Tuesday, November 06, 2007

மதுரம் பாட்டி

சில விஷயங்கள் மறப்பதில்லை. எவ்வளவு நீண்ட காலம் ஆனாலும். நேற்றைய சமாச்சாரம் மறந்து விடுகிறது. இதை எப்படி புரிந்து கொள்வது?. கோர்ட்டில் இந்த மாதிரி சாட்சி சொன்னால், 50 வருஷத்திற்கு முன்னால் நடந்தது நினைவில் இருக்கிறது. பத்து நாட்கள் முன்னால் மறந்து போவது எப்படி? நீங்கள் சொல்வது பொய் என்று வக்கீல் என்னைக் குறுக்கு விசாரணை செய்தால், நான் என்ன பதில் சொல்லமுடியும்? நிச்சயம் நான் 'பொய்யன்' என்று தான் கோர்ட்டும் முடிவு கட்டும். இப்படித்தான் நினைவும் மறதியும் என்னுடன் மாத்திரம் இல்லை, நம் எல்லோருடனும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் விளையாடி வருகிறது.

அவர் பெயர் எஸ் நடராஜன். எஸ். என். ராஜா என்று தான் அவரை நாங்கள் எல்லோரும் அறிவோம். காவேரிப்பட்டனத்திலிருந்து ஹிராகுட்டிற்கு வேலைக்கு வந்தவர். நான் ஹிராகுட்டுக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர். ஹிராகுட்டில் 1950 களில் எஸ். என். ராஜா எனக்கு ரொம்ப பெரியவர். வந்ததும் அவர் வீட்டில் தான் தங்கியிருந்தேன். நான் மட்டுமல்ல இன்னும் சிலரும். அவர்களில் எஸ். என். ராஜாவின் மச்சினனும் ஒருவன். அப்போல்லாம் ராஜாவைத்தவிர மற்றவர்கள் எல்லாமே 'ன்" தான். அந்த மச்சினன் பெயர் மறந்து விட்டது. ஆனால் அவன் அசகாய சூரன். என்னை விட இரண்டு வயது தான் பெரியவன். இருந்தாலும் நான் அவனை அசகாய சூரன் என்று சொல்லக் காரணம், வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழையும் போதே ரேடியோவில் கச்சேரி கேட்டுக்கொண்டே, "யாரு வயலின்? ராஜமாணிக்கம் பிள்ளை தானே? " என்பான். அவனால் அந்த வயசில் எப்படிச் சொல்ல முடிந்தது என்பது இன்னும் எனக்கு ஆச்சரிய மாக இருக்கும். அவனுக்கும் ராஜாவுக்கும் என்னிடம் பிரியம் அதிகம். ராஜாவின் மனைவி ஊரிலிருந்து வருகிறார் என்றதும் நான் வேறு இடம் தேடினேன். அணைக்கட்டு அலுவலகமே எனக்கு வீடு கொடுத்து ஆர்டர் கொடுத்து விட்டது. இன்னொருவருக்குக் கொடுத்த வீட்டில் நானும் பங்கு கொள்ளவேண்டும். ஆரம்ப காலத்தில் இப்படித்தான் நடந்து வந்தது. பத்மனாபன் என்னும் ஒரு எலெக்ட்ரீஷியன். அவனுக்கு ஒரு உதவி ஆள். அவனும் அந்த வீட்டில் தான் இருந்தான். அவன் ஒரு க்ளாஸ் ப்ராண்டியோ விஸ்கியோ உள்ளே போடாமல் விளக்குக் கம்பத்தின் மேல் ஏறமாட்டான். ஒய்.பி.வி. ராவ் என்று ஒரு தெலுங்கன். முழு பெயர் யெடவில்லி புட்சி வெங்கடேஸ்வர ராவ்.(இது எப்படி ஞாபகம் இருக்கு?) ஒரு மாதிரி கிறுக்கு. எப்போ பார்த்தாலும் ஸ்ரீ ஸ்ரீ யின் கவிதைகளைப் படித்துக்கொண்டிருப்பான். ஸ்ரீ ஸ்ரீயின் தெலுங்குக் கவிதைகளில் நிறைய ஆங்கில வார்த்தைகள் தெளிக்கப்பட்டிருக்கும். தீவிர செக்கச் செகப்பான கம்யூனிஸ்ட். இதையெல்லாம் பார்த்த ராஜாவுக்கு கொஞ்சம் பயமாக இருந்திருக்கிறது. எனக்கு அப்போது வயசு பதினாறு தான். சம்பளம் கிடைத்ததும் ஊருக்கு அப்பாவுக்கு பணம் அனுப்ப வேண்டும். நான் ஒழுங்கா இருப்பேனா என்று. அவருக்கு சந்தேகம் ."தனியா வந்துட்டோம்னு இருக்காதே, ரெண்டு நாளைக்கு ஒரு தடவையாவது வந்து போய்க்கொண்டிரு" என்றார். அவருக்குக் கொஞ்சம் மனம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தது தான். எப்படி சிலர் வெகு சீக்கிரம் மிக ஒட்டுதலாகி விடுகிறார்கள்!

