல்லாந்தாங்க இப்ப போடறாங்க, இதுக்கு ஒரு மதிப்பு இருக்குங்க," என்று அடுத்த பத்து பதினைந்து வருடங்களில் மாறி, இப்போது, "ஆதிமூலத்துகிட்டே போயி நானே இந்த மூணு புத்தகத்துக்கும் வரைஞ்சி வாங்கிட்டு வந்திடறேங்க, அப்பத்தான் நல்லா இருக்கும்" என்று ஆவலோடு முதலாளியே சொல்லும் நிலக்கு வந்துள்ளது. தெரிவு மாத்திரமல்ல. அது ஒரு சிறு வட்டத்திற்குள் தான் சிறைபடும். ஆனால் snobbery நிறைந்த பலனைக் கொடுக்கும். பணம், செல்வாக்கு இத்யாதி. பாமரத்தனமான அலங்கோலமாக இருந்த புத்தக வெளியீட்டில் தனக்கே உரிய எளிமையைக் குணமாக்கினார் செல்லப்பா. அதற்கு தொழில் நுட்பத்தோடு கலை என்ற பரிமாணத்தையும் தரத் தொடங்கியது க்ரியா ராமகிருஷ்ணன். அதற்கும் அவருக்கு உதவியது ஆதிமூலம் தான். அந்த சிரமம் மிக்க, பலர் நகையாடிய ஆரம்பங்கள் இன்று எங்கு புத்தக வெளியீட்டுத் துறையை கொண்டு வைத்துள்ளது?
இது வேறு எங்கும் நடந்ததில்லை. நடந்திராது. புத்தகங்களுக்கு மாத்திரமில்லை. ஒவ்வொரு கான்வாஸ¥ம் பல பத்து லட்சங்களுக்கு விலை போகும், இன்று கடந்த முப்பது நாற்பது வருடங்களாக, ஆதி மூலம் தன் நண்பர்களுக்கு, அவ்வப்போது அன்புடன் கொடுத்துள்ளது எண்ணிக்கையில், அடங்காது. அவற்றின் பொருள் மதிப்பீட்டை அவரவர் யூகத்திற்கு விட்டு விடலாம்.. ஆனால் ஆதி மூலம் 70 களில் நான் பார்த்த ஆதி மூலம் தான்.
பல விஷயங்களை தமிழ்ச் சூழலின் சந்தர்ப்பத்தில் சொல்லத் தோன்று கிறது. "நான் அறிவு ஜீவி இல்லை. நான் படித்துக் கற்றுக்கொள்ளவில்லை. உலகக் கலைப் படைப்புக்களைப் பார்த்துக் கற்று வளர்ந்தவன்," என்று தன்னைப் பற்றிச் சொல்லும் ஆதிமூலத்தின் வளர்ச்சியை, அவர் படைப்புக்களின் அவ்வப்போதைய சீரான மாற்றங்களில் பார்க்கலாம். தமிழ் மண்ணும் இந்திய ஓவிய மரபும் கோடுகளின் ஆதாரத்தில் பிறந்தவை. ஆதிமூலம் தன் உள்ளார்ந்த திறமையைக் கண்டுணர்ந்தது, சிறு வயதில் தன் கிராமத்தில் கண்ட சுதைச் சிற்பங்களை, சுவர் ஓவியங்களைக் கண்டு. அவரது வரை கோட்டுத் திறன் தன் வளர்ச்சியில் ஐரோப்பிய மேதைகளுக்கு இணையானது என்று தனபாலையே சொல்ல வைத்துள்ளது. வடநாட்டில், நகரங்களில் கால் வைத்த போது பொதுவாகவே தென்னாட்டு படைப்புக்கள் வரைகோடு சார்ந்து, உருவார்த்த குணம் சார்ந்திருப்பதன் காரணத்தால் ஏளனமாகப் பார்க்கப்பட்டபோதிலும் அவர் தன்னை வழி மாற்றிக்கொள்ளவில்லை. விஷயம் என்னவென்றால், அவர்கள் எப்போதாவது தம் வரைகோட்டுத் திறனை வெளிக்காட்டு சந்தர்ப்பம் நேரும்போது பார்த்தால் அவர்களது பலவீனமும் வெளிப்படுவதைப் பார்த்திருக்கிறேன். வரைகோடுகளின் ராஜ்யத்தில் ஆதிமூலம் மன்னன். அவரது