என் மிகப் பழைய ஆரம்ப ஞாபகங்கள் சில அடிமனதில் பதிவானவை அவ்வப்போது மேலெழுந்து நினைவில் நிழலாடிச் செல்லும். இப்போது அவற்றை எழுத்தில் பதியத் தோன்றுகிறது.
அப்போது எனக்கு இரண்டரை அல்லது மூன்று வயதிருக்கலாம். அந்த வீட்டில் பாட்டியை நன்கு நினைவிருக்கிறது. மாமா வையும் நன்கு நினைவிருக்கிறது. கொல்லைப்புறம் இருக்கும் கிணற்றிலிருந்து தான் தண்ணீர் எடுத்து வரவேண்டும். பாட்டி குடத்துடன் கிணற்றுக்குச் செல்வாள். குடத்தில் தண்ணீர் நிரப்பி இடுப்பில் வைத்துக் கொண்டு திரும்பும் போது நான் பாட்டியை முந்திக்கொண்டு வீட்டுக்கு ஒடுவேன். இது ஒரு நினைவோட்டம்.
பின் மங்கலாக மனத்தில் திரையோடும் ஒரு துண்டுக் காட்சி. குரங்கு ஒன்று என்னைத் துரத்துகிறது. ஒரு பெரிய உயர்ந்த மண்டபத்தின் மேல் உட்கார்ந்து கொண்டு என்னை மிரட்டுகிறது. வெகு வருடங்களாக இந்த மாதிரி ஒரு காட்சி என்னில் அவ்வப்போது திரையோடினாலும், அந்த மாதிரி ஒரு இடத்தில் நான் இருந்ததாகவே நினைவில் இல்லை. என்னவோ என் மனதுக்குள் கற்பனை செய்து கொண்டிருக்கிறேனோ என்று நினைத்துக்கொள்வேன். ஆனாலும், அந்த மண்டபம், குரங்கு மிரட்டுவது எல்லாம் அவ்வப்போது, சிறுவயது ஞாபகங்கள் வரும்போது, இக்காட்சியும் உடன் வந்து மறையும். பின் ஒரு முறை பழனிக்குப் போயிருந்தேன், என் சின்ன மாமா பெண்ணின் கல்யாணத்திற்காக. பத்து வருடங்களுக்கு முன். அப்போது தான் நான் பழனிக்கு முதன் முறையாகச் செல்கிறேன். நிலக்கோட்டையிலிருந்து அப்படி ஒன்றும் வெகு தூரத்தில் இல்லை பழனி. அருகில் இருந்த போதிலும், என் மாமா தீவிர முருக பக்தர் என்ற போதிலும், பழனி சென்றதில்லை அது வரை.
அப்படித்தான்நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், கல்யாணத்திற்குப் பழனி சென்றவன் கோவிலைப் பார்க்கச் சென்ற போது அடிவாரக் கோயிலின் முகப்பு மண்டபம், என் சிறு வயதிலிருந்து திரையோடிக்கொண்டிருக்கும் மண்டபம் போலவே இருந்தது. சிறு வயதில் குரங்கு என்னைப் பார்த்து மிரட்டியது இங்கு தானோ? ஒரு வேளை மாமா என்னையும் அழைத்துக் கொண்டு பழனி வந்திருப்பாரோ? இருக்கலாம். என்னவோ தெரியவில்லை. ஆனால் அந்த அடிவார முகப்பு மண்டபத்தைப் பார்த்ததும், சட்டென சிறுவயதிலிருந்து இன்று வரை அவ்வப்போது நிழலாடிச் செல்லும் நினைவு, இப்போது கண்முன் பிரத்யட்சமாகியுள்ளது போன்று ஒரு திகைப்பு. எப்படியும் விளக்கவோ, விளங்கிக் கொள்ளவோ முடியாத dejavu -க்கள்.