எனக்கும் அங்கு ஆதரவு தரும் பெரியவர் யார்? அவர் வீடு ஒன்றும் வெகு தூரமில்லை. நாலைந்து ப்ளாக் தள்ளி ஒரு நூற்றைம்பது அடி தூரத்தில் தான். அடிக்கடி போய் வருவேன். நாயர் ஹோட்டல் டீயே சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியுமா? சாயந்திரம் போன உடனே "காபி சாப்பிடறயாடா" என்று மாமி கேட்பார். வேறென்ன வேண்டும்.?

ஒரு நாள் ராஜா சொன்னார். "உங்க ஊர்க்காரா இங்கே இருக்காளே தெரியுமோ சாமா? " என்று கேட்டார். " எங்க ஊர்க்காராளா? இங்கேயா? ஹிராகுட்டிலேயா?." என்று எனக்கு வியப்பாக இருந்தது. எங்க ஊர் கொஞ்சம் விசித்திரமான ஊர். யாராவது பனியனும், காலில் செருப்புமாக தெருவில் நடந்தால் போதும், " என்னடா ராமேந்திரா, கும்மோணமா? " என்று கேட்பார்கள். கும்மோணம் இல்லாவிட்டால் இந்தப் பக்கம் தஞ்சாவூர். அதைத் தாண்டி இருக்கும் லோகம் அவர்களுக்கு வேண்டியதில்லை. "என்னத்துக்குடா, கும்மோணம் பெரிய தெருவிலே கிடைக்காத ஜாமான் லோகத்திலே உண்டா சொல்லேன் பார்ப்போம்" என்பார்கள். "புள்ளையாண்டான் எங்கியோ வடக்கே போயிட்டானாமே" என்று தான் என்னைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட ஊரில் ஒருத்தர் புத்தியில் இங்கே ஒரிஸ்ஸாவில் ஆதிகுடிகள் வசிக்கும் ஒரிஸ்ஸா எப்படிப் பட்டிருக்கும்? ஆச்சரியமாக இருந்தது. "நிஜமாத்தான் சாமா, எனக்கே ஆச்சரியமாத்தான் இருந்தது. இப்போ நான் வரலியா காவேரிப்பட்டனத்திலேர்ந்து. இல்லே நீ தான் வரலியா? எல்லாம் அப்படித்தான். வா. உடனே போய்ப் பாத்துட்டு வரலாம் இங்கே தான் பக்கத்திலே ஜி.ப்ளாக்கிலே தான் இருக்கா" என்றார். எனக்கு எங்கள் ஊரில் யாரையும் அதிகம் தெரியாது. நான் 14 வயது வரை வளர்ந்தது நிலக்கோட்டையில். நான் உடையாளுருக்கு வந்தது, கும்பகோணத்தில் 9-வது 10-வது பள்ளிப்படிப்பை முடிக்கத்தான். ஆற்றில் தண்ணீர் இருக்கும் நாட்களில் கும்பகோணத்திலேயே தங்கி விடுவேன். சனி ஞாயிறுகளில் தான் உடையாளுருக்கு வருவேன். பள்ளி நாட்களில் ஐந்தரை மைல் தூரம் நடந்து மூன்று ஆறுகளைக் கடந்து பாணாதுரை ஹைஸ்கூலுக்குப் போக வேண்டும். காலை 8 மணிக்குக் கிளம்பினால் சாயந்திரம் ஏழு மணிக்குத் தான் உடையாளூர் திரும்ப முடியும். இன்னமும், எங்கள் வீடு இருந்த சாரியில் அக்கம் பக்கத்து நாலுவீட்டு மனிதர்களைத் தெரியும். அதற்கு மேல் யாரையும் எனக்குத் தெரியாது.

