Friday, February 01, 2008

நினைவுகளின் தடத்தில் - (8)

நிலக்கோட்டையின் என் நினைவுகள் ரொம்ப பால்ய பருவத்திலிருந்து தொடங்குவதால், அப்போதிருந்து நான் ஒன்பதாவது வகுப்பு படிக்க மதுரைக்கு பாட்டியுடன் சென்ற 1946 வரை எத்தனை வருஷங்கள் என் நிலக்கோட்டை வாசம் நீடித்தது என்று சொல்லமுடியாது. உத்தேசமாக 12 வருஷங்கள், என் பதிமூன்றாவது வயது வரை, என்று இருக்கலாம். அத்தனை வருஷங்களிலும் மிகப் பெரிய அளவில் எனக்கு உற்சாகம் அளித்த நிகழ்ச்சிகள், வியப்பை அளித்த விஷயங்கள் என்று நான் அதிகம் சொல்ல முடியாது. மகாத்மா காந்தியைப் பார்க்கக் கொடைக்கானல் ரோடுக்கு (அம்மைய நாயக்கனூருக்கு0 நானாக தனியாக செல்லலாம் என்று மாமாவாக எனக்கு அனுமதி தந்ததும், மகாத்மா காந்தியைப் பார்த்ததுமான சம்பவங்கள் என் மனதுக்கு மிக சந்தோஷம் அளித்தவை. அது பற்றி தனியே எழுதியும் இருக்கிறேன். மாரியம்மன் கோவிலில் நடக்கும் பங்குனி உற்சவம் அது போல மற்றொன்று. தமிழ் நாட்டின் சமூக வாழ்க்கையையும் அரசியலையும், மதிப்புகளையும் தம் பகுத்தறிவு பற்றிப் பெருமை கொள்ளும் திராவிட இயக்க அரசியல் ஆக்கிரமித்துக் கொண்ட போதிலும் மாரியம்மன் கோவில் உத்சவம் அதனால் பாதிக்கப்பட்டதில்லை. எங்கும், எப்போதும்.


இது போன்று அந்நாட்களில், அது காறும் நிலக்கோட்டையின் வரலாறு காணாத மிகப் பெரிய நிகழ்வு என்று பேசப்படவேண்டியது 1944ம் வருடம், என்றோ நடந்த எங்கள் பள்ளிக்கூட மானேஜர், கரஸ்பாண்டண்ட் குடும்பத்துக் கல்யாணம். கல்யாணம் அல்ல, கல்யாணங்கள் என்று சொல்ல வேண்டும். நான்கு நாட்கள் மிகக் கோலாகலமாக நடந்த, நிலக்கோட்டையே விழாக் கோலம் பூணவைத்த, ஒரே மேடையில், பந்தலில் ஒரே சமயத்தில் நடந்த மூன்று கல்யாணங்கள். எங்கள் பள்ளிக்கூடத்திற்கு பொறுப்பேற்று நடத்தி வந்த அண்ணன் தம்பிகளான மூன்று குடும்பங்கள் ஒன்றாக நடத்தியதால் அது மிகப்பெரிய விழாக்கோலம் பூண்டது. நான் ஏழாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது என் வகுப்பில் படித்த பெண்களில் ஒரு பெண் சௌந்திரம், அப்போது மானேஜராக இருந்த சுப்புராமய்யரின் பெண், அவள் ஒரு மணப்பெண். அவளுடைய அண்ணன், எனக்கு இரண்டு வருடம் முன்னதாக எட்டாவது வகுப்பு வரை எங்கள் பள்ளியில் தன் படிப்பை முடித்துக் கொண்டு அப்பாவுக்கு உதவியாக சென்று முதலாளியாகிக் கொண்டி ருந்தவன். சுப்புராமய்யர் நிலக்கொட்டை பஞ்சாயத்து சேர்மனாகவும் அந்நாட்களில் இருந்தவர். அன்று மாப்பிள்ளையான அவருடைய மகன் அவரைத் தொடர்ந்து பின்னாட்களில் நிலக்கோட்டை பஞ்சாயத்து சேர்மனானான் என்றும் எனக்கு செய்தி சொல்லப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல், அத்தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஒரு பெண்மணியுடன் அவன் மிக நெருக்கமாக இருந்ததாகவும் ஒரு மசாலாவுடன் அந்த செய்தி என்னை வந்து சேரும். மூன்றாவது மாப்பிள்ளையோ, மணப்பெண்ணோ அந்தச் சகோதரர்கள் குடும்பங்களிலிருந்து யார் என்று எனக்கு இப்போது நினைவில் இல்லை.


