Sunday, September 30, 2007

எங்களைச் செல்லரிக்கும் தாலிபான்கள்

மனித சிருஷ்டிகள் சிலவற்றைப் பற்றி நினக்கும்போதெல்லாம் எழும் உணர்வை வியப்பு என்று சொல்வது மிக மிகச் சாதாரணமாகத் தோன்றுகிறது. இரண்டாயிரம் வருஷங்களுக்கு மேலாக வானளாவ நின்ற பாமியான் புத்தர் சிலைகள், எலிபெண்டா குகைகளில் காணும் திரிமூர்த்தி, சிரவணபேலாவில் உள்ள கோமதேஸ்வரர் மூர்த்தி, எல்லாம் மிகப் பிரும்மாண்டமானவை. மனிதனின் கற்பனைக்கு எல்லை இல்லை என்றாலும், அதன் செயல் சாத்தியம் கற்பனைக்கு ஒரு எல்லை வகுக்கும். அந்த எல்லையைப் பற்றியே சிந்தனை இல்லாது, தன் கற்பனக்கு உருக்கொடுக்க முனைந்து அதை சாத்தியமாக்கிக் காட்டியுள்ளானே, அதை நினைத்து அடையும் வியப்புக்கு எல்லை இல்லை.
சரிவின்றி, நெட்ட நெடிதுயர்ந்து நிற்கும் மலை, அதைக்குடைந்து ஒரு பிரும்மாண்ட சிலை எழுப்புவதென்றால், அதன் செயல் சாத்தியம் என்ன, மலையைக் குடையவும் உருவம் செதுக்கவும், அவ்வளவு உயரத்தில், அதற்கான கருவிகள் தொழில் நுட்பங்கள்.... 2000 வருடங்களுக்கு முன், மனித சஞ்சாரமோ, வாழும் வசதிகளோ அற்ற வனாந்திரமான மலை அடுக்குகளில்... என்று யோசனைகள் படர்கின்றன. அது சாத்தியமாகியிருக்கிறது. ஆஃப்கனிஸ்தான் இவ்வளவு நீண்டகால தன் சரித்திரத்தில் அடுக்கடுக்கான படையெடுப்புகளை, ஆக்கிரமிப்புகளை, வன்முறை நிறைந்த சரித்திர மாற்றங்களை, கொள்ளைகளை அது கண்டிருக்கிறது, கிரேக்கர்களிலிருந்து தொடங்கியது, இன்று அமெரிக்கர்கள் வரை நீண்டுள்ளது. இவ்வளவுக்கிடையிலும் பாமியான் புத்தரின் நின்ற திருக்கோலம் அவ்வளவு மாற்றங்களுக்கும் சாட்சியாய் நின்றிருக்கின்றது. எலிபெண்டா குகை சிற்பங்கள் போர்த்துகீசியரின் குண்டுப் பயிற்சிக்கு களமாகியிருந்திருக்கிறது. உலக மக்களின் வியப்பிற்கும், ஆஃப்கன் மக்களின் கர்வத்திற்கும் காரணமாகி இவ்வளவு ஆயிரம் ஆண்டுகாலமாக உயிர்த்திருந்த அந்த புத்தர் சிலைகள், ஆஃப்கானியர் சிலருக்கு, பாகிஸ்தானின் மதரஸாக்களில் இஸ்லாமியக் கல்வி பயின்ற தாலிபான்களுக்கு, 'இஸ்லாம் என்னும் இனிய மார்க்கத்திற்கு' விரோதமான ஒன்றாகிவிட்டன. பீரங்கி குண்டுகளுக்கு இரையாக அதிக நேரம் ஆகவில்லை. அலெக்ஸாண்டிரியா, யாழ்ப்பாணம் நூலகங்கள், ஜெர்மானிய நகர தெருக்களில் யூதர் எழுதிய புத்தகங்கள் குவிக்கப்பட்டு எரிந்து சாம்பலாக எவ்வளவு மணிகள் தேவையாயிருக்கும்? குண்டு வீசித் தகர்த்தவர்கள், செயல்வீரர்கள், சரித்திரத்தையே மாற்றி எழுத முனைந்தவர்கள். உலகை