ஆக, ராஜா எங்கள் ஊர்க்காரர்கள் முன்னிலையில் என்னை நிறுத்தி, "சாவித்திரி, இதோ வந்திருக்கான் பார் உங்க ஊர் பிள்ளையாண்டான்'," என்றவர் என்னைப் பார்த்து, "தெரியறதா, யார்ன்னு?" என்று கேட்ட போது, "இல்லையே" என்று அசடு வழியச் சிரித்தேன். "அவனுக்கு எப்படித் தெரியும்? நான் உடையாளூரில் இருந்த போது அவன் அங்கே இல்லை. எங்கேயோ மதுரைக்குப் பக்கத்தில் அவனோட மாமாதான் படிக்க வச்சிண்டிருக்கார்னு சொன்னா. நானே இவனைப் பாத்ததேயில்லையே." என்று எனக்கு ஆதரவாக அந்தப் பெண் பேசினாள். என்னைவிட நான்கு ஐந்து வயது தான் பெரியவளாக இருந்திருப்பாள். சற்று தாட்டியான உடம்பு. கலகலப்பான சிரித்த முகம். அவளுடைய புருஷன் நல்ல உயரம். நல்ல பருமனும் கூட. ஆனால் நல்ல கருப்பு.


"இவனைப் பாத்ததில்லையே தவிர இவா எல்லாரையும் எனக்கு நன்னா தெரியும். ராஜம் சாஸ்த்ரிகளாம்னா ஊரிலே எல்லாருக்கும் நன்னா தெரியும். கபிஸ்தலத்திலேர்ந்து அப்பப்போ வந்து போயிண்டுதான் இருப்பேன். பாட்டி அழைச்சிண்டு வருவா. நம்ம மனுஷாள மறக்கப்படாதும்பா. " அப்போ எல்லாரையும் விசாரிச்சுப்பேன். பாட்டியும் சொல்லுவா..... நன்னா இருக்கியாடா இங்கே. அப்பாக்கு ஒழுங்கா பணம் அனுப்பரயோல்யோ. அனுப்பிண்டுரு. இல்லாட்டா ரொம்ப கஷ்டப்பட்டுப் போவா. ரொம்பச் சின்ன வயசிலேயே, இத்தனை தூரம் வந்து வேலை பாத்து அப்பா அம்மாவைக் காப்பாத்தணும்னு ஆயிடுத்து, கஷ்டந்தான். . ரொம்ப சின்னவனா இருக்கியேடா.. " பேசிக்கொண்டே போனாள் அந்தப் பெண். அவள் புருஷனுக்கு பேச ஒன்றும் இல்லை. பேசுகிறவர்களைப் பார்த்துக்கொண்டு சிரித்துக் கொண்டும் இருந்தார். ராஜா சொன்னார். '" நான் கூட நினைச்சேன் அவன் வரதுக்கு முன்னாலே, வொர்க் ஷாப்பிலே சேத்துடலாம்னு. நிறைய கத்துக்கலாம். ஆனா இப்படி ஒடிஞ்சு விழறாப்பிலே நோஞ்சானா இருக்கானேன்னு தான் சரி நடக்கறபடி நடக்கட்டும்னு விட்டுட்டேன்" என்றார். "அப்பா அம்மாள்ளாம் சௌக்கியமா இருக்காளா, அவாளுக்கு என்னெ நன்னா தெரியும். அம்மாவக் கேள் நிறைய சொல்வா" என்றாள். " "சாவித்திரியப் பாத்தேன் இங்கே தான் இருக்கா"ன்னு ஊருக்கு லெட்டர் போடறபோது எழுது. என்ன எழுதறயா?" என்றாள். ஊர்க்கதை யெல்லாம் பேசிக்கொண்டிருந்தாள்.. இப்போதான் கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் ஆயிருக்கிறது. இங்கே வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவளது கலகலப்பு வைத்தியநாதனிடம் இல்லாவிட்டாலும், சினேகமாக இருந்தார். அவ்வப்போது ஏதாவது கடன் கேட்பார். கொடுப்பேன். அப்புறம் சம்பளம் வந்த கையோடு அவசர அவசரமாக, முதல் காரியமாக வீடு தேடி வந்து கொடுத்துவிட்டுப் போவார். அந்த அவசரமும் நேர்மையும் ரொம்ப அதிகப்படியாகத் தோன்றும். மனசுக்குக் கஷ்டமாக இருக்கும். சொன்னால் கேட்க மாட்டார்.


