சந்தோஷம் யாருக்கு, என்ன காரணங்களால் கிடைக்கிறது என்று அவ்வளவு சுலபமாக சொல்லி விட முடிகிறதில்லை. நேற்று ஒரு ஃ·ப்ரென்சு படம் பார்த்தேன். தான் செய்யாத, ஆனால் தான் உடன் இருக்க நடந்து விட்ட ஒரு குற்றத்திற்காக கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஒரு தாய் என்னேரமும் வெறிச்சிட்ட முகமாகவே காணப்பட்டாலும் ஒரு சில கணங்களில் அவள் முகத்தில் புன்னகையையும் பார்க்க முடிகிறது. அவள் வசமாக கை ரேகை சாட்சியத்தோடு அகப்பட்டுக் கிடக்கிறாள். அவள் தான் குற்றமற்றவள் என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டாலும் அவளுக்கு விடுதலை என்பதே சாத்தியமில்லை. இருப்பினும் அவள் முகம் மலரும் கணங்களும் அவளுக்குக் கிடைக்கின்றன. நாம் எல்லோரும் அறிந்த ஒரு அரசியல் தலைவருக்கு எத்தனையோ ஆயிரம் கோடிகள் சொத்து குவிந்து கொண்டே இருக்கிறது. இன்னமும் பணம் எல்லா வழிகளிலும் சொத்து சேர்த்துக்கொண்டே தான் இருக்கிறார். காலையில் இரண்டோ மூன்றோ இட்டிலிக்கு மேல் அவரால் சாப்பிட முடிவதில்லை. மான் கறியும் முயல்கறியும் மிகுந்த ஆரவாரத்தோடு சாப்பிட்டவர் தான். இருப்பினும் வெறும் சொத்து சேர்ந்து கொண்டே போவதில் அவருக்கு சந்தோஷம் கிடைத்து விடுகிறது.
என்னை குழந்தைப் பருவத்திலிருந்து 14 வயது வரை வளர்த்துப் படிக்க வைத்த மாமாவை நினைத்துப் பார்க்கிறேன். அந்த வறுமை இப்போது நினைக்கக் கூட பயங்கரமானது. அவருடைய சம்பாத்தியமான 25 ரூபாய் 4 அணா வில் வீட்டு வாடகை ஆறு ரூபாய் போக மீதிப் பணத்தில் நாங்கள் ஆறு பேர் கொண்ட குடும்பத்தை எப்படி சமாளித்தார் என்பதல்ல விஷயம், சமாளிக்க முடிந்ததில்லை. ஆனாலும் அவர் என் அப்பாவுக்கு, "என்னால் முடியவில்லை, பையனை உங்களிடம் அனுப்புகிறேன்" என்று ஒரு கார்டு போட்டவரில்லை. என்னைப் பார்த்து அலுத்துக் கொண்டவரில்லை. யாரும் எந்த சமயத்திலும் நான் அந்த வீட்டில் ஒரு உபரி ஜீவன் என்று நினைத்ததில்லை; உணர்ந்ததில்லை முதலில்.
ஒரு சமயம் அவருக்கு என் அப்பாவிடமிருந்து ஐந்து ரூபாய் மணிஆர்டர் வந்தது. எதுக்கு இது வந்தது, இதற்கு என்ன அர்த்தம்? என்று மாமா அடிக்கடி தன்னையும் கேட்டுக் கொண்டார். பாட்டியையும் கேட்டுக் கொண்டிருப்பார். என்னை ஒன்றிரண்டு முறை அவர் கேட்டதுண்டு " ஏண்டா அம்மா வந்த போது உனக்கு பணம் வேணும்னு கேட்டியா? இல்லை உனக்கு ஏதாவது வேணும்னு சொன்னியா?" என்று துருவித் துருவிக் கேட்டார். எனக்கு இப்படியெல்லாம் எண்ணமே தோன்றியதில்லை. ஐந்து ரூபாய் என்பது அந்நாட்களில் பெரிய தொகை. எங்கள் வீட்டுக்கு எதிரில் இருக்கும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு, வீட்டு வேலை