இதையெல்லாம் சொல்லக் காரணம் எங்கள் பள்ளிக்கூடம் அக்குடும்பத்தின் பொறுப்பில் இருந்ததால், அந்த மிகப் பெரிய கோலாகல கல்யாண விழாவோடு நாங்கள் மிக நெருங்கியவர்களாக, அந்த உத்சாகத்தில் பங்கு கொண்டவர்களாக உணர்ந்ததால் தான். கொஞ்ச நாட்கள் முன்னும் பின்னும் எங்கள் வாத்தியார்களெல்லாம் அது பற்றியே பேசினார்கள். கல்யாண தினங்களில் எங்களுக்கென்று பள்ளியிலேயே ஸ்பெஷலாக சாப்பாடு கிடைத்தது. அடுத்தடுத்து அக்குடும்பங்களின் பங்களாக்கள் இருந்த இரண்டு தெருக்களையும் அடைத்து பிரும்மாண்டமான் பந்தல் போடப்பட்டது. மாரியம்மன் கோவில் பங்குனி உத்சவத்துக்கு போடுவார்களே அது போல, ஆனால் இரண்டே தெருக்களுக்கு மாத்திரம்.

இன்னொரு குறிப்பிடத்தக்க பெரிய விஷயம், நிலக்கோட்டையின் சரித்திரத்திலேயே முதன்முதலாக இந்த நான்கு கல்யாண நாட்களிலும் சங்கீத கச்சேரி நடந்தது. அது வரை நிலக்கோட்டை பாட்டுக்கச்சேரி என்று எதையும் பார்த்ததில்லை. கேட்டதில்லை. வரலாறு காணாத அத்தகைய பெரு நிகழ்வு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்ததென்றால்..!நிலக்கோட்டையில் அந்நாட்களில் இருந்த இரண்டு காபி க்ளப்புகளில் இருந்த ரேடியோ பெட்டிகளில் (திருச்சி நிலையம் மாத்திரம் கேட்கும்) வரும் சினிமா பாட்டுக்களைத்தான் நிலக்கோட்டை வாசிகள் கேட்டு அறிவார்கள். மேடை அமைத்து வித்வான்கள் பாடுவார்கள் என்கிற சமாச்சாரம் நிலக்கோட்டை அறியாதது. நான் இருந்த வரை அந்நிகழ்வு தனிப்பெரும் நிகழ்வாகவே அது வரலாற்றில் தன்னைப் பதித்துக் கொண்டது. ஏனெனில், அதன் பின் வேறு யாரும் எக்காரணம் தொட்டும் இம்மாதிரி பாட்டுக் கச்சேரி ஏற்பாடு செய்து அத்தடத்தில் மரபு ஒன்றை உருவாக்கி விட வில்லை. மிகப் பெரிய அளவில் நடக்கும் மாரியம்மன் கோவில் பங்குனி உற்சவத்திலேயே கூட பாட்டுக் கச்சேரிகள் நடப்பதில்லை அங்கு. நாங்கள் அறிந்தவை கொடை ராட்டினமும், டூரிங் சினிமாவும் தான் நிலக்கோட்டை வாசிகள் அறிந்த பொழுது போக்குகள். ஒரே ஒரு விதிவிலக்கு. 1942-43 களில் ஒரு நாள் தாலுகா அலுவலகங்கள் இருந்த இடத்திற்கு எதிரேயான மைதானத்தில் ஒரு நாள் பாவைக்கூத்து நடந்தது. இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம் அது. சண்டைக்கு ஆள் சேர்க்க, நடந்த பிரசாரமாக அந்த பாவைக்கூத்து ஆடிய கதை இருந்தது.