ஊருக்குப் போகப் போகிறேன். வந்து ஒரு வருஷத்துக்கு மேலே ஆகப்போகிறது என்று ஒரு நாள் அவர்களிடம் சொன்னேன். சாவித்திரிக்கு ஒரே சந்தோஷம். "அப்படி யாடா, எத்தனை நாளைக்கு? எங்க பாட்டியைப்பாத்துட்டு வரயாடா. நாங்க சௌகரியமா இருக்கோம். அடிக்கடி பார்த்துப் பேசிப்போம்னு சொல்லு என்ன? சொல்றயா? எங்கேயோ கண் காணாத தூர தேசத்திலே இருக்காளே ன்னு கவலப்படுவா. கூட இருக்கறவா சொன்னா கொஞ்சம் ஆறுதலா இருக்கும். அதுக்குத் தான் சொல்றேன். உடையாளுருக்குப் போனா கும்பகோணம் போயிட்டு வருவியோல்யோ, இல்லே ரயில்வே ஸ்டேஷனோடே சரியா?" என்று கேட்டாள். " இல்லே கட்டாயம் போய் பாத்துட்டு பேசிட்டு வரேன். அட்ரஸ் எழுதிக்கொடுங்கோ" என்றேன். எழுதிக் கொடுத்தாள். "ரெட்டிராயர் குளம் மேற்குத்தெருவா? அங்கே கூட எதுக்கோ போயிருக்கேன்னு நினைக்கறேன். போயிட்டு வந்து எழுதறேன்." என்று சொல்லிவிட்டு வந்தேன். அவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.


வந்ததும் அம்மாவுக்கு என்னோடு பேச நிறைய இருந்தது. போன உடனே ஜெம்ஷெட்பூர்லே இருந்து ஆறு மாசம் படிப்பும் வேலையுமா இருந்தது, பின்னால் ஹிராகுட் போனது, வேலை, ஊர், சாப்பாடு எல்லாம் பற்றி அம்மாவுக்குத் தெரிந்து கொண்டே ஆகணும். ஊரை விட்டுப் போய் ஒன்றரை வருஷம் ஆயிடுத்து. இப்போதான் ஆறுமாசமா என்கிட்டேயிருந்து பணம் வந்துண்டு இருக்கு. போறலே தான். இருந்தாலும் சமாளிச்சுக்கலாம். போகப்போக எல்லாம் சரியாயிடும். அடகு வச்ச நகைய வேறே மீட்டாகணும், கொஞ்சம் கொஞ்சமா. நீ பணம் அனுப்பாட்டா ரொம்ப திணறிப் போயிடும்டா அதை நினைவிலே வச்சுக்கோ" என்று நிறைய பேசிக்கொண்டே இருப்பாள். நான் போனப்பறம் நடந்த ஊர்க்கதையெல்லாம் சொல்வாள். பிறகு சாப்பிடும் போது, கேட்டாள்: "ஏண்டா அங்கே சாப்பாடெல்லாம் எப்படி இருக்கு?. அங்கே ராஜான்னு சொன்னயே. இப்போ அங்கே இல்லேன்னியே. எங்கே சாப்பிடறே?" என்று கேட்டாள். அங்கே ஒரு நாயர் ஹோட்டல் இருக்கும்மா;. புழுங்கல் அரிசி தான் போடறான். மத்தபடி பரவாயில்லே. ஆனா அத விட்டா வேறே கதி இல்லே" என்றேன். அம்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.; அப்பாவைப் பார்த்தாள். அப்பாவுக்கும் கேட்கப் பிடிக்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியாது திக்கிட்டுப் போய் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். "போற இடத்திலே நம்ம சௌகரியப்படி எல்லாம் கிடைக்குமா? எல்லாம் அப்படி அப்படித் தான் இருக்கும்" என்றார் அப்பா.


அடுத்த நாள் அம்மாவிடம் சொன்னேன். "சாவித்ரீன்னு ஒரு பொண்ணும்மா. ஹிராகுட்டுக்கு வந்திருக்கா. இப்போ தான், ரண்டு வருஷத்துக்கு முன்னாலே கல்யாணம் ஆச்சுன்னு சொன்னா. இந்த ஊர்தான்னு சொன்னா. அவளோட புருஷனுக்கு கபிஸ்தலம் போல இருக்கு. அவளோட பாட்டி இப்போ கும்பகோணத்திலே ரெட்டி ராயர் குளம் மேற்குத் தெருவிலே இருக்காளாம் போய் பாத்துட்டு பேத்தி சௌகரியமா இருக்கான்னு சொல்லச் சொன்னா" இன்னிக்கு மத்தியானம் போய்ட்டு வந்துடறேனே" என்றேன். அம்மாவுக்கு பேசிக்கொண்டே இருக்க வேண்டும். இன்னும் நிறைய பேசவேண்டியதிருக்கு. இருந்தாலும், "போய்ட்டு சீக்கிரம் வந்துடு. அப்புறம் சுத்தறதெல்லாம் வச்சுக்காதே, இதோ லீவு முடிஞ்சு போயிடுத்துன்னு ஓடிப்போயிடுவே.....என்றாள் அரைமனதோடு.