செய்ய வரும் கான்ஸ்டபிளுக்கு சம்பளம் மாதம் ரூபாய் 7. ஒரு வருஷம் கழித்து நாலணா சம்பளம் கூடும். அதில் தான் அவர் குடும்பம் நடத்தியாகணும். பிள்ளைகளைப் படிக்க வைத்து பெண்களுக்கு கல்யாணம் செய்து வைத்து...... எப்படியோ நடந்தது. சனிக்கிழமை சந்தைக்கு மாமா இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு என்னையும் அழைத்துக்கொண்டு போவார், வாராந்திர காய் கறிகள் வாங்க. அதிகம் போனால் ஒன்றே கால் ரூபாய் அல்லது ஒன்றரை ரூபாய் ஆகும். இரண்டு பைகளிலும் காய்கறிகள் நிரப்பி வீடு வருவோம். வந்து கணக்கு எழுதுவார். என்னென்ன வாங்கினார், என்ன விலை, என்ன செலவு ஆயிற்று என்று. அப்பாவிடமிருந்து ஐந்து ரூபாய் வந்த சிலநாட்களில், மாமா கணக்குப் பார்த்ததில் ஐந்து ரூபாய் குறைந்திருந்தது. பதறிப் போய்விட்டார், பதறி. என்ன யோசித்துப் பார்த்தும், என்ன செலவு செய்தோம் ஐந்து ரூபாய்க்கு என்று தெரியவில்லை. என்னிடம் கேட்டார். ஏண்டா, அப்பா அனுப்பின ஐந்து ரூபாயை நீ எடுத்தியா? என்று. நான் இல்லை என்றேன். ஒரு சந்தேகத்துக்குத் தான். ஐந்து ரூபாயை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்!. காலணா அரையணா குறைந்து நான் எடுத்திருப்பேன் என்ற சந்தேகம் கொஞ்சம் வலுவாக இருந்திருந்தால், மாமா விலாசியிருப்பார் விலாசி. அந்த ஐந்து ரூபாய் எப்படியோ தொலைந்து தான் போயிற்று என்பது நிச்சயமாகத் தெரிந்த பிறகு ஏதோ பெரிய சொத்து கொள்ளை போனது போல கதறத் தொடங்கிவிட்டார். வெகு நாட்கள் அவர் அதை மறந்து மீறமுடியவில்லை.
நிலக்கோட்டையில் இந்த மாதிரியான தினப்படியான வண்டிச் சகடையோட்ட வாழ்வில் சற்று மாறுதலுடன் உற்சாகம் தரும் நிகழ்வுகள் என்று மாரியம்மன் கோவில் நடக்கும் பங்குனி மாத திருவிழாவும் ஒன்று. நல்ல வெயில்கொளுத்தும். ஊரின் ஒரு கோடியிலிருக்கும் மாரியம்மன் கோவிலிலிருந்து தொடங்கி மறுகோடியில் மதுரை கொடைக்கானல் ரோடு வரை உள்ள நீண்ட கடைத்தெரு முழுதும் ரோடை அடைத்து தென்னங்கீற்றுப் பந்தல் போட்டு விடுவார்கள். கோடை வெயிலில் பந்தலின் கீழே நடக்கவும் ஆனந்தமாகவும் இருக்கும். அது அழகாகவும் இருக்கும். இருபுறமும் இருக்கும் கடைக்காரர்கள் தான் செலவைப் பங்கிட்டுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். இந்த பழக்கத்தை நான் வேறு எங்கும் கோடை கால கோயில் உற்சவத்தை ஒட்டி இப்படிச் செய்வதை அறிந்ததுமில்லை. கேட்டதும் இல்லை. கடைக்காரர்கள் பெரும்பாலும் நாடார்கள். ஒரு சிலர் சௌராஷ்டிரர்கள். மாரியம்மன் கோயில் நாடார்களின் நிர்வாகத்தில் இருந்தது. கோயிலைச் சுற்றி இருந்த இடத்தில் நிறையக் கடைகள் வந்து விடும். ராட்டினங்கள் வந்து விடும்.