காஃபிர்களின் ஆபாசத்திலிருந்து காப்பாற்றும் புனித காரியத்தில் தம்மை தியாகம் செய்யத் தயாராகிவிட்டவர்கள். தினம் ஐந்து முறை அல்லாவை தியானிக்க நமாஸ் படிப்பதை கட்டாயமாக்கியவர்கள். நமாஸ் வேளை வந்ததும், வீதியில் நடப்பவர்களையெல்லாம் அல்லாவைத் தொழ நமாஸ”க்கு துப்பாக்கி முனையில் விரட்டியவர்கள். பாட்டும் கூத்தும் இஸ்லாமுக்கு பகை எனக்கண்டு அவற்றுக்கு தடை விதித்தவர்கள். அனேக கலை வெளிப்பாடுகள் இஸ்லாத்துக்கு விரோதமாக கருதப்படுகின்றன. காபூலின் புகழ் பெற்ற புராதனப் பொருட்காட்சியகத்தின் கலைச் செல்வங்களையெல்லாம் தாலிபான்கள் உடைத்து நாசமாக்கினர். அவற்றைக் காப்பாற்றப் பட்ட பெரும் பாட்டைப் பற்றி காட்சியகத்தின் பொறுப்பில் இருந்த முஸ்லீம் அறிஞர்களின் கதை வேதனை தருவது. எல்லாம் அல்லாவின் பெயரில் நடப்பவைதான். அதே அல்லாவின் பெயரைத் துதித்து வாழும், படிப்பு வாசனையற்ற சாதாரண ஆஃப்கன் ஏழைத் தொழிலாளி, புத்தர் சிலைகள் சிதைக்கப் பட்டது குறித்து வேதனைப் பட்டுப் பேசுகிறான். அவனும் அல்லாவின் பிரியத்துக்குரியவன் தான்.
விஷயம் என்னவென்றால் இவர்கள் காரியத்திற்கும் அல்லாவுக்கும் ஏதும் சம்பந்தமில்லை. எகிப்தில் நைல் நதியின் குறுக்கே அஸ்வான் அணைக்கட்டில் மறையவிருந்த அபுஸ’ம்பல் கோவிலின் பிரும்மாண்ட சிற்பங்கள் எல்லாம் சிதைவுறாது பெயர்க்கப்பட்டு பாதுகாப்பாக வேறு இடத்தில் திரும்ப் நிர்மாணிக்கப்பட்டன. அவர்களும் இஸ்லாமியர்கள் தான். அல்லாவைத் தொழுபவர்கள் தான். ஆனால் தாலிபான்கள் இஸ்லாமைப் பற்றியும் அல்லாவைப் பற்றியும் இவர்கள் கொண்டிருக்கும் நினைப்புகள், இந்நினைப்புகள் குடிகொண்டிருக்கும் இவர்கள் மன அமைப்புகள் கொடூரமானவை. கெட்டிப்பட்டவை. மாறுபட்ட சிந்தனையோ, பார்வையோ வாழும் உரிமை மறுப்பவை. இத்தகைய மன அமைப்பு அதிகாரம் பெற்று விட்டால், தனது தவிர மற்றெல்லாவற்றையும் அழித்து ஒழிப்பவை. பாமியான் புத்தர், ஒரு சிலையல்ல. அது ஒரு உருவகம். ஒரு கால கட்டத்தின் மனித சிந்தனையின், கற்பனையின், வரலாற்றின், வாழ்வின் பின் இரண்டாயிரம் ஆண்டு தொடர்ந்த அதன் நீட்சியின் இது அவ்வளவின் உருவகம் அது. அந்த உருவகம் கடந்த காலத்தின் எண்ணற்ற வேறுபட்ட சிந்தனைகளை மனதில் எழுப்பும் சக்தியை தன்னுள் கொண்டது. அது இடையில் வந்த ஒரு சிலரின் வன்முறை அழிவு நோக்கால் சில மணி நேரங்களில் ஒன்றுமில்லாததாகி விட்டது. ஜப்பான், ஸ்ரீலங்கா போன்ற பல நாடுகள் அச்சிலைகளை பெயர்த்து எடுத்துச் செல்லக் கோரியது மறுக்கப்பட்டது