அப்போது மூணு ஆறும் வற்றிக் கிடந்தது. வயல்களுக்குக் குறுக்கே வரப்போட நடந்தா ஐந்து ஐந்தரை மைல் இருக்கும். ஸ்கூலுக்குப் போக இரண்டு வருஷம் நடந்து பழக்கமான வயல்தான் வரப்புதான். கும்பகோண த்துக்கும் உடையாளூருக்கும் பஸ் வசதி கிடையாது. மாட்டு வண்டிப்பாதை கூட கிடையாது. வலங்கிமானுக்குப் போய் அங்கிருந்து தான் கும்பகோணத்துக்குப் போகவேண்டும். வலங்கிமானுக்குப் போகக்கூட மூணு மைல் நடக்கணுமே. அதுக்கு இது தேவலை. நாதன் கோயில் தாண்டி விட்டாலே கும்பேஸ்வர ஸ்வாமி, சாரங்கபாணி கோயில் கோபுரங்கள் வானைத் தொட்டுக் கொண்டு நிற்பது தெரியும். நினைத்துப் பார்க்கும்போது அதுவும் அழகாகத் தான் இருக்கிறது. பார்த்துக்கொண்டே போகலாம். அரசலாற்றங்கரையிலிருந்து ஆரம்பித்தால் ஒவ்வொரு தெரு முடியும் போதும் ஒவ்வொரு கோவிலாகத்தான் கடந்து செல்லவேண்டும் அவ்வளவு கோவில்கள். குளங்கள். இரண்டு வருஷங்கள் மகாமகக் குளக்கரைத் தெரு ஒன்றில் தான் நான் படித்த காலம் கடந்தது. ரெட்டி ராயர் குளம் கும்பகோணத்தின் இன்னொரு கோடியில் இருந்தது. பழைய, அப்படி ஒன்றும் பழைய அல்ல, ஒன்றரை வருஷம் தான் ஆகிறது இதையெல்லாம் விட்டு வந்து, ஆனால் இனி இங்கு வருவது அரிதாகத் தான் நிகழும் என்னும் போது அது மிகப் பழையாகத் தோற்றம் கொண்டு ஒரு சோகம் கப்பும். ஆக, அப்போதே சமீப் பழசு மிகப் பழசாகிவிடும். நினைவுகளுக்கு அப்படி ஒரு புகைமூட்டம் கவிழ்ந்து விடும்.

சாவித்ரி சொன்ன வீட்டுக்குப் போனேன். "இருங்கோ, கூப்பிடறேன்" என்று என்னை முன் வாசல் திண்ணையில் உட்கார்த்திவிட்டு ஒரு பெண் உள்ளே போனாள். சாவித்திரியை விட வயது கொஞ்சம் கூட இருக்கும் போலத் தெரிந்தது. ஒரு பாட்டி சற்று நேரத்துக்குப் பின் உள்ளே யிருந்து வந்தாள். " யாருடாப்பா நீ குழந்தே. சாவித்ரியப் பாத்தேன்கிறயே, உட்காந்துக்கோ. எங்கேருந்து வரே" அன்பும், கரிசனமும் வாத்சல்யமும் அவள் பேச்சில் குழைந்து வந்தது. சொன்னேன். "என்னது ராஜம் வாத்தியார் பிள்ளயா நீ. ஆமாம், உடையாளுர்லேர்ந்தா வரே, இவ்வளவு தூரம் இந்த வெயில்லே நடந்து வந்திருக்கியேடா குழந்தே." பாட்டி நல்ல உயரம். நல்ல நிறம். பாட்டிக்கு வயசு அறுபதுக்கு மேலே இருக்கும்னு சொன்னா. ஆனால் பாட்டிக்கு முகத்தில், எங்கும் ஒரு சுருக்கம் இல்லை. நல்ல ஆரோக்கியமான உடம்பு. விதவைக் கோலம் தான் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அறுபது வயதுக்கு விதவைக்கோலம் நம் நாட்டில் அப்படி ஒன்றும் அசாதாரண விஷயம் இல்லை. பாட்டியின் பேச்சில், தோற்றத்தில் வறுமையோ, முதுமையோ சொல்ல முடியாது. கஷ்டங்கள் அறியாது வளர்ந்தவள் போல. ஆனால்...."