முன்னரே சொல்லியிருக்கிறேன். மாமா பிறந்து வளர்ந்ததெல்லாம் சுவாமிமலையில். சுவாமிமலை மட்டுமல்ல. அனேகமாக தஞ்சையைச் சேர்ந்தவர்களுக் கெல்லாம் சுவாமி மலை சுவாமிநாதன் தான் குல தெய்வம் ஆகவே மாமாவுக்கும் சுவாமிநாத ஸ்வாமி தான். என் சின்ன மாமாவின் பெயரும் சுவாமிநாதன். என் பெயரும் அப்படியே. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு சுவாமிநாதன் இருப்பது சுவாமி மலைப் பக்கம் சகஜம். ஆனால் மாமாவுக்கு தன் குல தெய்வம் சுவாமிநாதன் தான் என்ற கட்டுப்பாடு ஏதும் கிடையாது. நிலக்கோட்டை மாரியம்மனிடம் அவருக்கு பக்தி அதிகம். அதனால் தானோ என்னவோ, ஒரு முறை அந்நாட்களில் தஞ்சைக்கு என்னை அழைத்துச் சென்றபோது, அவர் பெரிய கோவிலுக்குப் போகவில்லை. தஞ்சை மாரியம்மன் கோவிலுக்குத்தான் அழைத்துச் சென்றார். மாரியம்மன் கோவிலை அடுத்து பெருமாள் கோவில் ஒன்றும் இருந்தது நிலக்கோட்டையில். ஆனால் அந்தப் பெருமாள் ரொம்ப ஏழைப் பெருமாள். யாரும் அவரைப் பொருட் படுத்திய தாகத் தெரியவில்லை. மாமாவோடு அவர் கோவிலுக்குப் போகும் போதெல்லாம் நானும் அவருடன் செல்வேன். எனக்கு நாங்கள் பெருமாள் கோவிலுக்கு என்றும் போனதாக நினைவு இல்லை. பெருமாளும் நின்ற பெருமாளா, அமர்ந்த பெருமாளா அல்லது சயன கோலத்தில் சேவை சாதிப்பவரா என்று தெரியாது. அது பற்றி இப்போது நினைத்துப் பார்க்கும் போது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. பெருமாள் எந்த கோலத்தில் இருந்தாலும் அழகானவர். அதனால் அவர் அலங்காரப் பிரியரும் கூட. வடுவூருக்கு கைசிக நாடகம் பார்க்க ராமானுஜம் அழைத்திருந்தார். கோதண்ட ராமர் கோவில் பிரகாரத்தில் கைசிகி நாடகம் நடந்தது. அன்று தற்செயலாக எங்கள் அதிர்ஷ்டம் உற்சவ மூர்த்தியை வெளிப்பிரகாரத்தில் வைத்து அலங்காரம் செய்திருந்தார்கள். அந்த கோதண்ட ராமன் போல அழகான சிற்ப வடிவத்தை வேறு எங்கும் நான் பார்த்ததில்லை. ராமனுக்கு சேவை செய்து கொண்டிருந்த பாட்ராச்சாரியாரிடம், "ராமன் ரொம்ப அழகாக இருக்கிறார்," என்று சொன்னேன். அவரும் இத்தகைய அழகான உற்சவ மூர்த்திகள் நான்கோ ஐந்தோ இருப்பதாகவும் அவை இருக்குமிடங்களையும் சொன்னார். இப்போது எனக்கு மறந்து விட்டது. கோவில்கள் எனக்கு எப்போதுமே பெரும் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் தரும் இடங்களாக இருந்து வந்துள்ளன.
மாமா குடும்பத்திற்கு குல தெய்வம் சுவாமிநாதன் என்றேன். தந்தைக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்த, கோவணம் தரித்த கோலத்தில் ஒரு பாலகன். ஹிந்து மதத்திலும் புராணங்களிலும் தான் என்னென்ன அழகான, விசித்திரமும், வசீகரமுமான கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று யோசித்தால் அதுவே இப்போது வியப்பாக இருக்கிறது. நிலக்கோட்டையிலிருந்து மதுரைக்குப் போகும் இரண்டு வழிகளில் பேருந்துகள் போகும். ஒன்று கொடைக்கானல் ரோடு என்று இப்போது தெரியப்படும் அம்மையநாயக்கனூர் வழி. இன்னொன்று, அணைப்பட்டி, சோழவந்தான் ஊர்கள் வழியாகச் செல்லும் இன்னொரு வழி. அணைப்பட்டி அப்படி ஒன்றும் தூரத்து கிராமம் இல்லை. ஐந்தோ ஆறோ மைல்கள் தூரத்தில் தான் அது இருந்தது. அது ஏன் அணைப்பட்டி என்று