வரைகோட்டுச் சித்திரங்கள் தம்மில் முழுமை பெற்றவை. நாடகார்த்தம், வீரியம், கொடூரம், மிருக பலம், கவித்வம், மெல்லிய இழையோட்டம் ஆகிய எல்லா குணங்களையும் அவை காட்ட வல்லவை. அவை வெளியையும் வெளியை நிரப்பும் திடத்தன்மையும் வெளிக்காட்ட வல்லவை. இவ்வளவுக்கும் ஆதிமூலம் தன்னை தன் இயல்பான வளர்ச்சியில் கண்டவர் தான். வெகு வருடங்களுக்கு அவர் கோட்டுச் சித்திரங்களை விட்டு நகரவில்லை. சில சமயங்களில் வண்ணங்கள் வாங்க பொருள் வசதியின்மையால் தான் என்று சொன்னதாகச் சொல்லப்படுகிறது. அது ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இருந்தாலும், அது ஒரு குறையாக இருந்ததில்லை. அந்தப் புள்ளியிலிருந்து இன்று அவரது உருவத்தை க் கடந்த வண்ணவெளி என்று சொல்லத்தக்க ஓவியங்கள் வரை அந்த மாற்றத்தின் பாதையை படிப்படியாகப் பார்த்தோமானால், ஒரு மாற்றம் அதன் முந்திய நிலையின் அம்சங்களைக்கொண்டே பிறந்து வெளிப்பட்டுள்ளதைக் காணலாம். எதுவும் முந்தியதை அறவே மறுத்து ஒதுக்கி, புதிதாகப் பிறந்ததல்ல. இயல்பான வளர்ச்சியில் எந்த புதியதும் முற்றிலும் புதியதல்ல. எந்த பழையதும் முற்றிலும் பழையதுமல்ல. பழையதின் குணத்தைக் கொண்டிராத புதியதும் இல்லை. புதியதன் குணத்தைத் தன்னுள் கொண்டிராத பழையதும் ஏதும் இல்லை. ஆதிமூலத்தின் 40 வருட கால ஓவிய வாழ்க்கையே அவரது தன்னின் மலர்ச்சிதான்.
எவ்வெத்துறையிலோ சிற்பிகளை, ஓவியர்களை, கலைஞர்களை நாம் தமிழ் நாட்டில் விருது அளித்து, ஆடிக் கொண்டாடி முடிசூட்டிக் கொண்டாடி வருகிறோம். ஓவியத்துறையில் நாம் பெற்றுள்ள ஒரு தலைசிறந்த கலைஞரை, நாம் கலைஞராக காணவும் இல்லை. ஒரு கட்டத்தில் நாம் விருது பெறாத, ஏதோ ஒன்றிற்கு சிற்பியோ மன்னனோ, அரசோ இல்லாத ஒரு தமிழனைக் காண்பது சிரமமாக இருக்கும் போலிருக்கிறது. ஆனால் ஒரு கலைமாமணியாகக் கூட ஆதிமூலத்தை நாம் காணவில்லை. உண்மையில் பார்க்கப் போனால், அரசியல் சார்பு இருந்தால் ஒழிய ஓவியர்களும் சிற்பிகளும் தமிழ் நாட்டு அரசுகளுக்கு பெருமைப் படும் ஜீவன்களாகத் தெரியவில்லை. ஆனால் எனக்குத் தோன்றுகிறது. அரசும் வாணிகமும், அரசியலும் இதில் தலையிடாதது நல்லதாகத்தான் இருந்திருக்கிறது. இல்லையெனில் சினிமாவிலும் (இது தான் தமிழ் நாட்டுக் கலை) நாடகத்திலும், இலக்கியத்திலும் நேர்ந்த பாமரத்தனமான விளைவுகளை ஓவிய சிற்ப உலகிலும் கண்டிருப்போம். எல்லாத் துறைகளிலும் இது போன்று அரசிடமிருந்தும், அரசியல் வாதிகளிடமிருந்தும் ஒரு காருண்யமிகுந்த அலட்சியம் (benign neglect) இருந்திருந்தால் எத்தனையோ பேரரசுகள், மன்னர்கள், திலகங்களிடமிருந்து தமிழ் நாடு தப்பிப் பிழைத்திருக்கும்.