ஆனால் அந்த நான்கு நாட்கள் கல்யாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சங்கீத கச்சேரிகள் இன்னும் பசுமையாக என் நினைவில் இருக்க, இன்னும் நெருங்கிய வேறு காரணங்களும் இருந்தன. அந்த நான்கு நாட்கள் நடந்த கச்சேரிக்கு வித்வான்களை ஏற்பாடு செய்து அழைத்து வந்தது என் மாமா தான். மாமா தஞ்சைக் காரரா, சங்கீதமே தஞ்சையில் விளைந்தது தானே, ஆகவே அதற்குத் தகுந்த ஆள் மாமா தான் என்று பள்ளி மானேஜ்மென்ட் முடிவு செய்தது என்று நினைக்கிறேன். வேடிக்கை என்னவென்றால், மாமாவுக்கு சங்கீதமும் தெரியாது. சங்கீத வித்வான்களையும் தெரியாது. அவருக்கு அதில் ஏதும் பிடிமானமும் இல்லை. அவர் தஞ்சை ஜில்லாக்காரர்தான் என்றாலும் சங்கீத வித்வான்களை அவர் அறிந்தவரில்லை. ஆனாலும் அவர் தஞ்சை சென்று அதற்கான ஏற்பாடுகளையும் செய்து, வித்வான்களையும் அழைத்து வந்துவிட்டார். அவர்கள் எல்லோரும் எங்கள் வீட்டுக்கு அடுத்து இருந்த ஒரு பெரிய வீட்டில் தான் தங்க வைக்கப் பட்டிருந்தனர். அந்த வீடும் இந்த சகோதரர்களில் மூத்தவரான எஸ்.ஆர். அனந்தய்யர் என்பவரின் வீடு தான். அந்த பெரிய வீடும் அடுத்து இரண்டு சிறிய வீடுகளும் அவருடையவை தான். அந்த சிறிய வீடுகள் ஒன்றில் தான் நாங்கள் வாடகைக்கு இருந்தோம். நாங்கள் அங்கு குடிபோனபோது முத்துசாமி அய்யர் என்பவருக்கு சொந்தமாக இருந்தது. பின்னர் மூன்று வீடுகளையும் எஸ்.ஆர்.அனந்தய்யர் 12,000 ரூபாய் களுக்கு வாங்கிவிட்டதாகவும் நாம் அங்கேயே தொடர்ந்து வாடகைக்கு இருக்கலாம், வேறு வீடு வாடகைக்கு பார்க்க வேண்டியதில்லை என்றும் மாமா ஒரு நிம்மதியோடும் சந்தோஷத்தோடும் சொன்னார். பரம்பரையாக பட்டு நெசவுத் தொழில் செய்யும் சௌராஷ்டிரர்கள் எஸ்,.ஆர். அனந்தய்யரும் அவர் சகோதரர்களும். ஊரிலேயே பெரிய பணக்காரர்கள்.


மாமா சங்கீத வித்வான்கள் யாரையும் அறிந்தவரில்லை. இருந்தாலும் அத்தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்து வித்வான்களையும் அழைத்து வந்தவரைத் தெரியும். அவரும் வித்வான்களோடு உடன் வந்து தங்கினார். அவர்கள் எல்லோரும் அந்த பெரிய வீட்டின் பெரிய ஹாலில் உங்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். வெற்றிலைச் செல்லமும், தண்ணீர் கூஜாக்களும் பக்கத்தில் இருக்கும். வெற்றிலை போட்டுக் குதப்பும் செக்கச் சிவந்த வாயோடு தான் அவர்கள் பேச்சும் உடன் வரும். நான் அங்கு போய் உட்கார்ந்து விடுவேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்கள் பேச்சையும் வக்கணையையும், பரஸ்பர கிண்டலையும் கேட்க, புரியவில்லை என்றாலும், அது வித்தியாசமான காட்சியாக வித்தியாசமான மனிதர்களையும் அவர்கள் பேச்சு பாவனைகளையும் கொண்டதாக இருந்ததால் இவற்றையெல்லாம் அது வரை கண்டிராத எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. அவர்கள் ஊர் வம்போடு சங்கீதம் பற்றியும் பேச்சு இருக்கும். அவர்கள் முகங்களையும், தலை, கைகள் எல்லாம் ஆட்டி ஆட்டி பேசுவதையும் பார்த்துக் கொண்டே இருப்பேன். பேசுவது புரியாவிட்டால் என்ன? வேடிக்கையாக இருந்தது.