பெயர் பெற்றது என்பது எனக்கு அன்று யாரும் எனக்குச் சொன்ன தில்லை. அங்கு ஏதும் அணை கட்டப்பட்டிருக்கிறதோ என்னவோ. தெரியாது. நிலக்கோட்டையை விட்டு வந்த பிறகு அணைப்பட்டி என்று பெயர் ஏன் வந்தது? என்றா விசாரித்துக்கொண்டிருப்பார்கள் யாரும்? ஆகவே இப்போது எனக்குத் தெரியாது. ஆனால் அங்கு தண்டாயுத பாணி கோவில் ஒன்று உண்டு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆக, நிரம்ப தெய்வ பக்திகொண்டவரும், சுவாமிநாதனை குல தெய்வமாகக் கொண்டவருமான மாமா, ஐந்தே மைல் தூரத்திலிருக்கும் தண்டாயுத பாணி கோவிலுக்கு அடிக்கடி போய் தரிசனம் செய்து வருவார் என்று தான் நினைக்கத் தோன்றும். ஆனால் அவரும் போனதில்லை. அதனால் நானும் போனதில்லை. இதையெல்லாம் எதற்காக இவ்வளவு தூரம் சொல்ல வந்தேன் என்றால், நிலக்கோட்டையை விட்டு அவர் எந்த இடத்திற்கும் பெரிய நிர்ப்பந்தங்கள் இல்லாமல், சென்றதில்லை. அப்படி யெல்லாம் சுவாமி தரிசனத்திற்குக் கூட பக்கத்து ஊருக்குக் கூட போய் வருவோம் என்று அவர் போனதில்லை. அப்படியெல்லாம் செலவு செய்ய அவரிடம் பணம் இருந்ததில்லை என்பதைச் சொல்லத்தான். ஒரு முறை காந்தி மதுரைக்கு வருகிறார், இடையில் அவர் வரும் ரயிலை வழியில் நிறுத்திப் பார்த்து வரலாம் என்று நிலக்கோட்டையே கொடை ரோடுக்குச் சென்ற போது பள்ளிக்கூட மானேஜர் தன் வில்வண்டியில் மாமாவையும் அழைத்துச் சென்றதால்தான் மாமா வீட்டை விட்டு நகர்ந்தார். எனக்கும் அவர் "போடா யாரும் பசங்க போனா நீயும் போயிட்டு வாடா" என்று முதல் தடவையாக, என்னைத் தனியாக எங்கும் செல்ல அனுமதி தந்தார். நிலக்கோட்டையில் நான் 13 வயது வரை இருந்த காலத்தில் என்னைத் தனியாக எங்கும் செல்ல அவர் அனுமதி தந்தது "சரித்திரம் முக்கியத்வம் பெற்றுவிட்ட" அந்த ஒரு நாள் தான்.
blogger settings - site feed - allow blog feed full என்று தந்தால் உங்கள் பதிவை bloglines, கூகுள் ரீடர் போன்ற திரட்டிகள் கொண்டு படிக்க உதவும். இதைச் செயற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி
ReplyDeleteஅன்புள்ள ரவி சங்கர், உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி. ஆனால், இதை எப்படிச் செய்வதென்று தான் எனக்குத் தெரியவில்லை. சொல்லிக் கொடுப்பவர்கள் கிடைத்தவுடன் செய்துவிடுகிறேன். இப்படித் தான் ஒவ்வொன்றாக நான் கற்று வருகிறேன். ஒரு புதிய பிரசினையை முன் வைத்து, புதிய விஷயங்களைக் கற்க எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது உங்கள் ஆலோசனை போன்றவை வரும்போது. அன்புடன் -வெ.சா.
ReplyDeleteஅன்புள்ள ரவிஷங்கர்,
ReplyDeleteவிஷயம் தெரிந்தவர்கள் உதவி தேவைப்படும் என்று நினைத்தேன். அதற்கு நாட்கள்/வாரங்கள் பலவாகும் என்று தோன்றிற்று. பின் நானே எனக்குத் தெரிந்த வகையில் நீங்கள் கேட்டதைச் செய்தேன். செய்தேன் என்று நினைக்கிறேன் என்று தான் சொல்லவேண்டும். செய்திருக்கிறேனா அது நடக்கிறதா என்பதை உங்கள் முனையில் தான் சரி பார்த்துச் சொல்லவேண்டும். சொல்லுங்கள். சந்தோஷமாக இருக்கும் எனக்கு. நானே ஒரு காரியத்தைச் செய்து விட்ட திருப்தி இருக்கும். அப்பா உதவி யில்லாமல் home work செய்துவிட்ட குழந்தையின் உற்சாகம் இருக்கும். வெ.சா.