"ஆமாண்டா இப்போ நெனவுக்கு வர்ரது. நீ எங்கியோ உன் மாமா கிட்டே இருந்து படிச்சிண்டுருக்கேன்னு சொன்னா. அப்பறம் எங்கியோ வடக்கே வேலேலே இருக்கேன்னு சொன்னா. அது தானா நீ. எப்படிடாப்பா இருக்கு அங்கே எல்லாம். மனுஷா எல்லாம் நல்ல மனுஷாளா இருக்காளா,..... எல்லாம் நாம் இருக்கறத்ப் பொறுத்து இருக்கு நாம நன்னா இருந்தா அவாளும் நன்னாத் தான் இருப்பா... சாவித்ரி எப்ப்டி இருக்கா. அவளுக்கு உன்னத் தெரிஞ்சுதா. ரெண்டு பேரும் குழந்தக. எங்கேயே வளந்துருக்கேள். ராஜத்த எனக்கு நன்னாத் தெரியும். தங்கத்தையும் தான். தங்கம்னா அவ தங்கம் தான். சரி சொல்லு, சாவித்திரி எப்படி இருக்கா. மாப்பிள்ளைக்கு என்ன வேல. அவரும் உன்னோட நன்னா பேசுவாரா? அவாளுக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லியே. என்ன பன்றது சொல்லு. இதோ கபிஸ்தலம் பக்கத்திலே தானே இருக்குன்னு நினைச்சேன். ஆனா, இப்படி கண்காணாத இடத்தெலே தான் மாப்பிள்ளைக்கும் விதி எழுதிருக்குன்னா நாம என்ன செய்யக்கிடக்கு சொல்லு..... ஆனா நீ வந்து சொல்றப்போ மனசுக்கு நிம்மதியாருக்கு. இரு பேசீண்டே இருந்துட்டேன் இரு இதொ வந்துட்டேன்" என்று சொல்லி உள்ளே போனாள்

பாட்டி உள்ளிருந்து வந்தாள். "ராத்திரி இங்கேயே தங்கிட்டுப் போலாமேடா. ஊருக்குப் போகணும்னு என்ன அவசரம்?" என்றாள். "அம்மா கோவிப்பாள். இப்போதான் முதல் தடவையா லீவில் வந்திருக்கேன்" என்றேன். " அதுவும் சரித்தான். நீ வந்ததே பெரிசு. இங்கே வந்த இடத்திலே நான் வேறே உன்னத் தக்க வச்சுண்டா எப்படி?சரி சாப்டுட்டுப் போலாம். என்ன? அவ இப்போதானே அங்கே வேலைக்கு சேந்திருக்கா. இப்போ வரமுடியாது தான். நீ லீவுக்கு வர போதெல்லாம் வா, என்ன? செய்வியா?,,.,...." பாட்டி பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கணும் போல இருந்தது. எப்படி இந்த சாதாரண சமாச்சாரங்களை இத்தனை வாத்சல்யத்தோடு சொல்ல முடிகிறது? வாத்சல்யத்தோடு பிரியமானவர்களைப் பிரிந்த சோகமும் கலந்தே இருந்தது. இந்த இரண்டின் கலப்பும் மனதை என்னவோ செய்துவிடும். பாட்டி பேசிக்கொண்டே இருந்தாள். கேள்விகளும் நிறைய சாவித்ரி, அவள் கணவன், ஹிராகுட் வாழ்க்கை என்று நிறைய கேட்டுக் கொண்டே இருந்தாள். எனக்கு அவள் முகமும், அந்த ஆதுரமும் தான் நினைவில் இருக்கின்றன. சற்று நேரத்தில் சாப்பிட அழைப்பு வந்துவிட்டது. சீக்கிரம் சாப்பிட்டுடு. ஊருக்குப் போய்ச் சேர்ரதுக்குள்ளே நாழியாயிடும். " என்றாள் பாட்டி. இவ்வளவு சீக்கீரத்தில் ஒரு வத்தல் குழம்பு, வடாம், ஒரு ரசம் தயாராகிவிட்டது ஆச்சரியமாக இருந்தது. வத்தல் குழம்பும் அருமையாகத் தான் இருந்தது. சாப்பிட்ட பிறகு, ஒரு பொட்டலம் ஒன்று தயாராக இருந்தது. "இந்த இதக் கொண்டு போய் சாவித்ரி கிட்டே கொடுத்துடு. ஒரு புடவையும் ரவிக்கைத் துணியும் கொஞ்சம் பணமும் இருக்கு. பத்திரமா எடுத்துண்டு போவியா? ஏண்டாப்பா, நிஜமாத்தான் ஊருக்குத்தான்ன் போகப் போறயா, இல்லே ராத்திரி சினிமா பாக்கப் போறயா? இல்லாட்டா அப்பறமா வந்து எடுத்துண்டு போறயா? " என்று கேட்டாள்.

பாட்டிக்கு புத்தி மிகக் கூர்மையாகத்தான் இருந்திருக்கிறது. சினிமா பாத்துவிட்டு நாளை காலை தான் ஊருக்குப் போவதாக என் மனசில் இருந்தது. இப்போது அதெல்லாம் நடக்காது. பாட்டியிடம் பொய் சொல்லக் கூடாது. அப்புறம் இந்த புடவைப் பார்சலை வைத்துக் கொண்டு எங்கே எந்த வீட்டுத் திண்ணையில் படுப்பது? பாட்டியிடம் நல்ல பேர் வாங்கிக்கொண்டு கிளம்பினேன் ஊருக்கு.