வீட்டுத் திண்ணையில் கம்பி அடைப்பிற்குள் நின்று எதிரிலிருக்கும் ரோடையும் வண்டிப் பேட்டையையும் பார்த்து நின்று கொண்டிருப்பேன். அந்த வண்டிப் பேட்டையில் அடிக்கடி டூரிங் டாக்கீஸ் வந்து கொட்டகை போடுவார்கள். மூன்று நான்கு மாதங்களுக்கு சினிமா பார்க்கலாம். மூன்று நாட்களுக்கு ஒரு முறை படம் மாறும். திண்ணையில் உட்கார்ந்து கொண்டே சினிமா வசனங்களையும் பாட்டுக்களையும் கேட்கலாம். தியாகராஜ பாகவதர் நடித்த அசோக் குமார் படம் நன்கு நினைவிருக்கிறது. படத்திலிருந்து ஒரே ஒரு காட்சியும் ஒரே ஒரு பாட்டும் தான் இன்னமும் நினைவிலிருக்கிறது. குழந்தையை தூளியில் இட்டு தூங்கச் செய்யும் காட்சி: 'கண்மணி நீயே கண்ணுறங்காயோ' என்ற பாட்டு. என் பாட்டிக்கு சினிமா பார்ப்பதில் ஆர்வம் அதிகம். ஒரே ஒரு நிபந்தனை. அது புராணப்படமாக இருக்கவேண்டும். புராணப்படம் என்றால் சாயந்திரம் ஆறு மணி ஆட்டம் பார்க்கக் கிளம்பி விடுவாள். என்னையும் இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு. தரை டிக்கட். முக்காலணா. பாட்டிக்கு மாத்திரம் தான் டிக்கட். எனக்கு மிகவும் நன்றாக இருக்கிறது. அந்த டூரிங் டாக்கீஸ் முதலாளி நல்ல கறுப்பு. ஆனால் மிக வசீகரமான முகமும் சுபாவமும் கொண்டவர். மிகவும் சிரமப்பட்டு என்னை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவர், 'பாட்டியம்மா, ஏன் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு சிரமப்படுறீங்க. இறக்கி விடுங்க. நான் டிக்கட் கேக்க மாட்டேன்.' 'அதுக்கு இல்லேடாப்பா, 'தூக்கிக்கோ'ன்னு ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறான். என்ன பண்றது சொல்லு, எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு" என்று பாட்டி சமாளிப்பாள். பின் வருடங்களில் ஒரு சமயம் 'திருவள்ளுவர்" என்ற படம் வந்தது. பாட்டி கேட்டாள். 'என்னடா இது புதுசா இருக்கே. புராணப் படமாடா?' என்று மாமாவைக் கேட்டாள். மாமா இல்லையென்று சொல்லிவிட்டார். ஆனால், மறு நாளே படம் பார்க்கக் கிளம்பி விட்டாள். " புராணப்படம் இல்லேன்னு சொன்னியே, அதிலே நாரதர் வரார். விஷ்ணு பகவான் வரார்'னு பாத்தவா சொல்றாளேடா" என்று மாமாவைக் குறுக்கு விசாரணை செய்யத் தொடங்கிவிட்டாள். 'பிடிச்சிருந்தா போய்ட்டு வாயேம்மா, ஏதோ எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேன்' என்று மாமா சமாதானமாகச் சொன்னார்.
நான் நிலக்கோட்டையில் என் பதிமூன்றாவது வயது வரை மாமாவின் வீட்டில் தான் வளர்ந்து படித்து வந்தேன். வண்டிப்பேட்டைக்கு எதிர் வீட்டில் எவ்வளவு வருடங்கள் இருந்தோம் என்பது நினைவில் இல்லை. அந்த வண்டிப் பேட்டையின் அருகிலேயே, அந்த ரோடில் சற்றுத் தள்ளி எதிர்புறமாக நீளும் தெருவில் ஒரு வீட்டுக்குக் குடி பெயர்ந்தோம். குடி பெயரும் போது, ரொம்ப சின்னச் சின்ன சாமான்களை, புது வீட்டுக்கு நான் எடுத்துச் சென்றது ஞாபகம் இருக்கிறது. வண்டிப்பேட்டையில் அவ்வப்போது முகாமிடும் சினிமாக் கொட்டகை அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கிய இடம் பிடித்துக் கொள்ளும். புதிதாகக் குடிபெயர்ந்த வீடும் அப்படி ஒன்றும் தூரத்தில் இல்லை. புதிய வீட்டின் தெரு முனையில் வண்டிப் பேட்டையின் வலது பக்கச் சுற்றுச் சுவரைப் பார்க்கலாம். படம் பார்க்க முடியாதே தவிர, சினிமா வசனங்கள், பாட்டுக்கள் எல்லாவற்றையும் புதிய வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டே கேட்கலாம். இப்போ என்ன சீன் நடக்கிறது?, அடுத்தாற்போல் யார் வரப்போறா? என்று எங்கள் பேச்சுக் களிடையே பரிமாறிக் கொள்வோம். மூன்று நாட்களுக்கொரு முறை புராணப்படமாக இருந்தால் பாட்டி என்னையும் அழைத்துக் கொண்டு போவது தொடரும்.