தாலிபான்கள் பாமியான் சிற்பங்களை அழித்தது உலகையே அதிர வைத்தது. அதன் ஃபாஸ’ஸ்ட் செயல்பாடும் வன்முறையும்தான் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கிட்டத்தட்ட இந்த அளவில் இல்லாவிட்டாலும் இதே மனப்பான்மையை மாவோவின் கலாச்சாரப் புரட்சி காலத்தில் சைனாவும் அழிபடத் தொடங்கியது. நல்ல வேளையாக, இப்போது, žன அரசு தன் சரித்திரத்தையும் கலைகளையும் பராமரிப்பதில் தீவிர அக்கறை காட்டுகிறது. பல பழங்கால வீடுகள், தெருக்கள் கூட அதன் சரித்திரப் பழமை மாறாது பாதுகாக்கப் படுகின்றன. மாவோ காலத்தில் வேதாகமமாக மதிக்கப்பட்ட கம்யூனிஸமும், மாவோ சிந்தனைகளும் இப்போது பிரார்த்தனைப் பீடத்தில் இல்லை. ஒரு கால கட்ட சிந்தனை அவ்வளவே. ஆனால். பாகிஸ்தான் தொலைகாட்சியிலோ வானொலியிலோ குரான் பற்றிய பிரசங்கங்களைக் கேட்பவர்கள், முகம்மது நபியின் தோற்றத்திற்குப் பின் தான் அதுகாறும் இருளடைந்திருந்த உலகம் ஓளிபெற்றது என்று பேசப்படுகிறது. And Then there was Light என்ற விவிலிய வாசகங்கள் போல.
இதெல்லாம் போகட்டும். நான் சொல்ல வந்தது நம்மைப் பற்றி. ஐந்து வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்ததும், நான் பெற்ற முதல் அதிர்ச்சி, சோழா ஹோட்டலோ என்னவோ பலமாடிகள் கொண்ட பெரிய கட்டிடம், அதன் சுற்றுச் சுவர் மூன்று அடி அகலமே கொண்ட நடைபாதையை ஒட்டி இருக்கும். அதன் ஒர் மூலையில் உட்புறமாக ஒரு சிறு அறிவுப்பு குறுஞ்சுவர் எழுந்திருக்கும், கரிய சலவைக்கல் தாங்கி. அக்கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகங்கள் இப்போது ஹோட்டல் இருக்கும் இடத்தில் தான் காந்தி சென்னைக்கு முதன் முதலாக வந்து இங்குள்ள தலைவர்களைச் சந்திக்க தங்கியிருந்த வீடு. வீடு போன இடம் தெரியவில்லை. இருப்பது இச்சலவைக்கல் வாசகம் தான். கடந்த நான்கு வருடங்களாக, ஜெயா தொலைக்காட்சியின் செய்தித் தொகுப்பில் இடையே 3 நிமிடத்திற்கு 'காலச்சுவடுகள் ' என்றொரு ஒளி பரப்புவார்கள். அனேகமாக நான் அதை தவற விடுவதில்லை. காலை 7.10லிருந்து 7.13க்குள் அதைப் பார்த்துவிடலாம். தமிழனின் இருபது நூற்றாண்டு கால சரித்திரத்தில் பாழ்பட்டு மறைந்து கொண்டிருக்கும் சரித்திர, கலைச் சின்னங்களை ஒவ்வொரு நாளும் காலச்சுவடுகள் பகுதியில் பார்க்கலாம். நாயக்கர் கட்டிய அரண்மனைகள், 8-ம் நூற்றாண்டு பாண்டிய, சோழ அரசர் நிர்மாணித்த கோயில்கள் சேதுபதி அரசர் கட்டிய சத்திரங்கள், படித்துறைகள், என. அவ்வளவும் பாழடைந்து