யார் யார் வந்திருந்தார்கள் என்று இப்போது எல்லாம் எனக்கு நினைவில் இல்லை. ஆலத்தூர் சகோதரர்கள் பாட்டு ஒரு நாள். அது நல்ல ஞாபகம் இருக்கிறது. ஒரு நாள் நாதஸ்வரக் கச்சேரி இருந்தது. மற்றது எதுவும் எனக்கு இப்போது நினைவில் இல்லை. இம்மாதிரியான ஒரு அனுபவம் எனக்கு இரண்டு வருஷங்கள் கழித்து கும்பகோணம் வந்து படிக்கத் தொடங்கிய போது தான் கிடைக்க விருந்தது. அங்கு கல்யாணப் பந்தல் பார்க்கும் இடத்தில் எல்லாம் கட்டாயமாக இரவில் கச்சேரி இருக்கும். நாம் பாட்டில் பந்தலுக்குள் நுழைந்து பாட்டு கேட்கலாம்.


நான் மகாமகக் குளம் மேற்குத் தெருவில் ஒரு விதவைப் பாட்டி வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த மாதங்கள். நான் கும்பகோணத்திலிருந்து ஐந்து மைல் தூரத்தில் இருந்த உடையாளூர் கிராமத்திலிருந்து தான் தினம் பள்ளிக்கூடத்துக்கு வயல் வரப்புகளின் மீது நடந்து போகவேண்டும். இடையில் மூன்று ஆறுகள். குடமுருட்டி, முடிகொண்டான், அரசலாறு என்று மூன்று ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டும். ஆற்றில் நீர் நான் கடக்க முடியாத ஆழத்தில் இருக்குமானால், கும்பகோணத்திலேயே தங்கிவிடுவேன். அம்மாதிரியான கும்பகோண வாச நாட்களில் ஒரு இரவு படித்துக்கொண்டிருந்தேன். மறு நாள் பரிட்சை. திடீரென யாரோ ஒருவர் வந்து "சத்திரத்தில் ஒரே கூட்டமா இருக்கு. ராஜமாணிக்கம் பிள்ளை வந்திருக்கார்" என்று சொன்னார். நான் படிப்பதை நிறுத்திவிட்டு அதே தெருவில் நான்கு வீடு தள்ளி இருக்கும் சத்திரத்திற்குச் சென்று என்ன நடக்கிறது என்று பார்க்கப் போனேன். ராஜமாணிக்கம் பிள்ளைக்கு பாராட்டு விழா என்று சொன்னார்கள். தண்டபாணி தேசிகரைப் பார்த்தேன். இன்னும் யார் யார் என்று இப்போது ஞாபகம் இல்லை. தண்டபாணி தேசிகர் பேச எழுந்தார். பிள்ளை வாளுடன் தன் பழக்கம் நட்பு பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தார். எனக்கு அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மனம் வரவில்லை. நான் அங்கேயே உட்கார்ந்து விட்டேன். பரிட்சையாவது மண்ணாவது. அந்த நினைப்பே அப்போது எனக்கு இல்லை. அந்த பாராட்டு விழா முடிந்த பின் தான் வீடு திரும்பினேன். இரவு வெகு நேரம் ஆகி விட்டதால், வீடு திரும்பியதும் தூங்கப் போய்விட்டேன். காலை எழுந்து பரிட்சை எழுத புறப்படத் தான் நேரம் இருந்தது.


என் படிப்பும் நான் பரிட்சை எழுதியதும் அந்த லட்சணத்தில் தான் இருந்தது. எல்லா பாடங்களிலும் பாஸ் செய்துவிட்டேன் தான். ஆனால் வாய்க்காலின் மறு கரை ஓரத்தில் கால் பதிந்து விட்டமாதிரிதான். ஒன்றிரண்டு மார்க் குறைந்திருந்தால் வாய்க்காலில் விழுந்துகிடப்பேன். அதுவும் எனக்கு நல்லதாயிற்று என்று தான் சொல்ல வேண்டும். இந்த மார்க்கெல்லாம் பப்ளிக் ஸர்வீஸ் கமிஷன் பரிட்சை எழுதப் போதாது, மறுபடியும் பரி¨க்ஷ எழுதி நிறைய மார்க் வாங்கு என்று மாமா சொன்னார். எனக்குத் தான் படிக்க கொஞ்சம் கூட விருப்பமிருக்கவில்லை. வடக்கு நோக்கி திக்விஜயம் கிளம்பி விட்டேன். அது பற்றிய கதைகள் பின்னர். நான் பள்ளியில் படித்த லக்ஷணம் இப்படித்தான் இருந்தது என்று சொல்ல வந்தேன்.


வெங்கட் சாமிநாதன்/2.10.07

No comments:

Post a Comment