ஒரு முறை டூரிங் டாக்கீஸ் முகாமிட்டிருந்த காலத்தில் சிவராத்திரி இடைப்பட்டது. அப்போது இரவு முழுதும் படம் ஒடும்படியான படம் ஒன்று, பெயர் நினைவில் இல்லை. ஒரே பாட்டாக இருந்தது. வந்தால், வந்தேனே என்று ஒரு பாட்டு. போகும்போது 'போய் வருவேன்' என்று நீட்டி முழக்கி விடை பெற்றுக்கொள்ள ஒரு பாட்டு. அந்தக் காலத்தில் எந்த படமும் பாட்டுக்கள் நிறைந்ததாகவே இருக்கும். பாட்டுக்கள் தான் படத்தின் வெற்றிக்கு அச்சாரமாக இருக்கும். நாங்கள் இருந்த இடத்திலிருந்து, வீடு மாறிய போதிலும், வீட்டுக்கு அருகாமையில் தான் ஒரு பெரிய சுற்றுச் சுவர் கொண்ட மைதானத்தில் சனிக்கிழமை தோறும் வாராந்திர சந்தை கூடும். பெரிய மைதானம். பெரிய சந்தை அது. காய்கறி, மீன் வியாபாரத்தோடு, மாட்டுச் சந்தையும் அப்போது உண்டும். சந்தை தினத்தன்று வியாபாரம் முடிந்து சினிமாப் பார்க்கக் கூட்டம் நெரியும். படம் முடிந்ததும், தங்கள் கிராமத்துக்குத் திரும்பும் வண்டிகள். அப்போது சினிமாப் பாட்டுக்களை பாடிக்கொண்டே தான் வண்டி ஓட்டிச் செல்வார்கள். 'மானமெல்லாம் போன பின்பே, வாழ்வதும் ஓர் வாழ்வாமோ?' என்ற பாட்டை சந்தையிலிருந்து திரும்பும் வண்டியோட்டிச் செல்பவர்கள் பாட அடிக்கடி கேட்டிருக்கிறேன். சில நினைவுகளும் காட்சிகளும் மிக ஆழமாகப்பதிந்து விடுகின்றன. மிகச் சிறு பிராயத்தில் கேட்டவை, நினைவில் பதிந்தவை.; காரணம் வீட்டின் எதிரிலேயே சினிமா கொட்டகை இருந்ததா. இரவு பூராவும் சினிமா கேட்டுக்கொண்டிருந்ததா? பாட்டிக்கு புராணப் படங்களாக சினிமா பிடித்து விட்ட காரணமா? புராணப்படங்கள் தான் பாட்டிக்கு ஒரே பக்தி மார்க்கமாக இருந்தது காரணமாக இருக்கலாம். தெரியாது. என்னவாக இருந்தாலும், 'எனக்குங்க இரண்டு வயசிலேர்ந்தே கலை ஆர்வம் வந்துட்டதுங்க' என்று நான் என் அவதார மகிமைகளை சினிமா நடிகர்களைப் போல சொல்லிப் பெருமை பேசிக்கொள்ள முடியாது. நிலக்கோட்டையிலும் சுற்று வட்டாரத்தில் இருந்த பட்டி தொட்டிகளிலும் இருந்த எல்லா ஜனங்களுக்கு இருந்த சினிமாப் பைத்தியம் தான் எனக்கும் இருந்தது.