சிதிலமாகிப் போனவை. மண்டிக்கிடக்கும் புதர்களுக்கிடையே பாதி மறைந்து கிடக்கும் கோபுரத்தில் செடிகளும் மரங்களும் செழிப்புடன் வளர்ந்து வான் நோக்கும். இப்பகுதி எப்போது ஆரம்பித்தது எனத் தெரியாது. எனக்கு ஐந்து வருடங்களாக நாள் தவறாது தரப்படுவது தெரியும். இந்த ஐந்து வருடங்களில் 5 x 365 = எவ்வளவு ஆயிற்று? நான் கணக்குப் போடவில்லை. 1700 க்கும் மேலாக இருக்கும். இந்த பகுதி இன்னும் எத்தனை வருடங்களுக்கு தொடருமோ தெரியாது. அவ்வளவுக்கு இந்த அரும் பெரும் தமிழ் நாட்டில் பாழடைந்து கிடக்கும் வரலாற்று கலைச் செல்வங்கள் மண்டிக்கிடக்கின்றன. இஸ்ரேலிலிருந்து வந்த ஒரு நாடகக் கலைஞர் சொன்னார், 'எங்கள் நாட்டில் ஒவ்வொரு கல்லும் ஒரு வரலாறு சொல்லும்' என்று. கை நிறைய கூழாங்கற்களை வைத்துக் கொண்டே அவர் ஒரு நாடகம் நிகழ்த்திச் சென்று விட்டார். கள்ளிக்கோட்டையில் ஒரு கடைத்தெருவின் நடுவில் இருந்த எஸ்.கே பொற்றெக்காடின் சிலையைக் காட்டி, இந்த கடைத்தெருவுக்கே அமரத்வம் தந்து விட்டார் பொற்றெகாட் என்றார் கேரள நண்பர். இந்த பூமி ஜான் ஆபிரஹாம் நடந்த பூமி என்றார். எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. அவர்களது பெருமை உணர்வும் கர்வமும் மன நெகிழச் செய்தது. ' ஆனால், தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஊரும் வரலாறு சொல்லும்" என்றார். இப்பெருமையும் கர்வமும் நிறைந்த சொற்களை நான் தமிழ் நாட்டில் யாரிடமும் கேட்டதில்லை. நமது கலைகளைப் பற்றிய, வேறு யாருக்கும் இல்லாத நீண்ட வரலாற்றைப்பற்றிய உணர்வு இங்கு யாரிடம் கண்டோம். ஜெயா தொலைக்காட்சியில் காலச்சுவடுகள் பற்றிச் சொல்பவர், ஏதோ தகவல் அறிவிக்கும் பாணியில் எவ்வித இழப்புணர்வும் இன்றி தான் இலக்கியத் தமிழ் என்று கருதிக்கொண்டிருக்கும் அலங்கார வார்த்தைகளில் ஏதோ சொல்லி முடிக்கிறார். அபத்தமான அலங்கார வார்த்தைகளே கலையாகிவிடும், இலக்கியமாகி விடும் என்ற எண்ணம் பரவல்லாகக் காணப்படுகிறது. மேல்மட்டத்திலிருந்து கீழ்த் தொண்டன் வரை. நுண்ணிய உணர்வுகளுக்குத் தான் இங்கு பஞ்சமாகி விட்டது. ஒவ்வொரு பாழடைந்த கலைச் செல்வத்தைப் பற்றியும் ஒரு நிமிடம் சொன்ன பிறகு அலங்கார வார்த்தைகள் முத்தாய்ப்பாக வந்து விழும். ஒரு உதாரணம்: "பக்தர்களுக்கு அபயமளித்துக் கொண்டிருந்த கோயில் இப்போது அபாயமளித்துக் கொண்டிருக்கிறது" "வரலாற்று ஆசிரியர்களைத் தவிக்க வைத்தது இது. இன்று