ஆனால், ஆதிமூலம் இது பற்றியெல்லாம் கவலைப்பட்டவரில்லை. அது பற்றிய சிந்தனையே அவருக்கு இருந்ததில்லை. ஒரு கட்டத்தில் திருக்குறள் ஒன்றிற்கு அவர் ஏன் ஓவியம் வரைந்து கொடுத்தார் என்று நான் எண்ணியதுண்டு. அவர் அதை அமைதியாக மறுத்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது. அந்த கலவரத்தை அவர் விரும்பாத காரணத்தால் தான் அவர் இயல்புக்கு விரோதமான ஒன்றைச் செய்தார் என்றும் தோன்றிற்று. அவர் பந்தா அற்றவர் மட்டும் அல்ல. அமைதியானவர். அமைதியாக, தன் இயல்புக்கான செயல்களைச் செய்து வாழ்ந்தவர். யாரிடமும் அவர் கோபம் கொண்டதாக, எது பற்றியும் அவர் சீற்றம் கொண்டதாக செய்தியில்லை. நான் தில்லியில் இருந்த காலத்தில் அவர் மத்திய லலித் கலா அகாடமிக்கான் சில பொறுப்புகளை வகித்ததுண்டு. அது அவரை வந்தடைந்தது அபூர்வமே. வட இந்தியர்கள் அவ்வளவு சுலபமாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அப்போதெல்லாம் அவர் அலட்சியத்துடன் ஒதுக்கப்பட்டு வந்த தென்னிந்திய ஓவியர்கள் சிற்பிகளை கவனத்தில் கொண்டு வர முயன்ற காரணத்தாலே வட இந்தியர்களிடையே சச்சரவுக்காளானார் என்று தெரிந்தது. எது பற்றியும் அவருக்குக் கவலை இல்லை. எந்த பதவியையும் பரிசையும், விருதையும், கௌரவத்தையும் அவர் நாடிச் சென்றதில்லை. அவர் அடைந்த வெற்றிகள் அவர் படைப்புகளுக்குக் கிடைத்த வெற்றி. அவர் படைப்புகள் அவரது ஆளுமையின் வெளிப்பாடுகள். வியாபார வெற்றி அவரை வந்தடைந்ததே தவிர அதை நாடி அவர் தன் படைப்பின் அதற்கான வழிமுறைகளைத் தேடியவரில்லை. இப்படி இந்திய பரப்பளவில் எத்தனை கலைஞர்களைப் பற்றிச் சொல்லமுடியும் என்று தெரியவில்லை.
ஒரு புள்ளிதான் தன் விகசிப்பில் பிரபஞ்ச பரிமாணம் பெறுகிறது என்றேன். தன் சிறுவயது கீராம்பூர் கோவிலும் அதன் சுவர் ஓவியங்களும், சுதைச் சிற்பங்களும், கிராமக் காட்சிகளும் மக்களும் என்று தொடங்கி சென்னை கலைக் கல்லூரி வாழ்க்கையின் காட்சிகளும் மனிதர்களும் (ராமானுஜம்), தான் வியந்த பிக்காசோக்களும், செகாலும், காந்தியும், மகாராஜாக்களும் என்று கடந்து, விரிந்த வெளியும் அதில் மிதக்கும் உருவங்களும் என அந்தப் புள்ளிதான் இப்படி பரிமாணம் பெற்றுள்ளது.
ஆதி மூலம் நிறைய படைப்புகளை, ஓவியக் கூடங்களில், வணிக நிறுவனங்களில், தனி நபர்களிடம், இந்திய, அன்னிய நாட்டு கலைக்கூடங்களில் விட்டுச் சென்றிருக்கிறார். அவை மொத்தமும் தமிழரின் கலைத் திறனுக்கு அடையாளமாக இருக்கும். அவ்வாறு கருதப்படும் ஒரு காலம் வரும். பிக்காஸோ ஸ்பெயினுக்கும் வான் கோ டச்சுக்கும் அடையாளமாகியிருப்பதைப் போல.
வெங்கட் சாமிநாதன்/17.1.08