வெயில் காலமானாலும் ஊருக்குத் திரும்பும் போது இருட்டி விட்டது. "ஏண்டா இத்தனை நாழி, இருட்டினப்பறம்? கவலயா இருக்காதாடா? என்று திட்டினாள் அம்மா.

மறு நாள் சாவகாசமாக சாப்பாடு எல்லாம் முடிந்த பிறகு கூடத்தில் சாவகாசமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது அம்மாவிடம் பாட்டி பேசினது, கேட்டதெல்லாம் சொன்னேன். " அம்மா, உன் பேர் மட்டும் தங்கமில்லையாம். நீ தங்கமே தானாம், பாட்டி சொன்னாள்" என்றேன். அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். "பாட்டி ரொம்ப கஷ்டப்பட்டுட்டாடா, ரொம்பவும் பாவப் பட்ட ஜன்மம்" என்றாள் சட்டென முகத்தில் கவிந்த சோகத்துடன். இருக்கும் ஏதாவது. நம் எல்லார் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கட்டத்தில் ஏதாவது பெரிய துன்பம் ஏற்பத்தானே செய்கிறது. ஆனால் அம்மா சொன்னாள்:

அப்பல்லாம் ரொம்ப சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணிக்குடுத்துடுவா. பாட்டிக்கு அப்போ ஏழு வயசோ என்னவோ தான். கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டா. ஆனா பண்ணிக்கொடுத்த இடத்திலே அந்தப் பையன் ரொம்ப நாள் இருக்கலே. பன்னெண்டு வயசிலேயே போய்ச் சேர்ந்துட்டான். மதுரத்தோட அப்பா, '"நான் பொண்ணை எங்கிட்டயே வச்சுக்கறேன்'"னு அழச்சிண்டு வந்துட்டா. பாட்டி பெரியவளாகறதுக்கு முன்னாலேயே இப்படி யாயிட்டுது. அத்தோடே போகலே. இப்போ நீ சொன்னியே, பாட்டிக்கு வயசு ஆன மாதிரியே தெரியலே அப்படி இருக்கான்னு. சின்ன வயசிலே அவளுக்கு அப்படி ஒரு அழகு. பாத்துண்டே இருக்கலாம்போல இருக்கும். அந்தப் புள்ளேக்குத் தான் கொடுத்து வக்கலே. ஆனா ஊரெல்லாம் இதச் சொல்லிச் சொல்லி மாஞ்சுது. ஒரு நாளைக்கு கிணத்தடிலேர்ந்து மதுரம் திடீர்னு அலர்ற சத்தம் கேட்டது. என்ன ஏதுன்னு அவ அப்பா அலறி அடிச்சுண்டு கொல்லப்பக்கம் ஓடிப்போய்ப் பாத்தா மதுரம் அலறி அடிச்சிண்டு அப்பாவைப் பாத்து ஓடி வரா. கொல்லைக் கதவு படீர்னு அடிச்சிண்டு சாத்திக்கறது. "என்னடி குழந்தே என்ன ஆச்சு என்னத்தே பாத்து பயந்தேன்னு" அப்பா கேக்கறா. " என்னமோ தொப்புனு. சத்தம் கேட்டுது. பாத்தா எவனோ ஒத்தன் சுவரேறி குதுச்சு உள்ளே வந்துட்டான். பயந்துட்டேன்பா" ன்னு நடுங்கிண்டே சொன்னாளாம்.

இனிமே இந்த ஊர்லே இருக்கப்பட்டாதுன்னு, ஊர்லே யாரும் வாய்க்கு வந்தபடி ஏதும் பேசறதுக்கு முன்னாடி கும்மோணத்துக்குப் போய்ட்டார். கிராமத்திலே அவ்வளவு பாதுகாப்பு இல்லேன்னு. டவுன்லேன்னா அப்படி யாரும் உள்ளே வந்துட முடியாதுன்னு. தன் ஆயுசு வரைக்கும் அவர் அப்படிப் பாத்துண்டுட்டார். தனக்கு அப்புறம் யாரை என்ன நமபறது, அவ சோத்துக்காவது கஷ்டப்படாம இருக்கட்டும்னு பாதி சொத்தை அவ பேர்லேயே எழுதி வச்சுட்டுத்தான் போனார். மதுரத்துக்கு, அதான் அந்தப் பாட்டிக்கு, குழந்தைகள் கிட்ட அப்படி ஒரு பிரியம். தம்பி குழந்தகளே பின்னாலெ அந்தக் குழந்தைக்கு குழந்தகளே பாட்டிதான் வளர்த்தா, வளர்த்துண்டு இருக்கா....