வரலாற்றில் தவித்துக் கொண்டிருக்கிறது. " "லோகமாதா கட்டிய கோயில், இப்போது இந்த லோகத்திலிருந்தே விடைபெற்றுக் கொண்டிருக்கிறது" ஒவ்வொரு நாளும் ஒர் பாழடையும் கலைச்சின்னம் ஒரு அலங்கார வாக்கியத்துடன் மறக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு சில சிதிலங்களுக்கு 'தொல் பொருள் ஆய்வினரின் பாதுகாப்பில் உள்ளது" என்ற ஒரு அறிவுப்புப் பலகை இருக்கும். அவ்வளவே. பாது காப்பு அவர்கள் கையில் இல்லை. நமக்கு இவை பற்றி ஏதும் இழப்புணர்வு இல்லை எனில், நுண்ணிய கலை உணர்வு இல்லை எனில் வேறு எதுவும் பாது காப்பு தராது. கட்சி மகா நாடுகள், பிரம்மாண்ட கட்-அவுட் டுகளுக்கு ஆகும் செலவில் எத்தனையோ பாதுக்காக்கப் படக்கூடும். நமக்கு அது பற்றி உணர்வு இல்லை. நாம் நாஜி ஜெர்மனியை விட, ஆப்கனிஸ்தானை விட சைனாவை விட எகிப்தைவிட மோசமான நிலையில் இருக்கிறோம். காரணம் இடையில் நேர்ந்த ஒரு அராஜகம் உணரப்பட்டு திருத்தங்கள் நிகழ்கின்றன. இங்கு நம்மைத் திருத்திக் கொள்ளும் நிலையில் நாம் இல்லை. அழிவு மெதுவாக, நிச்சயமாக, திருந்தும், சிந்தனை இல்லாது முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. திடீரென நிகழ்ந்தால் அது சோக சம்பவம். நமக்கு அது பிரக்ஞையே இல்லாது கொஞ்சம் கொஞ்சமாக நாம் அழிந்து கொண்டிருந்தால் அது இயற்கை, நாம் ஒன்றும் செய்வதற்கில்லை என்று சமாதானம் செய்து கொள்கிறோம். தாலிபான்களை விட நாம் வெற்றி நிச்சயம் கொண்டவர்கள்.


வெங்கட் சாமினாதன்

1 comment:

  1. வெ.சா, கண்ணீரையும், கோபத்தையும் ஒருங்கே வரவழைக்கிறது இந்தக் கட்டுரை.

    ஹம்பியின் இடிபாடுகளைப் பார்த்தபோது அந்த நகரமே வரலாற்றில் உறைந்து விட்டது போலத் தோன்றியது. அங்கு நான் தங்கிய ஓர் இரவு வாழ்வில் மறக்க முடியாதது. தொன்மைச் சின்னங்கள் எப்படிப் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதற்கு உதாரணம் சொல்வது போல் இருந்தது. கர்நாடகத்தின் பேலூர், ஹளேபீடு, சோம்நாத்புர் ஆகிய இடங்களிலும் ஏற்பட்ட அனுபவங்கள் இனிமையானவையே.

    தமிழகத்தில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற எந்த ஊர்களுக்குப் போனாலும், எங்கு நோக்கினும் தட்டுப் படும் அரசியல் அநாகரீகங்களும், கலை என்ற பெயரின் கொச்சைப் படுத்தப் படும் ஆபாசமும் தான் கண்களை ஆக்கிரமிக்கின்றன.. பின்னால் வரலாறும், கலையும் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பது போன்ற பிரமை தோன்றுகிறது!

    ReplyDelete