நிலக்கோட்டையில் தஞ்சை மாவட்ட சூழல் கிடையாது. கோவில் பிர வசனங்கள், கதா காலட்சேபங்கள் கிடையாது. ராமாயண பாரதக் கதைகள் கேட்க கதா காலட்சேபங்கள் நிலக்கோட்டையில் கிடையாது. நிலக்கோட்டையில் இரண்டு பெரிய கோயில்கள் இருந்தன. மிகப் பிரசித்தமானது மாரியம்மன் கோயில். அதை ஒட்டி பெருமாள் கோயில் ஒன்றும் உண்டு. நானோ மாமாவோ அல்லது நாங்கள் வேறு யாருமோ பெருமாள் கோயிலுக்குப் போய் ஞாபகமில்லை. மாரியம்மன் கோயில் தான் மிகப் பிரசித்தம். மாரியம்மன் உத்சவமும் மிகப் பெரிய அளவில் நடக்கும். கடைத் தெரு முழுதும் பந்தல் போட்டு விடுவார்கள். என் சிறுவயதுப் பிராய நிலக்கோட்டை சின்ன ஊர்தான். சுமார் 6000 பேர் வசிக்கும் ஊர். ஆகவே மாரியம்மன் உத்சவத்தின் போது ஊரே விழாக்கோலம் கொள்ளும். இரண்டு கோயில்களும் நிலக்கோட்டையின் ஒரு கோடியில். நாங்கள் இருந்தது நிலக்கோட்டையின் மறு கோடியில். பாட்டியை அழைத்துக் கொண்டு கோயிலுக்கு போன நினைவு எனக்கில்லை. நானும் மாமாவும் தான் போவோம். மாமா மிகவும் பக்தி நிறைந்தவர். பாட்டிக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆக, புராணக் கதை சொல்லும் தமிழ் சினிமாப் படங்களில் தான் பாட்டி பக்தி பரவசம் அடைவாள். மிக நன்றாக நினைவிருக்கும், காதில் இன்னமும் பாட்டியின் குரலில் ஒலிப்பது, ஏதோ ஒரு படத்தில் செருகளத்தூர் சாமா கிருஷ்ணனாக நடித்திருப்பார். அவர் அடிக்கடி குந்தியை, 'அத்தை', என்று விளித்துப் பேசுவார். பாட்டிக்கு அதைக் கேட்டு மிகவும் பரவசமடைந்து போவாள். படம் பார்த்து வீடு திரும்பிய பாட்டி, வீட்டுக்கு வருவோரிடம் தான் சினிமா பார்த்ததைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போவாள். "கிருஷ்ணன் 'அத்தே' 'அத்தே', ன்னு கூப்டறது ஒண்ணே போறுமே. எத்தனை தடவ வேணும்னாலும் கேட்டுண்டே இருக்கலாம் போல்ருக்கு" என்பாள்.
3 comments:
hello sir,
Vanakkam. Intha vayathilum thangalin, ezhuthukkal varayum thanmai paaraatukkuriyathu.
thangal valaipathivai kandathil ennaku mahizhchi :)
தங்கள் பாராட்டுக்கு என் ந்ன்றி. பாராட்டு மட்டுமல்ல எந்த எதிர்வினையையும் எழுதலாம். என்னால் முடிந்த வரை அந்தக்கால மதிப்புகளையும் உணர்வுகளையும் நான் அன்று உணர்ந்த வாறு சொல்ல விரும்புகிறேன். வெ.சா.
வெசா அய்யா,
உலகம் சின்னதாயிருந்தது. சின்னசின்ன அபிலாஷைகளுடன் வாழ்க்கையும் சின்னதாய் இருந்தது. நாம் தெரிந்துகொண்டதும் சின்னதாய் இருந்தது.
அதனால், வாழக்கையில் சந்தோஷம் நிறைய்ய இருந்தது. நேரம் நிறைய்ய இருந்தது. அனுபவித்த தருணங்கள் நிறைய்ய இருந்தது.
தெரு அடைத்து வண்டி கட்டி டூரிங் கொட்டகைக்கு போய் சினிமா பார்த்த சுகமான ஞாபகங்களையும், பாட்டியின் கையை பிடித்து சினிமா க்யூவில் அடைந்திருந்த நேரங்களையும் தங்கள் வரிகள் எனக்கு உணர்த்தின.
மேலும் எழுதுங்கள். படிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.
நன்றி
Post a Comment