கேட்டுக்கொண்டு இருக்கும் போதே யாரோ சம்மட்டியால் ஓங்கி அடிப்பது போலிருந்தது. நாம் என்ன நினைத்துக் கொண்டிருந்தோம். என்னவெல்லாம் நடந்து முடிந்து விட்டது உலகத்தில், நடந்த சுவடே தெரியாமல்..!ஆனால், அந்தப் பாட்டி,

ஏழு வயசிலிருந்து...... வாழ்க்கையே வாழாது இத்தனை காலம், அப்படி வஞ்சிக்கப்பட்ட ஒரு ஜீவனா அந்தப் பாட்டி, அத்தனையையும் துடைத்துவிட்டு எப்படி இப்படி அன்பைச் சொரிந்து கொண்டு இருக்க முடிகிறது?இதையும் தெய்வம் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறது?

வெங்கட் சாமிநாதன்/12.10.06

4 comments:

பத்மா அர்விந்த் said...

அருமை, உங்களை போலவே எனக்கும் அதிர்ச்சியாய்த் தான் இருந்தது. படிக்கும் போதே உர்வத்தை கற்பனை செய்துகொண்டிருந்தேன். நான் கூட ஒரு 12 வருடம் கும்பகோணத்தில் இருந்தேன்.ஊரும் தெருக்களும் மனதில் ஓட இதமாக இருந்தது

வெ.சா said...

பழைய நினைவுகள், மனிதர்கள், அந்தந்தக் கால தர்மங்களோடு வாழ்ந்தவர்கள் ஒரு சோக உணர்வுடனேதான், ஒரு கனிவுடனேதான் நினைவுக்கு வருகிறார்கள். அந்த சோகமும் கனிவும் படிப்பவர்களுக்கும் வருமானால், அதுவே ஒரு மன நிறைவைத் தருகிறது. அந்தத்தக் கால தர்மங்கள் சரி, ஆனால், தன் 12 வய்து பெண்ணுக்கே இன்னொரு கல்யாணம் செய்யாது அப்பாவைத் தடுத்ததும் அவர் அறிந்த தர்மம் தான் என்று நினைக்கும் போது மனது மிகவும் சங்கடப்படுகிறது. -வெ.சா.

ஜயராமன் said...

வேசா ஐயா,

மதுரம் பாட்டியின் நிலையை நாம் இக்கால கருத்துக்களால் ஆன கண்ணாடி வழியாக பார்ப்பது மிகவும் தவறு என்று நினைக்கிறேன். வாழ்க்கையில் நாம் இன்று சோகமாக நினைக்கும் பல செயல்கள் அந்த நிலைகளில் மிகவும் சாதாரணமாகப்போய்விடும். மதுரம் பாட்டியின் நிலையைப்பார்த்து நாம் இன்று இம்மாதிரி சில கஷ்டங்களை தவிர்த்துவிட்டதாக நினைத்தால் சரியில்லை. பால்யவிவாஹம் என்பது - வாழ்க்கையின் எல்லா பரிமாணங்களைப்போலவே - முழுதும் கருப்பானதோ இல்லை முழுதும் வெளுப்பானதோ இல்லை. மாறாக நாம் நாகரீக இக்கால வாழக்கையில் ஏற்றுக்கொண்ட பல வாழ்க்கை முறைகளில் நான் அதே கோணல்களையும், அபத்தங்களையும் காண்கிறேன். அதனால் எனக்கு ஒன்றை நினைத்து பரிதாபமோ இல்லை இன்னொன்றை நினைத்து பெருமிதமோ கிடைப்பதில்லை. மதுரம் பாட்டியை ஒரு சில நிலைகளில் நான் பொறாமைகூட பட முடிகிறது. அந்த வெள்ளாந்தியான வாழ்க்கையில் சிடுக்கில்லாமல் சின்ன சின்ன எதிர்பார்ப்புகளில் வாழ்க்கை இனிமையை அடைந்துவிடுகிறது. இன்று நாகரீக தம்பதிகளின் விகாரமாகிப்போன தாம்பத்தியங்களைப்பார்க்கும்போது நாம் இதை சரியென்று நினைப்பதே சிலசமயம் கேள்விக்குள்ளாகிறது.
மேலும் எழுதுங்கள் ஐயா.

நன்றி

ஜயராமன்

ராம்ஜி_யாஹூ said...

உங்களின் பதிவும் அருமை. பின்னூட்டங்களின் அழகும் அருமை